புதன், ஜனவரி 28, 2009

அப்பாவும் நானும்......தந்தையின் பெருமைகளை சொல்வதற்கு நிறைய உண்டு, சொல்ல நினைத்தேன் நினைத்ததும் நினைவை வெல்ல முடியவில்லை. நானும் அப்பாவும் நல்ல நண்பர்கள், நாம் வாழ்ந்த காலங்கள் சந்தோசமான இனிய சங்கீதம். அங்கே காயங்கள், வடுக்கள் என்று எதுவுமேயில்லை. போர்ச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்தேன் அவர் இறந்தபோதுகூட நான் அருகிலில்லை ஊருக்கு போகமுடியாத சூழ்நிலை இறுதிவரை அவர் முகத்தைக்காணவேயில்லை. அந்த ஏக்கத்தின் காயம் ஒர் அழியாதசோகமாக என்னுள் இருக்கின்றது. என் வார்த்தைகளில் கள்ளமில்லை கற்பனையில்லை சொல்ல முடிந்ததை சொன்னேன்.

என் அப்பா

எனக்கோர் அறிவொளி
அமைதியின் சிகரம் - அவர்
உள்ளும் புறமும் வெண்மை
துள்ளும் மனமோ மென்மை


நானிலம் போற்றிய நற்றமிழ் ஆசான்
குற்றம் பொறுக்கும் குணமலை
துள்ளிய நடை துடிப்பான செயல்
சிம்மக்குரல் சிரிக்கும் கண்கள்
இது என் அப்பா - அவர்
தெள்ளிய தேனிலும் இனியவர்
கற்றவர் அவைதனில் நிற்பவர்
நற்றமிழ் நலம்பெற்ற நாவீரர்
கம்பனின் களிநடம் சொல்லுவார்
கைகட்டி வாய்பொத்த மறுப்பவர்
வற்றா நதியென வாழ்ந்தவர்


என் தாயின் காதல் நாயகன்
ஏக்கம்தீர எம்மை நேசித்த ஜீவன்

கண்போன்ற தன் பெண்களுக்கு
பொட்டு வைத்துப் பார்த்தவர்
கட்டவிழ்ந்து போகாமல்
பொன்னும் பொருளும் தந்தவர்

நன்றி சொல்லவேண்டிய நல்லவர்
கெட்டியான பாசத்தை ஊட்டி வளர்த்தவர்
மட்டமான எண்ணத்தை மலராமல் தடுத்தவர்
சுட்டியான கருத்தை பேச்சில் கொண்டவர்
அட்டகாசமாகவே அவையோரை கவர்பவர்
கிட்டநின்று பார்ப்போர்க்கு சட்டென்று புரிபவர்
எட்டிநின்று பார்த்தாலும் காட்சியாக தெரிபவர்


சிந்தனைகள் சொல்லுவார்

சித்திரத்துப் பாவையென்று
சின்னவளைப் போற்றுவார்
அவருடன் வாழ்ந்த காலம்
அத்தனையும் வசந்தகாலம்
அவரில்லா நிகழ்காலம்
நிழலில்லா வனாந்தரம்பக்கம்பக்கமாக சொல்லுவேன்

பருகிய பாசத்தைப் பாடுவேன்
ஆசையோடு அசைபோடுவேன்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை
அர்ச்சனைப் பூக்களாக்கி
அர்பணிக்கும் மனசோடு
நன்றி என்னும் தீபமேந்தி
நான் விரும்பும் தந்தைக்கு
அவர் மென்பாதங்களில்
அன்போடு தூவுகின்றேன்

தாய் பாசத்தைபற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள் ஆனால் தந்தையின் பாசத்தை ஏனோ பலரும் விபரிப்பதில்லை. அப்பாவும் நானும் என்ற இந்த தலைப்பின்கீழ் நீங்களும் உங்களது அப்பாவைப்பற்றி சில வரிகளை எழுதிச்செல்லுங்கள். அவற்றை தொகுத்து நான் எனது கருத்தையும் இணைத்து மீண்டும் ஒரு பதிவாக போடுகிறேன்.

4 கருத்துகள்:

 1. *\\இது என் அப்பா - அவர்
  தெள்ளிய தேனிலும் இனியவர்
  கற்றவர் அவைதனில் நிற்பவர்
  நற்றமிழ் நலம்பெற்ற நாவீரர்
  கம்பனின் களிநடம் சொல்லுவார்
  கைகட்டி வாய்பொத்த மறுப்பவர்
  வற்றா நதியென வாழ்ந்தவர் \\*

  உற்றாரும் ஊராரும் போற்றி நின்ற‌
  கற்றோரும் பெற்றோரும் பற்றி நின்ற‌
  வற்றாத தமிழ் அறிஞர்.

  எனக்கு ஆங்கிலம் கற்று தந்த ஆசிரியன்.
  கம்பனையும் வள்ளுவனையும் என்னப் போல் சிறியவனுக்கும் புரியும் வைகையில் பட்டி மன்றங்கள் செய்தவர்.
  சொல்லிட பல உண்டு. கம்பன் வீட்டு தறியும் கவி பாடும் என்பார் இதனால் தானோ!

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான். பலருக்கு தந்தை பாசம் பற்றி தெரிவதில்லை.

  எனது தந்தையிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல.

  சிக்கனமும், சேமிப்பும் அவர் கற்றுக் கொடுத்தவை, இன்றும் என் நினைவில் அழியாதவை.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் காருரன்.....

  வாஞ்சனையை வார்த்தைகளில் வடித்தவிதம் அழகு
  கம்பன்வீட்டுக் கட்டுத்தறி. .. .
  உவமை கொஞ்சம் உதைக்கிறது
  வெறும் குழல்வழியே சுழன்று
  முடிவில் தொலையும் காற்று நான்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் இராகவன்

  ஆளும் சத்தி
  அதற்கொரு பெயர் ஆண்டவன்
  ஊக்கும் சக்தி
  எம்செயலில் தினம் உறங்கும் சிம்மம்
  அவர்க்கொரு பெயர் தந்தை

  பதிலளிநீக்கு