வெள்ளி, செப்டம்பர் 25, 2009

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்


கரவைக்குரல், குயிலைப்போன்ற உங்களது குரலைத்தான் கேட்டேன். உங்களது கூட்டையோ, முகத்தையோ, முகவரியையோ நீங்கள் அடையாளப்படுத்தவில்லை.


உங்களைப்பற்றி கொஞ்சம் அதிகமாக கூறியிருக்கக் கூடாதா? பெற்றோர்கள், சகோதரர்கள், கரவையில் நீங்கள் எந்த மூலை, அத்துளுக்குளம், சண்டில்குளம் என்று எதைப்பற்றியும் கூறவில்லையே. தண்ணியென்றால் பயமா? கரவையில் பிறந்தவர்களுக்கு அந்தப்பயம் எப்போதும் இருக்காதே?


தங்கம்மா ரீச்சரின் வீட்டிற்கு பக்கம், தங்கம்மா ரீச்சரின் வீடு மறந்துபோய்விட்டது, வயசு போய்க்கொண்டிருக்கின்றது அல்லவா? ஆனாலும் உங்களது வீட்டின் படத்தைப்ப பார்த்ததும் எங்கோ பார்த்ததாக ஞாபகம். மேலும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.

அவசரமாக அழைத்து விட்டீர்களோ என்ற எண்ணத்தோடு உங்கள் பதிவை சென்று பார்த்தேன். வியந்து போனேன். அதே மாணிக்கவாசகர் வித்தியாலயம்தான் எனது ஆரம்பப்பாடசாலை. ஒரு வித்தியாசம் எனது சித்தப்பா உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருந்திருக்கின்றார் ஆனால் எனக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். சித்தப்பா பாலச்சந்திரன் எனது அன்புத் தந்தை பண்டிதர் பொன் கணேசனின் இரண்டாவது தம்பி.

கோவத்துக்கும் தலைமை ஆசிரியர் பாலச்சந்திரனுக்கும் வெகு தூரம் யதார்த்தமான உண்மை. ஆரம்பக்கல்வியில் இருந்து 5ம் வகுப்புவரை மாணிக்கவாசகரில்தான் நானும் பயின்றேன். குறிப்பிட்டுக் கூறும்படியாக அழகான நினைவுகள் ஏதுமில்லை. அந்த வயசில் கல்வியில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை, முழுநேர விளையாட்டுத்தான், விளையாட்டென்று கூறும்போது சும்மா மண் சோறு கறி மற்றும் தாயம், கள்ளன் பொலீஸ், கிந்தித் தொடுதல், கொக்கான் என்று என்னும் எத்தனையோ விளையாட்டுக்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. 

அந்தக் காலத்து ஆசிரியர்கள் கையில் பிரம்புடன் என்னை நோக்கி வருவதை இன்றும் என்னால் மறக்கமுடியாது. குறிப்பிடும்படியாக எந்த ஆசிரியரும் என்னை கவரவுமில்லை, என்னைப் பாதிக்கவுமில்லை. நீங்கள் கூறியதுபோல் ஆச்சி ரீச்சர் ஞாபகத்தில் நிற்கின்றார். மிகவும் அன்பானவர். மற்றவர்கள் எல்லோரும் வம்பானவர்கள். சித்தப்பா வாய்ப்பாடு கேட்டு தலையில் குட்டுவார், சின்னப்பிள்ளை ரீச்சர் எல்லா இடமும் நுள்ளுவார், நல்லதம்பி மாஸ்டர் பிரம்பால் அடிப்பார், சிவகாமி ரீச்சர் எனது வீட்டிற்கே சென்று சௌந்தரிக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று கோள்மூட்டுவார். அப்பப்பா என்னைச்சுற்றி வில்லன்களும் வில்லிகளும்தான்.


இவர்களால் வீட்டிலும் வன்முறை தொடர்ந்தது. எனக்கு இரண்டு (தடியன்கள்) மாமாக்கள் வீட்டில் ஒருவர் மாறி ஒருவர் பாடம் சொல்லித்தருகின்றோம் என்ற நினைப்பில் என்னைக் காயப்படுத்தினர். முற்றத்து மண்ணெல்லாம் விறாந்தையில் கொட்டி எழுத்துச் சொல்லித் தந்தனர். ரோட்டில் உள்ள கல்லெல்லாம் பொறுக்கிவந்து கணக்குச் சொல்லித் தந்தனர். a, b,c,d சொல்லிக் கொடுக்கின்றேன் என்று தனது ஆங்கிலத்திறமையை நிரூபிக்க விரும்பும் எனது நடுவில் மாமா ஆங்கில எழுத்துக்களை நான் தப்புத்தப்பாக மனப்பாடம் செய்து கூறும்போதெல்லாம் தண்டனையாக  சுவரில் எனது மூக்கை தொட்டவண்ணம் நகராமல் நிற்கச் சொல்லிவிட்டு ஊர் சுத்தப்போய்விடுவார். அவர் திரும்பி வருமட்டும் நான் அப்படியே நிற்கவேண்டும் கொஞ்சம் நகர்ந்தால்கூட அக்கா மாமாவுக்கு மூட்டிக்கொடுத்துவிடுவாள். என்னைவிட மூன்றுவயது கூடியவள் எனது அக்கா ஆனாலும் நான் அக்காவுக்கு பயமோ பயம், இப்போதும் நான் பயப்படும் ஓர் ஜீவன் எனது அக்காதான். என்னைப் பெற்றவர்களோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாமாக்கள் கையில் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டனர்.


ஆனாலும் தடைகளையும் தாண்டும் வெள்ளாடுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் விளையாடுவது, அத்துளுக்குளத்தில் நீந்தப்போவது, வீட்டில் மாமரம் காய்த்துக் குலுங்கும்போதும் வேறுவீடுகளில் நண்பர்களுடன் மாங்காய் திருடித் தின்பது என்று எனது குறும்புகளுக்கும் ஓய்வேயில்லை.


எனது குழந்தைப்பருவ வாழ்க்கை குறும்புத்தனமாக இருந்தாலும் ஆரம்பகால கல்வி வாழ்க்கை அனுபவம் ஒன்றும் அழகானதில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் சிலர் இன்னும் பசுமையாக என் மனசில் நிற்கின்றார்கள்.

6ம் வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை விக்னேஸ்வரா கல்லூரியில் எனது கல்வி தொடர்ந்தது. பலவிதமான பயிற்சிப்பட்டறைகளையும் தாண்டியதாலோ என்னவோ 6 ம் வகுப்பு முதல் எனது கல்வியில் முன்னேற்றம் தோன்றியது. வகுப்பில் எப்போதும் முதலாவது மாணவி, சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம் பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்தேன் முதன்மையாகவும் விளங்கினேன். இதெல்லாவற்றிற்கும் காரணம் எனது ஆசிரியர்கள் என்மேல் கொண்ட பாசம், அதற்கு இன்னுமோர் காரணம் எனது தந்தையார் பொன் கணேசன் தான் அப்போது விக்னேஷ்வராக் கல்லூரியின் அதிபர். அதிபரின் செல்லப் புத்திரி என்ற பந்தாவும் தந்தையின் அரவணைப்பும் என்னை ஆரோக்கியமாக வளர்த்துக்கொண்டு சென்றது.


எனக்கு ஆண் சகோதரர்கள் இருக்கவில்லை ஒரே அக்காதான். அதனாலோ என்னவோ ஆண்களோடு பழகுவது பிடிக்கும். ஆனாலும் அன்போடு பழகத் தெரியாது. என்னோடு படித்த ஆண்களுக்கு என்னைப் பிடிக்காது. யாரையும் மதிக்கமாட்டேன், எப்போதும் அவர்களுடன் சண்டைபோடுவேன். சரியான வாயாடி. அவர்கள் பொறுமையிழந்து அப்பாவிடம் சென்று முறையிடுவதும் மீண்டும் சண்டைபோடுவதும் தொடர்கதையானது. எனது தந்தையாருக்கு நான் பெரிய தலைவலியாக இருந்தேன். எனது தந்தை என்மீது கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாகவோ என்னவோ பொறுமையுடன் அவர் என்னை சரியான முறையில் நெறிப்படுத்திச் சென்றார்.

என்வரையில் விக்னேஸ்வராக் கல்லூரி வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையானது. சங்கீத ஆசிரியராக இருந்த பாரதா ரீச்சர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். என்னைக் கட்டுபடுத்துவதற்காகவே எப்போதும் கண்டிப்பான ஆசிரியரையே எனது வகுப்பாசிரியராக நியமிப்பார் எனது தந்தையார். அவர்களில் குறிப்பிடும்படியாக கூறவிரும்புவது, நாகம்மா ரீச்சர், இரத்தினம் ரீச்சர், நல்லதம்பி மாஸ்டர் போன்றவர்கள்.
10 ம் வகுப்பில் திறமையாக தேர்ச்சிபெற்று பெரிய பெண்ணாகவும் வந்தபின்பு பெண்கள் பாடசாலையில்தான் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் எனக்கு அனுமதிபெற்றுத்தந்தார் அப்பா. ஒரு சிறிய பாடசாலையில் எதிலுமே முதல் மாணவியாக மிளிர்ந்த என்னால் பெரிய பாடசாலையில் போட்டி போடமுடியவில்லை. ஆசிரியர்களின் பாராமுகமும் புதிய மாணவர்களின் அறிமுகமின்மையும் பெரிய தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் எனக்குள் அளித்தது. மாற்றங்கள் ஏற்படுத்திய இறக்கத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்த காலங்கள் கொஞ்சம் அதிகம்தான்.

ஆனாலும் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எனது தீராத ஆசையின் தூண்டுதல் நான் விரும்பியபடியே எனது கல்வியைத் தொடரக்கூடியதாக அமைந்தது. யாழ்பல்கலைகழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கணிதத்தில் சிறப்புப்பட்டம் பெற்றேன். எனது பல்கலைக்கழக வாழ்க்கை மிகவும் இனிமையானது. அதைப்பற்றி இன்னுமோர் சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். யாழ்பல்கலைக்கழக நட்புவட்டம் என்று யாராவது ஓர் தொடரை ஆரம்பிக்காமலா போய்விடப்போகின்றார்கள்.


 எனது ஊர், எனது மண், எனது மொழி இவை இரத்தத்தில் கலந்தவை. எனது ஊரவன் என்ற உணர்வே கரவைக்குரல் என்ற பதிவைத் தட்டிப்பார்க்கத் தூண்டியது. கரவெட்டி, வடமராட்சி, யாழ்ப்பாணம், ஈழத்துத்தமிழன், இலங்கைத்தமிழன், இந்தியத்தமிழன், உலகத்தமிழன் இது வரிசைகளல்ல வலிகள், புலம்பெயர்வால் ஏற்பட்ட வலிகள்.
வலைப்பதிவின் மூலம் என் வலிகளுக்கு வடிகால் கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள் கூறி இன்னும் சிலரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையில் யாரை அழைப்பது என்று புரியாமல் ஏனோ மனசுக்கு பிடித்திருக்கின்றது என்ற விதத்தில் இவர்களை தெரிவுசெய்கின்றேன்.
கோசலன்
வலசு - வேலணை 
இளைஞன்

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்


















ஆற்றலெனும் தாகத்திற்கு பாற்கடலாம்
உணர்ச்சிக்கவி சகோதரன் கௌதம்
தமிழ்த்தாய் பெற்ற இளைய தமிழ்மகன்
இவன் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்
மறுமலர்ச்சி கண்டு தலைகுனிந்தேன்

கௌதம் ....................

தோற்றத்தில் நீ இளையவன்
ஏற்றத்தில், மொழியின் சீற்றத்தில் நீ மூத்தவன்
உன் ஓவியத்தில் எழில் கண்டேன்
உன் கவிதை மொழியில் உயிர் கண்டேன்
உன் பேச்சில் வீசும் அனல் கண்டேன்
உன் நாவில் தவழும் செந்தமிழின் நாதம்
காவும் செய்திகள் எட்டுத் திசையும் எட்டிப்பரவும்
உன் வளர்ச்சி தோப்பாக சிறக்கும்
உன் செயல் வெற்றியை எட்டும்
உன் மொழி இனத்தை வாழ்த்தும்
என்றும் வாழ்க என் சகோதரனே!

சுழலும் உலகத்தில் சுற்றித்திரியும் பெண்ணே
உன் பயணத்தில் நீ கண்டதுதான் என்ன?
மலர்ச்சி கண்டு மகிழ்ந்தாயா?
மறுமலர்ச்சி வேண்டுமென்று அழுதாயா?
பதில் சொல்
எனக்கல்ல என் சகோதரனின் கவிதைக்கு…….


அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஓர் புதிய கவிஞனை வானலைகளில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த இளம் நண்பனை நேரடியாக சந்திக்கவில்லை ஆனால் அவனது கவித்திறமை, பேச்சுத்திறமை, ஓவியத்திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மொழிமீதும் தாய் மண்மீதும் அவன் கொண்டுள்ள பற்றுதல் அந்த முகம்தெரியாத சகோதரனைப்பற்றி அறியத்தூண்டியது.

எனது தேடலில் கௌதம் எழுதிய ஓர் கவிதைத் துளியையும், அவனது ஓவியத்தின் சிறு வண்ணத்தையும் இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். அவனைப்பற்றிய தகவல்களை இனிவரும் பதிவுகளில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


கெளதம் எழுதிய கவிதையும் அவன் வரைந்த ஓவியமும் உங்கள் ரசனைக்கு

முன்நாள் புலியடித்து உலகாண்ட மறத்தி நீ
சொன்னான் உன் பாட்டன் இனம் காத்த நெருப்பு நீ
இன்நாள் வாழ்கின்றாய் குலவீரம் மறந்து நீ!

உன்னால் சுகம் பெற்று இனக்கன்றும் தான் பெற்று
கண்ணாம் கணவனாம், அடிமைபோல் வாழ்வதற்கு
பொன்னாம் பொருளெல்லாம் கேட்கின்ற நிலை எதற்கு!

மண்ணாம் பூமியிலே முளைக்கின்ற மரக்கன்றும்
தன்னால் இயன்றவரை மனிதனை வாழவைக்கும்
பெண்ணாம் பெரும் பிறப்பை மனிதயினம் தாழவைக்கும்!;

விண்ணாம் அதன்மேலே வீசுகின்ற வெண்ணிலாவின்
வண்ணம் கொள்வதுதான் வாழ்நாளின் முறையென்றார்
கண்ணன் மாய்ந்ததனால் பூவையும் அறுத்தெடுத்தார்!

சொன்னார் வேதத்தில் கைம்மையென்னும் தரிசுநிலம்
என்னால் தாங்காதே, பகுத்தறிவு தீயினிலே
அன்னார் நூலதனை எரித்தாலும் தணியாது!

அன்னாய் தமிழணங்கே உன்சாதி வாழ்வதற்கு
எண்ணாக் கொடுமையெல்லாம் ஏற்றிங்கு நோவெதற்கு
கண்ணாம் இருந்தென்ன கருப்பில் வாழ்வெதற்கு!

கண்ணால் பார்ப்பதெல்லாம் சாமியென்ற கல்லாகி
புண்ணாம் வருவதற்கு மிதிக்கின்றாய் பெரும் தீயை
தன்னால் அடிமையுறும் கொடுநிலை ஆகாது!

பெண்ணால் இயலாது வையத்தில் என்றில்லை
சொன்னார் ஒரு நூறு விடுதலை சிந்தனைதான்
முன்னால் தோன்றுதடி முயற்சிதான் இல்லையே!


பெண்ணால் ஆளுகின்ற பெருந்தமிழ் நாடொன்றில்
பொன்னால் முடிசூடி செந்தமிழை அரங்கேற்றும்
நன்நாள் வரும்வரைக்கும் அடிமை நிலை மாறாது!

கண்ணாம் மொழி நமக்கு காப்பதே வேலையென்று
சொன்னான் தமிழ் புலவன் பாரதிதாசன்தான்
பெண்ணால் வாழுமென்றால் பேரின்பம் அளவேது!

எழுதியவர் கௌதம்

வெள்ளி, செப்டம்பர் 11, 2009

24 மணிநேர தமிழ் வானொலி


Australia Tamil Broadcasting Corporation என்ற 24 மணிநேர வானொலி அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

இந்த வானொலியில் பகுதி நேரமாக 75 க்கும் மேற்பட்டவர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமறிந்த கலைகளை தமிழ்மொழியில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அதே வனொலியில் சனிக்கிழமை அவுஸ்திரேலிய நேரம் இரவு 10 மணியிலிருந்து 12.30 மணிவரை நடைபெறும் சிந்தனைச் சிதறல் என்ற நிகழ்ச்சியை கடந்த 8 வருடங்களாக மிக ஆர்வத்தோடு நானும் நடாத்திவருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் ஓர் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துக்கள் பரிமாறப்படும். நேயர்கள் தமது எண்ணக்கருத்துக்களை தொலைபேசியில் அழைப்பெடுத்து கூறுவார்கள். ஒருமித்த கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களுமாக மிகவும் அறிவுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கும். 

உங்களைப்போன்றே முகம் தெரியாத மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான ஓர் உறவை இந்த நிகழ்ச்சிமூலம் கடந்த எட்டு வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் இந்த நிகழ்ச்சியைப்பற்றி விரிவாக எழுதுகின்றேன். 

இணைய வானொலியாகவும் செயல்படுவதால் நீங்களும் இந்த 24 மணிநேரமும் தமிழ் மொழியைப் பேசும் இந்த வானொலியை கேட்டு மகிழலாம். அதற்குரிய இணையத்தள முகவரியை இதனுடன் இணைத்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள்.
www.atbc.net.au/

முடிந்தால் என்னோடு இந்த சனிக்கிழமை இரவு கதையுங்கள். இந்த வாரத்து நிகழ்ச்சிக்கான தலைப்பு தனிமை

வெற்றி பற்றி வித்தியாசமான ஒரு கருத்து உண்டு அதாவது தந்திரமாக செயல்பட்டால்தான் எதிலும் வெற்றி பெற முடியும் என்பது. இதை ஆங்கிலத்தில் cunning என்று சொல்வார்கள். இப்படி தந்திரமாக செயல்பட்டு அடைகின்ற வெற்றி ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தைத் தரும் அதுவே நிரந்தர சந்தோசம் ஆகிவிடாது என்பதுதான் உண்மை.

தந்திரமும், புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று தொடர்பானது போல் தெரிந்தாலும் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. தந்திரமாக செயல்படுபவர்கள் அடுத்தவர்களை நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நட்பென்று யாருமே இருக்கமாட்டார்கள். தான் வெற்றி பெறவேண்டும் தனது எண்ணங்களை எப்பாடுபட்டாவது ஈடேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காய்களை நகர்த்துவதால் மனிதநேயத்தை மறந்தவர்களாகி அவரைச் சார்ந்திருப்பவர்களை இறுதியில் ஏமாற்றிவிடுவார்கள்.

நேர்மையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தனது வெற்றியை நோக்கி செல்வார்கள் அப்போதுதான் வெற்றி உண்மையான சந்தோசத்தை அவர்களுக்கு கொடுக்கும். அப்படிப்பட்டவர்களைத்தான் உலகமும் நம்பும். அவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு காட்டமுடியும், மற்றவர்கள்மீது நம்பிக்கை கொள்ளமுடியும்.

இந்த உலகம் நல்லது என்று நம்புகின்ற ஒருவருக்கு இந்த உலகத்தில் வாழ்கின்ற மக்கள் நல்லவர்கள் என்று நம்புகின்ற ஒருவருக்குத்தான் அவர்கள் சந்திக்கின்ற உலகமும் சந்திக்கின்ற மக்களும் தினம் வாழ்கின்ற வாழ்க்கையும் நல்லதாக அமையும்.

தினம் காலையில் நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் Good Morning  என்று சொல்கிறோமே அதன் அர்த்தம் என்ன? இந்த காலை உனக்கு நல்லதாக மலரட்டும் உனது நாள் இன்று நன்றாக இருக்குமானால் உன்னைப்போன்றே எனது நாளும் நன்றாக இருக்கும் என்கின்ற அர்த்தத்தில்தானே பரஸ்பரம் அங்கே அன்பு பரிமாறிக்கொள்ளப்படுகின்றது. நல்ல மனிதர்களுக்கிடையேயான உறவு என்றும் இனிமையானது அப்படிப்பட்ட அன்பை அனுபவிக்கும் மனசை கொண்டவர்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள்.

ஒருவன் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவான். அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று ஒரு மகானிடம் கேட்டான். அதற்கு அந்த மகான் சொன்னார்  உனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள் கோவம் குறைந்துவிடும் என்று. சிலவாரங்கள் கழித்து மீண்டும் அவன் அந்த மகானிடம் வந்தான். அய்யா இப்போது முன்பைவிட எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அதை யார் மீதாவது காட்டலாம் என்றால் எதிரிகள் எனக்கு யாருமே இல்லையே என்று சொன்னான்.

மகான் வியந்து போனார். என்ன சொல்கிறாய் உனக்கு இப்போது எதிரிகள் யாருமே இல்லையா அப்படி என்றால் அவர்களை எல்லாம் உன் நண்பர்களாக மாற்றி விட்டாயா என்று கேட்டார். அதற்கு அவன் பதில் அளிக்கையில் இல்லை என் எதிரிகள் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டேன் என்றான். இப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது?

அன்பிற்கு விரோதம் பாராட்டத் தெரியாது. மற்றவர்களது பிரச்சனைகளை, சந்தோசத்தை தனதாக நினைக்கத் தோன்றும். குடும்ப உறவில் நட்பில் வேலைத்தளங்களில் என்று எப்போதும் உண்மையோடு துணிவோடு தன்னை வெளிப்படுத்தி அவர்களால் அன்பு செலுத்தமுடியும்.

அன்பில்லாத ஒரு மனிதருக்கு எப்படி சந்தோசம் கிட்டும். மற்றவர்களது உணர்வுகளை மதிக்காது, வார்த்தைகளாலும் வன்முறையாலும் துன்புறுத்தும் அன்பற்ற மனிதர்களை எவரும் விரும்பமாட்டார்கள். எவரும் நாடி வராது யாரும் அணுகமுடியாத தூரத்தில் இருக்கின்றபோது அவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படுமா? நினைப்பது கைகூடுமா? அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கையா?

எதையும் உண்மையாக நேசியுங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி கட்டுப்பாடுகளின்றி ஒன்றை நேசியுங்கள். காதல் அன்பு நேசம் பாசம் உள்ளவர்கள் கண்களுக்கு மற்றவர்கள் குறைகள் தெரிவதுமில்லை நிறைகள் ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அதற்காக குட்டக் குட்ட குனிவதிலும் உடன்பாடில்லை. சந்தோசம் என்பது அவரவர் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. நீங்கள் நேசிப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தடை போடாது தள்ளிநின்று ரசித்துப்பாருங்கள் நேசம் இறுதிவரை தொடரும்.

நாம் நேசிப்பவை எம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் ஒருவரது மனதில் எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கிடையே உள்ள நேசம் தொலைந்துவிடுகின்றது. சந்தேகம், சங்கடம், சஞ்சலம் என்ற சிக்கல்கள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்து அவர்களையும் அழித்து மற்றவர்களையும் வேதனைப்படுத்தும். வாழும் காலம் கொஞ்சம்தான் அன்பு செலுத்துங்கள்.

புதன், செப்டம்பர் 02, 2009

தாய்மடி - சௌந்தரி
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்
சந்தம் சுமந்து வந்த வசந்தமொன்றின்
நெஞ்சம் அழுகின்ற இந்நேரம்;
கொஞ்சம் தலைசாய்ந்து கொள்ள
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்

நிலைமைக்கு மீறிப் பறந்ததுமில்லை
நிலை தடுமாறி நின்றதுமில்லை
நித்தம் அழுது வளர்ந்ததுமில்லை
கனவில் வாழ்ந்து பழக்கமுமில்லை
நானென்ற வேடம் ஏற்றதுமில்லை
நானாக நானிருக்க பயந்ததுமில்லை
நானென்ற உணர்வில் அழித்ததுமில்லை
நான்விட்டு நானிருந்தால் அதில் அர்த்தமில்லை

நிற்காத நினைவுகள் அழுத்துகின்றவேளை
நிழலேது நிஐமேது ஏனிந்தத் தேடல்
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்

உயிரும் உடலும் பிரிந்தபின்பு
உருவம் இருப்பதில் என்ன பயன்
இருவரில் ஒருவராய்
இறுதிவரை முதன்மையாய்
வந்தவர் தொடுப்பதற்கு
வரவைத்தவர் வளர்த்துவிட்டார்
அந்தரத்தில் ஆடுகின்ற இந்நேரம்
யாரிடம் சென்றுகேட்பேன் புதுவேதம்
என் கண்களில் ஏனோ கலக்கம்
என் நெஞ்சினில் ஏதோ வருத்தம்
என் கன்னமிரண்டிலும் கண்ணீர்
இதுவும் கடந்து போகும்
சொல்லிச் சென்ற தந்தையின் தத்துவம்
சுட்ட தங்கமிதை மிளிரச் செய்யும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்


ஒரு பிடி இதயம் இரு பாதியானால்
எது உன்பாதி அதில் ஏது நீதி
கட்டிய கனவு கலைவதுமுண்டு
காத்திருந்து கலைப்பவருமுண்டு
குறைகளில்லா மனிதரேயில்லை
குற்றம் கண்பதால் பலனேதுமில்லை
கற்றுக்கொண்டது வாழ்க்கைப்பாடம்
காலம் சொல்லும் காயத்துக்கு நியாயம்
எத்தனை தடைகள் எப்படி வரினும்
மனிதனாயிருந்து கடவுளாய் சிந்திக்கும்
கருணை கொண்ட மனசொன்று வேண்டும்
உடலென்ற பொறிக்குள் குறையொன்றுமில்லா
உணர்வுகள் பொங்கி மகிழ்வூட்ட வேண்டும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

மீண்டும் சௌந்தரி


நட்பு வட்டடத்தை தொலைத்துவிட்டு தேடுவதென்பது சுலபமானதல்ல. தேடல் உள்ளவரை உயிர் வாழ்தலின் அவசியமும் தொடரும் என்பது உண்மையென்றால் என் தேடலும் தொடரும்.

எதைத் தேடுகின்றேன் எதைத் தொலைத்தேன் என்பது தெரியவில்லை ஆனாலும் ஏதோ ஒன்றைத் தேடுகின்றேன் என்பது மட்டும் புரிகின்றது.

அனுபவத்தின் நினைவுகள் யாவும் எப்போதும் சுமூகமாக ,ருப்பதில்லை அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

உடலை எரித்தோ புதைத்தோ விடலாம் ஆனால் மனசையும் அதில் அடங்கியுள்ள காயங்களையும் அதற்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் ரகசியங்களையும் என்ன செய்யமுடியும்.

ஆனாலும் வாழ்தலை நிச்சயித்து தேடலை ஆரம்பிப்பதுதானே யதார்த்தம். தேடியதை அடைந்தவர்கள் உண்டோ என்ற கேள்வி இருப்பினும் மீண்டும் என் எழுத்துக்களுடன் சங்கமம்

முகம் தெரியாத உறவுகளுடன் உருவாகும் நட்புவட்டம் இனிமையானது, நிஐத்தில் காணமுடியாத ஆத்மார்த்தமான அன்பின் பெருமையை கற்பனையில் உருவாக்கித்தரும் உறவுகள் இனிமையானவை.

வாழ்க்கையில் எத்தனை துன்பங்களைச் சந்தித்ததாலும் நிலைகுலையாத நட்பைக் காணமுடியுமா?  இதை நிஐவாழ்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா? எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட நல்ல நட்பை அனுபவித்ததுண்டா?

தொடர்ந்து எழுதும்வரை…………

திங்கள், மார்ச் 09, 2009

ஈர்ப்பு



இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்ற உணர்வினால் ஈர்க்கப்படும்போது ஏற்படுகின்ற ஓர் இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

எதிர்பார்ப்புகளின்றி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைகாட்டி, கண்கள் கசியும் வேளையில் அன்புடன் ஆறுதலாக ஓர் வார்த்தை சொன்னாலே போதும் அங்கே காதல் நிறைந்திருக்கும்.

அன்பின் ஆக்கிரமிப்பை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும் அந்த உறவினால் கிட்டும் இன்பம் வார்த்தைகளுக்குள் அடங்காது.

தொடரும் ஈர்ப்பு என்னும் கவிதை என்மனதில் தோன்றிய ஓர் அன்பின் வெளிப்பாடு. ஒரு வருடத்திற்கு முன்பு ஊடறு என்ற பெண்களுக்கான இணையத்தளத்தில் இந்தக் கவிதை பதியப்பட்டது. http://udaru.blogdrive.com/archive/569.html

இதயவாசலுக்குள் வரமாக நுழைந்த ஓர் உறவின் உண்மையான உருவகம்தான் ஈர்ப்பு என்ற இந்தக் கவிதை.

தனிநிகரான உன் உலகத்தில்
துணிவாக தடம் பதித்தேன்
அந்நியமான என் கண்களுக்கு
ஆச்சரியமான பல தோற்றங்கள்
ஈர்த்துக் கொண்டேன் - நீ
விரும்பியும் விரும்பாமலும்
சேர்த்துவைத்த பெரும் ஊதியத்தை

உன் நிகரற்ற மண்டலத்தில்
ஆர்வமிக்க மாணவி நான்
சீர்ப்படாத தொடர் வரலாற்றில்
வியப்பான நாகரீகப்படிவம் நீ
உன் சிந்தனையின் ஆழத்தை
உற்றுநோக்கி பதிவுசெய்தேன்
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேன்
முன்பே உனதாக்கிக் கொள்ளென்று

உன் மனமாற்றப் படிநிலையின்
நிழல்வெளியில் எனக்குள் பலமாற்றம்
நகைப்பொலியில் முகமலர்வேன்
ஊற்றெடுக்கும் நீர்த்துளியில்
உடையாமல் போட்டியிட்டு
உள்ளத்தால் முதிர்வடைந்தேன்
என் தொலைத்தோற்ற மனக்காட்டி
உள்முகம் நோக்கி சொன்னது
உன்விலை என்னவென்று

நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்
முடிவெச்ச வடிவமானேன்
உன் கரையற்ற நீர்வரைவில்
காற்றோடு கரையேறும் படகானேன்
நீ இடைவிடாது செதுக்கிய
பாறைவெடிப்பு இடைவெளியில்
ஊடுருவி தேடிக்கண்டேன்
பசும்புல்தரை கொண்ட
சுரங்க வழிப்பாதையொன்றை
அளவுகோல் வைத்து
அளக்கமுடியாத எல்லைபோலும்
அமைதியாக செல்கின்றேன்
அமிழ்வுக்குப் பின்னாலும்
மிதந்துவரும் மிதவையாகி

சௌந்தரி (அவுஸ்ரேலியா)
jan 2008

ஞாயிறு, மார்ச் 01, 2009

குடும்பம் என்கிற ஸ்தாபனம்

வார இறுதி இன்று ஏதாவது எழுதினால்தான் உண்டு பின்பு நேரம் கிடைப்பதென்பது மிகவும் கடினம். எதை எழுதலாம் என்று யோசித்தபோது நான் விரும்பித் திரும்பவும் பார்த்த திரைப்படம் ‘புறவோக்ட் - Provoked' ஞாபகத்திற்கு வந்தது. அதைப் பற்றியே எழுதலாம் என்று யோசித்தேன்.

ஒரு பக்கசார்பாக இந்தக் கட்டுரை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்து எழுதியுள்ளேன். விதிகளும் விதிவிலக்குகளும் எதிலும் இருப்பதால் எந்த ஓர் செயலையும் பொதுமைப்படுத்தி நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தாரளாமாக இட்டுச்செல்லலாம். கருத்துக்களுடன் மோதுவது ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும்.

1989 ம் ஆண்டு லண்டனில் குடும்பவன்முறையின் உச்சத்தை எட்டிய பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஒன்று உண்டு.

பஞ்சாபிப் பெண்ணான கிரண் என்பவரை லண்டனில் வசிக்கும் தீபக்கிற்கு பெற்றோர்கள் பேசி மணம் முடித்தனர். லண்டனில் தொடங்கிய கிரணின் மணவாழ்க்கை அவளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளது கணவன் தீபக் ஓர் மனநோயாளியைப்போல் செயல்பட்டான். தினம் கிரணை துன்புறுத்தினான். வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது, யாருடனும் கதைக்கக்கூடாது, சந்தேகத்தின்பேரில் அடி உதை, குடித்துவிட்டு வந்து இரவில் கொடுமை, பெண்களின் சகவாசம் இப்படியாக எண்ணற்ற சித்திரவதைகளுக்கு உட்பட்டாள் கிரண்.

கல்லானாலும் கணவன் என்பதற்கமைய இயல்பாகவே மென்மையான குணம் கொண்ட கிரண் எல்லாவற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் இரவு பொறுமையின் எல்லையைக் கடந்தநிலைக்கு தள்ளப்பட்டாள். அதனால் குடித்துவிட்டு வந்து படுத்திருந்த தனது கணவன்மீது பெற்றோலை ஊற்றி அவனை எரித்துக் கொன்றாள்.

கொலைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரணின் வழக்கை ஆசிய பெண்கள் உரிமைக்காக போராடும் அமைப்பு ஒன்று முன்னெடுத்து நடாத்தியது. தற்பாதுகாப்புக்காகவே கிரண் அந்த முடிவை எடுத்தாள் என்று தீர்ப்புக்கூறி 1992 ல் கிரணை லண்டன் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்றும் எல்லோராலும் பேசப்படுகின்றது.
இந்த உண்மைக்கதையை தழுவி ஐஸ்வர்யாராய் நடித்த ‘புறவோக்ட’ என்ற ஆங்கிலப்படம் திரைக்கும் வந்தது.

இதுபோன்ற வன்முறைகள் எந்தவோர் பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். இந்த நிலையை தினம்தினம் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இது போன்ற சுழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு வாழ்வை தொலைக்காமல் தற்பாதுகாத்துக் கொள்ளும் மாற்றுவழிகளை அறிந்து வைத்திருத்தல் நன்மையைத்தரும்.

பிரச்சனைகளை நண்பர்களோடு பகிர்தல், பெற்றோர்களிடம் முறையிடுதல், மனநல சிகிச்சைகளின் உதவியை நாடுதல், எல்லையை மீறும் தருணத்தில் காவல் நிலைய உதவியை நாடுதல், எதுவுமே சரிவரவில்லையென்றால் விவாகரத்து இப்படியாக பலவழிகளில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்புண்டு.

பாவம் கிரணுக்கு இவை எதுவுமே கைகொடுக்கவில்லை. எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்த கிரண் முடிவை தன்கையில் எடுத்துக்கொண்டாள். ‘என் கணவரின் வன்முறையைத் தடுப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லை, அவரை கொல்ல வேண்டும் என்று நான் நினைத்ததில்லை’ என்று கிரணின் சுயகதையை வெளியிட்ட Provoked – The Story of Kiranjit Ahluwalia என்ற புத்தகத்தில் அவர் சொல்லியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையானபின் கிரண் லண்டன் தபால் சேவை திணைக்களத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிந்தவாறு சமூகசேவை மற்றும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனங்களிலும் பகுதிநேரமாக பணிபுரிகின்றார். எனது நண்பரும் கிரணும் ஒரே வேலைத்தளத்தில் ஒன்றாக பணிபுரிகின்றார்கள் என்றவுடன் கிரணின் கையெழுத்திட்ட மேற்கூறிய புத்தகம் ஒன்றை கிரணிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். அவரைப்பற்றிய மேலதிக செய்திகளையும் நண்பர் மூலம் அறியமுடிந்தது. 52 வயதைக் கடந்த கிரண் இப்போது தனது வாழ்வை நிறைவாகவும் உண்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நல்ல செய்தி சந்தோசமாகவிருந்தது.

2002 ம் ஆண்டு குடும்ப வன்முறைக்கு எதிராக போராடும் பெண்களுக்கென்று வழங்கப்படும் ஓர் உயரிய விருது லண்டன் அரசினால் கிரணுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரணைப்போன்று பல பெண்கள் இப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். வீட்டுப்பிரச்சனையை வீடுதாண்டி வெளியே கொண்டுபோவது குடும்ப கௌரவத்தை பாதிக்கும் என்ற மன இயல்பில் வீட்டுக்குள்ளேயே வெந்து போகின்றார்கள். சிலர் தைரியத்தோடு வெளியேவந்தால் அவர்கள்மீது சமூகம் காட்டும் எதிர்வினை அதைவிட கொடுமையானது. குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்து சமூக வன்முறைக்குள் பெண் சிக்கிக்கொள்ளும் நிலைப்பாடுதான் அதிகம்.

பெண்களை உடல் மனரீதியாக துன்புறுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டுதல், பாலியல் வன்முறை, பொருளாதார ரீதியில் கொடுமைப்படுத்தல் இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். சட்டமும் தண்டனையும் சிலரை பயம் என்ற பிடிக்குள் கட்டிப்போட்டாலும் காலம் காலமாக வேரூன்றிய ஆணாதிக்க மனோபாவத்தை இந்த சட்டங்களும் தண்டனைகளும் முற்றாக அழித்துவிடமுடியாது. தண்டனையையும் சட்டங்களையும் மீறி பெண்கள் குடும்பவன்முறைக்கு ஆளாகின்றனர். தண்டனையும் சட்டங்களும் இருப்பதனால் வன்முறைகள் முற்றுப்பெற்றுவிடும் என்பது உண்மையல்ல.

பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு நாடு மதம் இனம் மொழி என்ற எல்லைகள் கிடையாது. உலகளாவிய அளவில் குடும்ப வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பல பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். அவர்களது உணர்வுகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்த அவர்களுக்காக எந்தவோர் கதவும் திறந்திருக்கவில்லை.

எவ்வளவுதான் நேசித்தாலும் புரிந்து வைத்திருந்தாலும் ஆணாதிக்க எண்ணங்கள் அதிகாரங்கள் என்பவை சந்தர்ப்பங்களில் வெளிவந்துவிடுகின்றன. அப்போது அவர்களது மனவோட்டம் எந்த திசையை நோக்கி எப்படிச் செல்லும் என்பதை கணித்துவிடமுடியாது. அன்பினால் எதையும் சாதித்துவிடமுடியும் என்பதைக்கூட பொய்ப்பித்துவிடும் சிலரது செயல்கள்.

காதல், திருமணம், குடும்பம் என்ற வட்டத்திற்குள் அன்பும் கருணையும் புரிதலும்தான் முக்கியமானவை என்று கூற்று நன்றாக இருந்தாலும் யதார்த்தத்தில் ஆழமான இந்த மனித உறவுகள் சந்திக்கின்ற நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வேறோர் பரிணாமத்தை சுட்டிக்காட்டுகிறது. வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சிறிய வெளிகூட அங்கு இருப்பதில்லை. மற்றய உறவினர்களும் வன்முறையை பொறுத்துக்கொண்டு வாழும்படிதான் அறிவுரை கூறுவார்கள். இதனால் வேறுவழி தெரியாமல் அவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருகின்றார்கள். தமது முடிவை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறைகளும் அவற்றை மனஉறுதியோடு நிறைவேற்றும் விதமும் மனதை உறையச் செய்யும் விதமாகவே இருக்கின்றன.

பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது.

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர்பதிவில் என்னையும் இணைத்துக்கொண்ட நண்பன் ராகவனுக்கு முதலில் நன்றி. எதை எப்படிப் பதியலாம் என்ற சிந்தனைக்குள் நுழைந்தபோது இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருடன் சிலநிமிடங்கள் பேசியவை நினைவில் வந்தன. அந்த சில நிமிடங்கள் இப்படி பயனுள்ளதாக மாறியதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருகின்றது. அவற்றுடன் எனது எண்ணங்களில் உதித்தவற்றையும் இணைத்து ஓர் சிறு பதிவாக இடுகின்றேன்.

மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து.

''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற கணியன் பூங்குன்றனின் பாட்டை முதலில் எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்தப்பாட்டிற்கு பொருள் “எல்லாம் நம் ஊரே யாவரும் நம் உறவினரே” என்பது. இதில் கேளிர் என்பது உறவினர் என்ற பொருளையே குறிக்கிறது. ஆனால் பொதுவாக எல்லோரும் கேளிர் என்பதை கேளீர் என்று நீட்டி எல்லோரும் கேளுங்கள் என்ற பொருள்பட கூறிக்கொள்கிறார்கள். கேளீர் என்று சொல்வதால் சொல்லவந்ததன் கருத்தே மாறிவிடுகின்றது. இதில் இன்னுமோர் விடயம் என்னவென்றல் கணவனை ‘கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதுண்டாம். கேளிர் என்ற சொல்லில் இருந்துதான் கேள்வன் வந்திருக்கலாம்.

''குட்டு வெளிப்பட்டுவிட்டது'' பார்த்தீர்களா? இங்கு குட்டு என்ற சொல் ரகசியம் என்ற பொருளைத் தருகிறது. ஒவ்வாருவர் வாழ்க்கையிலும் ஏதாவது குட்டு இருக்கத்தான் செய்யும. அதனால்தான் மோதல் வரும்போது குட்டை உடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நல்ல காலம் குட்டு என்ற சொல் பயன்பாட்டில் குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் குட்டம் என்றால் பள்ளம் அல்லது ஆழம் என்ற பொருளைக் குறிக்கும். ''குளம்குட்டை'' என்ற சொற்தொடரில் குட்டை என்பது சிறு பள்ளத்தை குறிக்கின்றது. சின்னவயசில் அப்பா தலையுச்சியில் குட்டியது ஞாபகம் இருக்கின்றதா? தலையில் பள்ளம் வருவதுபோல் கைமுட்டியால் அழுத்திக் குட்டுவதால் குட்டுதல் என்று வந்திருக்கும். குட்டம் என்ற சொல்லும் மருகிவிட்டது.

முகத்தல் என்பது தண்ணீரை வாளியில் நிரப்பி எடுத்தல். முகவை என்பது நீர் இறைக்கும் வாளியைக் குறிக்கும். முகத்தல் என்பதுதான் பின்பு பேச்சுவாக்கில் மோந்து கொண்டு வா என்று மாறிவிட்டது. முகத்தல் முகவை போன்ற சொற்களும் பாவனையில் இருந்து மறைந்து கொண்டு போகின்றன.

''துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை''


இதன் பொருள் உண்பவருக்கு உண்பதற்குரியனவாகிய உணவுகளை உள்வாங்கி அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவாவது மழையேயாகும். இது நீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

இந்தக் குறளில் வரும் துப்பு என்ற சொல் உணவு என்ற பொருளை குறிக்கிறது. இதில் துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. ஆனால் யாரும் நான் துப்பு உண்ணப் போகின்றேன் என்று கூறுவதில்லை.

ஆனால் ''துப்புக் கெட்டவன்'' என்று திட்டுகிறோம். அவ்வாறு ஒருவரைத் திட்டும்போது ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியற்றவன் என்றே பொருள். அதை உணர்ந்துதான் திட்டுகின்றோமா என்பது கேள்விக்குறிதான்?

அதேவேளை துப்பு என்ற சொல் பலபொருள் கொண்டதாகவும் உள்ளது. ''துப்புத் துலக்குதல்'' அல்லது ''துப்பறிதல்'' என்பதில் வருகின்ற துப்பு ஒரு செயல் நடந்துவிட்டால் அது பற்றிய விபரங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்ற பொருள்பட வருகின்றது. அதேபோல் துப்புதல் என்ற சொல்லில் வரும் துப்பு வேறோர் பொருளை கொண்டுள்ளது. எச்சிலை கண்ட இடத்தில் துப்புவது அல்லது ஒரு பொருளைக் கடித்து துப்புவது. இந்தத் துப்பு இப்போதும் பாவனையில் உள்ளது.

சரி உங்களுக்கு வயது என்ன? இவ்வாறு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 20 வயதாகிறது அல்லது 30 ஆண்டுகள் ஆகின்றன அல்லது அந்தப் பெரியவருக்கு 60 அகவையாகின்றது என்றுதானே?

ஆக வயதுக்கு இன்னுமொரு பொருள் அகவை. அகவை என்பது பொதுவாக குறைந்த அளவுதான் பாவனையில் உள்ளது. ஆனால் ஈழத்தில் ஓரளவு பாவிக்கப் படுகின்றது. அதே போல் வயசு, வயது இரண்டும் ஒன்றுதானோ?

"வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை" என்றோர் பாடலும்; "நினைத்தேன் வந்தாய் நூறு வயசு" என்றோர் பாடலும் இருக்கின்றது அல்லவா? இதிலிருந்து வயது வயசு இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருவோமே.

"கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" இதில் கறுப்பு என்பது நிறத்தைக் குறிக்கும். அப்போ கருப்பு என்பது என்ன? கருமை, கரிய, கார்குழலி என்ற சொல்லில் வரும் கார் என்பன நிறத்தைத்தானே குறிக்கின்றன. கருப்பண்ணைசாமி என்ற சாமி கையில் அரிவாளுடன் நிற்கும் காட்சி கடும்கோபத்தைத்தான் குறிக்கிறது. ஆகவே கருப்பு என்பதற்கு கோவம் என்ற பொருளும் வருகின்றது. கறுப்பு என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது ஆனால் கருப்பு என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு.

சரி "மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்" என்ற திரைப்படப்பாடலில் வரும் மெல்ல என்ற சொல்லுக்கும் "மெள்ள வா" என்ற தொடரில் வரும் மெள்ள என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம். மெல்ல நட என்றால் மென்மையான நடையைக் குறிப்பது போலவும் அல்லது மெல்லப்பேசு என்பது மென்மையாகப் பேசு என்பதையும் குறிக்கின்றது. ஆக மெல்ல என்பது மென்மை என்ற பொருளை உணர்த்துகிறது ஆனால் மெள்ள வா என்றால் ஆறுதலாக வா என்று தானே பொருள் படுகிறது. எல்லாமே குழப்பமாக இருகின்றது. மெல்ல மெள்ள இரண்டும் ஒன்றுதானோ?

சும்மா வாசித்து விட்டு போகாதீர்கள். தரவுகளைவிட குழப்பங்கள்தான் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்துக்கள் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிக முக்கியமானதும் அவசியமானதும்கூட.

இன்னுமோர்விடயம் என்னவென்றால் சில ஆங்கிலச்சொற்கள் எங்கள் மனதில் தமிழ் சொற்களாக பதித்துவிட்டது. உதாரணத்துக்கு கோர்ட் - நீதிமன்றம்; பொலிஸ் - காவல்துறை பாங்க் - வங்கி; போட்டோ – நிழல்படம் இப்படி இன்னும்பல பாவனையில் இருந்து நீங்கிவிட்டன.

சரி இதற்குமேலும் குழப்பாமல் வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பதிவுத் தொடரை தொடர்வதற்கு புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டாமா?

சக்(ங்)கடத்தார்: http://sakkadaththar.blogspot.com/

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மகன். பலதும் பத்தும் எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர். தொடர்ச்சியாக தாய்நிலத்தின் சோகங்களை எழுதிக்கொண்டிருப்பதால் ஓர் மாற்றத்திற்கு இத்தொடரையும் தொடரும்படி கேட்போம்

நட்புடன் ஐமால்: http://adiraijamal.blogspot.com/

கணனிபற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஐமாலை இந்தத் தொடருக்காக கொஞ்சநேரம் செலவிடும்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே

ரசிகா: http://rasigarasigan.blogspot.com/
இவர் என்பதிவுக்கு புதுவரவு அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவது ஓர் கடமையாகின்றது.

இவர்கள் இன்னும் பல நண்பர்களை அறிமுகப் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இத் தொடர் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைவு செய்கின்றேன்.

வியாழன், பிப்ரவரி 12, 2009

காட்டுத்தீ

தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் வேதனையில் இயங்கிக் கொண்டிருக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும், வாழவைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் ஏற்பட்ட அவலம் இந்த கட்டுரையை எழுதவைத்தது.

ஆஸ்திரேலியாவில் வெப்ப காலத்தில் பொதுவாக ஏதாவது ஒரு மூலையில் காடுகள் பற்றி எரிவதுண்டு. அப்போதெல்லாம் அத்தீயை அணைப்பதற்கு அரசாங்கம் பலகோடி டொலர்கள் செலவு செய்வதும் அடுத்த வருடமாவது காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டவரவேண்டும் என்று புதிய உத்திகளை அறிவிப்பதும் வழமையான ஓர் விடயம். ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட காட்டுத்தீ உலகநாடுகளையே ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பவைத்துள்ளது.

மூர்க்கமான காட்டுத் தீயினால் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயால் 180 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். கடந்த 100 வருடங்களில் இதுபோன்றதோர் கோரமான காட்டுத்தீ இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாப் பக்கத்திலும் இருந்து மக்களும் அனைத்து அமைப்புகளும் போட்டிபோட்டு உதவியவண்ணம் இருக்கிறார்கள். வேலைத்தளங்களில், ஒன்றுகூடும் இடங்களில், விளையாட்டரங்குளில், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் என்று எங்குபார்த்தாலும் உதவித்தெகையை மனம்விரும்பி கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். விக்ரோறிய அரசு 10 மில்லியன் டாலர்களை புணரமைப்பு தொகையாக அறிவித்திருக்கும் வேளையில் றெட் குறொஸ் (Red Cross) ஊடாக 31 மில்லியன் டொலர்களை பொதுமக்கள் உதவிப்பணமாக கொடுத்துள்ளார்கள் அதைவிட வேறு பல அமைப்புகள் சேர்ந்து 20 மில்லியன் டொலர்களுக்கு மேலாக உதவியிருக்கின்றார்கள்.

இத்துடன் நின்றுவிடவில்லை ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பெரிய பலசரக்கு வர்த்தக ஸ்பானங்களும் குறிப்பாக Woolworth, Coles போன்றவை 13ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் விற்பனையின்மூலம் பெற்றுக்கொள்ளும் லாபம் அத்தனையையும் காட்டுத்தீயினால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுக்கபோவதாக பேப்பர், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.தமது நாட்டு மக்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் ஆஸ்திரேலிய மக்களின் ஆர்வத்தை பார்க்கும்போது சிலிர்கின்றது.
தாயகத்தில் அல்லலுறும் தமது சக உறவுகளின் துர்ப்பாக்கியநிலையை நினைத்து வேதனைப்படும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ்மக்களும் தாம் அடைக்கலம் புகுந்த நாட்டு மக்களிற்கு உதவவேண்டும் என்ற உணர்வில் செயல்திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார்கள். ரத்ததானம் செய்வதும், பொருள் பணம் போன்ற உதவிகளை வழங்குவதுமாக வெவ்வேறு வடிவத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த செயல்திட்டத்தை ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளின் நினைவாக என்று அர்ப்பணித்து அதை ஓர் கவனயீர்ப்பு வடிவமாக செயல்படுத்துகிறார்கள்.

தாயகத்தில் தினம்தினம் எமது மக்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட ஒவ்வொரு உடல்களையும் கோரமாகப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப்போகின்றது. காட்டில் வசிக்கும் உயிரினம் ஒன்று தீயினால் கஸ்டப்படுவதை சகிக்கமுடியாத மக்கள் வாழும் இந்த நாட்டவர் ஈழத்தில் தினம் துண்டாடப்படும் உடல்களை கண்டும் காணாமலும் ஏன் இருக்கிறார்கள்.


சர்வதேச உலகம் தேவையான அனுதாபத்தையோ, ஆதரவையோ ஏன் முழுமையாக தரமறுக்கின்றது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள்கூட ஏன் எமது நாட்டில் நடக்கும் மனித உரிமைமீறலுக்கு குரல்கொடுக்க மறுக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தாயக அவலங்களைப்பற்றிய பரப்புரைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துரைக்க தவறிவிட்டோமா?

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

கசக்கின்றது காலம் .....


கடந்த சில நாட்களாக எழுதியதைவிட வாசித்ததே அதிகம். எங்கு பார்த்தாலும் வலியுடன்கூடிய வார்த்தைகள். இதற்குள் நான் எழுதி எதை சாதிக்கப் போகின்றேன் என்ற சிந்தனை வேறு.

எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டம், பரப்புரை வடிவங்கள், தீக்குளிப்பு உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் தமது உறவுகளை மீட்டெடுக்க ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் எதற்கும் அஞ்சாது தமிழரை அழிப்பதே எமது கடமை என்று தாயகத்தில் நாள்தோறும் சிறிலங்கா இராணுவம் அப்பாவி மக்களை கொன்று தீர்த்த வண்ணமே இருக்கின்றது. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள், ஊனங்கள் என்று வார்த்தைகளில் கூறமுடியாத சோகங்கள்.

நவஜோதி ஜோகரட்னம் எழுத்தில் வந்த கவிதை ஒன்றை வாசித்தேன். கசக்கின்றது காலம் என்ற வரிகளுக்குள் எல்லாமே அடங்கும்.

குத்தும் குளிரிலும் - என்
குருதி மிதமான சூடு
உரிமையிழந்த மண்ணின்கோலம்
பார்வையில் படியும்போது
உடல் இறுகி உதிரம் உறைகிறது

சரித்திர வட்டத்தில்
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…
மூடாத குழிகளில்
அம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…
இளவேனில் மழைத்தூறல்
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!

நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…
எரிகிறது இதயம்…
ஒளி செத்த தேசம்…
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்
குருதியைச் சீராக்கி
சிரிப்பைக் கண்டெடுத்து
சுதந்திரம் விரைந்து விரைவில்
மாலைகளாய் எம்
கழுத்தில் வீழாதா?...

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்


இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி இன்று காலை மரணமடைந்தார். தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள் , அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

உறவுகளே .... ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்கட்டும். தயவு செய்து இப்படி உயிரைவிடாதீர்கள். உங்களது விலைமதிப்பற்ற உயிரை அழிப்பற்கு கொண்டுள்ள மனத்திடத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பாவிக்கலாம். அநீதியை எதிர்த்து போராட வேறுவழிகள் நிறைய உண்டு. அவற்றை கண்டுபிடித்து செயல்படுங்கள்.

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த ஓர் தமிழனை வாய் கூசாமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இவரின் தியாக மரணத்தை திசைதிருப்ப தமிழக காவல் துறை முயன்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் மதிப்பை பார்த்தீர்களா?

தமிழக சுயநலவாத அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் எரிப்பதற்கு எத்தனை உயிர்கள் எரிந்தாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை மாற்றுவதற்காக நீங்கள் உடல்களில் தீயை பற்ற வைக்காதீர்கள். மக்கள் மனங்களில் கருத்துக்களில் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் கபட நாடகம் போடும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள்.

ரவி அவர்கள் ஈழத்தின் மீதிருந்த பற்றுக் காரண்மாகவே தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தார். இவரது உயிர் கொடைக்கு கிடைத்த பரிசை பாருங்கள். கொதித்து எழும்பும் எதிர்ப்பலையை திசைதிருப்ப கபட அரசியல்வாதிகளினால் சோடிக்கப்பட்ட களங்கமிது.

உறவுகளே பெறுமதியான் உங்கள் உயிரை வீணாக்காதீர்கள். இந்த உலகில் இருந்து இன்னும் எவ்வளோவோ உங்களால் சாதிக்க முடியும். உங்கள் வீர மரணம்கூட களங்க படுத்த படலாம் உணர்ச்சி வசப்பட்டு உயிரைப் பலிகொடுகாதீர்கள். வீரர்களின் சாவு சரித்திரமாக வேண்டும் அதற்காக உழையுங்கள்! தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் வாழும் உலகமிது
சிந்தியுங்கள்!

தமிழர்கள் அனைவரும் இணைந்து பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள் என்று இன்னும் ஏன் புரியவில்லை இந்த இந்திய அரசுக்கு. ஈழத் தமிழனுக்கு, சொந்தச் சகோதரனாய், இரத்த உறவுக்காரனாய் தமிழகத்துத் தமிழன் தோள் கொடுத்து நிற்கின்றான் என்பது இன்னுமா இந்திய தலைவிக்கு புரியவில்லை. நாளாந்தம் குண்டுவிச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் தமிழக தமிழர்களைப் பார்த்தாவது எதை எப்போது எதிர்க்க வேண்டும்;எப்போது ஆதரிக்கவேண்டும் என்பதில் ஓர் தெளிவை மற்றவர்கள் ஏறபடுத்திக்கொள்ளவேண்டும். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு!

சனி, ஜனவரி 31, 2009

நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்......



புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அமரர் முத்துக்குமாருக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி.

புதுவையின் கவிதையில் உள்ள ஆழத்தையும் ஈர்ப்பையும் அவரது எழுத்தின் வலிமையையும் வியந்தவர்கள் பலர்.


எனக்கொரு நாடும் எனக்கொரு மொழியும்
இருந்திடும்போதும் நானொரு அகதி


இப்படியாக தனது ஏக்கங்களை வார்த்தைகளாக்கி மற்றவர்களையும் விழித்தெழச்செய்தவர் புதுவை இரத்தினதுரை. தமிழினத்தை நேசித்து தன் உறவுகளின் அழிவை தடுக்க தன்னையே அழித்த வீரனை நினைத்து சதையும் ரத்தமுமாக காட்சி தரும் மண்ணில் நின்றுகொண்டே புதுவை எழுதிய கண்ணீர் காவியமிது.

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.

நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம் .
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்

தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை

வெள்ளி, ஜனவரி 30, 2009

'தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல'


இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமரன் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

எம் தேசத்தின் துயர் துடைக்க தன் உயிரை பலி கொடுத்த முத்துக்குமரன் என்ற மாமனிதருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!

சொந்த மண்ணில் மக்கள் அவலப்படும் போதும் காட்டிக் கொடுத்து வயறு வளர்க்கும் மனிதர்களின் மத்தியில் இப்படியும் ஜீவன்கள். தன்னினம் வாழ வேண்டும், தன் இனத்திற்கெதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உயிரை மாய்த்த அவரின் துணிச்சலுக்கும், தன் மானத்துக்கும் தலை சாய்க்கும் அதே நேரம். . . . ..

வேண்டாம் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் இனியும் வேண்டாம். தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல மற்றவர்களைப் போல் அவனும் வாழப் பிறந்தவன். விலை மதிக்க முடியாத உயிர்களை ஒரு நிமிடத்தில் போக்காதீர்கள். உரிமையுடன் உங்கள் ஆதரவுக்கரத்தை தொடர்ந்தும் நீட்டுங்கள், உங்களது மத்திய மாநில அரசுகளை செய்கையினால் அசையுங்கள். உங்களது உயிர் மிக புனிதமானது உங்களைப் போன்றவர்கள் உயிருடன் இருந்து ஈழத் தமிழருடன் இணைந்து வரவேண்டும். இப்படிப்பட்ட இறப்புகளினால் அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டாம்.

தோழரே எங்கள் துயர் படிந்த ஈழ வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டீர். உம்மை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும் இதய பூர்வ அஞ்சலியும்.

வாழ்வினை இழந்த தோற்றம்

தென்றலது தாலாட்டும் தமிழ் ஈழமின்று
சதிகாரர் கைகளிலே பலியாகிப் போனகதை
பத்திரிகை வாசலில் முத்திரை பதிப்பதை
எத்திரை தடுத்தாலும் உதிரம் துடிக்கிறதே!

அன்று நடந்த கொலை ஆயிரமாயிரம்தான்
இன்று நடப்பதுவோ எண்ணிமுடியவில்லை
சுடுகின்ற துப்பாக்கி துரத்தும் பீரங்கி
தூரத்தே பறக்கின்ற துல்லிய விமானங்கள்
இடுகின்ற குண்டோடு ஏவுகணையத்தனைக்கும்
பலிபீட ஆடுகளாய் பாவிமக்கள் அழிவதுதான்
பழகிப்போகும் கதையாச்சோ!



இருந்த இடம் நீங்கி
இருக்குமிடம்தேடி
இறப்பதற்கே பிறந்தவர்போல்
இழந்தவர்கள் வருந்தியோடும்
கோலத்தை
காணொளியில் கண்டதற்கு வர்ணனைகள் ஏதுமுண்டோ!

ஆடையோர் அழுக்கும் ஆஸ்தியோர் பானையுமாய்
வாடையிலும் கோடையிலும் வதைவோரைப் பார்கையிலே
வாழ்வோரை வாழவைக்கும் வணங்கும் கடவுளரை
வையாமல் என்ன செய்ய!

திரும்பும் இடமெல்லாம் அழுதகண் வரண்டமேனி
தரித்திரப் படுக்கை; இரத்த வியர்வை; நிரந்தர ஊனம்
தன்மகனை ஏன் பெற்றோம் என்று மாய்கின்ற தாய்
கண்முன்னே நடப்பதனை காணப்பொறுக்காத வீரம்
விடுதலைவேண்டி குருதிநீராட போரிடும் வேகம்!
நெஞ்சு பிளந்து குஞ்சுகளை அள்ளும் கொடூரம்?
கொடுமையொழி; போரைநிறுத்து
தமிழர் பக்கம் பார்வையைத் திருப்பு
புலம்பெயர் தமிழர் கதறும் காட்சி
எங்கும் வாழ்வினை இழந்த தோற்றம்

பூமித்தாயே போன பசுமைதான் எங்கே?
போரின்றி நம்நாடும் மாறுமோ நன்றே!
பொன்னான பூமி பொல்லாத கைபட்டு
மண்ணாகிப் போகிறதே இது மறக்குமா!
இந்த சோகம் எமைவிட்டு இறக்குமா!
வானத்தைப்பார்த்து வாழ்ந்த உறவுகளின்
வாழ்வுநிலை மாற்ற யார் வருவார்?

கண்ணை முழிப்பதுவோ அந்நிய நாட்டில்
உடம்பில் காயமில்லை; உதிரம் சிந்தவில்லை
தோல் தடித்தாலும் ரத்தம் மறந்திடுமோ?
கண்விழித்த நாட்டையும் பிறந்த மண்ணையும்
இதயக்கிடங்கினில் சேமித்த உணர்வையும்
உயிருள்ளவரை யாரும் மறப்போமோ?

சௌந்தரி

புதன், ஜனவரி 28, 2009

அப்பாவும் நானும்......



தந்தையின் பெருமைகளை சொல்வதற்கு நிறைய உண்டு, சொல்ல நினைத்தேன் நினைத்ததும் நினைவை வெல்ல முடியவில்லை. நானும் அப்பாவும் நல்ல நண்பர்கள், நாம் வாழ்ந்த காலங்கள் சந்தோசமான இனிய சங்கீதம். அங்கே காயங்கள், வடுக்கள் என்று எதுவுமேயில்லை. போர்ச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்தேன் அவர் இறந்தபோதுகூட நான் அருகிலில்லை ஊருக்கு போகமுடியாத சூழ்நிலை இறுதிவரை அவர் முகத்தைக்காணவேயில்லை. அந்த ஏக்கத்தின் காயம் ஒர் அழியாதசோகமாக என்னுள் இருக்கின்றது. என் வார்த்தைகளில் கள்ளமில்லை கற்பனையில்லை சொல்ல முடிந்ததை சொன்னேன்.

என் அப்பா

எனக்கோர் அறிவொளி
அமைதியின் சிகரம் - அவர்
உள்ளும் புறமும் வெண்மை
துள்ளும் மனமோ மென்மை


நானிலம் போற்றிய நற்றமிழ் ஆசான்
குற்றம் பொறுக்கும் குணமலை
துள்ளிய நடை துடிப்பான செயல்
சிம்மக்குரல் சிரிக்கும் கண்கள்
இது என் அப்பா - அவர்
தெள்ளிய தேனிலும் இனியவர்
கற்றவர் அவைதனில் நிற்பவர்
நற்றமிழ் நலம்பெற்ற நாவீரர்
கம்பனின் களிநடம் சொல்லுவார்
கைகட்டி வாய்பொத்த மறுப்பவர்
வற்றா நதியென வாழ்ந்தவர்


என் தாயின் காதல் நாயகன்
ஏக்கம்தீர எம்மை நேசித்த ஜீவன்

கண்போன்ற தன் பெண்களுக்கு
பொட்டு வைத்துப் பார்த்தவர்
கட்டவிழ்ந்து போகாமல்
பொன்னும் பொருளும் தந்தவர்

நன்றி சொல்லவேண்டிய நல்லவர்
கெட்டியான பாசத்தை ஊட்டி வளர்த்தவர்
மட்டமான எண்ணத்தை மலராமல் தடுத்தவர்
சுட்டியான கருத்தை பேச்சில் கொண்டவர்
அட்டகாசமாகவே அவையோரை கவர்பவர்
கிட்டநின்று பார்ப்போர்க்கு சட்டென்று புரிபவர்
எட்டிநின்று பார்த்தாலும் காட்சியாக தெரிபவர்


சிந்தனைகள் சொல்லுவார்

சித்திரத்துப் பாவையென்று
சின்னவளைப் போற்றுவார்
அவருடன் வாழ்ந்த காலம்
அத்தனையும் வசந்தகாலம்
அவரில்லா நிகழ்காலம்
நிழலில்லா வனாந்தரம்



பக்கம்பக்கமாக சொல்லுவேன்

பருகிய பாசத்தைப் பாடுவேன்
ஆசையோடு அசைபோடுவேன்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை
அர்ச்சனைப் பூக்களாக்கி
அர்பணிக்கும் மனசோடு
நன்றி என்னும் தீபமேந்தி
நான் விரும்பும் தந்தைக்கு
அவர் மென்பாதங்களில்
அன்போடு தூவுகின்றேன்

தாய் பாசத்தைபற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள் ஆனால் தந்தையின் பாசத்தை ஏனோ பலரும் விபரிப்பதில்லை. அப்பாவும் நானும் என்ற இந்த தலைப்பின்கீழ் நீங்களும் உங்களது அப்பாவைப்பற்றி சில வரிகளை எழுதிச்செல்லுங்கள். அவற்றை தொகுத்து நான் எனது கருத்தையும் இணைத்து மீண்டும் ஒரு பதிவாக போடுகிறேன்.

சனி, ஜனவரி 24, 2009

எல்லோரும் சமமானவர்களே!

சௌந்தரி
அபியும் நானும் என்ற படம் பார்த்தபோது ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை அவரது மனைவி வயதான பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும்படி கூற அவர் செய்கையால் மறுப்பு தெரிவிப்பார். மனைவி தொடர்ந்து வற்புறுத்த வேண்டாவெறுப்பாக குனிகிறார். இந்தக் காட்சியை பார்த்ததும் எனது மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. அதையே இன்று எழுதுவோம் என்று யோசித்தேன்.


ஊரில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூட பல வைபவங்களில் மனிதர்களின் கால்களில் மனிதர்கள் விழுவதை காணக்கூடியதாக இருகின்றது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் வந்துகொண்டு இருகின்றது. திருமண நிகழ்வுகளில் பல நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் கால்களில் மட்டுமல்லாது மற்ற உறவுக்காரர்கள் கால்களில் விழுவது, அரசியல் மேடைகளில் தலைவன், தலைவியின் காலில் விழுவது, கோயில்களில் பெரிய ஐயர், ஆசிரமங்களில் மகான் போன்றவர்கள் கால்களில் விழுவது என்று இன்னும் பல.

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட எந்த வகையிலும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் துறையில் தனித்திறமைகள் இருக்கின்றது. அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் சமமானவர்களே. என்னை பொறுத்தவரையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதென்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும்.

பெற்றவர்கள் காலில் விழுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்று சொன்னாலும் மரியாதையை வெளிக்காட்டுவதட்கு இது ஒன்றுதானா வழி. மரியாதை என்பது மனசில் இருக்கவேண்டும் மற்றும் செயலில் இருக்கவேண்டும் வெறும் வாய்சொல்லிலோ காலில் விழுந்து வழிபடுதலிலோ மட்டும் இருந்தால் போதாது. பெரியவர்களது அறிவுரைகள், அவர்களது அனுபவதேர்ச்சி போன்றவற்றை முன்னுதாரணமாக ஏற்று வாழ்வதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான்.

பொதுவாக குழந்தைகளை மற்றவர்கள் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்வது மிகவும் நெருடலானது. பெரியவர்களிடம் அன்பு செலுத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்கேட்டு நட என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே வீட்டில் விறகு கொத்த வரும் வேற்று ஜாதியைச் சேர்ந்த வயோதிபர் கதிர்காமுவை கதிர்காமன் என்று கூப்பிட சொல்வார்கள், உடுப்புத் துவைக்கும் மாணிக்கம் என்ற வயதான பெண்மணியை தொட்டுப் பேச அனுமதிக்க மாட்டர்கள், பாட்டி வயதை ஒத்த அவரையும் மாணிக்கம் என்றே அறிமுகப் படுத்துவார்கள்.

இப்படியாக குழந்தைகளுக்கு பல முரண்பாடுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கும் பெரியவர்கள் அவர்களை மற்றவர்கள் கால்களில் விழச் சொல்வது தன்னம்பிக்கைக்கு எதிராக அவர்களை தூண்டுவது போல்தான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

யாருடைய நம்பிக்கைகளையும் குறை கூறும் நோக்கம் எதுவும் இங்கு இல்லை. மனதில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு மட்டும்தான். உங்களது பக்க நியாங்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும்.

செவ்வாய், ஜனவரி 20, 2009

உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

சௌந்தரி
“உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

அப்பிடி ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றது என்று முணுமுணுத்தாலும் போதியளவு வசதிவாய்ப்புகள் இருந்தும் முதியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

“காவோலை விழ குருத்தோலை பார்த்துச் சிரிக்கும்” இன்றைய இளைஞர்கள்தான் நாளைய முதியவர்களாக உருமாறப்போகின்றவர்கள் ஆகவே இதைப்பற்றி அனைவருமே சிந்திக்கலாம்.
எதையும் நியாயப்படுத்தாமல் பிழை, சரி என்பதுபற்றி எல்லாம் வாதம் செய்யாமல் அனுபவத்திற்கும் வயசுக்கும் மதிப்புக் கொடுத்து முதியவர்களை அனுசரித்துப் போவதுதான் நியாயமானது. அவர்களது இளமைக்காலத்து வியர்வைதான் இப்போது எம்மை வாழவைக்கின்றது.

முதியவர்களுக்கு இப்போ என்ன குறை வைத்துவிட்டோம் என்று சொல்வது எனக்கும் கேட்கிறது. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் முதியவர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஊரில் கோயில்குளம், உறவினர்கள், அயலவர்கள் என்று சுற்றித் திரிந்தவர்கள் எதற்கும் மற்றவர்களது தயவை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிள்ளைகள் காலையில் போனால் இரவுதான் வீடு திரும்புவார்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் நான்கு சுவர்களுக்குள் நாட்களைக் கடத்தவேண்டிய கட்டாயம். வேற்றுமொழி, புதியஇடம், புதியகலாசாரம் என்று மும்முனைத் தாக்குதலுக்கும் அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க வெள்ளையின கோடீஸ்வரப் பாடகர் ஒருவரது தந்தையின் சடலம் தேடுவாரற்ற நிலையில் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 89 வயதான முதியவர் மரணித்து ஆறு வாரங்களின் பின்பு சடலம் அழுகி, துர்நாற்றமடித்து அயலவர்களுக்கு தெரிந்தபோதே போலீசார் வீட்டிற்குள் சென்று பொருமி வெடித்த சடலத்தை மீட்டனர். இது கதையல்ல உண்மையில் நடைபெற்ற ஓர் சம்பவம். அந்த முதியவர் இறந்து ஆறு வாரங்கள்வரை பிள்ளைகள் எங்கே போனார்கள்? ஒரு முறையாவது அவர்கள் தொடர்புகொள்ள முயலவில்லையா?

வயதான பெற்றோர்களை வீட்டில் தனியாகவிட்டு போகுமிடங்களில் பணிகளோடு மூழ்கி தம்மைத் தொலைத்து விடுவதால் அடிக்கடி பெற்றோர்களை தொடர்புகொண்டு அவர்களது நலம் அறியவே பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் செய்தி சொல்லவும் நாதியற்று அவர்கள் இறந்துவிட பிள்ளைகள் வந்து கண்ணீர் வடிக்கிறார்கள். வாழும்போது அருகில் இல்லாத பிள்ளைகள் சாவில் வந்து வாசமுள்ள மலர்ச் செண்டு வைத்துப் போகிறார்கள்.

இதுதான் இங்குள்ள பெற்றோர் பிள்ளைகளின் உறவு நிலை. தமிழ்ப் பெற்றோர்களது நிலமையும் இதேபோல் மாறிவருகின்றது என்று பொதுமைப்படுத்தமுடியாது. ஆனால் பணம், பதவியிருந்தால் வாழ்வில் எல்லாமே சாத்தியமாகிவிடும், எதையுமே சாதித்துவிடலாம் என்று எண்ணும் மனிதர்களுக்கு இந்த மரணம் நல்லதோர் படிப்பினையாக அமையும்.

போர்ச்சூழல் காரணமாக இளையவர்களெல்லாம் நாட்டை விட்டு வெளியேறியதால் எமது நாட்டிலும் இளைஞர்களைவிட முதியவர்களே அதிகம். உழைப்பவர்களைவிட ஓய்வூதியம் பெறுவோர் தொகையே அதிகம். பெற்றோர்கள் இறந்தபின்பு கொள்ளிவைப்பதற்குக்கூட பிள்ளைகள் இல்லாமல் பயணித்த கதைகள் எத்தனையோ. இவையெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்றாகிப் போனதால் எல்லோரும் மனதை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஊரில் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வாரத்தில் ஒரு தடவையாவது போன் செய்து அறிய முடியாத அளவுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகளின் நிலை இருக்கிறது. யாரிடம் நேரமிருக்கிறது? அதிகப்படியான பணச்சுமைகளை ஏற்படுத்தி அவற்றை சமாளிப்பதற்கு தொடர் வேலை செய்வதிலும், வேலை செய்த களைப்பில் உறங்குவதிலும்தான் நேரம் போகின்றது. அதைத்தவிர வாழ்வில் மிகுதியாக வேறு எதுவுமேயில்லை என்றே கூறவேண்டும்.

காலங்கள் நகர்கின்றன், நாளை நாமும் தனிமையில் விடப்பட்டு முதியோர் இல்லத்திலும், பராமரிப்பு நிலையங்களிலும்தான் இருக்கப்போகிறோம். முற்பகல் செய்வது பிற்பகலில் விளையப் போகிறது அவ்வளவுதான். நினைத்துப் பார்க்கும்போதே கஸ்டமாக இருக்கின்ற இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? பணத்தைவிட உயரிய பாசமிகு வாழ்வியல் கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர், குடும்ப உறவினர், ஊரவர், அயலவர் மற்றும் அன்புடன் பழகுபவர்கள் இவர்களிடம் நேர்மையான உறவை வளர்க்க வேண்டும்.

நாடுவிட்டு நாடு வந்து பணத்தை மட்டும்தேடி இறுதியில் காணப்போகும் சிறப்பு எதுவுமேயில்லை. மற்றவர்கள்மீது குறை சொல்வதையே முழுநேர வேலையாகக் கொண்டு மனநோயுடன் வாழும் வாழ்வை நிறுத்தி, தவறுகளை சரிசெய்து மனிதனாக வாழ நினைத்தாலே போதும் எல்லாம் சரியாக நடக்கும்.பூமிக்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது எதைக் கொண்டு போகப் போகின்றோம்? செய்யும் செய்கைகளின்மூலம் மனச்சந்தோசத்தை வளர்க்கமுடியாமல், உள்ளுக்குள் புழுங்கி தினம்தினம் செத்துக் கொண்டிருக்கும் அவசர வாழ்வின் முடிவில் எதைக் காணப்போகின்றோம்?

புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றவர்களும், முதியவர்களும்கூட வீடுகளில் அடைந்து கிடக்காமல் முடிந்தளவு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி நல்லதோர் நட்புவட்டத்தை உருவாக்கி எல்லோரும் சேர்ந்து வாழப்பழகலாம். அரசாங்கம் கொடுக்கும் மரியாதைப்பணம், போதியளவு நேரம், சேர்ந்துபழக காணும் இடமெல்லாம் நண்பர்கள் இப்படியாக எல்லாமே உங்களைச்சுற்றி இருக்கும்போது வேறு என்ன வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்காது, சார்ந்து வாழும் வாழ்வைவிடுத்து சுயமாக செயல்படும் தன்மையை வளர்த்துக்கொண்டால் மகிழ்ச்சிதானாக வந்துவிடும்.

காலத்துடன் வயது போவதை தடுக்கமுடியாது ஆனால் முடிந்தமட்டும் மனசை இளமையாக வைத்திருக்கமுடியும். பொதுவாகவே முதுமை வந்தாலே பயமும் வந்து சேர்ந்துவிடும் அதிலிருந்து விடுபட்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி முடிந்தளவுக்கு முதியவர்களும் தங்களை மாற்றப்பழகவேண்டும் இதுதான் யதார்த்தம். இந்த சிந்தனையுடன் இருந்தால் முதுமையை நினைத்து நான் பயப்பிடத் தேவையில்லை.

இதை வாசிப்பவர்கள் உங்களது கருத்துக்களையும் எழுதிச் செல்லுங்கள். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வின்மூலம் தெளிவான சிந்தனையை உருவாக்கலாம்.

வெள்ளி, ஜனவரி 16, 2009

அழகு

சௌந்தரி
தோற்றம் என்றால் என்ன? புறத்தோற்றமா? அல்லது அகத்தோற்றமா? இரண்டு தோற்றமும் அவசியம்தான். ஆனால் பார்த்தவுடன் ஏற்படும் கவர்ச்சி புறத்தோற்றத்தில் தான் இருக்கின்றது. அத்தோற்றப் பொலிவிற்கு மரியாதையும் முக்கியத்துவம் கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக நிறத்தோற்றம் முதலிடத்தைப் பெறுகின்றது.

















சில சேவைகளுக்கு முகமும் உடலும் அழகாக இருக்க வேண்டியது அவசியம் உதாரணமாக மருத்துவமனை தாதிமார்கள், விமான சேவையில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள், அலுவலகங்களில் வரவேற்பாளராக இருப்பவர்கள் இவர்களுக்கு அழகான தோற்றம் அவசியமாகின்றது. அதுபோல் சினிமாத்துறை, விளம்பரத்துறை போன்றவற்றிலும் அழகான தோற்றம் உள்ளவர்களால்தான் ஜெயிக்கமுடிகின்றது.

வீதியில் ஓடும் கார் முதல் காலில் அணியும் பாதணிவரை அழகிய பொருட்கள்தான் மக்களை கவருகின்றன அப்படியிருக்கும் போது வெளித்தோற்றத்தில் உண்டாகும் கவர்ச்சியை பிழை என்று சொல்லமுடியாது. அதே வேளை மனத்தோற்றத்தின் அழகை கண்டுகொள்ளாமல் விடுவதும் சரியாகாது. ஒரு செயலை செய்து முடிக்க புறத்தோற்றம் அழகாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல உழைப்பாளியாகவும் அறிவாளியாகவும் சிந்தனை வாதியாகவும் இருக்கவேண்டும். தோற்றப்பொலிவு உள்ளவர்கள் இலகுவாக சில துறைகளின் நுழைவாசலை அடைய முடிந்தாலும் அவர்களிடம் உள்ள நேர்மையான அணுகு முறையும் அறிவு சார்ந்த திறமையும் இல்லை என்றால் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது.




நாகரீகம் பிறந்தகாலம் தொட்டே மனிதன் அழகுக்கு அடிமையாகி அதற்காக தனது கொள்கைகளை, மனதை, வாழ்க்கை முறைகளைக்கூட மாற்றியிருக்கிறான்.
அழகு பல வடிவங்களைக் கொண்டது.
இயற்கையழகு, தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, செயல்பாடுகளின் அழகு, ஆன்மீக அழகு இப்படி பல.

உடல் அமைப்பினால் உருவாகும் அழகானது பலவிதமான எண்ணங்களை உருவாக்கிறது. காமம், கலை, பக்தி போன்ற உணர்வுகளை உருவாக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது.

ஒரு படப் பிடிப்பாளனோ ஓவியனோ ஒரு பெண்ணை முன்னே நிறுத்தி படம் எடுக்கும் போது அவன் மனதில் கலை உணர்ச்சியைத் தவிர காமத்துக்கு இடமில்லை. கோயில் ஓவியங்களை பலர் பல விதமாக இரசிப்பார்கள். அதில் காமம், பக்தி, தத்துவம், கலை என்று பலதும் உள்ளடங்கியுள்ளது.

வெளித் தோறத்திற்கான அழகானது மெழுகுவர்த்திபோல் எரியத் தொடங்கியவுடன் உருமாறி தன் அழகை இழந்துவிடும். முக்கியமாக மனித உடலின் அழகு மனச்சஞ்சலம், கடும் உழைப்பு, கால மாற்றம் என்பனவற்றால் பாதிக்கப்படுகின்றது. ஆனால் உடல் அழகைவிட மனத்தில் தோன்றும் அழகான எண்ணங்கள் நிலைத்து நிற்கும். பரிசுத்தமான மனசோடு நல்ல நோக்கங்களை சிந்திக்கும்போதே நல்ல சக்தியானது மனதை ஆட்கொள்கிறது. அதுவே முகத்தில் ஒரு தனி அழகையும் பிரகாசத்தையும் தரும்.

புதன், ஜனவரி 14, 2009

அனாதைப் பொங்கல்

சௌந்தரி
அன்று
உழவர்வாழ் கிராமத்தில்
தாயன்பின் அணைப்பில்
கோழிகூவ துயில் எழும்பி
அழகான வயல்வெளியில்
அமுதமாக தேங்கிநிற்கும்
அத்துளுக் குளத்தினிலே
கவலையின்றி நீச்சலடித்து
புத்தாடை உடுத்தி புதுரிபன் கட்டி
வானவெடி வாத்தியத்தில்
கதிரவனைத் துயில் எழுப்பி

முன்முற்றம் அம்மா பெருக்க
மாக்கோலம் அக்கா போட
ஆடிப்பாடி அறுகம்புல் பிடுங்கி
அப்பாவிடம் நான் கொடுக்க
கள்ளச்சிரிப்போடு மேனியெங்கும் நீறிட்டு
மஞ்சள்மா பிள்ளையாரை மனசார வணங்கி
புதுமண்ணடுப்பில் புதுப்பானை வைத்து
கதிரவன் திசைபார்த்து புத்தரிசிபோட்டு
பாலோடு சக்கரையும் பாகும் பருப்புமிட்டு
பால் பொங்கும் மகிழ்ச்சியிலே
பொங்கலோ பொங்கலென்று கூடிக்குரல் கொடுத்து
வாழையிலை கழுவி வானவர்க்கு முதல் படைத்து
சுற்றங்கள் சூழநின்று வாழைப்பழத்தோடு
வாயெல்லாம் சிரிப்பாக பொங்கலுண்ட காலமது

இன்று
அந்நிய தேசத்தில்
பொங்கல் என்றே தெரியாமல்
நண்பர்கள் வாழ்த்துச் சொல்ல
தமிழ்க்கடைக்கு ஓடிச்சென்று
கையில் கிடைத்ததை வாங்கி
இயந்திரகதியில் பொறுமையிழந்து
பொங்கினேன் பொங்கலொன்று

இங்கே
புதுப்பானையில்லை புதுஅடுப்புமில்லை
புதுஅரிசியில்லை அட புதுஉடுப்புமில்லை
கிடைத்த பாத்திரத்தில் சக்கரையும் பாலுமிட்டு
தேவைக்கு அதிகமாக தேவையற்றதெல்லாம் போட்டு
கிண்டிக் கிழறி ஆத்திரத்தில் பொங்கிய
வேடிக்கைப் பொங்கலிதை
வெள்ளித்தட்டில் படைத்து தனியாக உண்ணுகிறேன்
கூடிக்குலாவிக் கதைபேச உறவுகள் அருகிலில்லை
பாடிப்பழகி பகிர்ந்துண்ண பக்கத்தில் சொந்தமில்லை

தைப்பொங்கல் தமிழருக்கோர்
தனிப்பொங்கல்
எனக்கிதுவோ அர்த்தமில்லா அனாதைப்பொங்கல்

செவ்வாய், ஜனவரி 13, 2009

பொங்குவோம் பொங்கலொன்று

இனமும் நிலமும் ஏற்றம்காண
எண்ணியபடியே எல்லாம் நடக்க
கடந்த ஆண்டை வழியனுப்பி
புதிய ஆண்டை வரவேற்று
தமிழினம்கூடி இறைவனை வேண்டி
பொங்குவோம் பொங்கலொன்று


சுதந்திரக் காற்றும் சமாதானப் பேச்சும்
ஈழமண்ணில் இன்றுமுதல் கிட்ட
சிறிய விதையை மண்ணில் பதித்து
பெரிய கதிராய் பூத்துக் குலுங்க
வேர்வை சிந்திய தோழர்கள் இணைந்து
தைத்திருநாளாம் தமிழர் நன்நாளில்
பொங்குவோம் பொங்கலொன்று

பழையன மறைந்து புதியவை தோன்ற
தீப்பந்தங்கள் அணைந்து தீபங்கள் ஏற்ற
ஆயுதங்கள் களைந்து அமைதி நிலவ
போர்க்குணம் அழிந்து பூவுலகம் மலர
பொங்குவோம் பொங்கலொன்று

கொட்டிலில் பயத்துடன் தாய்;
தொட்டிலில் பசியுடன் பிள்ளை
கொட்டும் மழையிலும் கோரப் பிடியிலும்
திக்கெட்டும் சிதறிய ஈழத்து உறவுகள்
தாய்மண்ணைக் காக்க தன்னுயிர் துறக்கும்
தமிழீழ வீரர்கள்
இவர்தம் நலம்வேண்டி
கண்ணிரண்டில் வெள்ளம் வழிந்தோட
பொங்குவோம் பொங்கலொன்று

தரணியெங்கும் இன்பம் பொங்கி
தூய்மை அன்பில் உள்ளம் மகிழ்ந்து
புயலும் பூகம்பமும் மண்ணோடு மடிந்து
அணைக்கும் கரங்கள் நன்றாய் பெரிகி
ஜெயிக்கும் மனிதன் தினமும் தோன்ற
பொங்கும் மனதுடன் பொங்கிடுவேன்
வார்த்தைகளில் பொங்கலொன்று
சௌந்தரி

திங்கள், ஜனவரி 12, 2009

''ஊருக்குத்தான் உபதேசம்''

சௌந்தரி
முகம் தெரியாத நண்பர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சுலபமாகவும் பிரச்சனைகள் அற்றதாகவும் இருப்பது என்னவோ உண்மைதான்.
நேரடியான உரையாடல்களின் போது எமது விருப்பு வெறுப்புகளை முடிந்தவரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட விடயம்.
ஒரு தொழிலைச் செய்தாலும் அல்லது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அல்லது வேறு எந்தப்பணியாற்றினாலும் பலருடனும் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதால் விருப்பு வெறுப்பக்களைக்காட்டி விரோதிகளை உருவாக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றே என் உள் மனம் சொல்கிறது. இது ஒன்றும் கடினமில்லை கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொண்டால் பழகிக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு யாரைப்பற்றி என்ன நினைக்கிறேனோ அதை மற்றவர் அறிந்து கொள்ள முடியாதவாறு முகத்தை வைத்துக்கொண்டால் அவர்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி அவர்கள் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இது மனிதர்களைச் சமாளிப்பதற்கு மிகவும் வெற்றிகரமான உபாயமாகும்.

எமது உணர்ச்சிகள் எமக்கு மட்டுமே சொந்தம் அவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது அவற்றை ஆளுகின்ற சக்தி எமக்கு ஏற்பட்டுவிடுகின்றது. வெளிப்படுத்தும்போது அந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் எம்மை அடக்கியாளத் தொடங்கிவிடுகிறார்கள். எமது உணர்ச்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாதவரை எம்மை யாராலும் கணிக்கவும் முடியாது குறை கூறவும் முடியாது.

ஒருவரது கருத்தும் செயலும் பிழை என்று தெரிந்து கொண்டும் மௌனமாக இருப்பதென்பது என்னவோ மிகவும் கடினமான ஓர் விடயமாகத்தான் இருக்கும். ஆனால் சிலருக்கு எதை சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நிற்பார்கள் அவர்களின் முன் மௌனமாக இருப்பதுதான் நன்மையை தரும். அபோதுதான் எமது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், என்ன சொல்லப்போகிறோம் என்று ஆவலுடன் எதிர்பார்த்தபடி மரியாதையுடன் இருப்பார்கள். இதனால் நண்பர்களை உருவாக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமலும், வீணான பிரச்சனைகள், குழப்பங்கள் ஏறபடுத்தாமலும் தவிர்த்துக் கொள்ளலாம்.

''ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே'' என்பது போல்தான் நான் சொல்வதெல்லாம்; என் மனசும் தனக்கு தெரிந்ததை சொல்லித்தான் பார்க்கிறது ஆனால் வாய் யார் சொல்லையும் கேட்பதில்லை. உங்களுக்கு எப்படி மனசுக்கும் வாயுக்கும் இடையில் link சரியாக வேலை செய்கிறதா?

ஞாயிறு, ஜனவரி 11, 2009

சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

க்கம்: சௌந்தரி
வாரம் முழுவதும் இயந்திரம்போல் வேலை செய்துவிட்டு ஓர் மாற்றத்திற்காக சனிக்கிழமை இரவு நண்பர்கள் ஒன்றுகூடி உணவருந்தி சந்தோசமாக இருப்போம். நண்பர்கள் ஒன்று கூடினால் கேட்கவும் வேண்டுமா? இலக்கியம், அரசியல், சமூகம் போன்ற துறைகளில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவ்ர்கள் நேரடியாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பலதரப்பட்ட விடயங்களையும் பற்றிய விரிவான உரையாடல் சுவாரசியமாக இடம்பெறும்.

இன்று இந்தக் கட்டுரையை எழுதத்தூண்டிய விடயம் நேற்று நடைபெற்ற உரையாடலில் இடம்பெற்ற சாதி பற்றிய பார்வை.

உரையாடலின் சாரம்சம் என்னவென்றால் ''புலம்பெயர்ந்த பின்பும் உயர்சாதியினர் என்று கூறிக்கொள்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை மனதளவில் அங்கீகரிக்கத் தயாரக இல்லை''.

அதற்கு கூறப்பட்ட காரணங்களில் முக்கியமானது என்னவென்றால் தாழ்சாதியினருக்கென்று தனியான குணம் இருக்கின்றது சமய சந்தர்ப்பங்களில் அத்தகைய குணங்கள் தானாக வெளிப்பட்டுவிடும் என்றும் இதை அனுபவபூர்வமாக சிலர் அனுபவித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. பொதுவான குணங்கள் என்று சொல்லப்பட்டவை
1. திருடுதல், பொய் சொல்லுதல், கெட்டவார்த்தைகளை பாவித்தல்
2. தினம் மதுபோதையில் வீட்டிலும் வெளியிடத்திலும் அடிதடி சண்டை போடுதல்
3. துப்பரவின்மை
4. நாகரீகமின்மை
5. குடும்பத்தில் ஒற்றுமையின்மை
6. குடும்பம் என்ற கட்டுக்கோப்பிற்குள் வாழாமை
7. அடிமைத்தனம் இப்படிப்பல

ஈழத்தில் கரவெட்டி என்ற எனது கிராமத்திற்குப் பக்கத்தில் கன்பொல்லை என்ற ஓர் மாதிரிக் கிராமம் இருக்கிறது. அங்கே கீழ்சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள்தான் வாழ்கின்றனர். அவர்களில் பலரிடம் மேலே கூறப்பட்ட குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவர்களும், அவர்களது பிள்ளைகளில் பலரும் போரின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சிறப்பாக வாழ்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது? ஊரில் அவர்களது வாழ்க்கை முறைக்கு காரணம் சமூகமும், புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தமே. அந்த அழுத்தத்தின் சுமையிலிருந்து விடுபடுவதற்காக அதற்குரிய மாறு வழிகளை தேடிச்சென்று அந்தத் தேடலில் விரக்தியடைந்து அவர்கள் விரும்பாமலே அப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்குள் தம்மை திணித்துவிடுகின்றார்கள்.

உயர்சாதியினர் என்று பெரிதாக பெருமைபேசி வாழ்ந்தவர்கள் பற்றியோ
இறுதிவரை தங்களது பெருமைகளை கட்டிக்காப்பதற்காக தமக்கு கீழே உள்ளவர்கள் விழிப்படையக்கூடாது இறுதிவரை இப்படியே இருந்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர்களைப்பற்றியோ இப்போது கதைப்பது தேவையற்ற விடயம்.

இந்த நுhற்றாண்டில் குறிப்பாக போர்ச் சுழலினால் ஈழத்தில் பாரியளவு விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது சாதீயம் பற்றிய பார்வை. ஆனால் மக்கள் மனதளவில் எவ்வளவு தூரம் மேம்பாடு அடைந்திருக்கின்றார்கள் என்பது இப்போதும் கேள்வியாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்தபின்பும் வேளாளர் அல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்களை குறைந்த சாதி என்ற வர்க்கத்திற்குள் இன்னும் சிலர் வகுப்பது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ற மொழி ரீதியில்தான் ஒருவரை ஒருவர் முதலில் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட நபரினது பிறப்புபற்றிய தகவல்களை மற்றவர்கள் மூலம் தெரிந்துகொள்ள நேரிடும்போது அவர்களுக்கிடையே மலர்ந்த நட்புக்கூட இல்லாமல்போன சந்தர்ப்பங்களும் உண்டு. முக்கியமாக பிள்ளைகளது திருமணம் என்று வரும்போது என்ன சாதி என்று துருவித்துருவி ஆராயமுற்படுகின்றார்கள் பெற்றவர்கள்.

எப்படி பிறப்பினால் ஒருவர் உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதியாக முடியும்.
இந்த நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட சிந்தனை இருப்பது அருவருப்பாக இருக்கின்றது. தாழ்ந்தவர்கள் என்று அவர்களது உழைப்பினால் பாகுபடுத்தப்பட்டவர்களது உழைப்பாலும்
வியர்வையாலும்தான் மற்றயவர்களது வாழ்வும் இந்த பூமியும் வளமாக இருக்கின்றது.
ஊரில் உயர்தவர்கள் என்று கூறப்பட்டவர்கள் பொருளாதார மேம்பாட்டினால்தான் உயர்ந்து நிற்க முடிந்தது. மற்றயவர்கள் தமது பொருளாதார விடுதலைக்காக போராட வேண்டியிருந்தது. ஆனால் புலம் பெயர்ந்த பின்பு பொருளாதாரம், கல்வி மற்றும் பிறவிடயங்களிலும் சமத்துவத்தை அடைந்தபின்பும் மனிதநேயம் மறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

சிங்களவரிடம் தமிழர் கேட்கும் உரிமைகள் நியாயமானவை, தேவையானவை, போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டியவை என்று ஒருமித்துக் குரல்கொடுக்கும் தமிழர்களுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

ஒரு இனம் மற்றய இனத்தை அடக்கி, ஒடுக்கி, விழுங்கி ஏப்பம் விடுகின்றபோது பார்த்துக் கொண்டிருக்கமுடியாமல் பொங்கி எழுந்து எமது இனத்துக்குரிய உரிமைகளை பெறுவதற்காக எத்தனையோ உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்கின்ற எமது தமிழ் சமூகத்திற்கிடையே சரிநிகர் சமமாக வர்க்க பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை என்பது வேதனையானது.

சாதி பற்றிய நினைப்பு எல்லாம் தமிழ் ஈழம் கிடைத்தால் நீங்கிவிடும் என்று எம்மில் பலர் நம்பிக்கொண்டு இருகின்றர்கள். அவர்களிடம் நம்பிக்கை மட்டுமே இருக்கிறது ஓர் அறிவு பூர்வமான அணுகுமுறைகளோ திட்டங்களோ இல்லை என்பதுதான் உண்மை.

இந்தக் கட்டுரைக்கு வலுச் சேர்ப்பதற்கோ இல்லை மாற்று கருத்தை வெளிப்படுத்துவதற்கோ உங்களது வாதங்களை முன்வையுங்கள். உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஓர் தெளிவான சிந்தனையை கொடுக்கும்.