வெள்ளி, செப்டம்பர் 25, 2009

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்


கரவைக்குரல், குயிலைப்போன்ற உங்களது குரலைத்தான் கேட்டேன். உங்களது கூட்டையோ, முகத்தையோ, முகவரியையோ நீங்கள் அடையாளப்படுத்தவில்லை.


உங்களைப்பற்றி கொஞ்சம் அதிகமாக கூறியிருக்கக் கூடாதா? பெற்றோர்கள், சகோதரர்கள், கரவையில் நீங்கள் எந்த மூலை, அத்துளுக்குளம், சண்டில்குளம் என்று எதைப்பற்றியும் கூறவில்லையே. தண்ணியென்றால் பயமா? கரவையில் பிறந்தவர்களுக்கு அந்தப்பயம் எப்போதும் இருக்காதே?


தங்கம்மா ரீச்சரின் வீட்டிற்கு பக்கம், தங்கம்மா ரீச்சரின் வீடு மறந்துபோய்விட்டது, வயசு போய்க்கொண்டிருக்கின்றது அல்லவா? ஆனாலும் உங்களது வீட்டின் படத்தைப்ப பார்த்ததும் எங்கோ பார்த்ததாக ஞாபகம். மேலும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.

அவசரமாக அழைத்து விட்டீர்களோ என்ற எண்ணத்தோடு உங்கள் பதிவை சென்று பார்த்தேன். வியந்து போனேன். அதே மாணிக்கவாசகர் வித்தியாலயம்தான் எனது ஆரம்பப்பாடசாலை. ஒரு வித்தியாசம் எனது சித்தப்பா உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருந்திருக்கின்றார் ஆனால் எனக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். சித்தப்பா பாலச்சந்திரன் எனது அன்புத் தந்தை பண்டிதர் பொன் கணேசனின் இரண்டாவது தம்பி.

கோவத்துக்கும் தலைமை ஆசிரியர் பாலச்சந்திரனுக்கும் வெகு தூரம் யதார்த்தமான உண்மை. ஆரம்பக்கல்வியில் இருந்து 5ம் வகுப்புவரை மாணிக்கவாசகரில்தான் நானும் பயின்றேன். குறிப்பிட்டுக் கூறும்படியாக அழகான நினைவுகள் ஏதுமில்லை. அந்த வயசில் கல்வியில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை, முழுநேர விளையாட்டுத்தான், விளையாட்டென்று கூறும்போது சும்மா மண் சோறு கறி மற்றும் தாயம், கள்ளன் பொலீஸ், கிந்தித் தொடுதல், கொக்கான் என்று என்னும் எத்தனையோ விளையாட்டுக்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. 

அந்தக் காலத்து ஆசிரியர்கள் கையில் பிரம்புடன் என்னை நோக்கி வருவதை இன்றும் என்னால் மறக்கமுடியாது. குறிப்பிடும்படியாக எந்த ஆசிரியரும் என்னை கவரவுமில்லை, என்னைப் பாதிக்கவுமில்லை. நீங்கள் கூறியதுபோல் ஆச்சி ரீச்சர் ஞாபகத்தில் நிற்கின்றார். மிகவும் அன்பானவர். மற்றவர்கள் எல்லோரும் வம்பானவர்கள். சித்தப்பா வாய்ப்பாடு கேட்டு தலையில் குட்டுவார், சின்னப்பிள்ளை ரீச்சர் எல்லா இடமும் நுள்ளுவார், நல்லதம்பி மாஸ்டர் பிரம்பால் அடிப்பார், சிவகாமி ரீச்சர் எனது வீட்டிற்கே சென்று சௌந்தரிக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று கோள்மூட்டுவார். அப்பப்பா என்னைச்சுற்றி வில்லன்களும் வில்லிகளும்தான்.


இவர்களால் வீட்டிலும் வன்முறை தொடர்ந்தது. எனக்கு இரண்டு (தடியன்கள்) மாமாக்கள் வீட்டில் ஒருவர் மாறி ஒருவர் பாடம் சொல்லித்தருகின்றோம் என்ற நினைப்பில் என்னைக் காயப்படுத்தினர். முற்றத்து மண்ணெல்லாம் விறாந்தையில் கொட்டி எழுத்துச் சொல்லித் தந்தனர். ரோட்டில் உள்ள கல்லெல்லாம் பொறுக்கிவந்து கணக்குச் சொல்லித் தந்தனர். a, b,c,d சொல்லிக் கொடுக்கின்றேன் என்று தனது ஆங்கிலத்திறமையை நிரூபிக்க விரும்பும் எனது நடுவில் மாமா ஆங்கில எழுத்துக்களை நான் தப்புத்தப்பாக மனப்பாடம் செய்து கூறும்போதெல்லாம் தண்டனையாக  சுவரில் எனது மூக்கை தொட்டவண்ணம் நகராமல் நிற்கச் சொல்லிவிட்டு ஊர் சுத்தப்போய்விடுவார். அவர் திரும்பி வருமட்டும் நான் அப்படியே நிற்கவேண்டும் கொஞ்சம் நகர்ந்தால்கூட அக்கா மாமாவுக்கு மூட்டிக்கொடுத்துவிடுவாள். என்னைவிட மூன்றுவயது கூடியவள் எனது அக்கா ஆனாலும் நான் அக்காவுக்கு பயமோ பயம், இப்போதும் நான் பயப்படும் ஓர் ஜீவன் எனது அக்காதான். என்னைப் பெற்றவர்களோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாமாக்கள் கையில் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டனர்.


ஆனாலும் தடைகளையும் தாண்டும் வெள்ளாடுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் விளையாடுவது, அத்துளுக்குளத்தில் நீந்தப்போவது, வீட்டில் மாமரம் காய்த்துக் குலுங்கும்போதும் வேறுவீடுகளில் நண்பர்களுடன் மாங்காய் திருடித் தின்பது என்று எனது குறும்புகளுக்கும் ஓய்வேயில்லை.


எனது குழந்தைப்பருவ வாழ்க்கை குறும்புத்தனமாக இருந்தாலும் ஆரம்பகால கல்வி வாழ்க்கை அனுபவம் ஒன்றும் அழகானதில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் சிலர் இன்னும் பசுமையாக என் மனசில் நிற்கின்றார்கள்.

6ம் வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை விக்னேஸ்வரா கல்லூரியில் எனது கல்வி தொடர்ந்தது. பலவிதமான பயிற்சிப்பட்டறைகளையும் தாண்டியதாலோ என்னவோ 6 ம் வகுப்பு முதல் எனது கல்வியில் முன்னேற்றம் தோன்றியது. வகுப்பில் எப்போதும் முதலாவது மாணவி, சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம் பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்தேன் முதன்மையாகவும் விளங்கினேன். இதெல்லாவற்றிற்கும் காரணம் எனது ஆசிரியர்கள் என்மேல் கொண்ட பாசம், அதற்கு இன்னுமோர் காரணம் எனது தந்தையார் பொன் கணேசன் தான் அப்போது விக்னேஷ்வராக் கல்லூரியின் அதிபர். அதிபரின் செல்லப் புத்திரி என்ற பந்தாவும் தந்தையின் அரவணைப்பும் என்னை ஆரோக்கியமாக வளர்த்துக்கொண்டு சென்றது.


எனக்கு ஆண் சகோதரர்கள் இருக்கவில்லை ஒரே அக்காதான். அதனாலோ என்னவோ ஆண்களோடு பழகுவது பிடிக்கும். ஆனாலும் அன்போடு பழகத் தெரியாது. என்னோடு படித்த ஆண்களுக்கு என்னைப் பிடிக்காது. யாரையும் மதிக்கமாட்டேன், எப்போதும் அவர்களுடன் சண்டைபோடுவேன். சரியான வாயாடி. அவர்கள் பொறுமையிழந்து அப்பாவிடம் சென்று முறையிடுவதும் மீண்டும் சண்டைபோடுவதும் தொடர்கதையானது. எனது தந்தையாருக்கு நான் பெரிய தலைவலியாக இருந்தேன். எனது தந்தை என்மீது கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாகவோ என்னவோ பொறுமையுடன் அவர் என்னை சரியான முறையில் நெறிப்படுத்திச் சென்றார்.

என்வரையில் விக்னேஸ்வராக் கல்லூரி வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையானது. சங்கீத ஆசிரியராக இருந்த பாரதா ரீச்சர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். என்னைக் கட்டுபடுத்துவதற்காகவே எப்போதும் கண்டிப்பான ஆசிரியரையே எனது வகுப்பாசிரியராக நியமிப்பார் எனது தந்தையார். அவர்களில் குறிப்பிடும்படியாக கூறவிரும்புவது, நாகம்மா ரீச்சர், இரத்தினம் ரீச்சர், நல்லதம்பி மாஸ்டர் போன்றவர்கள்.
10 ம் வகுப்பில் திறமையாக தேர்ச்சிபெற்று பெரிய பெண்ணாகவும் வந்தபின்பு பெண்கள் பாடசாலையில்தான் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் எனக்கு அனுமதிபெற்றுத்தந்தார் அப்பா. ஒரு சிறிய பாடசாலையில் எதிலுமே முதல் மாணவியாக மிளிர்ந்த என்னால் பெரிய பாடசாலையில் போட்டி போடமுடியவில்லை. ஆசிரியர்களின் பாராமுகமும் புதிய மாணவர்களின் அறிமுகமின்மையும் பெரிய தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் எனக்குள் அளித்தது. மாற்றங்கள் ஏற்படுத்திய இறக்கத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்த காலங்கள் கொஞ்சம் அதிகம்தான்.

ஆனாலும் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எனது தீராத ஆசையின் தூண்டுதல் நான் விரும்பியபடியே எனது கல்வியைத் தொடரக்கூடியதாக அமைந்தது. யாழ்பல்கலைகழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கணிதத்தில் சிறப்புப்பட்டம் பெற்றேன். எனது பல்கலைக்கழக வாழ்க்கை மிகவும் இனிமையானது. அதைப்பற்றி இன்னுமோர் சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். யாழ்பல்கலைக்கழக நட்புவட்டம் என்று யாராவது ஓர் தொடரை ஆரம்பிக்காமலா போய்விடப்போகின்றார்கள்.


 எனது ஊர், எனது மண், எனது மொழி இவை இரத்தத்தில் கலந்தவை. எனது ஊரவன் என்ற உணர்வே கரவைக்குரல் என்ற பதிவைத் தட்டிப்பார்க்கத் தூண்டியது. கரவெட்டி, வடமராட்சி, யாழ்ப்பாணம், ஈழத்துத்தமிழன், இலங்கைத்தமிழன், இந்தியத்தமிழன், உலகத்தமிழன் இது வரிசைகளல்ல வலிகள், புலம்பெயர்வால் ஏற்பட்ட வலிகள்.
வலைப்பதிவின் மூலம் என் வலிகளுக்கு வடிகால் கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள் கூறி இன்னும் சிலரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையில் யாரை அழைப்பது என்று புரியாமல் ஏனோ மனசுக்கு பிடித்திருக்கின்றது என்ற விதத்தில் இவர்களை தெரிவுசெய்கின்றேன்.
கோசலன்
வலசு - வேலணை 
இளைஞன்

11 கருத்துகள்:

 1. உங்களின் நினைவு மீட்டல்களை இரசித்தேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. //தண்ணியென்றால் பயமா? கரவையில் பிறந்தவர்களுக்கு அந்தப்பயம் எப்போதும் இருக்காதே?//

  தண்ணியெண்டால் எங்கடை பொடியள் தான் முன்னுக்கு நிப்பாங்கள்,தண்ணியிலை நீந்த,

  என்னைப்பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமே இல்லை,கரவெட்டியில் பிறந்தவன் என்பதைவிட,
  கரவைக்குரலாக பிதற்றும் என்னை குயில் என்று சொல்லுகின்றீர்களே,அது தான் கடைசியாக என்னைப்பற்றி சொல்லக்கூடியது பூபதி
  அவ்வளவுதான்
  சின்னப்பொடியனின் அழைப்புக்கு செவி சாய்த்து நினைவுகளை மீட்டமைக்கு ரொம்ப நன்றி

  பதிலளிநீக்கு
 3. வாருங்கள் வலசு வேலணை, உங்கள் ஊர் பற்றி சொல்லுங்கள். அறிவதற்கு ஆவல். வலசு என்பதின் அர்த்தம் என்ன?

  மீண்டும் வாருங்கள்

  பதிலளிநீக்கு
 4. கரவைகுரல், குடிக்கும் தண்ணீர் குளிக்கும் தண்ணீர் இரண்டையும் மறந்து விடுவோம். கரவையில் சரியான வரட்சி . . . .

  //கடைசியாக என்னைப்பற்றி சொல்லக்கூடியது அவ்வளவுதான், சின்னப்பொடியனின் அழைப்புக்கு செவி சாய்த்து//

  நறுக்கென்று நாலு வார்த்தை சொல்லியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்
  உங்களது படைப்புக்களை வாசிக்கும்போது எனது கருத்தையும் சொல்வேன். நன்றி மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 5. புலம்பெயர் வாழ்வில் பிறந்த மண்ணின் அருமை தெரிகின்றது. நீங்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு வகை தேடல் இருக்கும். நான் வாழும் நாட்டில் நிறையவே உறவுகள் இருப்பதாலேயே என்னவோ மண் வாசனை குறைவு தான். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 6. காரூரன் நலமா
  இந்த நாட்டிலும் பலர் இருகின்றார்கள்தான் அனாலும் ஏதோ ஒற்றை தொலைத்து விட்டது போன்ற உணர்வு அதுதான் தேடலுக்கான காரணம் என்று நினைகின்றேன்.

  சுற்றிவர பலருடன் இருந்தாலும் தனிமைப்படுதல் என்பது இயல்பாகவே அரங்கேறுகின்றது. ஏன் எதற்காக என்ற காரணம் புதிராகவே உள்ளது. நன்றிகள் உங்களது கருத்துக்கு மீண்டும் வாருங்கள்

  பதிலளிநீக்கு
 7. நலம், நீங்கள் எப்படி?, கடந்து வந்த பாதைகளை அசை போடும் ஜீவன்களில் நானும் ஒருவன். கப்பல் சாத்திரி வந்து அனேகமான எல்லோருக்கும் வெளி நாட்டுப் பலன் என்றான் ஊரில். அப்போது சிரித்தேன். அது இப்படி நிஜம் ஆகும் என்று யாருக்குத் தெரியும்?

  I have some pictures in facebook. It has some pictures of Mathaku and the road in front of your house.

  பதிலளிநீக்கு
 8. //
  BOOPATHY சொன்னது…
  வாருங்கள் வலசு வேலணை, உங்கள் ஊர் பற்றி சொல்லுங்கள். அறிவதற்கு ஆவல். வலசு என்பதின் அர்த்தம் என்ன?

  மீண்டும் வாருங்கள்
  //
  நன்றி Boopathy.
  போதிய நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதால் உங்கள் அழைப்பினை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மன்னித்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. //குடிக்கும் தண்ணீர் குளிக்கும் தண்ணீர் இரண்டையும் மறந்து விடுவோம். கரவையில் சரியான வரட்சி . //

  கடும் வரட்சி என்பதை முற்றுமுழுதாக மறுக்கிறேன் பூபதி
  ஆனால் குடிக்கும் தண்ணீருக்கும் குளிக்கும் தண்ணீருக்கும் இடையில் வித்தியாசம் இருப்பது உண்மைதான்

  //நறுக்கென்று நாலு வார்த்தை சொல்லியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் //

  ம்ம் நன்றி
  //உங்களது படைப்புக்களை வாசிக்கும்போது எனது கருத்தையும் சொல்வேன்.//

  சொல்லுங்கோ

  //நன்றி மீண்டும் வருக//

  எப்போதும் வருவோம்

  பதிலளிநீக்கு
 10. என்னை மீண்டும் ஊருக்கு இழுத்துச் சென்றது உங்கள் பதிவு. அந்தப் பனை மரமுள்ள போட்டோவை எங்காவது என் பதிவுகளில் இட அனுமதி தருவீர்களா?

  பதிலளிநீக்கு
 11. என் கேள்விக்கென்ன பதில்? என் கேஏஏஏஏள்விக்கென்ன பதில்? :-)

  பதிலளிநீக்கு