ஞாயிறு, மார்ச் 01, 2009

குடும்பம் என்கிற ஸ்தாபனம்

வார இறுதி இன்று ஏதாவது எழுதினால்தான் உண்டு பின்பு நேரம் கிடைப்பதென்பது மிகவும் கடினம். எதை எழுதலாம் என்று யோசித்தபோது நான் விரும்பித் திரும்பவும் பார்த்த திரைப்படம் ‘புறவோக்ட் - Provoked' ஞாபகத்திற்கு வந்தது. அதைப் பற்றியே எழுதலாம் என்று யோசித்தேன்.

ஒரு பக்கசார்பாக இந்தக் கட்டுரை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்து எழுதியுள்ளேன். விதிகளும் விதிவிலக்குகளும் எதிலும் இருப்பதால் எந்த ஓர் செயலையும் பொதுமைப்படுத்தி நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தாரளாமாக இட்டுச்செல்லலாம். கருத்துக்களுடன் மோதுவது ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும்.

1989 ம் ஆண்டு லண்டனில் குடும்பவன்முறையின் உச்சத்தை எட்டிய பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஒன்று உண்டு.

பஞ்சாபிப் பெண்ணான கிரண் என்பவரை லண்டனில் வசிக்கும் தீபக்கிற்கு பெற்றோர்கள் பேசி மணம் முடித்தனர். லண்டனில் தொடங்கிய கிரணின் மணவாழ்க்கை அவளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளது கணவன் தீபக் ஓர் மனநோயாளியைப்போல் செயல்பட்டான். தினம் கிரணை துன்புறுத்தினான். வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது, யாருடனும் கதைக்கக்கூடாது, சந்தேகத்தின்பேரில் அடி உதை, குடித்துவிட்டு வந்து இரவில் கொடுமை, பெண்களின் சகவாசம் இப்படியாக எண்ணற்ற சித்திரவதைகளுக்கு உட்பட்டாள் கிரண்.

கல்லானாலும் கணவன் என்பதற்கமைய இயல்பாகவே மென்மையான குணம் கொண்ட கிரண் எல்லாவற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் இரவு பொறுமையின் எல்லையைக் கடந்தநிலைக்கு தள்ளப்பட்டாள். அதனால் குடித்துவிட்டு வந்து படுத்திருந்த தனது கணவன்மீது பெற்றோலை ஊற்றி அவனை எரித்துக் கொன்றாள்.

கொலைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரணின் வழக்கை ஆசிய பெண்கள் உரிமைக்காக போராடும் அமைப்பு ஒன்று முன்னெடுத்து நடாத்தியது. தற்பாதுகாப்புக்காகவே கிரண் அந்த முடிவை எடுத்தாள் என்று தீர்ப்புக்கூறி 1992 ல் கிரணை லண்டன் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்றும் எல்லோராலும் பேசப்படுகின்றது.
இந்த உண்மைக்கதையை தழுவி ஐஸ்வர்யாராய் நடித்த ‘புறவோக்ட’ என்ற ஆங்கிலப்படம் திரைக்கும் வந்தது.

இதுபோன்ற வன்முறைகள் எந்தவோர் பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். இந்த நிலையை தினம்தினம் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இது போன்ற சுழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு வாழ்வை தொலைக்காமல் தற்பாதுகாத்துக் கொள்ளும் மாற்றுவழிகளை அறிந்து வைத்திருத்தல் நன்மையைத்தரும்.

பிரச்சனைகளை நண்பர்களோடு பகிர்தல், பெற்றோர்களிடம் முறையிடுதல், மனநல சிகிச்சைகளின் உதவியை நாடுதல், எல்லையை மீறும் தருணத்தில் காவல் நிலைய உதவியை நாடுதல், எதுவுமே சரிவரவில்லையென்றால் விவாகரத்து இப்படியாக பலவழிகளில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்புண்டு.

பாவம் கிரணுக்கு இவை எதுவுமே கைகொடுக்கவில்லை. எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்த கிரண் முடிவை தன்கையில் எடுத்துக்கொண்டாள். ‘என் கணவரின் வன்முறையைத் தடுப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லை, அவரை கொல்ல வேண்டும் என்று நான் நினைத்ததில்லை’ என்று கிரணின் சுயகதையை வெளியிட்ட Provoked – The Story of Kiranjit Ahluwalia என்ற புத்தகத்தில் அவர் சொல்லியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையானபின் கிரண் லண்டன் தபால் சேவை திணைக்களத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிந்தவாறு சமூகசேவை மற்றும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனங்களிலும் பகுதிநேரமாக பணிபுரிகின்றார். எனது நண்பரும் கிரணும் ஒரே வேலைத்தளத்தில் ஒன்றாக பணிபுரிகின்றார்கள் என்றவுடன் கிரணின் கையெழுத்திட்ட மேற்கூறிய புத்தகம் ஒன்றை கிரணிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். அவரைப்பற்றிய மேலதிக செய்திகளையும் நண்பர் மூலம் அறியமுடிந்தது. 52 வயதைக் கடந்த கிரண் இப்போது தனது வாழ்வை நிறைவாகவும் உண்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நல்ல செய்தி சந்தோசமாகவிருந்தது.

2002 ம் ஆண்டு குடும்ப வன்முறைக்கு எதிராக போராடும் பெண்களுக்கென்று வழங்கப்படும் ஓர் உயரிய விருது லண்டன் அரசினால் கிரணுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரணைப்போன்று பல பெண்கள் இப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். வீட்டுப்பிரச்சனையை வீடுதாண்டி வெளியே கொண்டுபோவது குடும்ப கௌரவத்தை பாதிக்கும் என்ற மன இயல்பில் வீட்டுக்குள்ளேயே வெந்து போகின்றார்கள். சிலர் தைரியத்தோடு வெளியேவந்தால் அவர்கள்மீது சமூகம் காட்டும் எதிர்வினை அதைவிட கொடுமையானது. குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்து சமூக வன்முறைக்குள் பெண் சிக்கிக்கொள்ளும் நிலைப்பாடுதான் அதிகம்.

பெண்களை உடல் மனரீதியாக துன்புறுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டுதல், பாலியல் வன்முறை, பொருளாதார ரீதியில் கொடுமைப்படுத்தல் இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். சட்டமும் தண்டனையும் சிலரை பயம் என்ற பிடிக்குள் கட்டிப்போட்டாலும் காலம் காலமாக வேரூன்றிய ஆணாதிக்க மனோபாவத்தை இந்த சட்டங்களும் தண்டனைகளும் முற்றாக அழித்துவிடமுடியாது. தண்டனையையும் சட்டங்களையும் மீறி பெண்கள் குடும்பவன்முறைக்கு ஆளாகின்றனர். தண்டனையும் சட்டங்களும் இருப்பதனால் வன்முறைகள் முற்றுப்பெற்றுவிடும் என்பது உண்மையல்ல.

பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு நாடு மதம் இனம் மொழி என்ற எல்லைகள் கிடையாது. உலகளாவிய அளவில் குடும்ப வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பல பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். அவர்களது உணர்வுகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்த அவர்களுக்காக எந்தவோர் கதவும் திறந்திருக்கவில்லை.

எவ்வளவுதான் நேசித்தாலும் புரிந்து வைத்திருந்தாலும் ஆணாதிக்க எண்ணங்கள் அதிகாரங்கள் என்பவை சந்தர்ப்பங்களில் வெளிவந்துவிடுகின்றன. அப்போது அவர்களது மனவோட்டம் எந்த திசையை நோக்கி எப்படிச் செல்லும் என்பதை கணித்துவிடமுடியாது. அன்பினால் எதையும் சாதித்துவிடமுடியும் என்பதைக்கூட பொய்ப்பித்துவிடும் சிலரது செயல்கள்.

காதல், திருமணம், குடும்பம் என்ற வட்டத்திற்குள் அன்பும் கருணையும் புரிதலும்தான் முக்கியமானவை என்று கூற்று நன்றாக இருந்தாலும் யதார்த்தத்தில் ஆழமான இந்த மனித உறவுகள் சந்திக்கின்ற நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வேறோர் பரிணாமத்தை சுட்டிக்காட்டுகிறது. வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சிறிய வெளிகூட அங்கு இருப்பதில்லை. மற்றய உறவினர்களும் வன்முறையை பொறுத்துக்கொண்டு வாழும்படிதான் அறிவுரை கூறுவார்கள். இதனால் வேறுவழி தெரியாமல் அவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருகின்றார்கள். தமது முடிவை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறைகளும் அவற்றை மனஉறுதியோடு நிறைவேற்றும் விதமும் மனதை உறையச் செய்யும் விதமாகவே இருக்கின்றன.

பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது.

22 கருத்துகள்:

 1. இன்னும் இந்த படம் பார்க்கவில்லை

  தேடி பார்க்கனும்

  பதிலளிநீக்கு
 2. \\பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது. \\

  சரிதான் ஆனாலும் எல்லோரும் என்றும் சொல்லிவிட இயலாது.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா3/02/2009 2:34 முற்பகல்

  உங்களுடைய கட்டுரை நல்ல வாதங்களை முன்வைத்து அருமையான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் அது சில முக்கிய விஷயங்களைக் கவனத்திலெடுக்கத் தவறுவதாகவே எனக்குப் படுகிறது. " கொழுநன் தொழுதெழுபவள் பெய்யென மழை பெய்யும்" என்றும், தன் கற்பின் வலிமையால் மட்டுமே அவள் ஒரு பெரு நகரை தீக்கிரையாக்கும் வலிமை கொண்டவள் என்றும் அவளுடைய பிம்பம் கீழைத்தேய (ஆண்) மனங்களில் காலம் காலமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களும் சாதாரண மனிதர்கள் தான் என்று புகட்டப் படாமல் தாய்மையின் மொத்த உருவங்களாகவும் காக்கும் தெய்வங்களாகவும் தான் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறெனில், நாம் எதைக் கேள்விக்குட்படுத்த வேண்டும்? பெண்மையை உயர்த்திப் பிடிக்கும் பண்பாட்டு அம்சங்களையா அல்லது புலம் பெயர்ந்த காரணத்தால் பெண்களுக்கு கிடைத்த (பொருளாதார) சார்பின்மையால் (மட்டும்) கிடைத்த சுதந்திரத்தையா?

  வன்முறைக்கு வன்முறைதான் பதில் என்ற முடிவுக்கு வருவதில் கிரண் அலுவாலியா மிக அவசரம் காட்டியிருப்பதாகவே எனக்குப் படுகிறது. இங்கிலாந்து போன்ற சட்டத்தின் மூலம் பாதுகாப்பு கிடைக்கக் கூடிய ஒரு நாட்டில் கூட அவர் ஒரு தனிப்பட்ட பழி வாங்கலில் தான் எடுபட்டிருக்கிறார். அத்தகைய ஒரு நபர் குடும்பம் என்ற சிறைக்குள் அல்லலுறும் பெண்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் இருக்க முடியுமா என்பதும் சந்தேகத்துக்குரியதே.

  எனினும் இன்றைய கால குடும்ப அமைப்பு முறையில் கேள்விகளை ஏற்படுத்த முனையும் உங்கள் கட்டுரை மிகவும் வரவேற்கப்பட வேண்டியதே. அதை அழகான முறையில் எழுதிய உங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. // பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது. //

  பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்ற் நினைப்பு என்று வருகின்றதோ அன்றுதான் சமுதாயம் உருப்புடும்.

  பதிலளிநீக்கு
 5. ஒரு பக்கசார்பாக இந்தக் கட்டுரை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்து எழுதியுள்ளேன்.//

  என்ன பிள்ளை பயந்திட்டீர் போல?/

  நவீன உலகப் பெண்களுக்குப் பயம் இருக்கக் கூடாது??

  பதிலளிநீக்கு
 6. 1989 ம் ஆண்டு லண்டனில் குடும்பவன்முறையின் உச்சத்தை எட்டிய பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஒன்று உண்டு.//

  எங்கை போனாலும் உங்கடை பழைய சாதனைகளைச் சொல்லிப் பழசைக் கிளறிப் பாக்கிறதிலை பெண்களை விட்டால் நிகர் யார்???

  என்ன பிள்ளை??

  பதிலளிநீக்கு
 7. வாருங்கள் ஜமால்! நீங்கள் சொல்வது நியாயமனது. இப்படியும் மனிதர்கள் என்று கூறமுடியுமேதவிர இப்படித்தான் மனிதர்கள் என்று கூறுவது சரியாகாது. நேரம் கிடைக்கும் போது அந்தப் படத்தை பாருங்கள். நன்றி ஜமால்

  பதிலளிநீக்கு
 8. //கேள்விகளை ஏற்படுத்த முனையும் உங்கள் கட்டுரை மிகவும் வரவேற்கப்பட வேண்டியதே நிறைந்த பாராட்டுக்கள்//

  உங்கள் பாராட்டுக்கு நன்றி. வள்ளுவரின் குறள், கண்ணகியின் கதை, தெய்வமாகிய பெண்கள் எல்லாமே பெண்களின் தன்னம்பிக்கையை, திறமையை, சமஉரிமையை மட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தந்திரங்கள்.

  பெண்ணின் பொருளாதார சுதந்திரம் சக ஆணை குறைவாக நினைக்கும் மனோபாவத்தை பெண்களிடம் விதைத்தால் அது மாற்றப்படவேண்டியது. ஆனால் சொந்த தேவைக்காக பெண்களை கடுப்படுத்த உருவாக்கப்பட்ட சில பண்பாட்டு அடக்குமுறைகள் மாற்றமடைய வேண்டும். மாறுதல் ஏற்பட ஆண் பெண் இருபாலரிடமும் விழிப்புணர்வு தேவை. விழிப்புணர்வு என்பது தனிநபர் விடயமாக இல்லாது பெரும் சமூகவியல் மாறுதலாக இருக்கவேண்டும்.

  வன்முறைக்கு வன்முறைதான் பதில் என்ற முடிவுக்கு வருவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. வன்முறையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் உண்டு.

  ஆழமான சிந்தனை தொடர்ந்தும் உங்களது கருத்துகளை பதியுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. ராகவன் கருத்துக்கு நன்றி. பெண்ணாக பிறபதற்கு முன்பே வன்முறைகள் அரம்பமாகிவிடுகின்றது. பெண் என்று தெரிந்தவுடன் கருவிலேயே கொலை. பிறந்தவுடன் கள்ளிப் பால் கொடுத்து சிசுக் கொலை. நீங்கள் கூறுவது போல் சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சமூகம் மாறவேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. வாருங்கள் சக்கடத்தார். எதற்காக பயப்படவேண்டும்? கருத்து சுதந்திரம் இருக்கும் நாட்டில் பயமா? நான் சொல்ல வந்த விடயம் சரியாக சென்றடைய வேண்டும் என்றால் அதில் சமநிலை பேணப்பட வேண்டும்.

  இது சாதனை அல்ல ஓர் சம்பவம். அந்த சம்பவத்தில் இருந்து அறியப்பட வேண்டியவை பல. வன்முறைகள், அதிலிருந்து வெளியில் வருவதற்கான வழிகள். சில புரிதல்கள் . .. .

  ஒன்று மட்டும் புரிகிறது பெண்களில் மாற்றம் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமோ அதைவிட ஆண்களிடம் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமானது?

  தவறுதலான புரிதலுடன் ஆரம்பிப்பதை விடுத்து விரிவான கருத்துகளை எதிர்பார்கிறேன்?

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா3/02/2009 11:29 பிற்பகல்

  உங்கள் கடுரையை வாசித்தேன். திரைப் படத்தையும் பார்த்தேன். கிரண் எடுத்த முடிவு சரியானது என்பதே எனது கருத்து. இப்படிபட்ட மனநோயாளிகளை உயிருடன் விட்டுவைத்தால் மேலும் பல பெண்கள் சித்திரவதைப் படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இவர்கள் தாங்களாகவும் திருந்த மாட்டார்கள் மற்றவர்கள் திருத்துவதட்கும் விடமாட்டார்கள்.

  திருமண பந்தத்தில் ஆணாதிக்க சிந்தனை உடைய ஆண்கள் பெண்களை சரிசமமாக மதித்து நடக்கத் தவறுவதால்தான் பல மணமுறிவுகள் நடைபெறுகின்றன.

  தொடர்ந்தும் எழுதுங்கள் உங்களது கடுரையை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
  நன்றிகள்

  மதுரா மகாதேவ்

  பதிலளிநீக்கு
 12. ஆழமாக எழுதியுள்ளீர்கள் பூபதி. தாத்தாவுக்கு என்ன கோவம்? பெண்கள் மீது கோவமா அல்லது கிரண் மீது கோவமா?

  சாதரண கருத்துப் பரிமாற்றத்தில்கூட அதிகாரம் செயல்படுகின்றது. அதனால்தான் எரிச்சல் ஏற்படுகின்றது. உங்களது சார்பான வாதங்களை முன்வைத்து ஒருவருக்கு ஒருவர் பதில் அளிக்கக் கூடியதாக இருக்கவேண்டுமே தவிர சட்டென்று வெட்டி விடுவது சரியாகாது.

  தாத்தாவிட்கு கோவம் வரக்கூடாது என்ற வேண்டுதலுடன் மேலும் பல கருத்துகளை எதிர்பார்த்து வாழ்த்துக்கள் கூறி மீண்டும் வருகின்றேன்.

  பதிலளிநீக்கு
 13. பூபதி நல்லதொரு பதிவு...பெண்களின் உரிமைகள் அடக்குமுறை என்கின்ற வரையறைக்குள் முடக்கப்படுவது வருந்தக்க விடயம். ஆனால் ஒரு சில பெண்களிடம் பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தாலும் தாங்கள் அடக்கியாளப்ப்டுகின்றோன் என்கின்ற மாயைத் தோற்றமும் காணப்படும்.

  இவற்றுக்குமப்பால் பெண்களுக்குக் கொடுக்கப்ப்டும் அதீத சுதந்திரங்கள் அவர்களின் எல்லை மீறற் செயற்பாடுகளுக்குக் காரணமாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா3/03/2009 1:19 முற்பகல்

  அடுத்த ஆணைக் கண்டவுடன் இன்னொரு ஆணை எதிரியாகப் பார்ப்பதும் மனநோயின் வெளிப்பாடுதான். இதனால் எரிச்சல் ஏற்பட்டாலும் அரிப்பு எடுத்தாலும் அதற்கு நவின மருத்துவத்தில் வசதிகள் உண்டு. ஓசியில் முதிர் கன்னிகள் எங்கே கிடைப்பார்கள் என்று அடுத்த விட்டு யன்னல் வழியே திருட்டுப் பார்வை பார்ப்பதும் மனநோய்தான்....

  பூஸிகா புணர்தானந்தன்

  பதிலளிநீக்கு
 15. நம் சமுதாயத்தில் ஆண் பெண் சமநீதியைக் கொண்டு வருவதென்பது ஒரு பெரிய சவால் கமல்.
  மனிதர்கள் அனைவரும் குணாதிசயத்தில் ஒன்றானவர்கள் இல்லை. எதிலும் விதிவிலக்குகளும் உண்டு. நமக்கும் நாலுபேர் ஆதரிக்க இருக்கிறார்கள் என்று அந்த மொமெண்டில் முடிவு எடுப்பவர்கள் பின்பு கஷ்டப்படும்போது உணர்வார்கள்.

  சுதந்திரம் என்பது ஒருவர் கொடுத்து மற்றவர் வாங்கும் கடைச் சரக்கு இல்லை என்பது எனது கருத்து. உங்கள் ஆரோக்கியமான கருத்துக்கு மிக நன்றி. தொடர்ந்தும் பதிக.

  பதிலளிநீக்கு
 16. பூசிகா என்ற பெயரில் வந்தவருக்கு!
  அர்தம் இல்லாத வார்தைகள் கருத்துகள் கேள்விகளுக்கு பதில் தேவையில்லை.

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் தெரிவு செய்யும் தலைப்புகளுக்குப் பொருத்தமாக படங்களையும் சிறப்பாகத் தெரிவு செய்து விடுவீர்கள்.அதற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல. அதேநேரம் காலாகாலமாக பண்பாட்டோடு காவி வரப்பட்ட ஆதிக்க மனோபாவம் மாறுவதற்கு மனிதனை மனிதனாக மதிக்கின்ற அடிப்படை மனிதப் பண்பை ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டாலே போதும்.

  "கடவுள் தந்த அழகிய வாழ்வு....."

  பதிலளிநீக்கு
 18. வாருங்கள் ரசிகா!
  சக்கடத்தார் கோவத்தில் உள்ளார் என்று ஏன் நினைக்கவேண்டும். அவர் தனது கருத்தை சொல்லியுள்ள பாணி தனியானது அவ்வளவுதான். மற்றும்படி எனது கருத்தோடுதான் உடன்படவில்லை அப்படித்தானே சக்கடத்தார்

  பதிலளிநீக்கு
 19. வாருங்கள் மணிமேகலா!
  எனக்கு பிடிக்கும் பாடல் உனக்கும் பிடிக்குமா? அர்த்தம் பொதிந்த பாடல். மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்வதைத்தான் நான் மனித நேயமாக கருதுகிறேன். நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்துவிட்டால் போதாது சக மனிதர்கள் தாம் மதிக்கப் படுவதை உணரவேண்டும். வயதும் அனுபவமும் எமக்கு அதற்கான பயிற்சியை தரும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 20. வாருங்கள் மதுரா!
  உங்கள் புது வரவு மகிழ்ச்சியை தருகின்றது. நீங்கள் சொல்வதுபோல் இபடிப்பட்டவர்கள் சமூகத்தின் சாபக்கேடுதான்.ஆனால் ஓர் உயிரின் மதிப்பு மிகப் பெரியது. அதை எடுப்பதட்கு யாருக்கும் உரிமை இல்லை. பிரச்சனைகளுக்குள் இருந்து சிக்கல்படுவதை விட்டு அதில் இருந்து விலகியிருப்பது தீர்வுக்கு ஓர் வழி. சிந்திந்து பாருங்கள் வேறு வழிகளும் தெரியும். மீண்டும் வருக புதிய கருத்துகளுடன்

  பதிலளிநீக்கு
 21. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ரேணுகா ஜோன்11/18/2011 10:38 பிற்பகல்

  அருமை. இது எனது அனுபவமோ என்று நினைக்க வைக்கிறது. நன்றிகள் பல

  பதிலளிநீக்கு