செவ்வாய், நவம்பர் 22, 2011

புன்னகைச் சாரல்புன்னகையென்பது மகிழ்ச்சி. அதன் பெறுமதி அளப்பரியது. புன்னகைத்தவாறு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்வதென்பது ஓர் கலை மட்டுமல்ல அதுவோர் தேவையான சேவையும்கூட. சிரித்தமுகம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. இயல்பாகவே சிரித்தமுகம் அமைந்துவிட்டால் அதை அதிஷ்டம் என்றே கூறவேண்டும். சிரித்த முகத்துடன் அமைதியும் சாந்தமும் சேர்ந்து கொண்டால் தெய்வீகத்தன்மை தோன்றிவிடும். அப்படிப்பட்டவர்களோடு பழகக்கிடைப்பதென்பது ஓர் வரமாகும்.

உன் புன்னகைச் சாரலில்
குளிரும் என் எரிமலைச் சோகம்
உடல் சுமந்த அழகும்
மனம் நிறைந்த அன்பும்
இரண்டங்குலப் புன்னகையும்
வசீகரிக்கும் ஆயுதங்கள்
பகலில்கூட பயமுறுத்தும்
மனித விகாரங்களுக்கிடையே
நாணலைப்போல் மென்மையாக
பாலைப்போல் வெண்மையாக
புன்னகைத் துளிகளை
மௌனமாகத் தூவிச்செல்
இதயக் கொந்தளிப்புகள்
இல்லாது போய்விடும்
பேசுகின்ற பொக்கிஷமே
பாசத்தின் உடன்பிறப்பே
புன்னகையொன்றே போதுமே
என்மனம் உன்வசமாகுமே

சிரிப்பைத் தவிர்க்க முடியாது. சிரிப்போடுமட்டும்தான் என்னால் வாழமுடியும். என்னோடு இணைந்திருக்கின்றது எனது சிரிப்பு. எல்லோரிடமும் தனித்துவமான சிரிப்பொன்றிருக்கின்றது. எந்த ஒரு சூழ்நிலையையும் சமன்செய்துவிடுகின்றது கலகலக்கும் சிரிப்புச் சத்தம். யாருமே தனியாகச் சிரிக்கமுடியாது அப்படிச் சிரித்தால் அதற்கு வேறு பெயர் சூட்டிவிடுவார்கள். சிரித்து மகிழ்வதற்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே சிரிப்பவர்களை தேடிச்சென்று பழகிப்பாருங்கள் சிரிப்பின் ஆளுமை புரிந்துவிடும். ஒருவரது சிரிப்பு மற்றவர்களை எந்தவிதத்தில் வசீகரிக்கின்றது என்பதில்தான் அந்த சிரிப்பின் ஆளுமை அமைந்துள்ளது. மனிதனின் ஆளுமையென்பது இவையெல்லாவற்றையும் அடக்கியதுதான். புறத்தோற்றம் அகத்தோற்றம் இரண்டுமே மேம்பட்டிருப்பவர்கள்தான் ஆளுமைமிக்க மனிதர்களாவர். அகத்தில் அன்பும் குறையாத கருணையும் இருப்பவர்கள்தான் புறத்திலும் அழகாக இருக்கமுடியும். வெளிப்பூச்சில் அழகை தக்கவைத்துக் கொள்பவர்களது வேஷம் சிறிது நேர பழக்கத்தில் வெளிப்பட்டுவிடும்.

நான் பழகிய மற்றும் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களைத் திரும்பிப் பார்க்கின்றேன். எனது நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். எங்களைச் சுற்றி எப்போதுமே ஓர் கூட்டம் நிற்கும். சிடுமூச்சிகளுடன் எனது நட்புத் தொடர்வதேயில்லை. எதிர்மறையாக சிந்திப்பவர்களிடமிருந்தும் எதிலுமே குறைகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்களை வேதனைப்படுத்தி தம்மை சந்தோசப்படுத்துபவர்களிடமிருந்து எப்போதும் தள்ளியே நிற்கின்றேன்.

மகிழ்வாக இருப்பதென்பது எனது இயல்பு அதுவே எனது விருப்பம். அதனால்தான் என்னையும் என்னைச் சார்ந்தவர்களினதும் வட்டத்துக்குள் எப்போதும் சிரிப்பலைகள் சுற்றிக் கொண்டேயிருக்கும். சிரிப்பென்பது ஓர் ஆரோக்கியமான தொற்றுநோய் பக்கத்தில் இருப்பவர்களையும் விரைவாகத் தொற்றிக்கொள்ளும். அதன்மூலம் அவர்களுக்கிடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

விஞ்ஞான ஆராய்சிகளின்படி சிரிப்பென்பது உன்னதமான நோய் நிவாரண சக்தியென்றும் உடல் தசைகளின் இறுக்கத்தை குறைக்கும் நல்லதோர் உடற்பயிற்சியென்றும் கூறப்படுகின்றது. அதனால்தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று கூறினார்கள். சேர்ந்து சிரியுங்கள் மனம் மிகவும் இலேசாகிவிடும். மனஅழுத்தத்தை மனவலியை கட்டுப்படுத்துவதற்கு சிரிப்பே சிறந்த மருந்து. ஆனால் தேவைகளுக்காக சிரிப்பதென்பது வேறு சிரித்த மனசோடு இருப்பதென்பது வேறு. சிரிப்பில் பலவிதமான வகைகள் இருந்தபோதும் இயற்கையான சிரிப்புடன் இயல்பாக இருக்கும் மனிதர்களே பலரையும் வசீகரித்துக் கொள்வார்கள்.

எப்போதுமே சிடுமூஞ்சியாக இருந்துவிட்டு திடீரென்று சிரிப்புக்கு மாறமுடியாது. சிரிப்பதுகூட ஓர் பயிற்சியும் பழக்கமும்தான். காசின்றி செலவிடும் உண்மையான சிரிப்புக்கு விலையேது? சிரித்துக்கொள்ளுங்கள்.

சிரிப்பில் மயங்காத மனமுண்டா
வெட்கத்தில் ஒரு சிரிப்பு
வேதனையில் ஓர் சிரிப்பு
நக்கலில் ஓர் சிரிப்பு
நாணத்தில் ஓர் சிரிப்பு
உயிர்க் கொல்லிபோல்
உள்ளுக்குள் விஷம் கலந்து
வெளியிலே சிரிக்கும்
வஞ்சகச் சிரிப்புமுண்டு
அரைகுறையாய் மலர்ந்த
அல்லிமலரைப்போல் சிரிக்கும்
அப்பாவிச் சிரிப்புமுண்டு
இன்னும் பல சிரிப்புகள்
வர்ணனைக்குள் சிக்காது
வலுவிழந்து சிரிக்கின்றன
மயங்கத்தானே சிரிப்பு
மயங்கி மகிழத்தானே சிரிப்பு
மனிதகுலத்தின்
தனிச்சிறப்பல்லவா சிரிப்பு
சிரித்துப் பாருங்கள்
ஒட்டிக்கொள்ளும் சிரிப்பு

நகைச்சுவையுணர்வென்பது மிக முக்கியமானதொன்றாகும். சிலருக்கு அடிப்படையிலேயே நகைச்சுவையுணர்வு இருக்கின்றது. அவர்கள் தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்களது நகைச்சுவையுணர்வு மேலும் மெருகூட்டப்பட்டு எல்லோராலும் விரும்பப்படுகின்றது. பொழுதுபோக்குச் சாதனங்களில் நகைச்சுவைச் சித்திரங்கள் அதிகமாக சேர்க்கப்படவேண்டும். இயந்திரமயமான வாழ்க்கையில் ஓடி ஓடிக் களைத்து ஓய்வுதேடும் வேளையில் அழுது வடியும் திரைப்படங்களும் தொடர் நாடகங்களும் தேவையா என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழவேண்டும். காசைக்கொடுத்து மேலும் சுமையையும் அழுத்தத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா? கொஞ்சநேரம் அனைத்தையும் மறந்து சந்தோசமாக குடும்பத்தோடு சிரித்து மகிழ்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை தேடிச் செல்லுங்கள்.

எனது நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைத்தளத்தில் கழிகின்றது. வேறு இனத்தவர்கள் மத்தியில் பணி புரிந்தாலும் மகிழ்ச்சியான புன்னகை ததும்பும் முகங்களை ஒவ்வொரு காலையும் தரிசித்து காலை வணக்கம் கூறி எனது புதிய நாளை ஆரம்பிப்பதென்பது எல்லோருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. நன்றி கூறும்போதும் வாழ்த்தும்போதும் அன்பை பரிமாறும்போதும் காதலை தெரிவிக்கும்போதும் நட்பை வெளிப்படுத்தும்போதும் புன்னகை தானாக வெளிப்படுகின்றது. வெற்றுப் புன்னகைக்கும் முகமலர்ச்சியோடு முறுவலிக்கும் புன்னகைக்கும் உள்ள வித்தியாசத்தை புன்னகை பரிமாற்றத்தின்போது சுலபமாக உணர்ந்து கொள்ளமுடியும்.

வயது முதிர்ந்தவர்கள் சிரிக்கின்றபோது நிறைவான சிரிப்பொன்றைக் காணலாம். வயசோடு வக்கிரபுத்திகள் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகள் மிருக குணங்கள் போன்றவை அழிந்து போய்விடுவதால் அதுவரைகாலமும் தொலைத்த நிர்மலமான மனசு அவர்களுக்கு மீண்டும் திரும்பக் கிடைத்து விடுகின்றது. அதனாலோ என்னவோ வயது முதிர்ந்து பொக்கை வாயால் சிரிக்கும் மனிதர்களின் சிரிப்பில் கள்ளமற்ற குழந்தையின் சிரிப்பை காணமுடியும்.

துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சிரிப்புவரும் என்ற கேள்வியுமுண்டு. துன்பத்தில் உழலும்போது அழுவதுதான் சரியென்று யாருமே சொல்லவில்லை. துன்பம் வருகின்றபோது துன்பமே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் ஒரு சாரார் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வெளியேறி வாழ்பவர்கள் இன்னொருசாரார். இருசாரார்களது சிரிப்பும் வேறு வேறு விதமாக இருக்கும். வேதனைப்படும்போது நான் பேசுகின்ற குரலில்கூட சோகம் ததும்பி நிற்கும். அப்படியிருக்கும்போது எப்படி எனது சிரிப்பு நிஐமானதாக இருக்கமுடியும். ஆனால் என்னைப் போன்றவர்கள் சோகத்திற்குள் நீண்ட நேரம் வாழமாட்டார்கள். சோகத்திலிருக்கும் சில மணி நேரங்களுக்குள் அழவேண்டும் என்றால் சீக்கிரம் அழுது முடித்துவிட்டு துன்பத்திற்கான காரணங்களை அறிந்து அதற்கான தீர்வுகளையும் தீர்மானித்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார்கள். உணர்சிகளற்று வரவேற்பாளர்களின் சிரிப்பைப்போல் கடமைக்காக சிரித்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர் என்பதும் எனது அனுபவக்கருத்து.

பரந்தமனப்பான்மை கொண்டவர்களது மனதில் எப்போதும் மகிழ்ச்சியிருக்;கும் அவர்களோடு பழகுபவர்களும் ஓர் பாதுகாப்பான வட்டத்துக்குள் வாழ்கின்ற உணர்வை அனுபவிப்பார்கள். சாதாரணமாக மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவர்கள்கூட இவர்களோடு சுலபமாக இணைந்து கொள்வார்கள்.

சிலரிடம் சென்று பேசிப்பாருங்கள். எதையுமே ஈடுபாட்டுடனும் கருத்துக்களோடு உடன்படும் நோக்கிலும் பேசுவார்கள். அவர்களைநாடி மீண்டும் மீண்டும் சென்று பேசத்தோன்றும். இன்னும் சிலர் இருக்கின்றார்கள். எதையும் எதிர்மறையாகவே பார்ப்பார்கள். அவர்களது கண்களுக்கு குறைகள் மட்டும்தான் தெரியும். நிறைகளைப் பாராட்டும் மனசற்றவர்கள். தமது மனசில் உள்ள தாழ்வுச்சிக்கலை மற்றவர்களது குறையை சுட்டிக்காட்டுவதால் சமநிலைப் படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள். சந்தோசத்தை அனுபவிக்கமுடியாதவர்கள். கடுகடுப்பான முகத்தோடு வளையவரும் இவர்களைவிட்டு சுற்றியிருப்பவர்கள் தூர விலகிச் சென்றுவிடுவார்கள். இவர்கள் தனித்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாவப்பட்டவர்கள் என்றே கூறவேண்டும்.

இப்படிப்பட்டவர்களது மனப்போக்கிற்கு அடிப்படைக் காரணம் அவர்களது வாழ்க்கைமுறைதான். சிறுவயது வாழ்க்கைச் சூழல் அவர்களது மனதை வறண்ட பாலைவனமாக மாற்றிவிடுகின்றது. சிறுவயதுமுதல் எப்போதும் சிரித்த முகத்தோடுதான் நான் வளர்ந்தேன். எனது பெற்றோர்கள் எனது சிரிப்புக்கு தீனி போட்டு வளர்த்தார்கள். தொடர்ந்து என்னோடு கூடவந்த உறவுகள் எனது சிரிப்பை பக்குவப்படுத்தினார்கள். நான் தொடர்ந்து சிரிப்பதை பொறுக்கமுடியாமல் என்னோடு கூட இருந்து எனது சிரிப்பை கொன்றுவிடவேண்டும் என்ற முயற்சியில் அவ்வப்போது குழிபறித்து தோல்வியுற்று பறித்த குழியில் தம்மைப் புதைத்துக்கொண்டவர்களும் உண்டு.

எனது வாழ்க்கைச் சக்கரம் மாறுபட்ட வேகத்தோடு சுழன்று கொண்டிருந்தாலும் என்றும் வாய்விட்டுச் சிரிப்பவர்களின் உறவைத் தேடிச் செல்லும் பெண்ணாகவே வாழ்;கின்றேன். இறுதிக் காலம்வரை எனது சிரிப்பும் அதனூடக நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் தொடரும் என்றே கருதுகின்றேன்.

10 கருத்துகள்:

 1. ரேணுகா ஜோன்11/23/2011 7:13 பிற்பகல்

  //தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர்//

  அருமையான கருத்து. இப்படியானவர்களை காண்பதும் அவர்களுடன் தொடர்ந்தும் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதும் நன்மையானது. உங்களது இப்படியான எழுத்துக்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கை தருகினறன. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆசைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்க்கை என்பது தெரிவுகளும் மாற்றங்களும் நிறைந்தது தானே.
  தேடலை தொடருங்கள் மகிழ்வுடன் இருப்பீர்கள். நன்றி மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 3. சிரிப்பின் மகத்துவம்பற்றிய பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 4. நகைச்சுவையுணர்வு பல சிக்கலான சமயங்களிலும்கூட எமக்குக் கைகொடுக்கும்.

  பதிலளிநீக்கு
 5. கிடைத்தது இந்த ஒரு வாழ்க்கை அதில் தானும் சந்தோசமாக வாழ்ந்து சுற்றிலும் உள்ளவர்களையும் சந்தோசமாக வாழவைப்பதே சிறந்தது.

  பதிலளிநீக்கு
 6. எல்லாவிதமான சந்திப்புக்களையும் தூக்கிப்போட்டுவிட்டுப் போகக்கூடியதாக இருந்தாலும் சில சந்திப்புக்களை மட்டும் விட்டுப்போக முடியாமல் இருக்கின்றதே? ஏதோ ஓர் இனிமை அதை தொடரச் சொல்லி தூண்டிக் கொண்டிருக்கின்றதே அங்கேதான் ஈர்ப்பிற்கான ஏதோ ஒன்று இணைந்திருக்கின்றது. இன்னொருவரை சந்தோசப்படுத்தத் தெரிந்தவன் தானும் அதை அனுபவிப்பான். உங்கள் எழுத்துக்கள் ஆழமானவை. தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கின்றேன். நட்பிற்கு முகங்கள் தேவையில்லை ஏதோ ஓர் புள்ளியில் ஆரம்பமாகட்டுமே.

  பதிலளிநீக்கு
 7. >நகைச்சுவையுணர்வென்பது மிக முக்கியமானதொன்றாகும். சிலருக்கு அடிப்படையிலேயே நகைச்சுவையுணர்வு இருக்கின்றது

  சிலருக்குச் சுட்டுப் போட்டாலும் நகைச்சுவையுணர்வு வராது :-)

  பதிலளிநீக்கு
 8. உண்மை சக்திவேல் சிலர் நகைச்சுவையாக எதையாவது சொன்னால் அதை சீரியஸ் ஆக எடுத்து கோவித்துக் கொள்வார்கள் அவர்களுடன் பழகுவது மிகவும் கடினம். சிறுவயதில் நான் சரியான வாலாக இருப்பேன் ஆனால் இப்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளேன். ஆனாலும் எனக்கு நகைச்சுவையோடு பேசுபவர்களை அதிகம் பிடிக்கும். நீங்கள் எப்படி சக்திவேல்?

  பதிலளிநீக்கு
 9. புகைப்படத்தில் அப்ப்ப்பாஆஆவிவி போல் தெரிகின்றதே. அஃதே எப்படி ஆகும்.

  பதிலளிநீக்கு