புதன், மார்ச் 09, 2011

தேடல் என்பது............

இந்த வாரம் தேடல் என்பது எனது எழுத்தின் கருவாக அமைகின்றது. அதை நீங்களும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் புன்னகையில் இணைத்துள்ளேன். வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்களது கருத்துக்களையும் கூறிவிட்டுச் செல்லவேண்டும்.இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு வகையில் தேடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. தேடலற்ற வாழ்க்கை என்பது வெறுமையானது. போதும் என்ற திருப்தியில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை விரைவில் சலித்துவிடும். அப்படிப்பட்ட சலிப்புநிலை வராது காக்க வேண்டியது வாழவிரும்பும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

சிந்திக்கவும் செயல்படவும் தெரிந்தவர்கள்கூட தம்மைச் சுற்றியிருக்கும் எல்லைகளைத் தாண்டுவதற்கு முயற்சிப்பதில்லை. இருப்பதில் நிறைவைக் காண்கின்றனர். அது ஒன்றும் தவறில்லை ஆனால் இன்னும் இன்னும் என்ற ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக சாதிக்கமுடியும். வாழ்க்கையை சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க முடியும்.

புதியவிடயங்களில் அக்கறை காட்டாமல் முயற்சி எடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் மனதில் தோன்றுகின்ற பயம். இருப்பதை இழந்து விடுவோமென்ற பயம், கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கப் பயம், சுயத்தின்மீது பயம், சமூகத்தின்மீது பயம் இப்படி பலவிதமான பயங்களினால் பீடிக்கப்படுவதனால் போதுமென்ற எண்ணத்தில் மனிதன் இருந்துவிட்டுப் போகின்றான்.

மனதில் குடிகொண்ட அச்சம் காரணமாக வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்வதற்கு தொடர்ச்சியான தேடல் மிக அவசியம். முன்னோர்களது வரலாறும் அறிஞர்களது கதைகளும் தேடல் மூலம் அவர்களடைந்த வளர்ச்சி, புகழ், பெருமைகள் பற்றி கூறும். வலியின்றி வாழ்க்கையில்லை. தேடலின்றி இயக்கமில்லை.தேடலின்றி இருந்தாலெப்படி?

தட்டியோ முட்டியோ

வாசல்கதவைத் திறவுங்கள்

போதுமென்ற மனமே

பொன் செய்யுமென்று

சும்மா இருக்காதீர்கள்

சுற்றியுள்ள வட்டங்கள்

அத்தனையும் பொய்கள்

அச்சத்தின் வட்டங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே

சிகரத்தை நோக்கி

வானத்தின் எல்லைவரை

துணிவாக நகருங்கள்

வாழ்வென்பது உயிர்வாழ்தலன்று

தொடர்ச்சியான அறிதல்

தேடலுடன் இணையுங்கள்

துணையாக வளைந்து கொடுங்கள்

ஒவ்வொரு தேடலின் நிறைவும்

புதியதோர் தேடலின் ஐனனம்


ஒருவரைப் பார்த்து இவர் அவரைப்போல் இருக்கின்றாரே என்று பலர் கூறுவதை பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். வேண்டியவர்களை, விட்டுப் பிரிந்தவர்களை, கிடைக்காமல் போனவர்களை, தவறவிட்டவர்களை ஏதோவொரு தளத்தில் யார்யாரிடமோ தேடுகின்றோம்.

எனது தந்தையாரின் நிறைந்த அன்பில் நனைந்த பெண்ணாக வளர்ந்ததனால் தந்தையின் அன்பை நெருங்கிப் பழகுபவர்களிடம் தேடுவேன். ஒருவர் இன்னொருவராக முடியாது என்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போனாலும் தேடல் தொடர்கிறது.

அதேபோல் எம்மிடமும் மற்றவர்கள் தமது நேசத்திற்குரியவர்களை தேடலாம். அவர்கள் தேடும் யாராகவோ அவர்கள் கனவில் நிழலாடும் நினைவுகளாகவோ நாம் இருக்கக்கூடும். அவர்கள் விரும்பும் யாரோவாக இருப்பதில்கூட ஓர் சுகம் கிடைக்கும். இன்னுமொருவரது தேடல் நிஐமாகின்றதே என்ற மனநிறைவு கிடைக்கும்.

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை. தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.

தேடலுடன் வேகமும் சுறுசுறுப்பும் தானாகவே அதிகரிக்கும். தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாமல் சிதறாமல் இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கும் ரசனையுடையவர்களுக்கும் சினனச் சின்ன விடயங்களில்கூட சுகமான அனுபவங்கள் கிட்டும். ஏதோவொன்று அவர்களது தேடலின் புள்ளியோடு இணைந்து கொள்ளும். அந்த அனுபவத்தை உணர்வதற்கு மனதில் ஆசையிருக்கவேண்டும் எதிர்பார்ப்பிருக்கவேண்டும். எந்தவிதமான எதிர்பார்ப்புகளோ ஆசைகளோ இன்றி ஏதோ விதிப்படி நடக்கின்றது, நடக்கட்டும் என்று இருப்பவர்கள் புத்துணர்ச்சியின்றி உற்சாகமின்றி எதைச் செய்தாலும் வெறும் கடமையாகவே செய்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியற்றவர்களாக்கி விடுவார்கள்.

பொறுமை அவசியம் என்பது பெரியோர்களது வாக்கு. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதும்கூட பெரியோரது வாக்குத்தான். பொறுமையின் எல்லைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். விரும்பிய ஒரு பொருளிற்காக பொறுமையாக காத்திருப்பதும் ஒருவித சுகம்தான். ஆனால் வெறும் காத்திருப்பென்பது மனிதமனத்தை அமைதி படுத்துமா என்பதும் கேள்வியாகத்தான் தெரிகிறது. காத்திருப்பதனால் ஏற்படுகின்ற அமைதியின்மைதான் தேடலை ஆரம்பித்து வைக்கின்றது என்றும் கூறலாம்.

இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான். ஒருவன் நல்லவன் இல்லையென்று தெரிந்தவுடன் உறவைவிட்டு மீண்டும் உறவுக்கான தேடலை ஆரம்பிக்கின்றோம். இன்னுமோர் சந்தர்ப்பம் இன்னுமோர் தேடல் என்று தொடர் சங்கிலிபோன்று நீண்டு கொண்டேயிருக்கும்.

அதற்கேற்றாற்போல் மனித உறவுகள் உலகெங்கிலும் பரந்திருக்கின்றன. வாழ்க்கைப் பயணத்தை கடக்கின்றபோது புதிய புதிய உறவுகளை சந்திக்கும் வாய்ப்புக்களும் அதிகம். சேர்ந்து பழகும் காலங்களில் அன்பைக் கொடுத்து அவர்களிடமிருந்தும் கொஞ்ச அன்பைப் பெற்று பண்டமாற்று அடிப்படையில் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம். எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவரும் என்பது யாருக்கும் தெரியாது.

பலரது அறிமுகம் கிடைத்திருக்கலாம். பலரோடு ஆழமான உறவும் இருந்திருக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த உறவு மிக முக்கியமானதாகக்கூட இருந்திருக்கும். ஆனால் காலமாற்றத்தோடு, இடமாற்றத்தோடு, நிலை மாற்றத்தோடு அந்த உறவுகள்கூட கடந்தகால அறிமுகமாக போய்விடுகின்றன. அந்தந்த நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கையில்

உறவுகளது கனமும் குறைகின்றது. 'இதுவும் கடந்து போகும்' 'காலம் காயத்தை ஆற்றும்' என்ற தத்துவங்களும் இதைத்தான் கூறுகின்றன. உலகில் நிலையானவையென்று எதுவுமே கிடையாது. மாற்றங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கும்.வலிகள் நிறைந்த வாழ்க்கையில்

தேடல் என்பது தீராத தாகம்

வாழ்ந்து பார்த்தேன்

பழகப்பழக முற்றியது பாசம்

நெருங்கிப் பார்த்தேன்

வலி ஓய்ந்து பற்றியது இன்பம்

தேட முயன்றேன்

சிறகுகட்டிப் பறந்தது எண்ணம்

எல்லையை நெருங்கிவிட்ட ஆனந்தம்

கடவுளை கண்டுகொண்ட சுவாரசியம்

காணும் மனிதரில் கண்டேன் கடவுளை

தேடலில் காலத்தைக் கழித்து வாழ்க்கையை வாழாமலே முடித்துக்கொண்ட மனிதர்களும் இருக்கின்றனர். அவ்வகையான தேடல்களால் என்ன பயன்? தேடியதில் சிலவற்றையாவது அந்தந்த நேரங்களில் அனுபவிக்க வேண்டாமா? அனுபவத்தின் நிறைவில் அல்லது முடிவில்தானே இன்னுமோர் தேடல் உருவாகும்.

அதேவேளை தேடல் என்பது மட்டுப்படுத்தப்பட்டு சமநிலையற்று ஒன்றை மட்டும் நோக்கிய தேடலாக இருப்பது சரியா என்ற கேள்வியுமுண்டு. அன்பைத்தேடி அறிவை கோட்டைவிடுவதும், பணத்தைத்தேடி பாசத்தை மறந்துவிடுவதும், புதுமையைத்தேடி பழமையை கைவிடுவதும் ஆரோக்கியமான தேடல்களாகாது.

ஆறறிவுமுதல் ஐந்தறிவுவரை மண்ணில் எதையெதையோ தேடித்தேடி இறுதிவரை அலைகின்றனர். நாம் பிறந்ததன் நோக்கம் ஏனென்று தெரியாமலே எதைத்தேடவது என்ற விழிப்புணர்வின்றி எதையோதேடி எதையும் அடையாமல் என்றோ ஒரு நாளில் மடிந்து போகின்ற கூட்டமும் இருக்கின்றனர்.

தேடலின் மூலம்தான் மனிதன் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல் போன்ற ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான் அவற்றை அனுபவிக்கின்றான்.

யாருக்குமே கிடைக்காத; யாருமே கண்டுபிடிக்காத; யாருமே சிந்திக்காத ஒன்றை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற சிந்தனையும் ஆசையும் ஏற்படுகின்றபோதுதான் தேடல் மேலும் வலுப்பெறுகின்றது. மனிதமனம் எந்தவிடயத்திலும் சுலபமாக நிறைவை அடையாது. மீண்டும் மீண்டும் வேண்டுமென்ற ஏக்கமும்; துடிப்பும்; ஆர்வமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சிலர் அச்சம் காரணமாக பல வட்டங்களை தம்மைச்சுற்றி உருவாக்கி தம்மை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் எல்லைகளை விரிவாக்கி உயர உயரச் சென்று கொண்டிருக்கின்றனர். இருப்பது போதும் இதில் நிம்மதியடைவோமென்று சோம்பலுடன் இருப்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லையென்றே அர்த்தப்படும். அவர்கள் ஏதோ இருந்துவிட்டுப் போகின்றார்கள்.நினைப்பவை எல்லாம் நடப்பதுமில்லை

நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல

இதுவரை நடந்தவை தீர்வுமல்ல

நாளை வருவது தொடர்ச்சியுமல்ல

ஒவ்வொன்றும் வேறுவேறு

உண்மை எதுவென்று நீ தேடு

மாற்றம் ஒன்றே மாறாதது

எத்தனை கோடி இன்பம் உண்டு

என்று சொன்னான் பாரதி அன்று

இருளகற்றி வெளிச்சத்தில் நின்று

இன்பம் தேடி நிறைவதே நன்று

தடைகள் தகர்ப்புகள்

நிறைந்ததே வாழ்க்கை

தீர்வைக் கண்டுகொள்

தடைகளைத் தாண்டு

முட்களின் நடுவே ரோஜா

என்ற பார்வை தவிர்

ரோஜாக்கள் நடுவே

முள்ளொன்று காண்

நன்மையை பறைசாற்று

தீயவை தானாக மாறும்


கருவறையிலிருந்து தேடல் ஆரம்பிக்கின்றது. பிறந்தவுடன் குழந்தை தாயின்மடியை தேடுகிறது. தேடலின்போது அன்பு, பாசம் போன்றவை ஊட்டப்படுகின்றது. பின்பு இளமைக் காலங்களில் நட்பு, காதல் போன்ற உறவுகளை தேடுகின்றான். அவற்றை அனுபவித்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றான். அப்போது வெற்றி தோல்விகளையும்; கோபம், பொறாமை, வலி போன்றவற்றையும் உணர்ந்து கொள்கிறான். பின் இருத்தலுக்காக பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனக்கென வேலையைத் தேடுகின்றான். இறுதியில் உலகத்தைப் புரிந்து கொண்டு மாற்றங்களை அனுசரித்து அமைதியைத்தேடி வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றான். இவை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

11 கருத்துகள்:

 1. பெயரில்லா3/09/2011 11:30 பிற்பகல்

  ரொம்ப விரும்பி படித்தேன்...அருமையான ஒரு கட்டுரை..மனிதன் வாசிக்கவேண்டிய ஒன்று....எத்தனையோ மனிதர்கள் இப்படி எதையோ தேடிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்..கிடைத்தும் கிடைக்காமலு...அது ஒரு நீண்டப்பயணம்..தேடல் இல்லையேல்..வாழ்க்கைப்பயணம்..தொய்வுண்டுப்போகும்...தேடுங்கள்...நல்லவைகலை...வாழ்க்கையை தேடல்த்தான் நகர்த்துகிறது..

  அருமையான கட்டுறை...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே
  எனது தேடல் தொடர்கின்றது ஆனால் கோடுகள் சமாந்தரமாகவே போயகொன்டிருக்கின்றன
  பார்ப்போம் என்றாவது ஒருநாள் மழைத்துளி ஒன்று என் புள்ளியின் மீதும் விழலாம் அல்லவா
  நன்றி மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா3/10/2011 10:59 பிற்பகல்

  vilum, nambuvomaka..nambikkaithan vazhvin aathaaram..

  பதிலளிநீக்கு
 4. உங்களைப் போன்றவர்களின் உறவு தான் எனது நம்பிக்கை நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா5/23/2011 8:10 பிற்பகல்

  ““எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவரும் என்பது யாருக்கும் தெரியாது.””

  உங்களை நன்கு புரிந்து கொண்ட ஏதாவது ஒரு உறவு உங்களது கடைசிக் கணம் வரை உங்களுக்குத் தெரியாமலேயே காத்திருக்கக் கூடும். கவலையை விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. எதையோ தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னவென்று புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 7. யார் சார் நீங்கள் சிட்னி இல் இருந்து முளைத்தவர்? பரவாயில்லை உங்கள் வரவு நல்வரவாகட்டும்
  அதிகமாக தேடுகின்றீர்கள் போலும் அதுதான் எதைத் தேடுவது என்ற குழப்பம்?
  தேடலைத் தொடருங்கள் ஒரு கட்டத்தில் எது என்பது புரிந்துவிடும்
  பாடசாலை நாடகம் எங்கேயோ கேட்டது போல் இருக்கின்றதே?
  உள்வீட்டுப் பிள்ளையோ????

  பதிலளிநீக்கு
 8. யார் சேர் எண்டு கேட்டிருந்தா விளங்கியிருக்கும் :-)

  பதிலளிநீக்கு
 9. சேர் என்று சொல்லிப் பார்த்தும் பிடிபடவில்லை. மறைந்திருக்கும் வரைதான் சுவாரசியமே.
  மனித உறவுகளை சேகரிப்பது என் தேடல்களில் முக்கியமான ஒன்று
  கவலையான விடயம் என்ன என்றால் சந்தர்ப்பங்கள் மனிதர்களின் முக மூடிகளை அகற்றி
  நிஜத்தை காட்டிக் கொடுத்து விடுகின்றது. அதன்பின்பு ஏமாற்றம் கவலை......இன்ன பல
  ஆனாலும் துவண்டு போவதில்லை என்னை சுற்றி எத்தனையோ நல்ல உள்ளங்கள்.......மிக நல்லவர்கள்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா6/24/2011 8:54 முற்பகல்

  ஏனுங்க பிளாக்கரே...சக்திவேல் என்பவர் கானா என்று புரியவில்லையா இன்னும். சரியான லூசு நீங்கள்...

  பதிலளிநீக்கு
 11. நான் உங்களை கேட்டேனா கண்டு பிடித்து சொல்லும்படி? அவர் யாராக இருந்தால் என்ன? பெயரோடு இருக்கின்றாரே அதுவே போதும்
  உங்களுக்கும் ஒரு பெயர் வைப்போமா? லூசுப் பையா....பெயர் பிடித்திருக்கா?

  பதிலளிநீக்கு