செவ்வாய், நவம்பர் 08, 2011

போதிமரத்தின் நிழல்
அரசமரத்தடியில் சித்தார்த்தன் தன்னை புத்தனாக கண்டுகொண்டான். தன்னைக் கண்டுகொண்ட சித்தார்த்தன் ஞானம் அடைந்து தனது வாழ்க்கை பற்றிய தேடலை ஆரம்பிக்க உலகமும் அவனைப் புத்தனாக கண்டுகொண்டது.

நம்மை நாமே கண்டுகொள்ள போதிமரத்தின் நிழல் ஒன்றும் அவசியமில்லை. தினமும் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் புதுப்புது அனுபவத்தைக் கற்றுத்தருகின்றன. அவை கற்றுத்தரும் பாடங்களை பாடசாலைகளோ நூல்களோ தெளிவாக கற்றுத்தரமுடியுமா? ஆனால் அவற்றிலிருந்து வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாம் கற்றுக்கொள்கின்றோமா?

உறக்கத்தில் மட்டும்
தேவதையுடன் உரையாடல்
விடிந்தவுடன்
வேதனைகளும் விளையாட்டும்
தொடராகத் துரத்தும் வாடிக்கை
கொஞ்சநேர அமைதிக்கும்
இடையறாத போராட்டம்
தவிர்க்கமுடியாத காயங்கள்
தணிக்கமுடியாத தழும்புகள்
ஒவ்வொரு தழும்புகளும்
ஒவ்வொரு போதிமரம்
மீண்டும் மீண்டும் போதிமரங்கள்
புத்தனாக மாறுவது எப்போது?

இந்தக் கணத்தில் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் அதை அனுபவிப்பதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி தடைகளைப் போட்டு எம்மை நாமே வதைத்து சுற்றியுள்ளவர்களது பார்வையை திருப்திப் படுத்த ஞானத்தைத் தேடி ஓடுவதாக வேஷம் போட்டு ஓர் தற்காலிகமான மதிப்பையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துகின்றோம்.

சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் பின்பு எல்லாம் சரியாகி பழைய நிலைக்கு வந்தபின்பு ஞானம் மறைந்து விடுகின்றது, மறந்தும் விடுகின்றது.

படித்துத் தெரிந்தவை
பட்டறிந்தவை
சொல்லப்பட்டவை
அனைத்தும் அறிந்தும்
தொற்று நோய்போல்
ஒட்டிக்கொள்ளும் பலவீனத்தை
எங்கே விட்டுச்செல்வது
காலத்தோடு கரையுமென்றால்
கையில்வைத்து காத்திருக்கலாம்
மரணத்தோடு மறையுமென்றால்
கையளித்துவிட்டு மறந்திருக்கலாம்
எதுவுமே நடக்கவில்லை
கண்ணீர்துளிகளின் செறிவில்
போதிமரங்கள் மட்டும் வளர்கின்றன
போதனைகள் பயனற்று வாடுகின்றன


விரக்தியும் நம்பிக்கையும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை. பரந்த வானத்திற்கு கீழ் எத்தனை ஐPவராசிகள். ஒவ்வொன்றுமே எமது வாழ்க்கையோடு ஏதோவகையில் இணைக்கப்பட்டவை. அவற்றிலிருந்து நாமும் எம்மிலிருந்து அவையும் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளும் வண்ணம் வாழப் பழகிக் கொண்டால் எதுவுமே சாத்தியம்தான்.

வானம் தனக்கொரு போதிமரமென்றான்
வானம் பார்த்துக் கிடக்கிறது பூமி
பரந்த பூமியில் காண்பதெல்லாம் பாடம்
நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள்
அவற்றைக் கிளறும் மனிதக் கரங்கள்
தெருவிளக்கின் ஓரத்தில்
போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல்கள்
தானாக வெளிச்சத்தை தேடிச்சென்று
ஒரு நொடியில் செத்துமடியும் ஈசல்கள்
ஒவ்வொரு காட்சியும் தனித்துவமானவை
ஞானமடைவதற்கு அரசமரத்தை
தேடிக்கொண்டிருக்காதீர்கள்!
அருகிலிருக்கும் ஒவ்வொன்றும்
ஏதோவொன்றைச் சொல்கின்றதே
புரிந்து கொள்ள முயற்சியெடுப்போம்!


என்னை எனது பலங்களோடும் பலவீனங்களோடும் ஏற்றுக்கொண்டேன். எனக்காக பெருமைப்பட்டேன். எனது சுயமரியாதையை மதித்தேன். இதற்கு பல காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. சிறுமைப்பட வேண்டியிருந்தது பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளிற்குள் சிக்கி வெளியில் வரவேண்டியிருந்தது சுற்றியிருந்த மனிதர்களின் அழகான அழகற்ற குணங்களை விழிப்புணர்வுடன் கற்க வேண்டியிருந்தது. ஓவ்வொன்றையும் குதூகலிக்கும் மனசோடு அனுபவிக்கக் கற்றுக்கொண்டதால் தன்னுணர்வோடு நிலையாக தொடரமுடிகின்றது.

தொலைத்துவிட்ட என்னை
மீண்டும் பெற்றுக்கொண்டேன்
தொலைந்த 'நான்' மீண்டும் சேராதவரை
உலகம் எனக்கு கிடைக்கவில்லை
எனதும் உனதும் அவர்களதும்
ஒவ்வொரு நிகழ்வும் அனுபவமானது
ஒவ்வொரு மனிதனும் போதிமரமானான்
பட்டுப்பட்டு படிக்கும் பள்ளிக்கூடமானான்
இன்று என்னைச்சுற்றிப் பல வண்ணச்சிறகுகள்
பறப்பதற்கான வல்லமையோடும்
சாதிக்கத் துடிக்கும் தேடலோடும்!


சௌந்தரி

7 கருத்துகள்:

 1. நன்றி பிரபாகரன். உங்களது கருத்தையும் கூறியிருக்கலாம்
  வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. புத்தன் துக்கங்களை அறிந்து அவற்றைக் கடந்து நிரந்தர சந்தோஷத்தை தரும் ஞானத்தைப் பெற்றான். புத்தனுக்கு ஞானத்தின் ஊற்றுக் கண்ணை திறந்தவள் யசோதை.

  உங்களுக்கும் உண்மையான சந்தோஷத்தை அடையும் வழியை உணர்த்த நிச்சயம் யாராவது இருப்பார்கள். உலகில் எதுவுமே தனியாக இல்லை. சூரியனுக்குக் கூட ஒரு நிழலான துணையாக சந்திரன் இருக்கிறது.

  என்றும் மாறாத இளமை மனதுடன் மேலும் சந்தோஷமாக செயல்பட நிறைய உண்டு. பிறரைப் பற்றிய அக்கறையை விட எதிரிக்கும் நன்மை தேடிச் செயல்படுவதை விட பெரிய சந்தோஷம் தரும் ஞானம் வேறு ஒன்றும் இல்லை.

  உங்களது இந்த இடுகையில் எதிர்மறை எண்ணஙகள் தொனிக்கின்றன. அவற்றை களைய முயற்சி செய்யுங்கள். அவை வாழ்வில் அயர்ச்சியைத் தரும்.

  சோதனை வரலாம். வேதனைகள் சூழலாம். ஆனால் பயம் கொள்ளலாகாது. தைரியமாக இருங்கள். இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
  எனது எழுத்து உங்களை வேதனைப் படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்
  இந்த அழகான உலகத்தில் ஏது தனிமை?
  //என்னைச்சுற்றிப் பல வண்ணச்சிறகுகள்
  பறப்பதற்கான வல்லமையோடும்
  சாதிக்கத் துடிக்கும் தேடலோடும்// இதுதான் நான்.
  என்னை நேரில் கண்டால் புரிந்து கொள்வீர்கள்
  //விரக்தியும் நம்பிக்கையும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை//
  நான் சந்தோசத்தின் மகள் துன்பத்திற்கு எனது வீட்டில் இடமில்லை
  நன்றி மீண்டும் வருக

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா11/09/2011 8:19 பிற்பகல்

  சந்தேசமாக இருக்கிறீர்கள் என்ற கேட்பது எனக்கும் சந்தோசம் தருகிறது. தற்செயலாக உங்களது இந்த எழுத்துக்களுக்கு வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் நினைப்பதை சாதிக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களது மற்றைய படைப்புக்களையும் வாசிப்பேன். முடிந்தால் எனது கருத்துக்களையும் தருவேன். நேரில் பாராமலே ஒருவரை அவரது சொற்களை வைத்து ஓரளவு புரிந்து கொள்ள முடியும. நேரில் சந்தித்து என்ன செய்யப் போகிறோம்.

  பதிலளிநீக்கு
 5. //நீங்கள் நினைப்பதை சாதிக்க இறைவனை வேண்டுகிறேன்//
  நான் நினைப்பதை சாதிப்பதற்கு இறைவன் என்ன செய்யமுடியும் என்னை அல்லவா வாழ்த்தவேண்டும்
  முகம் தெரியாதவரைக்கும் எதற்காகவும் நடிக்க வேண்டிய அவசியம் இருக்காது
  சொற்களை வைத்தே ஒருவர் மீது அக்கறை கொள்ளும் மனிதர்கள் இருக்கும் போது
  யாரும் எதற்காக கவலைப்பட வேண்டும்.
  நன்றிகள் பல

  பதிலளிநீக்கு