செவ்வாய், நவம்பர் 22, 2011

புன்னகைச் சாரல்புன்னகையென்பது மகிழ்ச்சி. அதன் பெறுமதி அளப்பரியது. புன்னகைத்தவாறு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்வதென்பது ஓர் கலை மட்டுமல்ல அதுவோர் தேவையான சேவையும்கூட. சிரித்தமுகம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. இயல்பாகவே சிரித்தமுகம் அமைந்துவிட்டால் அதை அதிஷ்டம் என்றே கூறவேண்டும். சிரித்த முகத்துடன் அமைதியும் சாந்தமும் சேர்ந்து கொண்டால் தெய்வீகத்தன்மை தோன்றிவிடும். அப்படிப்பட்டவர்களோடு பழகக்கிடைப்பதென்பது ஓர் வரமாகும்.

உன் புன்னகைச் சாரலில்
குளிரும் என் எரிமலைச் சோகம்
உடல் சுமந்த அழகும்
மனம் நிறைந்த அன்பும்
இரண்டங்குலப் புன்னகையும்
வசீகரிக்கும் ஆயுதங்கள்
பகலில்கூட பயமுறுத்தும்
மனித விகாரங்களுக்கிடையே
நாணலைப்போல் மென்மையாக
பாலைப்போல் வெண்மையாக
புன்னகைத் துளிகளை
மௌனமாகத் தூவிச்செல்
இதயக் கொந்தளிப்புகள்
இல்லாது போய்விடும்
பேசுகின்ற பொக்கிஷமே
பாசத்தின் உடன்பிறப்பே
புன்னகையொன்றே போதுமே
என்மனம் உன்வசமாகுமே

சிரிப்பைத் தவிர்க்க முடியாது. சிரிப்போடுமட்டும்தான் என்னால் வாழமுடியும். என்னோடு இணைந்திருக்கின்றது எனது சிரிப்பு. எல்லோரிடமும் தனித்துவமான சிரிப்பொன்றிருக்கின்றது. எந்த ஒரு சூழ்நிலையையும் சமன்செய்துவிடுகின்றது கலகலக்கும் சிரிப்புச் சத்தம். யாருமே தனியாகச் சிரிக்கமுடியாது அப்படிச் சிரித்தால் அதற்கு வேறு பெயர் சூட்டிவிடுவார்கள். சிரித்து மகிழ்வதற்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே சிரிப்பவர்களை தேடிச்சென்று பழகிப்பாருங்கள் சிரிப்பின் ஆளுமை புரிந்துவிடும். ஒருவரது சிரிப்பு மற்றவர்களை எந்தவிதத்தில் வசீகரிக்கின்றது என்பதில்தான் அந்த சிரிப்பின் ஆளுமை அமைந்துள்ளது. மனிதனின் ஆளுமையென்பது இவையெல்லாவற்றையும் அடக்கியதுதான். புறத்தோற்றம் அகத்தோற்றம் இரண்டுமே மேம்பட்டிருப்பவர்கள்தான் ஆளுமைமிக்க மனிதர்களாவர். அகத்தில் அன்பும் குறையாத கருணையும் இருப்பவர்கள்தான் புறத்திலும் அழகாக இருக்கமுடியும். வெளிப்பூச்சில் அழகை தக்கவைத்துக் கொள்பவர்களது வேஷம் சிறிது நேர பழக்கத்தில் வெளிப்பட்டுவிடும்.

நான் பழகிய மற்றும் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களைத் திரும்பிப் பார்க்கின்றேன். எனது நண்பர்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். எங்களைச் சுற்றி எப்போதுமே ஓர் கூட்டம் நிற்கும். சிடுமூச்சிகளுடன் எனது நட்புத் தொடர்வதேயில்லை. எதிர்மறையாக சிந்திப்பவர்களிடமிருந்தும் எதிலுமே குறைகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்களை வேதனைப்படுத்தி தம்மை சந்தோசப்படுத்துபவர்களிடமிருந்து எப்போதும் தள்ளியே நிற்கின்றேன்.

மகிழ்வாக இருப்பதென்பது எனது இயல்பு அதுவே எனது விருப்பம். அதனால்தான் என்னையும் என்னைச் சார்ந்தவர்களினதும் வட்டத்துக்குள் எப்போதும் சிரிப்பலைகள் சுற்றிக் கொண்டேயிருக்கும். சிரிப்பென்பது ஓர் ஆரோக்கியமான தொற்றுநோய் பக்கத்தில் இருப்பவர்களையும் விரைவாகத் தொற்றிக்கொள்ளும். அதன்மூலம் அவர்களுக்கிடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

விஞ்ஞான ஆராய்சிகளின்படி சிரிப்பென்பது உன்னதமான நோய் நிவாரண சக்தியென்றும் உடல் தசைகளின் இறுக்கத்தை குறைக்கும் நல்லதோர் உடற்பயிற்சியென்றும் கூறப்படுகின்றது. அதனால்தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று கூறினார்கள். சேர்ந்து சிரியுங்கள் மனம் மிகவும் இலேசாகிவிடும். மனஅழுத்தத்தை மனவலியை கட்டுப்படுத்துவதற்கு சிரிப்பே சிறந்த மருந்து. ஆனால் தேவைகளுக்காக சிரிப்பதென்பது வேறு சிரித்த மனசோடு இருப்பதென்பது வேறு. சிரிப்பில் பலவிதமான வகைகள் இருந்தபோதும் இயற்கையான சிரிப்புடன் இயல்பாக இருக்கும் மனிதர்களே பலரையும் வசீகரித்துக் கொள்வார்கள்.

எப்போதுமே சிடுமூஞ்சியாக இருந்துவிட்டு திடீரென்று சிரிப்புக்கு மாறமுடியாது. சிரிப்பதுகூட ஓர் பயிற்சியும் பழக்கமும்தான். காசின்றி செலவிடும் உண்மையான சிரிப்புக்கு விலையேது? சிரித்துக்கொள்ளுங்கள்.

சிரிப்பில் மயங்காத மனமுண்டா
வெட்கத்தில் ஒரு சிரிப்பு
வேதனையில் ஓர் சிரிப்பு
நக்கலில் ஓர் சிரிப்பு
நாணத்தில் ஓர் சிரிப்பு
உயிர்க் கொல்லிபோல்
உள்ளுக்குள் விஷம் கலந்து
வெளியிலே சிரிக்கும்
வஞ்சகச் சிரிப்புமுண்டு
அரைகுறையாய் மலர்ந்த
அல்லிமலரைப்போல் சிரிக்கும்
அப்பாவிச் சிரிப்புமுண்டு
இன்னும் பல சிரிப்புகள்
வர்ணனைக்குள் சிக்காது
வலுவிழந்து சிரிக்கின்றன
மயங்கத்தானே சிரிப்பு
மயங்கி மகிழத்தானே சிரிப்பு
மனிதகுலத்தின்
தனிச்சிறப்பல்லவா சிரிப்பு
சிரித்துப் பாருங்கள்
ஒட்டிக்கொள்ளும் சிரிப்பு

நகைச்சுவையுணர்வென்பது மிக முக்கியமானதொன்றாகும். சிலருக்கு அடிப்படையிலேயே நகைச்சுவையுணர்வு இருக்கின்றது. அவர்கள் தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்களது நகைச்சுவையுணர்வு மேலும் மெருகூட்டப்பட்டு எல்லோராலும் விரும்பப்படுகின்றது. பொழுதுபோக்குச் சாதனங்களில் நகைச்சுவைச் சித்திரங்கள் அதிகமாக சேர்க்கப்படவேண்டும். இயந்திரமயமான வாழ்க்கையில் ஓடி ஓடிக் களைத்து ஓய்வுதேடும் வேளையில் அழுது வடியும் திரைப்படங்களும் தொடர் நாடகங்களும் தேவையா என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழவேண்டும். காசைக்கொடுத்து மேலும் சுமையையும் அழுத்தத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா? கொஞ்சநேரம் அனைத்தையும் மறந்து சந்தோசமாக குடும்பத்தோடு சிரித்து மகிழ்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை தேடிச் செல்லுங்கள்.

எனது நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைத்தளத்தில் கழிகின்றது. வேறு இனத்தவர்கள் மத்தியில் பணி புரிந்தாலும் மகிழ்ச்சியான புன்னகை ததும்பும் முகங்களை ஒவ்வொரு காலையும் தரிசித்து காலை வணக்கம் கூறி எனது புதிய நாளை ஆரம்பிப்பதென்பது எல்லோருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. நன்றி கூறும்போதும் வாழ்த்தும்போதும் அன்பை பரிமாறும்போதும் காதலை தெரிவிக்கும்போதும் நட்பை வெளிப்படுத்தும்போதும் புன்னகை தானாக வெளிப்படுகின்றது. வெற்றுப் புன்னகைக்கும் முகமலர்ச்சியோடு முறுவலிக்கும் புன்னகைக்கும் உள்ள வித்தியாசத்தை புன்னகை பரிமாற்றத்தின்போது சுலபமாக உணர்ந்து கொள்ளமுடியும்.

வயது முதிர்ந்தவர்கள் சிரிக்கின்றபோது நிறைவான சிரிப்பொன்றைக் காணலாம். வயசோடு வக்கிரபுத்திகள் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகள் மிருக குணங்கள் போன்றவை அழிந்து போய்விடுவதால் அதுவரைகாலமும் தொலைத்த நிர்மலமான மனசு அவர்களுக்கு மீண்டும் திரும்பக் கிடைத்து விடுகின்றது. அதனாலோ என்னவோ வயது முதிர்ந்து பொக்கை வாயால் சிரிக்கும் மனிதர்களின் சிரிப்பில் கள்ளமற்ற குழந்தையின் சிரிப்பை காணமுடியும்.

துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சிரிப்புவரும் என்ற கேள்வியுமுண்டு. துன்பத்தில் உழலும்போது அழுவதுதான் சரியென்று யாருமே சொல்லவில்லை. துன்பம் வருகின்றபோது துன்பமே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் ஒரு சாரார் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வெளியேறி வாழ்பவர்கள் இன்னொருசாரார். இருசாரார்களது சிரிப்பும் வேறு வேறு விதமாக இருக்கும். வேதனைப்படும்போது நான் பேசுகின்ற குரலில்கூட சோகம் ததும்பி நிற்கும். அப்படியிருக்கும்போது எப்படி எனது சிரிப்பு நிஐமானதாக இருக்கமுடியும். ஆனால் என்னைப் போன்றவர்கள் சோகத்திற்குள் நீண்ட நேரம் வாழமாட்டார்கள். சோகத்திலிருக்கும் சில மணி நேரங்களுக்குள் அழவேண்டும் என்றால் சீக்கிரம் அழுது முடித்துவிட்டு துன்பத்திற்கான காரணங்களை அறிந்து அதற்கான தீர்வுகளையும் தீர்மானித்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார்கள். உணர்சிகளற்று வரவேற்பாளர்களின் சிரிப்பைப்போல் கடமைக்காக சிரித்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தாம் சந்திக்கும் துன்பங்களையும் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருப்பர். அதுமட்டுமல்ல எத்தகைய துன்ப நிகழ்வையும் இன்பமாக மாற்றிக் கொள்ளும் பயிற்சியையும் துன்பத்தை இன்பமாக்கிக்கொள்வதற்கான பல தெரிவுகளை நாடிச்செல்லும் திறமையையும் பெற்றிருப்பர் என்பதும் எனது அனுபவக்கருத்து.

பரந்தமனப்பான்மை கொண்டவர்களது மனதில் எப்போதும் மகிழ்ச்சியிருக்;கும் அவர்களோடு பழகுபவர்களும் ஓர் பாதுகாப்பான வட்டத்துக்குள் வாழ்கின்ற உணர்வை அனுபவிப்பார்கள். சாதாரணமாக மற்றவர்களுடன் ஒத்துப்போகாதவர்கள்கூட இவர்களோடு சுலபமாக இணைந்து கொள்வார்கள்.

சிலரிடம் சென்று பேசிப்பாருங்கள். எதையுமே ஈடுபாட்டுடனும் கருத்துக்களோடு உடன்படும் நோக்கிலும் பேசுவார்கள். அவர்களைநாடி மீண்டும் மீண்டும் சென்று பேசத்தோன்றும். இன்னும் சிலர் இருக்கின்றார்கள். எதையும் எதிர்மறையாகவே பார்ப்பார்கள். அவர்களது கண்களுக்கு குறைகள் மட்டும்தான் தெரியும். நிறைகளைப் பாராட்டும் மனசற்றவர்கள். தமது மனசில் உள்ள தாழ்வுச்சிக்கலை மற்றவர்களது குறையை சுட்டிக்காட்டுவதால் சமநிலைப் படுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள். சந்தோசத்தை அனுபவிக்கமுடியாதவர்கள். கடுகடுப்பான முகத்தோடு வளையவரும் இவர்களைவிட்டு சுற்றியிருப்பவர்கள் தூர விலகிச் சென்றுவிடுவார்கள். இவர்கள் தனித்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாவப்பட்டவர்கள் என்றே கூறவேண்டும்.

இப்படிப்பட்டவர்களது மனப்போக்கிற்கு அடிப்படைக் காரணம் அவர்களது வாழ்க்கைமுறைதான். சிறுவயது வாழ்க்கைச் சூழல் அவர்களது மனதை வறண்ட பாலைவனமாக மாற்றிவிடுகின்றது. சிறுவயதுமுதல் எப்போதும் சிரித்த முகத்தோடுதான் நான் வளர்ந்தேன். எனது பெற்றோர்கள் எனது சிரிப்புக்கு தீனி போட்டு வளர்த்தார்கள். தொடர்ந்து என்னோடு கூடவந்த உறவுகள் எனது சிரிப்பை பக்குவப்படுத்தினார்கள். நான் தொடர்ந்து சிரிப்பதை பொறுக்கமுடியாமல் என்னோடு கூட இருந்து எனது சிரிப்பை கொன்றுவிடவேண்டும் என்ற முயற்சியில் அவ்வப்போது குழிபறித்து தோல்வியுற்று பறித்த குழியில் தம்மைப் புதைத்துக்கொண்டவர்களும் உண்டு.

எனது வாழ்க்கைச் சக்கரம் மாறுபட்ட வேகத்தோடு சுழன்று கொண்டிருந்தாலும் என்றும் வாய்விட்டுச் சிரிப்பவர்களின் உறவைத் தேடிச் செல்லும் பெண்ணாகவே வாழ்;கின்றேன். இறுதிக் காலம்வரை எனது சிரிப்பும் அதனூடக நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் தொடரும் என்றே கருதுகின்றேன்.

செவ்வாய், நவம்பர் 08, 2011

போதிமரத்தின் நிழல்
அரசமரத்தடியில் சித்தார்த்தன் தன்னை புத்தனாக கண்டுகொண்டான். தன்னைக் கண்டுகொண்ட சித்தார்த்தன் ஞானம் அடைந்து தனது வாழ்க்கை பற்றிய தேடலை ஆரம்பிக்க உலகமும் அவனைப் புத்தனாக கண்டுகொண்டது.

நம்மை நாமே கண்டுகொள்ள போதிமரத்தின் நிழல் ஒன்றும் அவசியமில்லை. தினமும் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் புதுப்புது அனுபவத்தைக் கற்றுத்தருகின்றன. அவை கற்றுத்தரும் பாடங்களை பாடசாலைகளோ நூல்களோ தெளிவாக கற்றுத்தரமுடியுமா? ஆனால் அவற்றிலிருந்து வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாம் கற்றுக்கொள்கின்றோமா?

உறக்கத்தில் மட்டும்
தேவதையுடன் உரையாடல்
விடிந்தவுடன்
வேதனைகளும் விளையாட்டும்
தொடராகத் துரத்தும் வாடிக்கை
கொஞ்சநேர அமைதிக்கும்
இடையறாத போராட்டம்
தவிர்க்கமுடியாத காயங்கள்
தணிக்கமுடியாத தழும்புகள்
ஒவ்வொரு தழும்புகளும்
ஒவ்வொரு போதிமரம்
மீண்டும் மீண்டும் போதிமரங்கள்
புத்தனாக மாறுவது எப்போது?

இந்தக் கணத்தில் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் அதை அனுபவிப்பதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி தடைகளைப் போட்டு எம்மை நாமே வதைத்து சுற்றியுள்ளவர்களது பார்வையை திருப்திப் படுத்த ஞானத்தைத் தேடி ஓடுவதாக வேஷம் போட்டு ஓர் தற்காலிகமான மதிப்பையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துகின்றோம்.

சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் பின்பு எல்லாம் சரியாகி பழைய நிலைக்கு வந்தபின்பு ஞானம் மறைந்து விடுகின்றது, மறந்தும் விடுகின்றது.

படித்துத் தெரிந்தவை
பட்டறிந்தவை
சொல்லப்பட்டவை
அனைத்தும் அறிந்தும்
தொற்று நோய்போல்
ஒட்டிக்கொள்ளும் பலவீனத்தை
எங்கே விட்டுச்செல்வது
காலத்தோடு கரையுமென்றால்
கையில்வைத்து காத்திருக்கலாம்
மரணத்தோடு மறையுமென்றால்
கையளித்துவிட்டு மறந்திருக்கலாம்
எதுவுமே நடக்கவில்லை
கண்ணீர்துளிகளின் செறிவில்
போதிமரங்கள் மட்டும் வளர்கின்றன
போதனைகள் பயனற்று வாடுகின்றன


விரக்தியும் நம்பிக்கையும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை. பரந்த வானத்திற்கு கீழ் எத்தனை ஐPவராசிகள். ஒவ்வொன்றுமே எமது வாழ்க்கையோடு ஏதோவகையில் இணைக்கப்பட்டவை. அவற்றிலிருந்து நாமும் எம்மிலிருந்து அவையும் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளும் வண்ணம் வாழப் பழகிக் கொண்டால் எதுவுமே சாத்தியம்தான்.

வானம் தனக்கொரு போதிமரமென்றான்
வானம் பார்த்துக் கிடக்கிறது பூமி
பரந்த பூமியில் காண்பதெல்லாம் பாடம்
நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள்
அவற்றைக் கிளறும் மனிதக் கரங்கள்
தெருவிளக்கின் ஓரத்தில்
போர்வைக்குள் சுருண்டிருக்கும் உடல்கள்
தானாக வெளிச்சத்தை தேடிச்சென்று
ஒரு நொடியில் செத்துமடியும் ஈசல்கள்
ஒவ்வொரு காட்சியும் தனித்துவமானவை
ஞானமடைவதற்கு அரசமரத்தை
தேடிக்கொண்டிருக்காதீர்கள்!
அருகிலிருக்கும் ஒவ்வொன்றும்
ஏதோவொன்றைச் சொல்கின்றதே
புரிந்து கொள்ள முயற்சியெடுப்போம்!


என்னை எனது பலங்களோடும் பலவீனங்களோடும் ஏற்றுக்கொண்டேன். எனக்காக பெருமைப்பட்டேன். எனது சுயமரியாதையை மதித்தேன். இதற்கு பல காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. சிறுமைப்பட வேண்டியிருந்தது பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளிற்குள் சிக்கி வெளியில் வரவேண்டியிருந்தது சுற்றியிருந்த மனிதர்களின் அழகான அழகற்ற குணங்களை விழிப்புணர்வுடன் கற்க வேண்டியிருந்தது. ஓவ்வொன்றையும் குதூகலிக்கும் மனசோடு அனுபவிக்கக் கற்றுக்கொண்டதால் தன்னுணர்வோடு நிலையாக தொடரமுடிகின்றது.

தொலைத்துவிட்ட என்னை
மீண்டும் பெற்றுக்கொண்டேன்
தொலைந்த 'நான்' மீண்டும் சேராதவரை
உலகம் எனக்கு கிடைக்கவில்லை
எனதும் உனதும் அவர்களதும்
ஒவ்வொரு நிகழ்வும் அனுபவமானது
ஒவ்வொரு மனிதனும் போதிமரமானான்
பட்டுப்பட்டு படிக்கும் பள்ளிக்கூடமானான்
இன்று என்னைச்சுற்றிப் பல வண்ணச்சிறகுகள்
பறப்பதற்கான வல்லமையோடும்
சாதிக்கத் துடிக்கும் தேடலோடும்!


சௌந்தரி

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சின்ன சின்ன ஆசைஆசை இல்லாமல் வாழ்க்கையில்லை. சின்ன சின்ன ஆசைகளோ பெரிய பெரிய ஆசைகளோ ஆசை இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லை. நிறைவேறிய ஆசைகள் நிறைவேறாத ஆசைகள் என்று பல விதமான ஆசைகளை தமக்குள் மறைத்தும் மறையாமலும் வைத்திருக்கின்றார்கள் மனிதர்கள். அந்தந்த வயசில் அவ்வப்போது எழும் ஆசைகளை மனதிற்குள் பூட்டி வைக்காது அவற்றை அனுபவிக்க முயற்சியெடுப்பதே சிறந்தது. முயற்சியில்லாத எதுவுமே பலனளிக்காது.


இவர் இப்படியெல்லாம் ஆசைப்படுகின்றார் அவர் தகுதிக்குமீறி ஆசைப்படுகின்றார் என்று மற்றவர்களைப் பார்த்துக் குறை கூறுகின்றவர்கள்கூட சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது அவற்றிற்காக ஆசைப்படுவார்கள். ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை. ஆசை என்பது இல்லாது போனால்தான் அவன் சவத்திற்கு ஒப்பாவான்

ஒரு மனிதன் சட்டத்தின், சமயத்தின், சமூகத்தின் வரையறைக்குட்பட்டு தனது தேவைகளிற்காக ஆசைப்படும்போதும் புதியவற்றை அறிந்து கொள்வதற்குரிய முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும் போதும்தான் பலவிதமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றான். அனுபவங்கள்மூலம்தான் மனிதன் தன்னை வளர்த்துக்கொள்கின்றான்.

ஆசைகள் நியாயமானவையாக இருக்குமென்றால் அவை நிறைவேறுமென்றும் நியாயமற்ற ஆசைகள் குற்றங்களிற்கும் துன்பங்களிற்குமான அஸ்திவாரமென்றும் கூறப்படுகின்றது. மனித மனங்கள் மலர ஆசைப்படுவது நியாயமானதென்றும் ஒருவரது ஆசைகள் மற்றயவர்களின் மனங்களை துன்பப்படுத்தும் என்றால் அவை நியாயமற்றவை என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

ஆசைக்கென்று ஓர் அளவுகோல் இருக்கின்றதா? இருந்தால் அந்த அளவுகோல் எல்லோருக்கும் பொதுவானதாக அமைகின்றதா? இல்லை ஆளாளுக்கு வேறுபடுகின்றதா? வேறுபடுகின்றதென்றால் அந்த அளவுகோல் எதற்காக? இவையெல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.


இதோ ஆசைபற்றி மு மேத்தாவின் கவிதையொன்று

எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே - அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்
கல்லால் அடித்த கனிபோல் உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே


கோடுகள் போட்டு அதற்குள் வாழ்க்கையை வாழ நினைக்கின்றோம் ஆனால் அப்படியே வாழமுடிகின்றதா. இல்லையே! கல்லால் அடித்த கனிபோல் அல்லவா உதிர்ந்து போகின்றது. அதற்காக சூடுகண்ட பூனைபோல் அடுப்பங்கரைப்பக்கம் எட்டிப் பார்க்காமலா விடுகின்றோம். அதுவும் இல்லையே! ஆகவே ஆனது ஆகட்டும் நீ ஆசைப்படு என்பது சரிபோல் தோன்றுகின்றது.

வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுவதற்கான மூலகாரணம் ஆசை. மண்ணென்றாலென்ன பெண்ணென்றால் என்ன பொன்னென்றாலென்ன எதற்கும் ஆசைதானே அடிப்படைக் காரணம். ஆனால் ஆசை பேராசையாகின்றபோது அங்கே சீரழிவுதான் என்பதை இந்தக் கவிதை கூறும்.


ஆசைப்படு ஆபத்தில்லை
ஆசை பேராசையானால்
அழிவுதான் உலகநியதி
அரசியல்வாதியின் பேராசை
நாட்டு மக்களைப் பாதிக்கும்
ஆக்கிரமிப்பாளனின் பேராசை
நாடு நகரங்களைப் பாதிக்கும்
மதங்களின் பேராசை
மரணத்தைக் கொடுக்கும்
மனங்களின் பேராசை
மகிழ்ச்சியைக் கெடுக்கும்
தேவைக்குப் போராடு
நீ போற்றப்படுவாய்
காலமறிந்து கைகொடு
நீ வாழ்த்தப்படுவாய்
தகுதிக்குள் ஆசைப்படு
தரமாக வாழ்வாய்
ஆசைப்படு
அனைத்துக்கும் ஆசைப்படு
அதுகூடத் தவறில்லை
ஆனால் அடுத்தவன்
சொத்துக்கு ஆசைப்பட்டால்
அது முறையில்லை
பேராசை என்பது பேரழிவு
வராலாறு கூறும் பாடமிது
கற்றுக் கொள்
காலம் கடந்தாவது கற்றுக்கொள்

சௌந்தரி


சின்னச்சின்ன ஆசைகள் எத்தனையோ இருக்கும். பகிர்;ந்து கொள்ளக்கூடியவை மிக சொற்பமானவையே


தாய்மடியில் தலைவைத்து கண்ணுறங்க ஆசை
தைபிறந்தால் வழிபிறக்கும் காத்திருக்க ஆசை
பெற்றவர்கள் பெருமைதனை பேசிவர ஆசை
பேராசைப் பெரும்படியை தாண்டிவர ஆசை
ஆர்ப்பாட்டமில்லாத அன்பு கொள்ள ஆசை
போராட்டமில்லாத வாழ்வுகாண ஆசை
உலகத்தின் அமைதிக்கு தூது செல்ல ஆசை
ஈழத்தில் இளைப்பாறி சேவை செய்ய ஆசை
தலைவரண்ணா தங்கையென்று உறவு கொள்ள ஆசை
தலைதூக்கும் பாம்புகளை தலையடிக்க ஆசை
பச்சிளம் குழந்தையொன்றை தத்தெடுக்க ஆசை
இளம்பிறையின் சிரிப்பதனை ரசித்திருக்க ஆசை
சேவலைப்போல் காலையிலே குரல் கொடுக்க ஆசை
காவலாக வாசலிலே காத்துநிற்க ஆசை
கந்தனைப்போல் சூரனை வதம் செய்ய ஆசை
சந்திரனின் குளிர்மையை கடன் வாங்க ஆசை
அமைதிக்கு பெயர்போன பெண்ணாக ஆசை
ஆசானாய் துணிந்துநின்று அறிவுறுத்த ஆசை
வம்பளக்கும் மனிதர்களை மாட்டிவிட ஆசை
சிங்களத்தின் முகத்திரையை கிழித்துவிட ஆசை
புலத்தினிலே வன்முறையை ஒழித்துவிட ஆசை
காதலோடு கைகோர்த்து கதைபேச ஆசை 
வள்ளியம்மை மணவாளன் துதிபாட ஆசை
தெள்ளுதமிழ் தேன்மொழியில் கவிபாட ஆசை
பள்ளிசென்று மீண்டும் படித்துவர ஆசை
உள்ளமதில் உள்ளதை உரத்துக்கூற ஆசை
வன்சொல் தவிர்த்து வதம்செய்ய ஆசை
இன்சொல் இணைத்து மகிழ்விக்க ஆசை
நானாக நானென்றும் வாழ்ந்துவிட ஆசை
பேனாவைப் பிடித்து புரட்சி செய்ய ஆசை
அளவில்லா ஆசைகள் அகத்திலும் புறத்திலும்
அத்தனையும் இறப்பதற்குள் அனுபவிக்க ஆசை
இறந்தாலும் மீண்டும் பிறப்பதற்கும் ஆசை
நிறைவேறா ஆசைகளைத் தொடர்வதற்கும் ஆசை


சௌந்தரி

ஆசைகளற்ற மனிதர்கள் யார். அவர் திட்டுவார் இவர் கோவிப்பார் அவருக்காக இவருக்காக என்று துளிர்விடும் சின்ன சின்ன ஆசைகளை ஏக்கங்களைக்கூட தியாகம் என்ற பெயரிலும் ஏமாற்றம் என்ற பெயரிலும் நிறைவேற்றாது கருக்கிவிடுகின்றோம்.

இதோ தனது தேவைகளை தான் விரும்பியபடியே நிறைவேற்ற ஓர் நாள் வராமலா போய்விடும் என்று காத்திருக்கின்றது ஓர் குரல்


அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்

தலை சீவினேன்

சில நண்பர்களைத் தவித்தேன்

சட்டை போட்டுக் கொண்டேன்

பல் துலக்கினேன்

வழிபட்டேன்

கல்யாணம்கூட கட்டிக் கொண்டேன்

காத்திருக்கின்றேன்

என் முறை வருமென்று

இது எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா? ஆசையை அடக்கிக் கொள்ளும் முறை எமது சமூகத்தில் அதிகம். சிறிதும் பெரிதுமான எத்தனை ஆசைகளை நாம் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கின்றோம். எமது ஆசைகளை சாகடித்துவிட்டு அப்பா அம்மா அக்கா அத்தான் என்று மற்றவர்களுக்காக வாழுகின்ற மனிதர்கள் எத்தனையெத்தனை

வியாழன், ஜூன் 23, 2011

நான் அனுப்புவது கடிதம் அல்ல......

கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் செம்மைப் படுத்தப்படுகின்றது. புதிய புதிய சொற்றொடர்களை பயன்படுத்தி அழகான வாக்கியங்களை உருவாக்கி தரமான கடிதங்களை எழுத பழகிக் கொண்டோமென்றால் கதை கட்டுரை நாவல் என்று எமது சிந்தனையும் விரிவடையும்.

ஆனால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் மருவி வருகின்றது. மனித ஆசைகளை ஆதங்கங்களை அழுகையை ஆளுமையை பகிர்ந்து கொண்ட ஓர் ஊடகத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகின்றது. கடிதத் தொடர்பாடல் மூலம் உருவாகும் உணர்வு ரீதியான தொடர்பு இன்று காணாமல் போய்விட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் எமது வாழ்கை முறையை சுலபமாக்கியிருப்பது ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தாலும் அன்றாடம் பரிமாறிக்கொண்ட ஆத்மார்த்தமான உணர்வுகளை மழுங்கடிக்கப் பண்ணியது வேதனையான விடயமாகும்.

முன்பெல்லாம் பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன். இப்போது எனது தாய்க்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே எதை எழுதுவது என்ற யோசனை. தொலைபேசியில் இரண்டு வார்த்தைகளைப் பேசுவது சுலபமாகத் தெரிகின்றது. அதுவும் வேலையில் இருந்து வீடு திரும்புகின்றபோது காருக்குள் இருந்து மொபைல் தொலைபேசியில் அழைப்பெடுத்து கதைத்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பெருமையாக நினைக்கத் தோன்றுகின்றது.


அவசரமான உலகத்தில் வாழ்வதால் எத்தனை அரிய விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் அவசரம். ஆலயத்திற்கு சென்றாலென்ன மருத்துவமனைக்கு சென்றாலென்ன விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு சென்றாலென்ன எதிலும் எப்போதும் அவசரம்தான் பொங்கி வழிகின்றது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் அவசரமென்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ருசித்து சுவைக்க வேண்டிய வாழ்க்கையை நஞ்சை விழுங்குவது போன்று மென்றி விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இந்த மாற்றம் எதை அடைவதற்காக இத்தனை இழப்புகள். இழப்புக்களென்று தெரிந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு சலனமற்றிருக்கின்றோம்

பக்கம் பக்கமாக கடிதம் எழுதிய காலம் மாறி வாழ்த்து அட்டைகளை கைபடத் திறந்து குதூகலித்த காலம் மாறி குறும் செய்திகளும் தொலைபேசிக் குறிப்புகளுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. பொறுமையாக கடிதமெழுதி அழகான கையெழுத்தில் முகவரி எழுதி முத்திரை ஒட்டி பக்குவமாக அஞ்சல் செய்யும் நிலைமை இன்று காணாமலே போய்விட்டது.

காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கின்ற சுகம் இப்போது பாவனையில் இருக்கின்ற மின் அஞ்சல் மூலமாக கிடைக்கின்றதா? முன்பெல்லாம் பிறந்தநாள் திருமணநாள் பொங்கல் தீபாவளி போன்ற தினங்களுக்கு நண்பர்கள் உறவினர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வீடுவந்து சேரும். அவற்றிற்கு நாம் கொடுத்த முக்கியத்துவம் மதிப்பு என்பனவற்றை வார்த்தைகளால் சொல்லி முடியுமா?

இன்று நாம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. நேசம் பாசம் நட்பு காதல் என்று எதைப்பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. எல்லாமே நிலையற்றது என்ற உணர்வு சிந்தனையில் பதிந்துவிட்டதோ என்னவோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில்தான் வாழ்க்கை ஓடுகின்றது.

உறவுகளோடு தொடர்பு கொள்வதற்குக்கூட காரணத்தைத் தேடுகின்றோம். தேவை ஏற்படாத பட்சத்தில் யாரும் யாரையும் பார்க்கவோ பேசவோ விரும்புவதில்லை. இந்த பக்கம் வந்தேன் உங்களையும் ஒருக்கால் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோம் என்று உரிமையோடு கூறிக்கொண்டு யாரும் யார் வீட்டிற்கும் செல்வது கிடையாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்ற சிந்தனையில் ஒருவரையொருவர் நினைத்துக் கூடப் பார்க்காது அவரவர் தத்தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இயந்திரத்தனமாக நாம் மாறிவிட்டோம்.

எத்தனை வகையான கடிதங்கள். தாய் தனது பிள்ளைகளுக்கு எழுதும் கடிதம் பாசத்தை வெளிப்படுத்துவதாகவும் தந்தை தனது மகனுக்கு அறிவுரைகளை எழுதிக் குவிப்பதாகவும் நண்பர்கள் அந்தரங்க விடயங்களை உரிமையோடு பரிமாறிக்கொள்வது போன்றும் காதலர்கள் கடிதங்கள் மூலமாக தமது இச்சைகளை, வாக்குறுதிகளை, பொய்களை, பெருமைகளை பரிமாறிக்கொள்வதாகவும் எத்தனை எத்தனை வகையான கடிதங்கள்.

அன்புள்ள என்று ஆரம்பித்து நீ நலமா நான் நலம் என்று தொடர்ந்து இலக்கண இலக்கியத்துடன் கடிதங்கள் எழுதப்படவேண்டும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுவயதில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நான் காகிதத்தில் கடிதம் எழுதுவதேயில்லை. கணணியில் நேரடியாகவே தமிழில் எதை எழுதவேண்டுமோ அதை எழுதிவிடுவேன். பேனாவினால் காகிதத்தில் எழுதாமல்விட்டு எனது எழுத்துக்கள்கூட ஒழுங்காக வருவதில்லை. எத்தனை வருடங்களாகி விட்டன அன்பான ஓர் கடிதம் எழுதி.

புலம்பெயர்ந்தபோது கொடூரமான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அலுமாரியின் மேல்தட்டிலும் கட்டிலுக்கு அடியிலும் ஒளித்து வைத்த சில கடிதங்களையும் வாழ்த்து அட்டைகளையும் புகைப்படங்களையும் கவனமாக என்னோடு எடுத்துக்கொண்டு வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைத் திரும்பவும் எடுத்து வாசிக்கின்றபோது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தை மீண்டும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது. இன்று அந்தக் கடிதங்களும் என்னோடு இல்லை நிகழ்கால இறுக்கங்களை தளர்த்துவதற்கு அந்த நினைவுகளும் என்னோடு இல்லை. காலம் எப்படி மாறிப்போய்விட்டது.

சிறுவயதில் எனது மாமாமார் என்னை அடிக்கின்றபோது அவர்களைத் திட்டித்தீர்க்கும் வகையில் கடிதம் கடிதமாக எழுதுவேன். அதன்பின்பு அவற்றை கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்துவிடுவேன். பின்பு நீண்ட நாட்களுக்குப்பின் அவற்றை மீண்டும் எடுத்து வாசித்து சிரித்துக் கொள்வேன்.

நீங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் உங்கள் கைவசம் இருந்தால் அவற்றை மீண்டும் தூசிதட்டி வாசித்துப்பாருங்கள். பல சுவாரசியமான விடயங்களை அவை உங்களோடு பேசும். நீங்கள் அனுபவித்த அழகான நாட்களை மீண்டும் உங்கள் மனதில் மலரச் செய்யும்.

தொடர்பாடல்கள் மிகவும் துரிதமாகவும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாகவும் கிடைக்கின்றபோது கடிதம் எழுதுகின்ற தேவை குறைந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் கடிதம் எழுதுவது அறவே நின்றுவிட்டது என்றே கூறலாம்.

இன்று என்ன சமையல் அம்மா என்று ஈழத்தில் இருக்கும் எனது தயாருடன் நினைத்த மாத்திரத்தில் பேசக்கூடியதாக இருக்கின்றபோது கடிதம் ஏன் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

பொதுவாக வெளிநாட்டில் இருந்து மகளிடம் இருந்து வருகின்ற கடிதம் ஒரு தாய்க்கு தனது மகளாகவே தோன்றும். அந்த கடிதங்களை வருடுகின்றபோது வாசிக்கின்றபோது தனது மகளின் தலையை கோருவது போன்ற உணர்வை ஓர் தாய்க்கு கொடுக்கும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்புகூட எனது தாயார் எனக்கு தனது கைபட கடிதம் எழுதுவார். நானும் ஆசையோடு அவருக்கு பதில் எழுதுவேன். இப்போது வீட்டில் தொலைபேசி இணைப்பு வந்துவிட்ட காரணத்தால் கடிதப் பரிமாற்றம் நின்றுபோய்விட்டது. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அழைப்பெடுத்து பேசிக்கொள்வேன். நேரடியாக சில விடயத்தை சொல்லமுடியாமல் இருக்கும். அவை என்றுமே சொல்லப்படாதவையாகவே இருந்து அழிந்துவிடும்.

எனக்கு அழுகின்ற மனிதர்களைப் பிடிக்காது. அம்மாவோ இரு பிள்ளைகளும் தன்னோடு இல்லை என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றா, அவருக்கு தனது மனக்குறைகளையெல்லாம் சொல்லி ஆறவேண்டும் போல் தோன்றும் ஆனாலும் கொஞ்ச நேரம் பேசப்போகும் தொலைபேசியில் அவற்றை சொல்லிவிடமுடியாது என்று நினைப்பதாலோ என்னவோ எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே வைத்து மேலோட்டமாக பேசுவா. அம்மா சும்மா இருக்கிற நேரத்தில் எனக்கு கடிதம் எழுதுங்கோ என்று கேட்டாலும் எழுதமாட்டா, ஏன் என்று புரியவில்லை.

இப்படியாக மனிதர்கள் தேக்கி வைத்திருக்கும் அன்பும் பாசமும் பகிரப்படாமலே தொலைந்து போய்விடப்போகின்றதே என்ற ஏக்கம் கால ஓட்டத்தோடு அதிகரித்துக் கொண்டே போகின்றது.

கடிதம் எழுதுவதற்கு ஒரு தனியான மனநிலை தேவை என்று சிலர் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சில மணிநேரங்கள் எனக்கு கிடைக்குமென்றால் அழகான ஒரு கடிதம் என்னால் எழுதமுடியும். அந்த நேரத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்து அக் கடிதத்தின் வடிவம் உருவம் எடுக்கும். அநேகமாக புலம்பெயர்ந்தபின்பு கடிதம் எழுதுகின்றபோது ஏக்கம்தான் அதிகமாக பிரதிபலிக்கும்.

காதல் கடிதங்களை வாசித்து அனுபவித்தவர்கள் அந்த கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்ட ஸ்பரிச உணர்வுகளை வார்தைகளால் வகைப்படுத்திவிடமுடியாது. நான் அதிகமாக எழுதியது காதல் கடிதங்களே, அழகான காதல் கடிதங்கள், நேரம் போவது தெரியாமலே எழுதிக் கொண்டிருப்பேன். அன்பும் பாசமும் கலந்த எனது கடிதங்களை வாசித்தால் எனக்கே என்மீது காதல் அதிகமாகும். வெறும் புகழ்ச்சிக்காகவோ உண்மைக்கு புறம்பாகவோ எதையும் எழுதுவதில்லை. அந்த நேரத்தில் நான் எதை அனுபவிக்கின்றேனோ அதை எழுதுவேன். எழுதிய காலத்தில் அவை உண்மையானவை. பின்பு கால ஓட்டத்தில் நான் நினைத்தவை கணித்தவை பொய்யாகியதும் உண்டு. ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. சந்தர்ப்பங்களை சந்திக்கும்வரை யாரையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாதல்லவா.

எனது தந்தையார் பாடசாலை அதிபராக இருந்தார் அதனால் அவருக்கு தவறாமல் ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்த வண்ணமே இருக்கும். வீட்டில் எனக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவுமில்லை யாரும் என்னை வேலை செய்யும்படி கேட்பதுமில்லை ஆனால் நானாக தேர்ந்தெடுத்த வேலை தபால்காரன் மணியடித்ததும் ஓடிச்சென்று கடிதங்களை பெற்றுக்கொள்வது. மணிச்சத்தம் கேட்டால் யாரும் வீட்டு வாசலுக்கு செல்லமாட்டார்கள். நான் வாசலுக்கு சென்று கடிதம் வாங்கும் வரை தபால்காரனும் மணியடித்துக் கொண்டேயிருப்பார். Register Post ல் வரும் கடிதங்களுக்கு கையெழுத்திட்டு அவற்றைப் பெற்றுக்கொள்வது என்பது பெரியவிடயமாகத் தோன்றும்.

பின்பு ஆளும் வளர்ந்து வயசும் வளர்ந்து ஆசைகளும் வளர எனக்காக வரும் கடிதங்களுக்காக காத்திருக்கின்ற நிலையேற்பட்டது. எனக்கு வரும் கடிதங்களை சுலபமாக மற்றவர்கள் கைகளுக்கு செல்லாது என்னால் காப்பாற்றிக் கொள்ளமுடிந்தது. வருகின்ற கடிதங்களை பலமுறை திரும்பத் திரும்ப வாசிப்பது சில நாட்கள் கடிதம் வராமல் போனால் ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தவிப்பது மறுநாள் காலை தபால்காரன் மணியடிக்கும் வரை ஏதோவொன்றை இழந்ததுபோல் இருப்பது இவற்றை இப்போது நினைக்கையில் எல்லாமே கடந்தகாலத்தின் அழகிய சுவடுகளாகவே தோன்றுகின்றன.

அப்பாவின் மேசையில் கடிதங்களை வைப்பதெற்கென்று அழகான ஒரு சிறிய பெட்டி இருக்கும். அவற்றுக்குள் சில கடிதங்கள் திறக்கப்படாமலே இருக்கும். அப்பாவிற்கு வரும் கடிதங்கள் அநேகமாக வேலை சம்பந்தமான கடிதங்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அதை திறந்து அதற்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. சில கடிதங்களை பார்த்தவுடன் அப்பாவுக்கும் தெரிந்துவிடும் எங்கிருந்து வருகின்றதென்று அவரும் அவற்றை வாசிப்பதற்கு முயற்சி எடுக்கமாட்டார். அவை சில வேளைகளில் நிறம்; வெளிறி எழுத்து மங்கி காய்ந்து கொண்டிருக்கும் அதை நினைக்கும் போது இப்போது எனது தாபால் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மின்சாரம் தண்ணீர் தொலைபேசி மற்றும் இதர பில்லுகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

இப்போதெல்லாம் நான் கடிதங்களை எதிர்பார்ப்பதேயில்லை. வருகின்ற கடிதங்கள் கூட கட்டணங்களை ஞாபகப்படுத்துவதாகவும் தமது பொருட்களை விற்பதற்கான வியாபார விளம்பரங்களாகவும்தான் இருக்கின்றன.

கடிதம் எழுதும் போது அழுது கொண்டு எழுதுவதும் பிடிக்கும். அப்படியாக எழுதி முடித்ததும் பெரிய ஆறுதலாகவிருக்கும். திரும்பவும் அந்த கடிதத்தை வாசித்தேன் என்றால் அனுப்ப மனம் வராது கிழித்துவிடுவேன். சில வேளைகளில் வாசித்துப் பார்க்காமல் அப்படியே அனுப்பிவிட்டு பின்பு கவலைப்படுவேன். இப்படியாக எழுதிவிட்டேனே இதன் விளைவுகள் எப்படி இருக்கப்போகின்றனவோ என்று வேதனைப்;படுவேன்.

சொல்வதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை கடிதம் தரும் அந்தரங்க உணர்வை நாம் இன்று இழந்துவிட்டோம். இப்போதெல்லாம் தொலைபேசி மூலம் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு எங்கள் வேலையில் கவனத்தை செலுத்துகின்றோம். பிரிவுத் துயரோ அதன் மூலம் ஏற்படுகின்ற ஏக்கமோ இன்று இல்லவேயில்லை. இ மெயிலின் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொள்கின்றோம். சிறிது தாமதம் ஏற்பட்டால் உடனே தொலைபேசியில் அழைப்பெடுத்து விசாரித்துக் கொள்கின்றோம். அதுவுமில்லை என்றால் உடனே குறுஞ்செய்தி பேஸ்புக் ருவிட்டர் என்று எத்தனையோ.

இன்றெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருக்கவே தேவையில்லை. காத்திருப்பே இல்லாதபோது எதற்காக கவலைப்படவேண்டும். ஒருவருக்காக கவலைப்படுவது அவரைக் காணாமல் ஏக்கம் கொள்வது பிரிவையெண்ணி கண்ணீர் விடுவது எல்லாமே ஒரு உணர்வு பூர்வமான செய்கைகள் அல்லவா? அவற்றை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்ற ஏக்கம் இப்போது மிஞ்சியிருப்பதும் உண்மையல்லவா?

எமக்கு விருப்பானவர்களை பிரிந்து தனியாக இருக்கும் போதுதானே அவர்களைப்பற்றி அதிகமாக நினைத்து அவர்களது அருமையை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் அந்த பிரிவுக்கான சந்தர்ப்பமே இப்போது கிடைப்பதில்லையே. 5 நிமிடத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் அழைப்பெடுத்து என்ன செய்கிறாய் எங்கேயிருக்கிறாய் என்று கேட்கின்றபோது இது என்ன பொலீஸ் வேலையா எதற்காக இப்படிக் கண்காணிக்கின்றோம் என்று எரிச்சல்படத் தோன்றுகின்றது.

முன்பெல்லாம் நெருங்கிய உறவினர்கள் ஊர்விட்டு ஊர் போகும் போது அவரோடு ரயில் நிலையங்களுக்கோ பஸ்தரிப்பு இடங்களுக்கோ சென்று அவரை வழியனுப்பி கண்ணீரோடு திரும்பும் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டு. இப்போது காரிலேயே கொண்டு சென்று விமான நிலையத்தில் இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே Have a Safe Trip என்ற வாழ்த்திவிட்டு அப்படியே U Turn எடுத்து வீடு நோக்கி சென்று கொண்டிருப்பேன். சில நிமிடங்களின்பின் அழைப்பெடுத்து எல்லாம் சரியா என்று கேள்விவேறு. தொழில் நுட்பத்துடன் சேர்ந்து நாமும் நன்றாக வளர்ந்துவிட்டோம். நெருக்கமும் உறவும் கசப்பும் வெறுப்பும் விரோதமும் பகைமையும் எல்லாமும் குறைவாகவும் நிறைவாகவும் வளர்ந்துவிட்டன.

இப்போதெல்லாம் மனிதர்கள் தமது சகமனிதர்களின் உறவுகளை நேசத்தை பாசத்தை புறக்கணிப்பதால் அவர்கள் வெறுமைக்குள் வாழ்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்றைய காலத்தில் பிரிவு ஏக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காத காரணத்தாலோ என்னவோ தொடர்ந்து சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வும் அதிகரிப்பதினால் மிக விரைவில் உறவுகளிற்கிடையில் சலிப்புத் தட்டுகின்ற தன்மையும் ஏற்படுகின்றது.

முன்பு என்னோடு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல பேனா நண்பர்களும் இருந்தார்கள். எனது கையெழுத்தும் நன்றாக இருந்ததாலோ என்னவோ பக்கத்துவீட்டுத் தாத்தா தனக்கு கடிதம் எழுதித்தரும்படி என்னை அடிக்கடி கூப்பிடுவார். கடிதத்தின் மீது முத்திரை ஒட்டும் போது முத்திரைக்கு எச்சில் போட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா கூறுவார். முத்திரைக்கு பின்னால் தடவியிருக்கும் பிசின் போன்ற பசை உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்குமென்றும் தண்ணீரில் தடவி ஒட்டும்படியும் கூறுவார். அதை நான் செவிமடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை.

இன்று எல்லாம் கடிதங்கள் என்பது வெறும் விண்ணப்பங்களாகவும் வேலை சார்ந்தவையாகவும் தேவை கருதியும் மாறிவிட்டன. கடிதம் எழுதும் கலையானது எமது தலைமுறைபோடு இல்லாதொழிந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும் என்ற நிலையை எண்ணும்போது வருத்தமாக இருக்கின்றது

சில கடிதங்களை ஒருதடவை படித்து செய்தியை அறிந்துவிட்டு பின்பு நேரம் கிடைக்கும் போது ஆறுதலாக இருந்து மீண்டும் வாசித்து இரைமீட்பது என்பது மனநிறைவையும் அளவில்லா ஆனந்தத்தையும் அள்ளித்தரும். வரிவரியாக அழகான கையெழுத்துக்களில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் வார்த்தைகளாக கொட்டி எழுதிய காலங்கள் கரையேறிப்போய்விட்டன. இப்போது உயிரற்ற நான்கு வார்த்தைகளை மின் அஞ்சலில் எழுதிவிட்டு Take Care Bye என்று முடித்துவிடுகின்றோம்.

முகம் தெரிய விரும்பாத புரிந்துணர்வுடைய பரந்த சிந்தனையுடைய ஒரு நண்பருடன் என் மனதில் இருக்கின்ற எல்லாவற்றையும் கடிதமூலம் எழுதவேண்டும் அவரது பதில் எனக்குள் இருக்கின்ற ஏக்கங்களை ஏதாவது ஒரு வகையில் நிரப்புகின்றதா என்று பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக இன்னும் அமையவில்லை.
முன்பெல்லாம் எனது தந்தையார் வீட்டிற்குள் நுழையும்போதே எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டவண்ணமே வருவார். இப்போது எந்த எதிர்பார்ப்புமே இருப்பதில்லை.


நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனக்கும் ஓர் கடிதம் வரவேண்டும் அவற்றை இரண்டு மூன்று தடவை வாசித்து மகிழவேண்டும். நானும் எனது அழகிய கையெழுத்தில் அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பவேண்டும் என்பது எனது சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று. ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கின்றது.

புதன், மார்ச் 09, 2011

தேடல் என்பது............

இந்த வாரம் தேடல் என்பது எனது எழுத்தின் கருவாக அமைகின்றது. அதை நீங்களும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் புன்னகையில் இணைத்துள்ளேன். வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்களது கருத்துக்களையும் கூறிவிட்டுச் செல்லவேண்டும்.இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு வகையில் தேடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. தேடலற்ற வாழ்க்கை என்பது வெறுமையானது. போதும் என்ற திருப்தியில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை விரைவில் சலித்துவிடும். அப்படிப்பட்ட சலிப்புநிலை வராது காக்க வேண்டியது வாழவிரும்பும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

சிந்திக்கவும் செயல்படவும் தெரிந்தவர்கள்கூட தம்மைச் சுற்றியிருக்கும் எல்லைகளைத் தாண்டுவதற்கு முயற்சிப்பதில்லை. இருப்பதில் நிறைவைக் காண்கின்றனர். அது ஒன்றும் தவறில்லை ஆனால் இன்னும் இன்னும் என்ற ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக சாதிக்கமுடியும். வாழ்க்கையை சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க முடியும்.

புதியவிடயங்களில் அக்கறை காட்டாமல் முயற்சி எடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் மனதில் தோன்றுகின்ற பயம். இருப்பதை இழந்து விடுவோமென்ற பயம், கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கப் பயம், சுயத்தின்மீது பயம், சமூகத்தின்மீது பயம் இப்படி பலவிதமான பயங்களினால் பீடிக்கப்படுவதனால் போதுமென்ற எண்ணத்தில் மனிதன் இருந்துவிட்டுப் போகின்றான்.

மனதில் குடிகொண்ட அச்சம் காரணமாக வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்வதற்கு தொடர்ச்சியான தேடல் மிக அவசியம். முன்னோர்களது வரலாறும் அறிஞர்களது கதைகளும் தேடல் மூலம் அவர்களடைந்த வளர்ச்சி, புகழ், பெருமைகள் பற்றி கூறும். வலியின்றி வாழ்க்கையில்லை. தேடலின்றி இயக்கமில்லை.தேடலின்றி இருந்தாலெப்படி?

தட்டியோ முட்டியோ

வாசல்கதவைத் திறவுங்கள்

போதுமென்ற மனமே

பொன் செய்யுமென்று

சும்மா இருக்காதீர்கள்

சுற்றியுள்ள வட்டங்கள்

அத்தனையும் பொய்கள்

அச்சத்தின் வட்டங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே

சிகரத்தை நோக்கி

வானத்தின் எல்லைவரை

துணிவாக நகருங்கள்

வாழ்வென்பது உயிர்வாழ்தலன்று

தொடர்ச்சியான அறிதல்

தேடலுடன் இணையுங்கள்

துணையாக வளைந்து கொடுங்கள்

ஒவ்வொரு தேடலின் நிறைவும்

புதியதோர் தேடலின் ஐனனம்


ஒருவரைப் பார்த்து இவர் அவரைப்போல் இருக்கின்றாரே என்று பலர் கூறுவதை பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். வேண்டியவர்களை, விட்டுப் பிரிந்தவர்களை, கிடைக்காமல் போனவர்களை, தவறவிட்டவர்களை ஏதோவொரு தளத்தில் யார்யாரிடமோ தேடுகின்றோம்.

எனது தந்தையாரின் நிறைந்த அன்பில் நனைந்த பெண்ணாக வளர்ந்ததனால் தந்தையின் அன்பை நெருங்கிப் பழகுபவர்களிடம் தேடுவேன். ஒருவர் இன்னொருவராக முடியாது என்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போனாலும் தேடல் தொடர்கிறது.

அதேபோல் எம்மிடமும் மற்றவர்கள் தமது நேசத்திற்குரியவர்களை தேடலாம். அவர்கள் தேடும் யாராகவோ அவர்கள் கனவில் நிழலாடும் நினைவுகளாகவோ நாம் இருக்கக்கூடும். அவர்கள் விரும்பும் யாரோவாக இருப்பதில்கூட ஓர் சுகம் கிடைக்கும். இன்னுமொருவரது தேடல் நிஐமாகின்றதே என்ற மனநிறைவு கிடைக்கும்.

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை. தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.

தேடலுடன் வேகமும் சுறுசுறுப்பும் தானாகவே அதிகரிக்கும். தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாமல் சிதறாமல் இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கும் ரசனையுடையவர்களுக்கும் சினனச் சின்ன விடயங்களில்கூட சுகமான அனுபவங்கள் கிட்டும். ஏதோவொன்று அவர்களது தேடலின் புள்ளியோடு இணைந்து கொள்ளும். அந்த அனுபவத்தை உணர்வதற்கு மனதில் ஆசையிருக்கவேண்டும் எதிர்பார்ப்பிருக்கவேண்டும். எந்தவிதமான எதிர்பார்ப்புகளோ ஆசைகளோ இன்றி ஏதோ விதிப்படி நடக்கின்றது, நடக்கட்டும் என்று இருப்பவர்கள் புத்துணர்ச்சியின்றி உற்சாகமின்றி எதைச் செய்தாலும் வெறும் கடமையாகவே செய்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியற்றவர்களாக்கி விடுவார்கள்.

பொறுமை அவசியம் என்பது பெரியோர்களது வாக்கு. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதும்கூட பெரியோரது வாக்குத்தான். பொறுமையின் எல்லைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். விரும்பிய ஒரு பொருளிற்காக பொறுமையாக காத்திருப்பதும் ஒருவித சுகம்தான். ஆனால் வெறும் காத்திருப்பென்பது மனிதமனத்தை அமைதி படுத்துமா என்பதும் கேள்வியாகத்தான் தெரிகிறது. காத்திருப்பதனால் ஏற்படுகின்ற அமைதியின்மைதான் தேடலை ஆரம்பித்து வைக்கின்றது என்றும் கூறலாம்.

இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான். ஒருவன் நல்லவன் இல்லையென்று தெரிந்தவுடன் உறவைவிட்டு மீண்டும் உறவுக்கான தேடலை ஆரம்பிக்கின்றோம். இன்னுமோர் சந்தர்ப்பம் இன்னுமோர் தேடல் என்று தொடர் சங்கிலிபோன்று நீண்டு கொண்டேயிருக்கும்.

அதற்கேற்றாற்போல் மனித உறவுகள் உலகெங்கிலும் பரந்திருக்கின்றன. வாழ்க்கைப் பயணத்தை கடக்கின்றபோது புதிய புதிய உறவுகளை சந்திக்கும் வாய்ப்புக்களும் அதிகம். சேர்ந்து பழகும் காலங்களில் அன்பைக் கொடுத்து அவர்களிடமிருந்தும் கொஞ்ச அன்பைப் பெற்று பண்டமாற்று அடிப்படையில் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம். எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவரும் என்பது யாருக்கும் தெரியாது.

பலரது அறிமுகம் கிடைத்திருக்கலாம். பலரோடு ஆழமான உறவும் இருந்திருக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த உறவு மிக முக்கியமானதாகக்கூட இருந்திருக்கும். ஆனால் காலமாற்றத்தோடு, இடமாற்றத்தோடு, நிலை மாற்றத்தோடு அந்த உறவுகள்கூட கடந்தகால அறிமுகமாக போய்விடுகின்றன. அந்தந்த நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கையில்

உறவுகளது கனமும் குறைகின்றது. 'இதுவும் கடந்து போகும்' 'காலம் காயத்தை ஆற்றும்' என்ற தத்துவங்களும் இதைத்தான் கூறுகின்றன. உலகில் நிலையானவையென்று எதுவுமே கிடையாது. மாற்றங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கும்.வலிகள் நிறைந்த வாழ்க்கையில்

தேடல் என்பது தீராத தாகம்

வாழ்ந்து பார்த்தேன்

பழகப்பழக முற்றியது பாசம்

நெருங்கிப் பார்த்தேன்

வலி ஓய்ந்து பற்றியது இன்பம்

தேட முயன்றேன்

சிறகுகட்டிப் பறந்தது எண்ணம்

எல்லையை நெருங்கிவிட்ட ஆனந்தம்

கடவுளை கண்டுகொண்ட சுவாரசியம்

காணும் மனிதரில் கண்டேன் கடவுளை

தேடலில் காலத்தைக் கழித்து வாழ்க்கையை வாழாமலே முடித்துக்கொண்ட மனிதர்களும் இருக்கின்றனர். அவ்வகையான தேடல்களால் என்ன பயன்? தேடியதில் சிலவற்றையாவது அந்தந்த நேரங்களில் அனுபவிக்க வேண்டாமா? அனுபவத்தின் நிறைவில் அல்லது முடிவில்தானே இன்னுமோர் தேடல் உருவாகும்.

அதேவேளை தேடல் என்பது மட்டுப்படுத்தப்பட்டு சமநிலையற்று ஒன்றை மட்டும் நோக்கிய தேடலாக இருப்பது சரியா என்ற கேள்வியுமுண்டு. அன்பைத்தேடி அறிவை கோட்டைவிடுவதும், பணத்தைத்தேடி பாசத்தை மறந்துவிடுவதும், புதுமையைத்தேடி பழமையை கைவிடுவதும் ஆரோக்கியமான தேடல்களாகாது.

ஆறறிவுமுதல் ஐந்தறிவுவரை மண்ணில் எதையெதையோ தேடித்தேடி இறுதிவரை அலைகின்றனர். நாம் பிறந்ததன் நோக்கம் ஏனென்று தெரியாமலே எதைத்தேடவது என்ற விழிப்புணர்வின்றி எதையோதேடி எதையும் அடையாமல் என்றோ ஒரு நாளில் மடிந்து போகின்ற கூட்டமும் இருக்கின்றனர்.

தேடலின் மூலம்தான் மனிதன் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல் போன்ற ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான் அவற்றை அனுபவிக்கின்றான்.

யாருக்குமே கிடைக்காத; யாருமே கண்டுபிடிக்காத; யாருமே சிந்திக்காத ஒன்றை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற சிந்தனையும் ஆசையும் ஏற்படுகின்றபோதுதான் தேடல் மேலும் வலுப்பெறுகின்றது. மனிதமனம் எந்தவிடயத்திலும் சுலபமாக நிறைவை அடையாது. மீண்டும் மீண்டும் வேண்டுமென்ற ஏக்கமும்; துடிப்பும்; ஆர்வமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சிலர் அச்சம் காரணமாக பல வட்டங்களை தம்மைச்சுற்றி உருவாக்கி தம்மை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் எல்லைகளை விரிவாக்கி உயர உயரச் சென்று கொண்டிருக்கின்றனர். இருப்பது போதும் இதில் நிம்மதியடைவோமென்று சோம்பலுடன் இருப்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லையென்றே அர்த்தப்படும். அவர்கள் ஏதோ இருந்துவிட்டுப் போகின்றார்கள்.நினைப்பவை எல்லாம் நடப்பதுமில்லை

நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல

இதுவரை நடந்தவை தீர்வுமல்ல

நாளை வருவது தொடர்ச்சியுமல்ல

ஒவ்வொன்றும் வேறுவேறு

உண்மை எதுவென்று நீ தேடு

மாற்றம் ஒன்றே மாறாதது

எத்தனை கோடி இன்பம் உண்டு

என்று சொன்னான் பாரதி அன்று

இருளகற்றி வெளிச்சத்தில் நின்று

இன்பம் தேடி நிறைவதே நன்று

தடைகள் தகர்ப்புகள்

நிறைந்ததே வாழ்க்கை

தீர்வைக் கண்டுகொள்

தடைகளைத் தாண்டு

முட்களின் நடுவே ரோஜா

என்ற பார்வை தவிர்

ரோஜாக்கள் நடுவே

முள்ளொன்று காண்

நன்மையை பறைசாற்று

தீயவை தானாக மாறும்


கருவறையிலிருந்து தேடல் ஆரம்பிக்கின்றது. பிறந்தவுடன் குழந்தை தாயின்மடியை தேடுகிறது. தேடலின்போது அன்பு, பாசம் போன்றவை ஊட்டப்படுகின்றது. பின்பு இளமைக் காலங்களில் நட்பு, காதல் போன்ற உறவுகளை தேடுகின்றான். அவற்றை அனுபவித்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றான். அப்போது வெற்றி தோல்விகளையும்; கோபம், பொறாமை, வலி போன்றவற்றையும் உணர்ந்து கொள்கிறான். பின் இருத்தலுக்காக பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக தனக்கென வேலையைத் தேடுகின்றான். இறுதியில் உலகத்தைப் புரிந்து கொண்டு மாற்றங்களை அனுசரித்து அமைதியைத்தேடி வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றான். இவை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

புதன், மார்ச் 02, 2011

கருத்துச் சுதந்திரம்

கடந்த வாரம் கருத்துச் சுதந்திரம் எது வரை என்ற தலைப்பின் கீழ் உறவுகளுடன் இணைந்து மூன்று மணிநேரம் கலந்துரையாடினேன். அதன் சாராம்சத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.


கருத்துச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது எண்ணத்தில் தோன்றுகின்ற சிந்தனைகளை சொல்வதற்கு எடுத்துக் கொள்ளும் உரிமை என்று கூறியபோது இல்லை எண்ணத்தில் தோன்றும் அனைத்தையும் சொல்வது கருத்துச் சுதந்திரமாகாது, சொன்னதோடு மட்டும் நிற்காமல் சொல்வதை சரியென்று நியாயப்படுத்துகின்ற போக்கும் எம்மில் பலருக்குண்டு என்றவாறே ஆரம்பிக்கப்பட்டது எமது கலந்துரையாடல்.


எந்தவித இடையூறுகளும் அச்சமுமின்றி கருத்தை வெளியிடுவதற்கு கிடைக்கின்ற சுதந்திரமே கருத்துச் சுதந்திரம் ஆகும். கருத்தை வெளியிடுவதற்கு எத்தனையோ விதமான தளங்கள் இருக்கின்றன. பேச்சு எழுத்து கலை போன்ற சில வடிவங்களும் அவற்றில் அடங்கும்.

தகவல்கள் செய்திவடிவில் கூறப்படுகின்ற போது அவற்றிற்குள் ஒளிந்திருக்கும் பல விடயங்களை அறிந்து கொள்ள கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம். பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அலசல் ஓர் உண்மையை நோக்கிய தேடலாக அமையும்.

மனிதர்கள் பல விதமானவர்கள் அவர்களது விருப்பு வெறுப்புகளின் தளங்கள் வேறுவேறானவையாக இருக்கும். அவர்களது சிந்தனைகள் நம்பிக்கைகள் வாழ்க்கை முறைகள் வேறுபட்டவையாக இருக்கும். அவர்களது பார்வைகளும் அதன் விளைவாக வெளிப்படும் கருத்துக்களும் வேறுபட்டவையாகவே இருக்கும்.

ஒரு கலந்துரையாடல் நடக்கும்போது அங்கே மாற்றுக் கருத்துக்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை சொல்வார்கள். கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். எல்லோரும் ஒரே கருத்தை தெரிவித்திருந்தார்கள் என்றால் ஏகமனதாக முடிவெடுக்கப்படும். எதிர்க் கருத்தைக் கூறியவர்களும் முடிவான முடிவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு அக்கருத்தில் ஒப்புதல் இல்லை என்றாலும் பொது நலன் கருதியோ அல்லது குழுநலன் கருதியோ அம்முடிவிற்கு உடன்படுவார்கள். இது ஆரோக்கியமான கருத்துப்பகிர்வில் நடைபெறுவது.


ஆனால் நம்மவர்களது கருத்துப் பகிர்வுகளில், கலந்துரையாடல்களில் முடிவு வேறுவிதமாக இருக்கும்.

எதிர்க்கருத்துக் கூறியவர்கள் அக்குழுவிலிருந்து வெளியேறி வேறோர் குழுவை அமைத்துக் கொள்வார்கள் அல்லது அக்குழுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள். இதற்கான காரணங்களாக பதவியாசை, புகழாசை, பொருளாசை,தன்மானப்பிரச்சனை என்பனவற்றைக் கூறலாம்.

ஆரோக்கியமான பயனுள்ள பல விடயங்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன்வரவேண்டும். எவருடைய அச்சுறுத்தலும் குறுக்கீடும் இல்லாமல் அவற்றை வெளியிடுவதற்கு உரிமைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அறிவதற்கும் கேட்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் பலர் காத்திருக்கின்றனர்.

ஒருவரது கருத்துக்கு மறுப்பாக அல்லது எதிராக இன்னொருவர் கருத்தை முன்வைத்தால் அவற்றை முழுமையாக கிரகித்து மறுபரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒருவரிடம் போதியளவு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருக்கவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. அவற்றை வெளிப்படுத்துகின்றபோது அவர்களுக்கு சில கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன.

மற்றயவர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் மதிப்புக்கு கொடுத்து சமூகம், தேசம் போன்றவற்றின் நலன்களுக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனிமனிதனது அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது, மானபங்கப்படுத்துவது, அமைதியைக் குலைப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.


ஆனால் எம்மில் பலர் தமது கருத்தை எதிர்ப்பவர்களை சும்மா விடமாட்டார்கள். உடனடியாக அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து எதிர்கருத்துக் கூறியவர்களை வசைபாடுவார்கள். வன்முறையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் துன்புறுத்தி காயப்படுத்தி நிரந்தர பகையாளியாக்கி விடுவார்கள். இவர்கள் துணிவாக நின்று எதிராளியின் கருத்தோடு மோதும் பக்குவத்தை வளர்க்காமல் கருத்தைக் கூறியவர்களுடன் மோதும் பலத்தைத்தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

அதேவேளை எதை எப்படி யார் செய்தாலும் பார்த்துக் கொண்டு இருப்பது என்பதும் சரியல்ல. அது கோழைத்தனம். பகுத்தறிவைப் பாவித்து சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்துச் சொல்லவேணடும்.

சில நாடுகளில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஏதாவது பேசிவிட்டால் எதிர் கருத்துக் கூறியவர் மரணத்தையும் தழுவநேரிடும். ஆதலால் கருத்துக்களை கூறும்போது இடம் பொருள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஐனநாயக தேர்தல் நடைபெறுகின்ற நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்று கூறிவிடமுடியாது. அந்தத் தேர்தல் முறையானது கருத்துச் சுதந்திர மற்றும் அனைத்து சுதந்திரங்களுக்கான மறுப்புக்களை மறைப்பதற்காக தேர்தல் நடக்கின்ற முறையை கவசமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகள் அதற்கான சிறந்த உதாரணமாக கூறலாம்.

நான் விரும்பிய கருத்தைச் சொல்வதற்கு எனக்கு பூரண உரிமை இருக்கின்றது என்பதற்காக சமயோசிதமற்று எழுந்தமானமாக விளக்கமற்று ஒருவரது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றபோது எதிராளிகளை அதிகமாக சம்பாதித்துக் கொள்கின்றோம். தெளிவான ஆதாரங்களின்றி உண்மைத் தன்மைக்கு புறம்பாக சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது.

முக்கியமாக பக்கச்சார்பின்றி நடுநிலமையில் கருத்துக்களை முன்வைப்பவர்களை எமது கருத்துக்கு ஒத்துவராத ஒரு காரணத்துக்காக எதிர் விமர்சனங்களை கொட்டித்தீர்த்தால் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமது தொடர்ச்சியான இருத்தலுக்காகவும் எமது எதிராளிகளை நாடி செல்வதற்கு வழிவகுக்கின்றோம்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை திசை திருப்புவர்கள் மக்களது உணர்வுகளை தட்டும் வகையில் அவர்களை சுலபமாக நம்பவைக்கும் வகையில் விடயங்களை தெரிவு செய்வார்கள். உதாரணமாக தாய்நிலம், வர்க்கபேதம், மதம் போன்ற விடயங்களை கையாண்டு கேட்பவர்களை மூளைச் சலவைக்கு உட்படுத்தி தாம் நினைப்பதை அவர்களது எண்ணங்களில் திணித்து விடுவார்கள்.

அதன்பின்பு தாம் நினைத்தபடி அவர்களை ஆட்டிக்கொண்டிருப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் கட்டுண்டிருப்பவர்களும் தாமாக விழித்துக் கொள்ளும் வரை கருத்துப்பகிர்வு என்ற போர்வையில் அவர்களை பாவித்துக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் மூலமாக தாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.

மனிதர்கள் சகமனிதர்களை அடக்குவதிலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கவுமே விரும்புவர். தமது கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடையாது. அதனால் மாற்றுக் கருத்துக்களை தந்திரமாக அடக்குவதற்கான வழிமுறைகளையே அவர்கள் தேடுவார்கள்.

புலம்பெயர் நாடுகளில் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இன்னொருவரை மானபங்கப்படுத்துதல் துன்புறுத்துதல் அடக்குமுறைக்கு உள்ளாக்குதல் போன்றவற்றுக்கு சட்டத்தின் உதவியை அனைவரும் சுலபமாக நாடலாம். பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரத்தை தட்டிக்கேட்க இந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் ஒருபோதும் பின்னிற்பதில்லை.

சமூகத்திற்குள் பிளவுகளை தூண்டும் விதமாகவும் மற்றவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் தமது கருத்துக்களை விதைப்பவர்கள் எமது சமூகத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் யாரும் தமது நேரத்தையோ பணத்தையோ சட்ட வல்லுனர்களோடு செலவளிக்க தயாரக இல்லை என்பதே காரணம்.


கருத்து திணிப்பென்பது குடும்பத்திற்குள்ளேயே அன்பென்ற போர்வையில் ஆரம்பமாகின்றது. அதே போல் கிடைக்கின்ற சுதந்திரத்தை முறையாக பாவிக்காமலும் கண்ணியமாக கையாளாமலும் கோட்டை விடுவதும் நிகழ்கின்றது.

கருத்தை கூறிவிட்டு கருத்தில் உள்ள நியாயத்தன்மையை கேட்பவர்களோ பயன்படுத்துபவர்களோ தீர்மானிக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

கேட்பவரது சுதந்திரத்தைப் பறித்து தனது கருத்தை நிலைநிறுத்த முனைவது திணிப்பாகும். கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு அல்லது பேசுபவருக்கு மட்டுமல்ல அதைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

சிலருக்கு இடம் பொருள் ஏவல் பார்த்து கருத்துக்களை முன்வைக்கும் பழக்கம் கிடையாது மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் நினைத்தவற்றை நினைத்தவுடன் பேசுகின்றவர்களுக்கு எதிரிகள் அதிகம். நெளிந்து வளைந்து குழைந்து மற்றவர்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைப்பவர்களைத்தான் இன்று பலருக்கும் பிடிக்கும்.

எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்.

ஒரு நிகழ்வை அல்லது ஒரு தகவலை அடிப்படையாக வைத்து வெளிப்படையாக தெரிகின்றவற்றை மட்டும் கணக்கிலெடுத்து ஓர் உணர்வு வேகத்தில் கருத்தைக் கூறுவதென்பது ஒரு சாதாரண பார்வையாகும் அல்லது பாமரப் பார்வையாகும்.

அந்த நிகழ்வு எதனால் நிகழ்ந்தது அதன் பின்னணி என்ன நடந்த விதம் எப்படி அதன் தொடக்கம் என்ன இவற்றிற்கு தீர்வு என்ன மீண்டும் இந்நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் என்ன என்ற வகையில் ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமான பார்வையாகும்.

சில சம்பவங்கள் பேசப்படுகின்றபோது முன்வைக்கப்டும் கருத்துக்கள் சிலருக்கு கசப்பாகவும் சிலருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் இருக்கும். ஒரு காலத்தில் சரியென்று நம்பியவை கால மாற்றத்தில் மாற்றமடைந்து மதிப்பீடுகளிற்கு ஏற்றவாறு உருமாற்றங்களை உள்வாங்கி வேறுபடும் நிலையும் உண்டு. ஆதலால் ஆரோக்கியமான கருத்துக்களை வேறுபாடுகள் மறந்து எப்போதும் வரவேற்கவேண்டும். அவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தி சேர்த்துக் கொள்ளவேண்டும்.

எதிர்க்கருத்துக்கள் என்றாலென்ன எதிர்விமர்சனங்கள் என்றாலென்ன அவை சொல்லப்பட்ட கருத்துக்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் கருத்துக்கள் சொல்பவரைப் பற்றியதாக இருத்தல் அநாகரீகமான செய்கையாகும். எமது கருத்துக்களை வெளியிடும்போது கண்ணியம் காக்கும் நாகரீகத்தை பழகிக்கொள்ளவேண்டும்.

வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து அவை ஆராயப்பட்டு எதிர்க்கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து மறுபரிசீலனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் அவை சிறந்த முடிவாக அமையும்.


சமூகத்தின் தேசத்தின் முன்னேற்றத்திற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியமானது. இவற்றினால்தான் ஆரோக்கியமான திருத்தங்களும் மாற்றங்களும் சாத்தியமாகின்றன.

கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை. அந்த உரிமை மீறப்படும்போது கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற போது அவன் அடிமையாக்கப்படுகின்றான்

சனி, ஜனவரி 29, 2011

கவிதை பேசும் நேரம்

அவுஸ்திரேலியாவில் 24 மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ் வானொலி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். எனக்கும் இந்த வானொலிக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கின்றது. கடந்த 9 வருடங்களாக சிறுகச் சிறுக எமக்கிடையேயுள்ள பிணைப்பு வலுப்பெற்று இன்று இறுக்கமான பிணைப்பாகிவிட்டது. வானொலியும், வானொலியைச் சார்ந்த நண்பர்களும், அன்பான நேயர்களும்தான் புலம்பெயர்ந்த வாழ்வில் என் உறவுகள் என்றே கூறலாம்.


'ATBC' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழர்களுக்கான பிரத்தியேக வானொலியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இரு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றேன்.

இணையத்தளத்தில் எமது வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழலாம். என்னோடும் சக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுடனும் நீங்களும் அழைப்பெடுத்து பேசலாம். அதற்கான இணையத்தளம் http://www.atbc.net.au/ மற்றும் தொலைபேசி இலக்கம் 02 9688 3188.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவிதை பேசும் நேரம் என்ற நிகழ்ச்சியில் நாம் வாசித்து ரசித்த கவிதைகளையும் உணர்ந்து எழுதிய கவிதைகளையும் வானலைகளில் பகிர்ந்து கொள்வோம். அந்த வகையில் இன்று மழை என்ற தலைப்பில் கவிதைகளை பரிமாறிக்கொண்டோம்.

சிட்னியில் கடந்த சில நாட்களாக கொதிக்கும் வெய்யில் அதே நேரம் அவுஸ்திரேலியாவின் இன்னுமோர் பகுதியாகிய பிறிஸ்பேர்ணில் வெள்ளத்தினால் பெரும் இழப்பு. வெயிலில் தகிக்கும் போது மழை என்ற சொல்லே குளிரவைக்கும் அல்லவா? இதோ மழை பற்றிய எனது கவிதையொன்றுஒன்றின் மறைவில்
மற்றொன்றின் உற்பத்தி
சுடுகின்ற வெய்யில்
பொழிகின்ற மழை
ஒன்று மாறியொன்று

ஒன்றையொன்று துரத்தும்
மழையோடு நீராடி
மணலோடு விளையாட
சிறுவயதில் ஆசை
பெண்ணாக பிறந்ததனால்
மழையோடும் பேதம்
நடுமுற்றத்தில்
குதித்துக் கூச்சலிட்டு
விளையாடும் தருணம்
அம்மாவின் கூச்சலில்
என் உற்சாகம் கரையும்
பொதுவான மழைக்கு
ஆண் என்ன? பெண் என்ன?
ஆனாலும் என்ன
அம்மாவின் எதிர்ப்பில்
என்னோடு மழையும்
சோவென்று அழுதது

இன்றும் மழை
கட்டுப்பாடுகள் ஏதுமில்லை
விரும்பியபடி நனையலாம்
விதம்விதமாய் கைகுலுக்கலாம்
என் கனவுகளை நிறைவேற்ற
காற்றோடு போராடி
காத்திருக்கின்றது கனமழை

வேலைக்குப் போகும் நேரம் மழை
நனைந்தால் போவதெப்படி
வேலை முடியும் நேரமும் மழை
நனைந்தால் வீடு சேருவதெப்படி
வீட்டில் இருக்கும் போதும் மழை
வெளியில் நின்று நனைந்தால்
வெகுளிப்பெண் என்ற வீண்பழி
மழையில் நனைவதென்பது
அத்தனை சுலபமானதல்ல
தாழ்வாரத்தில் ஒதுங்கி
தலைகுனியும் எனைப்பார்த்து
அழுகின்றது பேய் மழை

வரிவரியாக வந்துவிழும்
வண்ணத்துளிகளை
ரசிப்பதோடு நிற்கின்றது
மழையோடு தொடர்ந்த
என் மானசீகக் காதல்
மழையும் நானும் - இன்று
கடந்தகால உறவுகள்
ஆனாலும் தருணம் பார்த்து
கண்களைமூடி
கதகதப்பில் உணர்கின்றேன்
கொட்டும் மழையில்
நான் நனைந்த காலங்களை
ஆக்கம் சௌந்தரி

கவிதை எழுதுவது எனது ஆர்வங்களில் ஒன்று. எனக்குள் ஏற்படும் சோகம் மகிழ்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்துவதற்காக நான் பாவிக்கின்ற ஆயுதம் கவிதை. எனது அனுபவங்கள் எனது விருப்பங்கள் எனது சிந்தனைகள் இவற்றை எனக்குத் தெரிந்த வடிவில் விரும்பியபோதெல்லாம் எழுதுவேன். எனது கவிதையை வானலைகளில் கேட்டவுடன் எனது உறவுகளும் தமது கவிதைகளுடன் அழைப்பெடுத்தனர். அவர்களது திடீர் ஆக்கங்களையும் இத்துடன் இணைக்கின்றேன் வாசித்துப்பாருங்கள்.

எனது குரலைக் கேட்டவுடன் உற்சாகம் அடைபவர்களில் செல்வி முக்கியமானவர். ஆரம்பத்தில் வானலைகளில் கதைப்பதற்கே கூச்சப்படுவார். இப்போதெல்லாம் கவிதை வரிகளைக் கோர்க்கத் தொடங்கிவிட்டார். மழை பற்றிய அவரது கவிதையொன்று


மழை…..
வெய்யிலைவிட உன்னை
எனக்கு மிகவும் பிடிக்கும்
நீ அதிகமாக பொழிந்து
அழிவை ஏற்படுத்துகையில்
உன்னைத் திட்டுவார்கள்
அதே மக்கள்
தண்ணீர் தண்ணீரென்று
பாலைவனம் கொண்ட
வறண்ட இடங்களில்
உன்னைத் தேடுவார்கள்
பல பூசைகள் வைத்து…..

ஆக்கம் செல்வி

ஓயாமல் பெய்யும் மழை ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்படைந்து மழையை திட்டுகிறார்கள் ஆனால் மழை வராதபோது வறட்சியின் தாக்கத்தால் வாடி வதங்கி எத்தனை சடங்குகள், யாகங்கள், காணிக்கைகள் என்று வேண்டி நிற்கின்றார்கள்.

மழை பெய்தால்

நிலம் நனையும்
நிலம் நனைந்தால்
பயிர் துளிர்க்கும்
பயிர் துளிர்த்தால்

பசி நீங்கும்
பசி நீங்கினால்
பூமி மகிழும்
மழையின் மகள்தான்
மகிழ்ச்சியோ….
ஆக்கம் மேர்ளின்

மழைப் பெண்ணின் மகள்தான் மகிழ்ச்சியோ, கோபமும் இன்னுமோர் பெண் போலும்.மழைக் கவிதை கொண்டு வந்த
கவிதை மலைகளே
மழையைத் திட்டாதீர்கள்
இயற்கை தன் வேலையை
சரியாகத்தான் செய்கிறாள்
மனிதன்தான்
பிழையான இடத்தில்
வீடுகளும் சாலைகளும்
வீம்போடு கட்டுகிறான்
வானம் இழுத்த நீரை
வைத்திருக்க முடியுமா
கொட்டித் தீர்க்கத்தானே வேண்டும்

இயற்கை தன் தொழிலை
மில்லியன்ஸ் பில்லியன்ஸ்
ஆண்டுகளாக செய்கிறாள்
மனிதா நீ
200 வருடங்கள்தான்
வீடுகள் அமைக்கிறாய்
சாலைகள் அமைக்கிறாய்
மனிதர்களை சாடுங்கள்
மழையை சாடாதீர்கள்
அவள் கண்ணீரை
கொட்டித் தீர்க்க விடுங்கள்

மனிதா
இயற்கையுடன் முண்டாதே
தடைகளை போடாதே
அவளை சுதந்திரமாக ஓடவிடு
கடலைச் சேரவிடு
இது மழைக்கு மட்டுமல்ல
இயற்கையனைத்துக்கும் பொதுவானது

ஆக்கம் சிறீதரன்

இயற்கையை சீற்றம் கொள்ள வைப்பது மனிதர்களே. இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்கு மனிதர்கள் முயற்சிக்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நச்சு வாயுக்களின் உற்பத்தி, அணுஆலைகளின் ஆக்கிரமிப்பு இவையெல்லாம் இயற்கையின் சீரை குலைக்கின்றன.

அதுமட்டுமல்ல அணைக்கட்டுக்கள் அதிக வெள்ளத்தால் உடையக்கூடும் என்று தெரிந்தும் அதற்கு அண்மித்த பகுதியில் மாட மாளிகைகளை கட்டுபவர்களையும் காடுகள் எரியும் என்று தெரிந்தும் அந்தப்பகுதியில் வலிந்து சென்று குடியிருப்பவர்களையும் என்னவென்று சொல்வது என்று தனது வருத்தத்தை தெரியப்படுத்தினார் சிறீதரன்.


காரிருள் தோன்ற
கீற்றான மின்னொளியில்
உன்வழி கண்டு
கண்டிடும் வழியில்
கேட்டிடும் முழக்கத்தில்
முத்துக்களாய் மூடிடுவாய்
மாநிலம் மகிழ….

ஆக்கமும் நீ
அழிவும் நீ
இனம்புரியா அமைதியும் நீ
நின் வரவின்பின்னால்
புரிந்தன இவை எமக்கு

உன்னிடம் ஓர் கேள்வியொன்று
இருளில் ஒழிந்து இறங்கும் போது
ஒளி போன்ற வெண்மையாய் பொழிவதேனோ?

மனிதா
இருளில் ஒழிந்த உள்ளத்தில்
மின்னல் தோன்றவிடு
சிந்தனை மழை சீராகும்
சீராகும் சிந்தையில்
சிந்திடு சிரிப்பெனும் மழையை
சிரிப்பெனும் மழையில்
உறவுகள் வாழும்
உறவுகள் வாழ
உலகு வாழும்
நட்பெனும் மழையில்

முடிவில்
உண்டு வாழு நீ
மழையெனும் என்னால்
மானிலத்தில்
உண்டு வாழ்வு
நல்மன மழையென
பொழியவிடும்
மனிதனாம் உன்னால்
ஆக்கம் மெர்சி

மழை எல்லோருக்குமாகத்தான் பொழிகின்றது. மழை பெய்வது குறித்து சிலர் கவலைப்பட்டும் சிலர் கவலையற்றும் இன்னும் சிலர் நனைந்து மகிழ்ந்தும் இன்னும் சிலர் கவனமாக நனையாமல் குடைக்குள் ஒளிந்தும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

மழை எந்தப் பெரிய போராட்டத்தோடு வந்தாலும் வெண்மையாகத்தான் வருகின்றது. அது என்றுமே நிறம் மாறுவதில்லை. மனிதன் மட்டும்தான் அடிக்கடி நிறம் மாறி குணம் மாறி தடுமாறுகின்றான். இயற்கையின் ஆக்கமான மழை மானிட வாழ்க்கைற்கு பல படிப்பினைகளைக் கூறுகின்றது அவற்றின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் மாநிலத்தில் உண்டு வாழ்வு என்று கூறியிருந்தார்.


மேகமே
ஏனின்று சோகமாய் நீ அழுகின்றாய்
தெருவெங்கும் பூவாய் நீ விழுகின்றாய்

இருபத்தியொன்பதாம் (29) நாளிகையின்று

கருவுற்றிருந்த நீயின்று
கருமேகம் சூழ
சூழுரைத்து
பகை வேரறுக்க

இடிமின்னலாய் உறுமி
நீ உருகுகின்றாயா…..

இது தமிழ்மானம் சுமந்த மழைக் காலம்

தெருவெங்கும் கருகுகின்ற வேளை
விடிவுவரும் நேரமென
இடிமின்னல்
வானைக் கிழிக்கிறதே
பகை ஓடி ஒழிக்கிறதே
ஏனென்று நான் அறியலாமா?

இன்று முத்துக்குமரன்
தீயில் எரிந்தநாளென்று
கண்ணீர் தூவுகின்றாயா…..

ஆக்கம் கௌத்தம்

இன்று தைமாதம் 29 ம் திகதி தமிழர்களின் நலன் வேண்டி தன்னையே எரித்துக்கொண்ட முத்துக்குமாரின் நினைவுநாள். கணணீர் மழையை தூவிவிட்டு சென்றார் கௌதம்.


மழையைப் பாடும் மனிதா
மனதில் நினைத்துப் பார்
மழை எங்கிருந்து வருகிறது
மண்ணுக்காய் போராடும் மனிதா
மழை இல்லையென்றால்
மண்ணில் வாழத்தான் முடியுமா
மழை வேண்டுமென்றால்
மண் வேண்டுமென்றால்
மழையைத் தந்து
வளமூட்டும் மண்ணில்
வாழ நமக்கு
கடல் வேண்டுமல்லவா
அதற்கும் போராடு……

ஆக்கம் சோனா

மழையின் ஆரம்பம் என்ன என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறி மழையின் உற்பத்திக்கு கைகொடுக்கும் கடலின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி கடலுக்காகவும் போராடுவோம் என்று கவிதையில் கூறினார் சோனா.

இப்படியாக பல உறவுகள் தங்களது சிந்தனைகளில் துளிர்க்கும் எண்ணங்களை வார்த்தைகளில் கொண்டு வந்து வானலைகளில் தவழவிட்டார்கள்.


கரு மேகத்தை கண்டவுடன் எனக்குள் சோகம் தொற்றிக்கொள்ளும். மழைத் துளிகளோடு என் கண்ணீர்த்துளிகளும் வழிந்தோடும். ஆனால் சோவென்று பொழியும் மழையைக் கண்டவுடன் உற்சாகம் பொங்கும். அதுவும் வெப்பகாலத்தில் மழை வந்தால் பெரிய வரவேற்புத்தான். வேண்டிய நேரத்தில் வேண்டாமலே வந்த சுகமல்லவா. குறிப்பாக இரவு நேரத்தில் இன்பக் களிப்பில் கட்டியணைத்த வண்ணம் கொட்டும் மழையில் கிட்டும் குதூகலம் சொற்களுக்குள் அடக்கலாமா?

அளவோடு வந்தால் அழகாக பூக்கும் பூக்கள் போல் எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கும். ஆக்ரோசமாக வருகின்ற மழையால் எத்தனை அழிவு. வாழுகின்ற இடத்திலும் வாழ்ந்து வந்த இடத்திலும் கடும் மழையின் பாதிப்பை கண்கூடாக பார்க்கின்றோம்.

மழையால் பாதிப்படைந்த இடங்களில் தெருவெல்லாம் வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. தண்ணீர் படையெடுப்பினால் அழிந்த உயிர்களின் வரவு செலவுகள் கணக்கெடுக்கப்படுகின்றன. படிப்பதற்கு செல்லும் பாடசாலைகளில் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தாகத்தை தீர்ப்பதற்கு நீருக்காக ஏங்கிய மக்கள் தண்ணீரைக் கண்டாலே பயத்தோடு தள்ளி நிற்கின்றார்கள். இயற்கையின் சீற்றத்தை என்னவென்று சொல்வது?


மழைமேகம் கறுத்து
மழைத் தூறலொன்று
மெதுவாக முத்தமிட
முத்தத்தின் தித்திப்பில்
மணம்வீசி வரவேற்றது மண்
பூமியெங்கும் துளித்துளியாய் மழை….

மழைப்பெண்ணே
நீ கண்ணீர் விடுவது எதற்காக
உன் காதலனும்
உன்னை விட்டுச் சென்றானோ?
மழை மொழி புரிந்தால்
காரணத்தை எனக்கும் சொல்வாயோ?
ஆனாலும் என்ன
உன் கலங்கிய மனதின்
இலவசக் கசிவு
பூமியின் தாகத்தை
இதமாக தணிக்கிறதே!

மேகத்தை துளைத்து
படபடவென பொழிகிறாய்
கனத்த மனசோடு அழுதாலும்
உன் சுகமான குளிர் பட்டு
உலகெங்கும் பரவசம்
கும்மென்ற இருட்டில்
சில்லென்ற காற்றோடு
சிணுங்கியபடி நீ வந்தால்
மகிழ்ச்சிக்கு எல்லையேது

மழைப் பெண்ணே
உன் குறும்புக்கும் அளவில்லை
உன் நடிப்புக்கும் குறைவில்லை
உன் வரவுக்கு தவமிருந்து
திட்டித் தீர்த்து சண்டையிட்டு
விட்டு ஒதுங்கும் நேரம்
சமாதானப் புறாவாகி
சமரசம் செய்வதற்கு
அதிசயமாய் நீ வருவாய்
அன்று நீ நாயகிதான்
வந்தவழி செல்லாது
தொடர்ந்து நீ சிணுங்கினால்
என்றும் நீ வில்லிதான்
அறிவிப்புக் கொடுக்காமலே
நினைத்தநேரம் வருகிறாய்
வறட்சியில் வாடும் போது
வராமலே போகிறாய்
நீ நல்லவளா கெட்டவளா
பிழைப்பும் கொடுக்கிறாய்
பிழைப்பையும் கெடுக்கிறாய்
யாரின் துண்டுதலில்
இப்படி நீ செய்கிறாய்

மாரி மழை கண்டால்
வாண்டுகளின் அட்டகாசம்
வண்ணக் குடைகளுக்கு மவுசு
தவளைகளின் கச்சேரி
உன் பார்வை பட்டு
பயிர்கள் பளபளக்கும்
உன் பாதம்பட்டு
பாதைகள் பழுதாகும்

மழைப் பெண்ணே
உன் மண்ணை மறக்காமல்
ஒருமுறையாவது வருவதனால்
உன்னிடம் ஈரம் இருக்கிறது
வறண்ட நிலத்தை வளமாக்குவதால்
உன்னிடம் நல்ல மனசும் இருக்கிறது
அடிக்கடி பூமியை முத்தமிடுவதால்
உனக்குள் காதலும் இருக்கிறது
உனக்கு கண்கள் மட்டும் இல்லையோ
சிலவேளைகளில்
அளவோடு நிறுத்தாமல்
அழுது கொண்டேயிருக்கிறாய்
உன் அழுகையில்
நானும் அல்லவா நனைகிறேன்
தொல்லை தரும் பெண்ணே
உன்னோடு பேசவேண்டும்
உன் தொலைபேசி இலக்கம்தான் என்ன?

ஆக்கம் சௌந்தரி

இது எனது சிந்தனையில் உருவான மழைக் கவிதை.

கவிதைகள் தரமானவை என்று கூறமுடியாது போனாலும் எங்கள் மனங்களை பிணைக்கின்ற உயிர்ப்பு இந்த வார்த்தைகளுக்குள் இருக்கின்றது. வாராவாரம் ஒரு மணி நேரம் முகம் தெரயாத பல உறவுகளை குரல் வழியாக சந்தித்து சிந்தனைகளை பகிர்ந்து அன்பு பாராட்டுவதற்கு கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பது பெரிய விடயமல்லவா?

அடுத்த வாரம் கலை என்ற பொருளில் கவிதைகள் கூறுவோம். நீங்களும் உங்களது சிந்தனை ஊற்றுக்களை கவிதை மொழியில் எழுதி இணைத்துவிடுங்கள். அவற்றை எனது உறவுகளுடன் மகிழ்வோடு பரிமாறிக்கொள்வேன். எங்களது கதம்ப மாலையில் நீங்களும் ஓர் அழகிய மலராக இணைந்து கொள்ளுங்கள்.

சௌந்தரி

புதன், ஜனவரி 26, 2011

தஸ்லீமா நஷ்ரீன்

நான் விரும்பி வாசித்த கவிதைகளிவை. விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமானது எனது எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் ஒத்துப் போகின்றவையாக இருப்பது. அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு ஆளுமை மிக்க பெண்ணின் எழுத்துக்கள் இவை.

தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் மிகவும் புலமை வாய்ந்தவை என்று சொல்வதைவிட வாசிப்பவர்களை மீண்டும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் கொண்டவை என்றே கூறத்தோன்றுகின்றது.

வெகு சாதாரணமாக தனது உணர்வுகளையும் வலிகளின் ஓசைகளையும் அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் சோகத்தின் இழைகளையும் அவரது எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.

*********************************************

அடக்குமுறை


மனித சுபாவம் அப்படி

நீங்கள் உட்கார்ந்தால் அவர்கள் சொல்வார்கள்

உட்காராதே


நின்றால் சொல்வார்கள்

உனக்கு என்ன பிரச்சனை

நடக்கக்கூடாதா?


நடந்தால் சொல்வார்கள்

அவமானம்

உட்கார் நீ


நீங்கள் தாளமுடியாமல்

படுத்தால் சொல்வார்கள்

எழுந்து நில்


நீங்கள்

படுக்கவில்லையானால் சொல்வார்கள்

கொஞ்சம் படுக்கலாமில்லையா?


விழிப்பதும் தூங்குதுமாக என் வாழ்வை

நான் வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்


நான் இக்கணமே இறந்து போனால்

அவர்கள் சொல்வார்கள்

நீ வாழ வேண்டும்


நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்

யாருக்குத் தெரியும்

அவர்கள் சொல்வார்கள்

நீ இருப்பதே அவமானம்

செத்துத் தொலை


அதீத பயத்துடன்

ரகசியமாக

நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

*************************************************


மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் விரும்பும் வகையில் செயல்பட முயற்சித்தாலும் எல்லோரையும் எல்லா சந்தர்ப்பத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்பதை அழகாக உணர வைக்கின்றது அந்தக் கவிதை. எதைச் செய்தாலும் குற்றம் கூறுபவர்களுக்கு மத்தியிலும் வேண்டா வெறுப்பாக தனது வாழ்க்கையை வாழ விரும்பாது அதீதமான பயத்திற்கு மத்தியிலும் ரகசியமாக தனக்குள்ளே தனக்காக தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.


1962 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வங்காள தேசத்தில் பிறந்த தஸ்லீமா நஷ்ரீன் ஒரு குழந்தைப்பேறு நிபுணராக இருந்தபோதும் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருந்தார்.

அவரது பெயரைக்கொண்டே அவரது மதம் என்ன என்பதை கண்டுபிடித்துவிட முடியும். ஆம், மிகவும் கட்டுப்பாடு மிக்க முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர்தான் தஸ்லீமா.


பெண்களிற்கெதிரான அடக்குமுறைகள், மதம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பெண்களின் உடல்சார்ந்த வன்முறைகள் போன்றவற்றை கருப்பொருளாக வைத்து கடுமையாகவும் ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் எழுதிவந்தார்.


உலகம் முழுவதும் இவரது எழுத்துக்கள் பேசப்பட்டு பலவிருதுகளைப் பெற்றுக் கொண்டபோதும் அவரது சொந்த நாட்டிலும் இஸ்லாமிய மதவாதிகள் மத்தியிலும் அவரது எழுத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின, சிலர் விரும்பினார்கள் பலர் வெறுத்தார்கள்.


முஸ்லீம் பெண்ணாக இருந்தும் தனது இனத்தையும் மதத்தையும் விமர்சித்த இவரது எழுத்துக்களால் எழுச்சியுற்ற அமைப்புக்கள் இவர்மீது வழக்குக்கள் தொடர்ந்தன. பலதடவைகள் இவரை பொது இடங்களில் வைத்து தாக்கியிருந்தன. அது மட்டுமல்ல இவரது உயிருக்கே விலை பேசியதால் பல நாடுகளிலும் தலைமறைவாக ஓர் நாடோடி போன்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதத்தைவிட மனிதத்தை விரும்பிய இந்தப் பெண்ணுக்கு இன்றுவரை எதிர்ப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

***************


மதம்


கோபுரங்களைத் தரைமட்டமாக்குங்கள்

கோயில்களின்

மசூதிகளின்

குருத்துவாராக்களின்

சர்ச்சுக்களின் கட்டிடங்கள்

கொழுந்துவிடும் தீயில் எரியட்டும்


அந்த அழிவிலிருந்து

நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு

அழகான மலர்த் தோட்டங்கள் எழட்டும்

குழந்தைப்பள்ளிகளும்

படிப்பகங்களும் அதிலிருந்து எழட்டும்


மனிதகுல நலனின் பொருட்டு

பிரார்த்தனை மண்டபங்கள்

மருத்துவமனைகள் அனாதை விடுதிகள்

பள்ளிக்கூடங்கள் பல்கலைக்கழகங்கள் ஆக்கப்படட்டும்


கலைக்கூடங்களாக

கண்காட்சி மையங்களாக

விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களாக

பிரார்த்தனை மண்டபங்கள்

அதிகாலைப் பிரகாசத்தில்

பொன்னரிசி விளையும் வயல்களாக ஆகட்டும்


திறந்தவெளிகளாக நதிகளாக

ஆரவாரிக்கும் அமைதியற்ற சமுத்திரங்களாக


இன்றுமுதல்

மதத்தின் மறுபெயர்

மனிதம் என்றாகட்டும்

*************************

மதத்தைப்பற்றி எழுதினாலோ பேசினாலோ சூழுரைத்துக்கொண்டு சண்டைபோடவென்றே ஒரு கூட்டம் வந்துவிடும். ஆரோக்கியமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு மதச் சடங்குகளையோ கொள்கைகளையோ மறுஆய்வு செய்வதற்கு யாருமே தயாராக இல்லை. சொல்லப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் உண்மையானவற்றை அதன் பொருட்கூற்றை மேற்கோள் காட்டி விளக்கம் கொடுப்பதற்கு யாரும் முன்வருவதுமில்லை.


மதத்தின் பேரில் எதைச் செய்தாலும் அது சரியானதே என்ற நம்பிக்கையால் பல ஆண்டுகளுக்கு முன்பாக எமது சந்ததியினர் கற்றுத்தந்த சடங்குகளும் உட்புகுத்திய முறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் சாட்டையடி கொடுப்பது எந்த விதத்தில் ஞாயமாகும்.தனது சமூகத்தையும் மதத்தையும் தஸ்லீமா ஆழமாக நேசித்தார். தான் சார்ந்த சமூகத்தோடுதான் தனது தொடர்புகளும் உறவுகளும் வளரவேண்டுமென்ற ஆர்வத்தோடு தான் துரத்தியடிக்கப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கியே சென்றார். அதற்காக தனக்கு ஒவ்வாத கருத்துக்கள் தோன்றுகின்றபோது மௌனிக்கவோ ஒத்தகருத்து என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவோ அவரால் முடியவில்லை.

***************************************************************************


நடத்தை


நீ ஒரு பெண்

இதை நீ ஒருபோதும் மறவாதே

உனது வீட்டின் நிலைப்படியை நீ தாண்டினால்

ஆண்கள் உடனடியாக உன்னைக் கவனிப்பர்


தெருவில் நீ நடக்கத் தொடங்கினால்

ஆண்கள்

உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்

தெருமுனை தாண்டிப்

பிரதான சாலையில் நீ அடியெடுத்து வைக்கும்போது

ஆண்கள்

உன்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள்


நடத்தை சரியில்லாதவள் என்பார்கள்


உனக்கு ஆளுமை இல்லையென்றால்

நீ திரும்பிப் பார்ப்பாய்


அப்படியில்லையெனில் நீ

தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பாய்

இப்போது போய்கொண்டிருப்பதைப்போல

*********************************************

ஒரு எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் கண்ணாடி என்பதன் உண்மையை தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் பறைசாற்றும். இவருடைய கவிதைகளை வாசிக்கும் போது எனக்குள்ளும் இதே கேள்விகள் இருக்கின்றதே என்று நினைக்கத் தோன்றும். ஆக பலருக்கு பதிலாக தஸ்லீமா நஷ்ரீன் பேசுகின்றார்.தஸ்லீமா ஒருபோதும் தனது மதத்தை இழிவு செய்யவில்லை. விமர்சனம்தான் செய்தார். ஆழமாக சென்று ஆராய்ச்சி செய்து மதத்தின் கோட்பாடுகளை அவர் விமர்சிக்கவில்லை. மதம் என்ற போர்வையில் சமூகத்தில் நடைபெறுகின்ற அடக்கு முறைகள் வேண்டாம் என்று கூர்மையாக எழுதினார். ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இவரது எழுத்துக்கள் ஆத்திரத்தைக் கிளம்புகின்றது. பதிலளிக்கத் தெரியாதபோது அநாகரீகமாக அவதூறு கிளப்பிவிட்டு தப்பித்துச் செல்கின்றார்கள்.

இவரது கவிதைகளில் சமூக அனுபவங்களுடன் தனது அனுபவங்களும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும்.

மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதமோ சமூகமோ அவமதிப்பது தவறு, பெண்களை அடிமைப்படுத்தும் கொள்கைகளை பரப்புவது தவறு, அறியாமை என்னும் மாயைக்குள் மனிதர்களை கட்டி வைத்திருப்பது தவறு என்பதைப் பற்றித்தான் இவர் அதிகமாக எழுதியிருக்கின்றார்.

ஒரு தனி மனிதனின் நிம்மதியையும் சுதந்திரத்தையும் சிந்தனையையும் குலைக்கும் எவருடனும் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. தங்களது அதிகாரம் பறிபோய்விடும் என்கின்ற பயத்தினாலும் தாம் காணாமலே போய்விடுவோம் என்ற பயத்தினாலும் சீர்திருத்தவாதிகளை சாடிக்கொள்வது புதியவிடயமல்ல.


 
எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை மக்களை சிந்திக்க வைக்கும் காலத்தால் போற்றப்படும்.