சனி, ஜனவரி 31, 2009

நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்......புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அமரர் முத்துக்குமாருக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி.

புதுவையின் கவிதையில் உள்ள ஆழத்தையும் ஈர்ப்பையும் அவரது எழுத்தின் வலிமையையும் வியந்தவர்கள் பலர்.


எனக்கொரு நாடும் எனக்கொரு மொழியும்
இருந்திடும்போதும் நானொரு அகதி


இப்படியாக தனது ஏக்கங்களை வார்த்தைகளாக்கி மற்றவர்களையும் விழித்தெழச்செய்தவர் புதுவை இரத்தினதுரை. தமிழினத்தை நேசித்து தன் உறவுகளின் அழிவை தடுக்க தன்னையே அழித்த வீரனை நினைத்து சதையும் ரத்தமுமாக காட்சி தரும் மண்ணில் நின்றுகொண்டே புதுவை எழுதிய கண்ணீர் காவியமிது.

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.

நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம் .
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்

தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை

வெள்ளி, ஜனவரி 30, 2009

'தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல'


இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமரன் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

எம் தேசத்தின் துயர் துடைக்க தன் உயிரை பலி கொடுத்த முத்துக்குமரன் என்ற மாமனிதருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!

சொந்த மண்ணில் மக்கள் அவலப்படும் போதும் காட்டிக் கொடுத்து வயறு வளர்க்கும் மனிதர்களின் மத்தியில் இப்படியும் ஜீவன்கள். தன்னினம் வாழ வேண்டும், தன் இனத்திற்கெதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உயிரை மாய்த்த அவரின் துணிச்சலுக்கும், தன் மானத்துக்கும் தலை சாய்க்கும் அதே நேரம். . . . ..

வேண்டாம் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் இனியும் வேண்டாம். தமிழன் சாகப்பிறந்தவன் அல்ல மற்றவர்களைப் போல் அவனும் வாழப் பிறந்தவன். விலை மதிக்க முடியாத உயிர்களை ஒரு நிமிடத்தில் போக்காதீர்கள். உரிமையுடன் உங்கள் ஆதரவுக்கரத்தை தொடர்ந்தும் நீட்டுங்கள், உங்களது மத்திய மாநில அரசுகளை செய்கையினால் அசையுங்கள். உங்களது உயிர் மிக புனிதமானது உங்களைப் போன்றவர்கள் உயிருடன் இருந்து ஈழத் தமிழருடன் இணைந்து வரவேண்டும். இப்படிப்பட்ட இறப்புகளினால் அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டாம்.

தோழரே எங்கள் துயர் படிந்த ஈழ வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டீர். உம்மை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும் இதய பூர்வ அஞ்சலியும்.

வாழ்வினை இழந்த தோற்றம்

தென்றலது தாலாட்டும் தமிழ் ஈழமின்று
சதிகாரர் கைகளிலே பலியாகிப் போனகதை
பத்திரிகை வாசலில் முத்திரை பதிப்பதை
எத்திரை தடுத்தாலும் உதிரம் துடிக்கிறதே!

அன்று நடந்த கொலை ஆயிரமாயிரம்தான்
இன்று நடப்பதுவோ எண்ணிமுடியவில்லை
சுடுகின்ற துப்பாக்கி துரத்தும் பீரங்கி
தூரத்தே பறக்கின்ற துல்லிய விமானங்கள்
இடுகின்ற குண்டோடு ஏவுகணையத்தனைக்கும்
பலிபீட ஆடுகளாய் பாவிமக்கள் அழிவதுதான்
பழகிப்போகும் கதையாச்சோ!இருந்த இடம் நீங்கி
இருக்குமிடம்தேடி
இறப்பதற்கே பிறந்தவர்போல்
இழந்தவர்கள் வருந்தியோடும்
கோலத்தை
காணொளியில் கண்டதற்கு வர்ணனைகள் ஏதுமுண்டோ!

ஆடையோர் அழுக்கும் ஆஸ்தியோர் பானையுமாய்
வாடையிலும் கோடையிலும் வதைவோரைப் பார்கையிலே
வாழ்வோரை வாழவைக்கும் வணங்கும் கடவுளரை
வையாமல் என்ன செய்ய!

திரும்பும் இடமெல்லாம் அழுதகண் வரண்டமேனி
தரித்திரப் படுக்கை; இரத்த வியர்வை; நிரந்தர ஊனம்
தன்மகனை ஏன் பெற்றோம் என்று மாய்கின்ற தாய்
கண்முன்னே நடப்பதனை காணப்பொறுக்காத வீரம்
விடுதலைவேண்டி குருதிநீராட போரிடும் வேகம்!
நெஞ்சு பிளந்து குஞ்சுகளை அள்ளும் கொடூரம்?
கொடுமையொழி; போரைநிறுத்து
தமிழர் பக்கம் பார்வையைத் திருப்பு
புலம்பெயர் தமிழர் கதறும் காட்சி
எங்கும் வாழ்வினை இழந்த தோற்றம்

பூமித்தாயே போன பசுமைதான் எங்கே?
போரின்றி நம்நாடும் மாறுமோ நன்றே!
பொன்னான பூமி பொல்லாத கைபட்டு
மண்ணாகிப் போகிறதே இது மறக்குமா!
இந்த சோகம் எமைவிட்டு இறக்குமா!
வானத்தைப்பார்த்து வாழ்ந்த உறவுகளின்
வாழ்வுநிலை மாற்ற யார் வருவார்?

கண்ணை முழிப்பதுவோ அந்நிய நாட்டில்
உடம்பில் காயமில்லை; உதிரம் சிந்தவில்லை
தோல் தடித்தாலும் ரத்தம் மறந்திடுமோ?
கண்விழித்த நாட்டையும் பிறந்த மண்ணையும்
இதயக்கிடங்கினில் சேமித்த உணர்வையும்
உயிருள்ளவரை யாரும் மறப்போமோ?

சௌந்தரி

புதன், ஜனவரி 28, 2009

அப்பாவும் நானும்......தந்தையின் பெருமைகளை சொல்வதற்கு நிறைய உண்டு, சொல்ல நினைத்தேன் நினைத்ததும் நினைவை வெல்ல முடியவில்லை. நானும் அப்பாவும் நல்ல நண்பர்கள், நாம் வாழ்ந்த காலங்கள் சந்தோசமான இனிய சங்கீதம். அங்கே காயங்கள், வடுக்கள் என்று எதுவுமேயில்லை. போர்ச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்தேன் அவர் இறந்தபோதுகூட நான் அருகிலில்லை ஊருக்கு போகமுடியாத சூழ்நிலை இறுதிவரை அவர் முகத்தைக்காணவேயில்லை. அந்த ஏக்கத்தின் காயம் ஒர் அழியாதசோகமாக என்னுள் இருக்கின்றது. என் வார்த்தைகளில் கள்ளமில்லை கற்பனையில்லை சொல்ல முடிந்ததை சொன்னேன்.

என் அப்பா

எனக்கோர் அறிவொளி
அமைதியின் சிகரம் - அவர்
உள்ளும் புறமும் வெண்மை
துள்ளும் மனமோ மென்மை


நானிலம் போற்றிய நற்றமிழ் ஆசான்
குற்றம் பொறுக்கும் குணமலை
துள்ளிய நடை துடிப்பான செயல்
சிம்மக்குரல் சிரிக்கும் கண்கள்
இது என் அப்பா - அவர்
தெள்ளிய தேனிலும் இனியவர்
கற்றவர் அவைதனில் நிற்பவர்
நற்றமிழ் நலம்பெற்ற நாவீரர்
கம்பனின் களிநடம் சொல்லுவார்
கைகட்டி வாய்பொத்த மறுப்பவர்
வற்றா நதியென வாழ்ந்தவர்


என் தாயின் காதல் நாயகன்
ஏக்கம்தீர எம்மை நேசித்த ஜீவன்

கண்போன்ற தன் பெண்களுக்கு
பொட்டு வைத்துப் பார்த்தவர்
கட்டவிழ்ந்து போகாமல்
பொன்னும் பொருளும் தந்தவர்

நன்றி சொல்லவேண்டிய நல்லவர்
கெட்டியான பாசத்தை ஊட்டி வளர்த்தவர்
மட்டமான எண்ணத்தை மலராமல் தடுத்தவர்
சுட்டியான கருத்தை பேச்சில் கொண்டவர்
அட்டகாசமாகவே அவையோரை கவர்பவர்
கிட்டநின்று பார்ப்போர்க்கு சட்டென்று புரிபவர்
எட்டிநின்று பார்த்தாலும் காட்சியாக தெரிபவர்


சிந்தனைகள் சொல்லுவார்

சித்திரத்துப் பாவையென்று
சின்னவளைப் போற்றுவார்
அவருடன் வாழ்ந்த காலம்
அத்தனையும் வசந்தகாலம்
அவரில்லா நிகழ்காலம்
நிழலில்லா வனாந்தரம்பக்கம்பக்கமாக சொல்லுவேன்

பருகிய பாசத்தைப் பாடுவேன்
ஆசையோடு அசைபோடுவேன்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை
அர்ச்சனைப் பூக்களாக்கி
அர்பணிக்கும் மனசோடு
நன்றி என்னும் தீபமேந்தி
நான் விரும்பும் தந்தைக்கு
அவர் மென்பாதங்களில்
அன்போடு தூவுகின்றேன்

தாய் பாசத்தைபற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள் ஆனால் தந்தையின் பாசத்தை ஏனோ பலரும் விபரிப்பதில்லை. அப்பாவும் நானும் என்ற இந்த தலைப்பின்கீழ் நீங்களும் உங்களது அப்பாவைப்பற்றி சில வரிகளை எழுதிச்செல்லுங்கள். அவற்றை தொகுத்து நான் எனது கருத்தையும் இணைத்து மீண்டும் ஒரு பதிவாக போடுகிறேன்.

சனி, ஜனவரி 24, 2009

எல்லோரும் சமமானவர்களே!

சௌந்தரி
அபியும் நானும் என்ற படம் பார்த்தபோது ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை அவரது மனைவி வயதான பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும்படி கூற அவர் செய்கையால் மறுப்பு தெரிவிப்பார். மனைவி தொடர்ந்து வற்புறுத்த வேண்டாவெறுப்பாக குனிகிறார். இந்தக் காட்சியை பார்த்ததும் எனது மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. அதையே இன்று எழுதுவோம் என்று யோசித்தேன்.


ஊரில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூட பல வைபவங்களில் மனிதர்களின் கால்களில் மனிதர்கள் விழுவதை காணக்கூடியதாக இருகின்றது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் வந்துகொண்டு இருகின்றது. திருமண நிகழ்வுகளில் பல நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் கால்களில் மட்டுமல்லாது மற்ற உறவுக்காரர்கள் கால்களில் விழுவது, அரசியல் மேடைகளில் தலைவன், தலைவியின் காலில் விழுவது, கோயில்களில் பெரிய ஐயர், ஆசிரமங்களில் மகான் போன்றவர்கள் கால்களில் விழுவது என்று இன்னும் பல.

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட எந்த வகையிலும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் துறையில் தனித்திறமைகள் இருக்கின்றது. அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் சமமானவர்களே. என்னை பொறுத்தவரையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதென்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும்.

பெற்றவர்கள் காலில் விழுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்று சொன்னாலும் மரியாதையை வெளிக்காட்டுவதட்கு இது ஒன்றுதானா வழி. மரியாதை என்பது மனசில் இருக்கவேண்டும் மற்றும் செயலில் இருக்கவேண்டும் வெறும் வாய்சொல்லிலோ காலில் விழுந்து வழிபடுதலிலோ மட்டும் இருந்தால் போதாது. பெரியவர்களது அறிவுரைகள், அவர்களது அனுபவதேர்ச்சி போன்றவற்றை முன்னுதாரணமாக ஏற்று வாழ்வதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான்.

பொதுவாக குழந்தைகளை மற்றவர்கள் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்வது மிகவும் நெருடலானது. பெரியவர்களிடம் அன்பு செலுத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்கேட்டு நட என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே வீட்டில் விறகு கொத்த வரும் வேற்று ஜாதியைச் சேர்ந்த வயோதிபர் கதிர்காமுவை கதிர்காமன் என்று கூப்பிட சொல்வார்கள், உடுப்புத் துவைக்கும் மாணிக்கம் என்ற வயதான பெண்மணியை தொட்டுப் பேச அனுமதிக்க மாட்டர்கள், பாட்டி வயதை ஒத்த அவரையும் மாணிக்கம் என்றே அறிமுகப் படுத்துவார்கள்.

இப்படியாக குழந்தைகளுக்கு பல முரண்பாடுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கும் பெரியவர்கள் அவர்களை மற்றவர்கள் கால்களில் விழச் சொல்வது தன்னம்பிக்கைக்கு எதிராக அவர்களை தூண்டுவது போல்தான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

யாருடைய நம்பிக்கைகளையும் குறை கூறும் நோக்கம் எதுவும் இங்கு இல்லை. மனதில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு மட்டும்தான். உங்களது பக்க நியாங்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும்.

செவ்வாய், ஜனவரி 20, 2009

உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

சௌந்தரி
“உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

அப்பிடி ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றது என்று முணுமுணுத்தாலும் போதியளவு வசதிவாய்ப்புகள் இருந்தும் முதியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

“காவோலை விழ குருத்தோலை பார்த்துச் சிரிக்கும்” இன்றைய இளைஞர்கள்தான் நாளைய முதியவர்களாக உருமாறப்போகின்றவர்கள் ஆகவே இதைப்பற்றி அனைவருமே சிந்திக்கலாம்.
எதையும் நியாயப்படுத்தாமல் பிழை, சரி என்பதுபற்றி எல்லாம் வாதம் செய்யாமல் அனுபவத்திற்கும் வயசுக்கும் மதிப்புக் கொடுத்து முதியவர்களை அனுசரித்துப் போவதுதான் நியாயமானது. அவர்களது இளமைக்காலத்து வியர்வைதான் இப்போது எம்மை வாழவைக்கின்றது.

முதியவர்களுக்கு இப்போ என்ன குறை வைத்துவிட்டோம் என்று சொல்வது எனக்கும் கேட்கிறது. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் முதியவர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஊரில் கோயில்குளம், உறவினர்கள், அயலவர்கள் என்று சுற்றித் திரிந்தவர்கள் எதற்கும் மற்றவர்களது தயவை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிள்ளைகள் காலையில் போனால் இரவுதான் வீடு திரும்புவார்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் நான்கு சுவர்களுக்குள் நாட்களைக் கடத்தவேண்டிய கட்டாயம். வேற்றுமொழி, புதியஇடம், புதியகலாசாரம் என்று மும்முனைத் தாக்குதலுக்கும் அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க வெள்ளையின கோடீஸ்வரப் பாடகர் ஒருவரது தந்தையின் சடலம் தேடுவாரற்ற நிலையில் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 89 வயதான முதியவர் மரணித்து ஆறு வாரங்களின் பின்பு சடலம் அழுகி, துர்நாற்றமடித்து அயலவர்களுக்கு தெரிந்தபோதே போலீசார் வீட்டிற்குள் சென்று பொருமி வெடித்த சடலத்தை மீட்டனர். இது கதையல்ல உண்மையில் நடைபெற்ற ஓர் சம்பவம். அந்த முதியவர் இறந்து ஆறு வாரங்கள்வரை பிள்ளைகள் எங்கே போனார்கள்? ஒரு முறையாவது அவர்கள் தொடர்புகொள்ள முயலவில்லையா?

வயதான பெற்றோர்களை வீட்டில் தனியாகவிட்டு போகுமிடங்களில் பணிகளோடு மூழ்கி தம்மைத் தொலைத்து விடுவதால் அடிக்கடி பெற்றோர்களை தொடர்புகொண்டு அவர்களது நலம் அறியவே பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் செய்தி சொல்லவும் நாதியற்று அவர்கள் இறந்துவிட பிள்ளைகள் வந்து கண்ணீர் வடிக்கிறார்கள். வாழும்போது அருகில் இல்லாத பிள்ளைகள் சாவில் வந்து வாசமுள்ள மலர்ச் செண்டு வைத்துப் போகிறார்கள்.

இதுதான் இங்குள்ள பெற்றோர் பிள்ளைகளின் உறவு நிலை. தமிழ்ப் பெற்றோர்களது நிலமையும் இதேபோல் மாறிவருகின்றது என்று பொதுமைப்படுத்தமுடியாது. ஆனால் பணம், பதவியிருந்தால் வாழ்வில் எல்லாமே சாத்தியமாகிவிடும், எதையுமே சாதித்துவிடலாம் என்று எண்ணும் மனிதர்களுக்கு இந்த மரணம் நல்லதோர் படிப்பினையாக அமையும்.

போர்ச்சூழல் காரணமாக இளையவர்களெல்லாம் நாட்டை விட்டு வெளியேறியதால் எமது நாட்டிலும் இளைஞர்களைவிட முதியவர்களே அதிகம். உழைப்பவர்களைவிட ஓய்வூதியம் பெறுவோர் தொகையே அதிகம். பெற்றோர்கள் இறந்தபின்பு கொள்ளிவைப்பதற்குக்கூட பிள்ளைகள் இல்லாமல் பயணித்த கதைகள் எத்தனையோ. இவையெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்றாகிப் போனதால் எல்லோரும் மனதை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஊரில் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வாரத்தில் ஒரு தடவையாவது போன் செய்து அறிய முடியாத அளவுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகளின் நிலை இருக்கிறது. யாரிடம் நேரமிருக்கிறது? அதிகப்படியான பணச்சுமைகளை ஏற்படுத்தி அவற்றை சமாளிப்பதற்கு தொடர் வேலை செய்வதிலும், வேலை செய்த களைப்பில் உறங்குவதிலும்தான் நேரம் போகின்றது. அதைத்தவிர வாழ்வில் மிகுதியாக வேறு எதுவுமேயில்லை என்றே கூறவேண்டும்.

காலங்கள் நகர்கின்றன், நாளை நாமும் தனிமையில் விடப்பட்டு முதியோர் இல்லத்திலும், பராமரிப்பு நிலையங்களிலும்தான் இருக்கப்போகிறோம். முற்பகல் செய்வது பிற்பகலில் விளையப் போகிறது அவ்வளவுதான். நினைத்துப் பார்க்கும்போதே கஸ்டமாக இருக்கின்ற இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? பணத்தைவிட உயரிய பாசமிகு வாழ்வியல் கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர், குடும்ப உறவினர், ஊரவர், அயலவர் மற்றும் அன்புடன் பழகுபவர்கள் இவர்களிடம் நேர்மையான உறவை வளர்க்க வேண்டும்.

நாடுவிட்டு நாடு வந்து பணத்தை மட்டும்தேடி இறுதியில் காணப்போகும் சிறப்பு எதுவுமேயில்லை. மற்றவர்கள்மீது குறை சொல்வதையே முழுநேர வேலையாகக் கொண்டு மனநோயுடன் வாழும் வாழ்வை நிறுத்தி, தவறுகளை சரிசெய்து மனிதனாக வாழ நினைத்தாலே போதும் எல்லாம் சரியாக நடக்கும்.பூமிக்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது எதைக் கொண்டு போகப் போகின்றோம்? செய்யும் செய்கைகளின்மூலம் மனச்சந்தோசத்தை வளர்க்கமுடியாமல், உள்ளுக்குள் புழுங்கி தினம்தினம் செத்துக் கொண்டிருக்கும் அவசர வாழ்வின் முடிவில் எதைக் காணப்போகின்றோம்?

புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றவர்களும், முதியவர்களும்கூட வீடுகளில் அடைந்து கிடக்காமல் முடிந்தளவு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி நல்லதோர் நட்புவட்டத்தை உருவாக்கி எல்லோரும் சேர்ந்து வாழப்பழகலாம். அரசாங்கம் கொடுக்கும் மரியாதைப்பணம், போதியளவு நேரம், சேர்ந்துபழக காணும் இடமெல்லாம் நண்பர்கள் இப்படியாக எல்லாமே உங்களைச்சுற்றி இருக்கும்போது வேறு என்ன வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்காது, சார்ந்து வாழும் வாழ்வைவிடுத்து சுயமாக செயல்படும் தன்மையை வளர்த்துக்கொண்டால் மகிழ்ச்சிதானாக வந்துவிடும்.

காலத்துடன் வயது போவதை தடுக்கமுடியாது ஆனால் முடிந்தமட்டும் மனசை இளமையாக வைத்திருக்கமுடியும். பொதுவாகவே முதுமை வந்தாலே பயமும் வந்து சேர்ந்துவிடும் அதிலிருந்து விடுபட்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி முடிந்தளவுக்கு முதியவர்களும் தங்களை மாற்றப்பழகவேண்டும் இதுதான் யதார்த்தம். இந்த சிந்தனையுடன் இருந்தால் முதுமையை நினைத்து நான் பயப்பிடத் தேவையில்லை.

இதை வாசிப்பவர்கள் உங்களது கருத்துக்களையும் எழுதிச் செல்லுங்கள். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வின்மூலம் தெளிவான சிந்தனையை உருவாக்கலாம்.

வெள்ளி, ஜனவரி 16, 2009

அழகு

சௌந்தரி
தோற்றம் என்றால் என்ன? புறத்தோற்றமா? அல்லது அகத்தோற்றமா? இரண்டு தோற்றமும் அவசியம்தான். ஆனால் பார்த்தவுடன் ஏற்படும் கவர்ச்சி புறத்தோற்றத்தில் தான் இருக்கின்றது. அத்தோற்றப் பொலிவிற்கு மரியாதையும் முக்கியத்துவம் கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக நிறத்தோற்றம் முதலிடத்தைப் பெறுகின்றது.

சில சேவைகளுக்கு முகமும் உடலும் அழகாக இருக்க வேண்டியது அவசியம் உதாரணமாக மருத்துவமனை தாதிமார்கள், விமான சேவையில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள், அலுவலகங்களில் வரவேற்பாளராக இருப்பவர்கள் இவர்களுக்கு அழகான தோற்றம் அவசியமாகின்றது. அதுபோல் சினிமாத்துறை, விளம்பரத்துறை போன்றவற்றிலும் அழகான தோற்றம் உள்ளவர்களால்தான் ஜெயிக்கமுடிகின்றது.

வீதியில் ஓடும் கார் முதல் காலில் அணியும் பாதணிவரை அழகிய பொருட்கள்தான் மக்களை கவருகின்றன அப்படியிருக்கும் போது வெளித்தோற்றத்தில் உண்டாகும் கவர்ச்சியை பிழை என்று சொல்லமுடியாது. அதே வேளை மனத்தோற்றத்தின் அழகை கண்டுகொள்ளாமல் விடுவதும் சரியாகாது. ஒரு செயலை செய்து முடிக்க புறத்தோற்றம் அழகாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல உழைப்பாளியாகவும் அறிவாளியாகவும் சிந்தனை வாதியாகவும் இருக்கவேண்டும். தோற்றப்பொலிவு உள்ளவர்கள் இலகுவாக சில துறைகளின் நுழைவாசலை அடைய முடிந்தாலும் அவர்களிடம் உள்ள நேர்மையான அணுகு முறையும் அறிவு சார்ந்த திறமையும் இல்லை என்றால் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது.
நாகரீகம் பிறந்தகாலம் தொட்டே மனிதன் அழகுக்கு அடிமையாகி அதற்காக தனது கொள்கைகளை, மனதை, வாழ்க்கை முறைகளைக்கூட மாற்றியிருக்கிறான்.
அழகு பல வடிவங்களைக் கொண்டது.
இயற்கையழகு, தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, செயல்பாடுகளின் அழகு, ஆன்மீக அழகு இப்படி பல.

உடல் அமைப்பினால் உருவாகும் அழகானது பலவிதமான எண்ணங்களை உருவாக்கிறது. காமம், கலை, பக்தி போன்ற உணர்வுகளை உருவாக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது.

ஒரு படப் பிடிப்பாளனோ ஓவியனோ ஒரு பெண்ணை முன்னே நிறுத்தி படம் எடுக்கும் போது அவன் மனதில் கலை உணர்ச்சியைத் தவிர காமத்துக்கு இடமில்லை. கோயில் ஓவியங்களை பலர் பல விதமாக இரசிப்பார்கள். அதில் காமம், பக்தி, தத்துவம், கலை என்று பலதும் உள்ளடங்கியுள்ளது.

வெளித் தோறத்திற்கான அழகானது மெழுகுவர்த்திபோல் எரியத் தொடங்கியவுடன் உருமாறி தன் அழகை இழந்துவிடும். முக்கியமாக மனித உடலின் அழகு மனச்சஞ்சலம், கடும் உழைப்பு, கால மாற்றம் என்பனவற்றால் பாதிக்கப்படுகின்றது. ஆனால் உடல் அழகைவிட மனத்தில் தோன்றும் அழகான எண்ணங்கள் நிலைத்து நிற்கும். பரிசுத்தமான மனசோடு நல்ல நோக்கங்களை சிந்திக்கும்போதே நல்ல சக்தியானது மனதை ஆட்கொள்கிறது. அதுவே முகத்தில் ஒரு தனி அழகையும் பிரகாசத்தையும் தரும்.

புதன், ஜனவரி 14, 2009

அனாதைப் பொங்கல்

சௌந்தரி
அன்று
உழவர்வாழ் கிராமத்தில்
தாயன்பின் அணைப்பில்
கோழிகூவ துயில் எழும்பி
அழகான வயல்வெளியில்
அமுதமாக தேங்கிநிற்கும்
அத்துளுக் குளத்தினிலே
கவலையின்றி நீச்சலடித்து
புத்தாடை உடுத்தி புதுரிபன் கட்டி
வானவெடி வாத்தியத்தில்
கதிரவனைத் துயில் எழுப்பி

முன்முற்றம் அம்மா பெருக்க
மாக்கோலம் அக்கா போட
ஆடிப்பாடி அறுகம்புல் பிடுங்கி
அப்பாவிடம் நான் கொடுக்க
கள்ளச்சிரிப்போடு மேனியெங்கும் நீறிட்டு
மஞ்சள்மா பிள்ளையாரை மனசார வணங்கி
புதுமண்ணடுப்பில் புதுப்பானை வைத்து
கதிரவன் திசைபார்த்து புத்தரிசிபோட்டு
பாலோடு சக்கரையும் பாகும் பருப்புமிட்டு
பால் பொங்கும் மகிழ்ச்சியிலே
பொங்கலோ பொங்கலென்று கூடிக்குரல் கொடுத்து
வாழையிலை கழுவி வானவர்க்கு முதல் படைத்து
சுற்றங்கள் சூழநின்று வாழைப்பழத்தோடு
வாயெல்லாம் சிரிப்பாக பொங்கலுண்ட காலமது

இன்று
அந்நிய தேசத்தில்
பொங்கல் என்றே தெரியாமல்
நண்பர்கள் வாழ்த்துச் சொல்ல
தமிழ்க்கடைக்கு ஓடிச்சென்று
கையில் கிடைத்ததை வாங்கி
இயந்திரகதியில் பொறுமையிழந்து
பொங்கினேன் பொங்கலொன்று

இங்கே
புதுப்பானையில்லை புதுஅடுப்புமில்லை
புதுஅரிசியில்லை அட புதுஉடுப்புமில்லை
கிடைத்த பாத்திரத்தில் சக்கரையும் பாலுமிட்டு
தேவைக்கு அதிகமாக தேவையற்றதெல்லாம் போட்டு
கிண்டிக் கிழறி ஆத்திரத்தில் பொங்கிய
வேடிக்கைப் பொங்கலிதை
வெள்ளித்தட்டில் படைத்து தனியாக உண்ணுகிறேன்
கூடிக்குலாவிக் கதைபேச உறவுகள் அருகிலில்லை
பாடிப்பழகி பகிர்ந்துண்ண பக்கத்தில் சொந்தமில்லை

தைப்பொங்கல் தமிழருக்கோர்
தனிப்பொங்கல்
எனக்கிதுவோ அர்த்தமில்லா அனாதைப்பொங்கல்

செவ்வாய், ஜனவரி 13, 2009

பொங்குவோம் பொங்கலொன்று

இனமும் நிலமும் ஏற்றம்காண
எண்ணியபடியே எல்லாம் நடக்க
கடந்த ஆண்டை வழியனுப்பி
புதிய ஆண்டை வரவேற்று
தமிழினம்கூடி இறைவனை வேண்டி
பொங்குவோம் பொங்கலொன்று


சுதந்திரக் காற்றும் சமாதானப் பேச்சும்
ஈழமண்ணில் இன்றுமுதல் கிட்ட
சிறிய விதையை மண்ணில் பதித்து
பெரிய கதிராய் பூத்துக் குலுங்க
வேர்வை சிந்திய தோழர்கள் இணைந்து
தைத்திருநாளாம் தமிழர் நன்நாளில்
பொங்குவோம் பொங்கலொன்று

பழையன மறைந்து புதியவை தோன்ற
தீப்பந்தங்கள் அணைந்து தீபங்கள் ஏற்ற
ஆயுதங்கள் களைந்து அமைதி நிலவ
போர்க்குணம் அழிந்து பூவுலகம் மலர
பொங்குவோம் பொங்கலொன்று

கொட்டிலில் பயத்துடன் தாய்;
தொட்டிலில் பசியுடன் பிள்ளை
கொட்டும் மழையிலும் கோரப் பிடியிலும்
திக்கெட்டும் சிதறிய ஈழத்து உறவுகள்
தாய்மண்ணைக் காக்க தன்னுயிர் துறக்கும்
தமிழீழ வீரர்கள்
இவர்தம் நலம்வேண்டி
கண்ணிரண்டில் வெள்ளம் வழிந்தோட
பொங்குவோம் பொங்கலொன்று

தரணியெங்கும் இன்பம் பொங்கி
தூய்மை அன்பில் உள்ளம் மகிழ்ந்து
புயலும் பூகம்பமும் மண்ணோடு மடிந்து
அணைக்கும் கரங்கள் நன்றாய் பெரிகி
ஜெயிக்கும் மனிதன் தினமும் தோன்ற
பொங்கும் மனதுடன் பொங்கிடுவேன்
வார்த்தைகளில் பொங்கலொன்று
சௌந்தரி

திங்கள், ஜனவரி 12, 2009

''ஊருக்குத்தான் உபதேசம்''

சௌந்தரி
முகம் தெரியாத நண்பர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சுலபமாகவும் பிரச்சனைகள் அற்றதாகவும் இருப்பது என்னவோ உண்மைதான்.
நேரடியான உரையாடல்களின் போது எமது விருப்பு வெறுப்புகளை முடிந்தவரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட விடயம்.
ஒரு தொழிலைச் செய்தாலும் அல்லது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அல்லது வேறு எந்தப்பணியாற்றினாலும் பலருடனும் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதால் விருப்பு வெறுப்பக்களைக்காட்டி விரோதிகளை உருவாக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றே என் உள் மனம் சொல்கிறது. இது ஒன்றும் கடினமில்லை கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொண்டால் பழகிக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு யாரைப்பற்றி என்ன நினைக்கிறேனோ அதை மற்றவர் அறிந்து கொள்ள முடியாதவாறு முகத்தை வைத்துக்கொண்டால் அவர்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி அவர்கள் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இது மனிதர்களைச் சமாளிப்பதற்கு மிகவும் வெற்றிகரமான உபாயமாகும்.

எமது உணர்ச்சிகள் எமக்கு மட்டுமே சொந்தம் அவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது அவற்றை ஆளுகின்ற சக்தி எமக்கு ஏற்பட்டுவிடுகின்றது. வெளிப்படுத்தும்போது அந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் எம்மை அடக்கியாளத் தொடங்கிவிடுகிறார்கள். எமது உணர்ச்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாதவரை எம்மை யாராலும் கணிக்கவும் முடியாது குறை கூறவும் முடியாது.

ஒருவரது கருத்தும் செயலும் பிழை என்று தெரிந்து கொண்டும் மௌனமாக இருப்பதென்பது என்னவோ மிகவும் கடினமான ஓர் விடயமாகத்தான் இருக்கும். ஆனால் சிலருக்கு எதை சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நிற்பார்கள் அவர்களின் முன் மௌனமாக இருப்பதுதான் நன்மையை தரும். அபோதுதான் எமது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், என்ன சொல்லப்போகிறோம் என்று ஆவலுடன் எதிர்பார்த்தபடி மரியாதையுடன் இருப்பார்கள். இதனால் நண்பர்களை உருவாக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமலும், வீணான பிரச்சனைகள், குழப்பங்கள் ஏறபடுத்தாமலும் தவிர்த்துக் கொள்ளலாம்.

''ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே'' என்பது போல்தான் நான் சொல்வதெல்லாம்; என் மனசும் தனக்கு தெரிந்ததை சொல்லித்தான் பார்க்கிறது ஆனால் வாய் யார் சொல்லையும் கேட்பதில்லை. உங்களுக்கு எப்படி மனசுக்கும் வாயுக்கும் இடையில் link சரியாக வேலை செய்கிறதா?

ஞாயிறு, ஜனவரி 11, 2009

சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

க்கம்: சௌந்தரி
வாரம் முழுவதும் இயந்திரம்போல் வேலை செய்துவிட்டு ஓர் மாற்றத்திற்காக சனிக்கிழமை இரவு நண்பர்கள் ஒன்றுகூடி உணவருந்தி சந்தோசமாக இருப்போம். நண்பர்கள் ஒன்று கூடினால் கேட்கவும் வேண்டுமா? இலக்கியம், அரசியல், சமூகம் போன்ற துறைகளில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவ்ர்கள் நேரடியாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பலதரப்பட்ட விடயங்களையும் பற்றிய விரிவான உரையாடல் சுவாரசியமாக இடம்பெறும்.

இன்று இந்தக் கட்டுரையை எழுதத்தூண்டிய விடயம் நேற்று நடைபெற்ற உரையாடலில் இடம்பெற்ற சாதி பற்றிய பார்வை.

உரையாடலின் சாரம்சம் என்னவென்றால் ''புலம்பெயர்ந்த பின்பும் உயர்சாதியினர் என்று கூறிக்கொள்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை மனதளவில் அங்கீகரிக்கத் தயாரக இல்லை''.

அதற்கு கூறப்பட்ட காரணங்களில் முக்கியமானது என்னவென்றால் தாழ்சாதியினருக்கென்று தனியான குணம் இருக்கின்றது சமய சந்தர்ப்பங்களில் அத்தகைய குணங்கள் தானாக வெளிப்பட்டுவிடும் என்றும் இதை அனுபவபூர்வமாக சிலர் அனுபவித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. பொதுவான குணங்கள் என்று சொல்லப்பட்டவை
1. திருடுதல், பொய் சொல்லுதல், கெட்டவார்த்தைகளை பாவித்தல்
2. தினம் மதுபோதையில் வீட்டிலும் வெளியிடத்திலும் அடிதடி சண்டை போடுதல்
3. துப்பரவின்மை
4. நாகரீகமின்மை
5. குடும்பத்தில் ஒற்றுமையின்மை
6. குடும்பம் என்ற கட்டுக்கோப்பிற்குள் வாழாமை
7. அடிமைத்தனம் இப்படிப்பல

ஈழத்தில் கரவெட்டி என்ற எனது கிராமத்திற்குப் பக்கத்தில் கன்பொல்லை என்ற ஓர் மாதிரிக் கிராமம் இருக்கிறது. அங்கே கீழ்சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள்தான் வாழ்கின்றனர். அவர்களில் பலரிடம் மேலே கூறப்பட்ட குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவர்களும், அவர்களது பிள்ளைகளில் பலரும் போரின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சிறப்பாக வாழ்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது? ஊரில் அவர்களது வாழ்க்கை முறைக்கு காரணம் சமூகமும், புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தமே. அந்த அழுத்தத்தின் சுமையிலிருந்து விடுபடுவதற்காக அதற்குரிய மாறு வழிகளை தேடிச்சென்று அந்தத் தேடலில் விரக்தியடைந்து அவர்கள் விரும்பாமலே அப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்குள் தம்மை திணித்துவிடுகின்றார்கள்.

உயர்சாதியினர் என்று பெரிதாக பெருமைபேசி வாழ்ந்தவர்கள் பற்றியோ
இறுதிவரை தங்களது பெருமைகளை கட்டிக்காப்பதற்காக தமக்கு கீழே உள்ளவர்கள் விழிப்படையக்கூடாது இறுதிவரை இப்படியே இருந்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர்களைப்பற்றியோ இப்போது கதைப்பது தேவையற்ற விடயம்.

இந்த நுhற்றாண்டில் குறிப்பாக போர்ச் சுழலினால் ஈழத்தில் பாரியளவு விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது சாதீயம் பற்றிய பார்வை. ஆனால் மக்கள் மனதளவில் எவ்வளவு தூரம் மேம்பாடு அடைந்திருக்கின்றார்கள் என்பது இப்போதும் கேள்வியாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்தபின்பும் வேளாளர் அல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்களை குறைந்த சாதி என்ற வர்க்கத்திற்குள் இன்னும் சிலர் வகுப்பது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ற மொழி ரீதியில்தான் ஒருவரை ஒருவர் முதலில் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட நபரினது பிறப்புபற்றிய தகவல்களை மற்றவர்கள் மூலம் தெரிந்துகொள்ள நேரிடும்போது அவர்களுக்கிடையே மலர்ந்த நட்புக்கூட இல்லாமல்போன சந்தர்ப்பங்களும் உண்டு. முக்கியமாக பிள்ளைகளது திருமணம் என்று வரும்போது என்ன சாதி என்று துருவித்துருவி ஆராயமுற்படுகின்றார்கள் பெற்றவர்கள்.

எப்படி பிறப்பினால் ஒருவர் உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதியாக முடியும்.
இந்த நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட சிந்தனை இருப்பது அருவருப்பாக இருக்கின்றது. தாழ்ந்தவர்கள் என்று அவர்களது உழைப்பினால் பாகுபடுத்தப்பட்டவர்களது உழைப்பாலும்
வியர்வையாலும்தான் மற்றயவர்களது வாழ்வும் இந்த பூமியும் வளமாக இருக்கின்றது.
ஊரில் உயர்தவர்கள் என்று கூறப்பட்டவர்கள் பொருளாதார மேம்பாட்டினால்தான் உயர்ந்து நிற்க முடிந்தது. மற்றயவர்கள் தமது பொருளாதார விடுதலைக்காக போராட வேண்டியிருந்தது. ஆனால் புலம் பெயர்ந்த பின்பு பொருளாதாரம், கல்வி மற்றும் பிறவிடயங்களிலும் சமத்துவத்தை அடைந்தபின்பும் மனிதநேயம் மறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

சிங்களவரிடம் தமிழர் கேட்கும் உரிமைகள் நியாயமானவை, தேவையானவை, போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டியவை என்று ஒருமித்துக் குரல்கொடுக்கும் தமிழர்களுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

ஒரு இனம் மற்றய இனத்தை அடக்கி, ஒடுக்கி, விழுங்கி ஏப்பம் விடுகின்றபோது பார்த்துக் கொண்டிருக்கமுடியாமல் பொங்கி எழுந்து எமது இனத்துக்குரிய உரிமைகளை பெறுவதற்காக எத்தனையோ உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்கின்ற எமது தமிழ் சமூகத்திற்கிடையே சரிநிகர் சமமாக வர்க்க பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை என்பது வேதனையானது.

சாதி பற்றிய நினைப்பு எல்லாம் தமிழ் ஈழம் கிடைத்தால் நீங்கிவிடும் என்று எம்மில் பலர் நம்பிக்கொண்டு இருகின்றர்கள். அவர்களிடம் நம்பிக்கை மட்டுமே இருக்கிறது ஓர் அறிவு பூர்வமான அணுகுமுறைகளோ திட்டங்களோ இல்லை என்பதுதான் உண்மை.

இந்தக் கட்டுரைக்கு வலுச் சேர்ப்பதற்கோ இல்லை மாற்று கருத்தை வெளிப்படுத்துவதற்கோ உங்களது வாதங்களை முன்வையுங்கள். உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஓர் தெளிவான சிந்தனையை கொடுக்கும்.

வியாழன், ஜனவரி 08, 2009

கலாசார மாற்றம்

ஆக்கம்: சௌந்தரி
கலாசாரம் பண்பாடு என்பதுபற்றி எல்லாம் எழுதி குழப்பும் எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் எனது மனதில் இருக்கின்ற கேள்விகளுக்காக இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.
கலாச்சாரம் பண்பாடு என்ற கேள்வி எழுகின்ற போதெல்லாம் பெண்களைப் பற்றிய விடயங்கள்தான் அலசப்படுகின்றன. பெண்களின் நடை உடை பாவனைகளை உள்ளடக்கியதுதான் கலாச்சாரமா? எமது விருப்பங்களுக்கும் அப்பால் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு கலாசாரமும் மாற்றம் அடையாதா?
குறிப்பாக வெளிநாடுகளில் பல்லின மக்களோடு சேர்ந்து வாழ்கின்றபோது அவர்களது கலாசார வழக்கங்களின் தாக்கம் எமக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கமுடியாது போய்விடும். இப்படியான மாற்றங்களை புலம்பெயர் சமுதாயத்தில் வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. உலகமயமாதல் காரணமாக இலங்கை இந்தியா போன்ற பாரம்பரியத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் நாடுகளிலும் கலாசார மாற்றங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகித்தானே விடுகின்றது.

காலத்தின் கட்டாயம் காரணமாக மக்களிடையே ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் காலம் காலமாக காவிக்கொண்டுவந்த சில எண்ணக் கருக்களை இன்றும் மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் இருப்பது வேதனைதான். முக்கியமாக பெண்கள் விடயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

எந்த ஓர் கொள்கையும், நடை உடை பாவனையும் அந்தக் காலகட்டத்தில் சரியானதாக இருக்கிறதா அல்லது பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமேதவிர நிலமானிய சமூக அமைப்பில் பழக்கமாக, வழக்கமாக, எழுதாத சட்டமாக வந்தவற்றை எல்லாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வற்புறுத்துவது எந்தவிதத்திலும் சரியாகாது.

சில சந்தர்ப்பங்களில் கால மாற்றத்துடன் சிலர் கடைபிடிக்கின்ற மாற்றங்கள் குழப்பமானதாகவும் முரணானதாகவும்கூட இருக்கலாம். அந்த மாற்றங்கள் தவறானவை என்று அவர்கள் உணரும்போது தங்கள் முடிவுகளை மீள்பார்த்து சரிப்படுத்தும் சுதந்திரத்தையும் அவர்களிடமே விட்டுவிடவேண்டும். முரணான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்படட வலியையும் அனுபவித்து அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான காலத்தையும் கொடுக்கவேண்டும் இது எனது தாழ்மையான கருத்து.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நிறை குறைகள் நிறைந்தவர்கள்தான். இது இருபாலாருக்கும் பொதுவான ஓர் நியதி. ஆனால் பொதுவாக பெண்களின் குறைகள்தான் அதிக விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உட்படுத்தப்படுகின்றது.

பெண்களை ஓர் தனியான இனமாக அதுவும் இரண்டாந்தர இனமாக கருதுவதால்தான் அவர்களது சிந்தனைகளும் எண்ணங்களும் சரிசமமாக மதிக்கப்படுவதில்லை. குறை நிறைகளை கணிப்பிடும்; அளவுகோல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டுமே தவிர பால் வேறுபாடுகளினால் உருவான இயல்புகளை வைத்து அவை கணிக்கப்படக்கூடாது. வித்தியாசமான உடல் அமைப்புகளை கொண்ட ஒரே காரணத்திற்காக வித்தியாசமான அளவுகோல்களை பாவிப்பது எப்படி பொருந்தும்.

குறிப்பாக பெண்களின் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இவை பெண்களுக்கான பிரச்சனைகள் என்று பிரித்துப் பார்க்காமல் பொதுவான ஓர் பிரச்சனையாக, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஓர் பிரச்சனையாக பார்க்கும் நிலை வளரவேண்டும். அதே நேரம் பெண்களுக்கே உரிய சேவைமனப்பான்மை, தியாகம் போன்ற குணங்களோடு தனிமனிதனுகுரிய கௌரவம், மரியாதை என்பனவும் கேள்விக்கு உட்படுத்தப் படாதவாறு பெண்களும் இருக்கவேண்டும்.

எமது சமுக அமைப்பானது ஆண்களை முதன்மைப் படுத்தும் சமுதாயமாக தோற்றம் கொண்டுள்ளது. அங்கே தொக்கி நிற்கும் பெண்களைப்பற்றிய மதிப்பீடுகள் இன்றும் தாழ்வாகத்தான் இருக்கின்றது.

பெண்ணின் உடல் உள ரீதியான மதிப்பீடுகள் அவைபற்றிய முடிவுகள் பெண்களின் வசம் இல்லாமல் ஆண்களின் ஆளுமையினால் தீர்மானிக்கப்படுவதும் இன்றும் முற்றாக மாறவில்லை.

இதுதான் பெண்ணுக்கான எல்லை என்று ஓர் ஆண் கோடு போடும் போது அங்கே ஓர் எதிர்புணர்வையே உருவாக்குகின்றான்; ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அவர்களுக்கான எல்லைகளை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்நோக்கும் ஆபத்துக்கள்பற்றி அறிவுறுத்தலாம் ஆனால் தடைகளைப் போடுவது முறையான தீர்வாகாது.

பெண்களின் வாழ்க்கை என்பது என்ன? அந்த வாழ்க்கைக்குள் அடங்கி நிற்கும் அதிசயங்கள், ஆபத்துகள், அனர்த்தங்கள், ஆளுமைகள் என்பவை எவை? என்பது பற்றிய சிந்தனைகள் பெண்களிடம் இருந்து ஆரம்பமாவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை உணரும் வண்ணம் பெண்களது சிந்தனைகளும் வளரவேண்டும்.

தனக்குத்தானே சுயமாக விதித்துள்ள தடைகளையும் சமூகம் பெண்கள்மீது வலிந்து விதித்துள்ள தடைகளையும் மீறி தங்களது எண்ணங்களை, திறமைகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த பெண்கள் முன்வரவேண்டும். இதற்கு சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் உதவவேண்டும்.

மரபணு ஆய்வும் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான குற்ற விசாரணையும்


ஆக்கம் சௌந்தரி
பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள இரண்டு நீதிமன்றங்கள் ஒரே நாளில் இரு கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தன. ஒரு குற்றவாளி தனது மீதி வாழ்க்கை முழுவதையும் சிறையிலேயே கழிக்கவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் விடுதலை செய்யப்படலாகாது என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்புக் கூறியது. இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளினது குற்றத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இருக்கவில்லை. கொலைகளை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனாலும் நீதிபதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் எனக்கண்டு ஆயுள்தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்கள்.

குற்றத்தை நிரூபிப்பதற்காக பொலீஸ் தரப்பினால் ஒரேயொரு ஆதாரம் மட்டுமே நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் இருந்து கண்டெடுக்கபட்ட மரபணு மாதிரிகள் தான் (DNA Samples) கொலைச் சந்தேக நபர்களை குற்றவாளிகளாக்கின.

கொலையாளிகளில் ஒருவர் 49 வயதானவர். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுடன் அயலவர்களுடனும் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ளாதவர். வீட்டு வாசலில் தனது காரை அநாவசியமாக அடிக்கடி கழுவிக்கொண்டிருக்கும் சுத்தப்பைத்தியம் என்றுதான் அயலவர்கள் அவரை எடை போட்டிருந்தனர். ஒருமுறை வேலையிடத்தில் வெறும் 40 பவுண்களைத் திருடிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டபோது பொலீசார் அவருடைய DNA மாதிரியை தமது தேசிய பதிவேட்டில் சேமித்து வைத்துக் கொண்டனர்.

விபச்சாரத்தை தொழிலாகக் கொண்ட 5 இளம் பெண்களை 2 வாரகாலத்திற்குள் கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டபோது அத்தகையதொரு கடுமையான குற்றத்தை அவர் செய்திருப்பார் என்று அவருக்குத் தெரிந்தவர் எவரும் நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஏற்கனவே பொலீஸ் பதிவேட்டில் இருந்த DNA மாதிரியும் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலில் காணப்பட்ட DNA மாதிரியும் ஒத்திருந்ததால் அவர்தான் குற்றவாளி என்பதை சுலபமாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது.

DNA என்றால் என்ன?
மனித உடல் தொடர்ச்சியா உயிர் கலங்களால் (cell) ஆனது. ஒவ்வொரு உயிர் கலத்தினது உட்கருவில் (Nucleus) உள்ள குரோமோசோம்களில் மரபணுக்கள் அமைந்துள்ளன. DNA (Deoxyribose Nucleic Acid) மற்றும் RNA (Ribose Nucleic Acid) ஆகியவற்றால் ஆனவையே மரபணுக்கள் ஆகும். DNA என்ற அமைப்பில் மனிதனின் தனித்தன்மையான உடல் ரகசியங்களுக்கு காரணகர்த்தாவான ஜீன் (Gene) இருக்கிறது. மனிதனின் உடல்வாகு, குணம், நோய், ஆயுள் பற்றிய விபரங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளது. மரபணுக்கள்தான் மரபுப் பண்புகளுக்கும்; பெற்றோர்களின் குணநலன்கள் பிள்ளைகளிடம் அமைவதற்கும் காரணமாக இருப்பவை. ஒவ்வொரு மரபணுவும் ஒரு பண்பிற்கான இயல்புகளை கூறுகின்றது.

உங்களுடைய இரண்டுவயது மகன், உங்கள் தந்தையைப்போல் ஒரு கையைமட்டும் பின்னால் கட்டிக்கொண்டு நடப்பதற்கும், உங்கள் பாட்டனாருக்கு இருந்த நீரிழிவு நோய் உங்களையும் தாக்கிக் கொள்வதற்கும் கே யே யேசுதாஸின் குரலில் நீங்கள் ரசித்திருக்கக்கூடிய நளினத்தை விஐய் யேசுதாஸின் குரலைக் கேட்கும் போது உணர்ந்து கொள்வதற்கும் இந்த ஜீன் தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்கள், விலங்குகள் மட்டுமன்றி தாவரங்களிலும் இத்தகைய பரம்பரைக்குரிய இயல்புகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட இந்த ஜீன் தான் காரணம்.

மனித இனத்தின் மரபணு அமைப்பில் பெரும்பகுதி எல்லோருக்கும் பொதுவானவை. நீங்கள் சீனராகவோ, ஆபிரிக்கராகவோ அல்லது அமேசன் நதியோரத்து பழங்குடியினராகவோ இருந்தாலும்கூட மனிதருக்குரிய பல பண்புகள் பொதுவாகவே உள்ளன. ஓரு மொழியை பேசுவதற்கான ஆற்றல் இதற்கு ஓர் உதாரணமாகும்.

மரபணுவின் ஓர் சிறிய பகுதியிலேயே முக்கிய வேறுபாடுகள் அடங்கியுள்ளது. ஆளுக்கு ஆள் வேறுபடும் கூறுகளை கொண்டுள்ள இந்த சிறுபகுதியை வைத்தே தனி ஒருவர் அடையாளம் காணப்படுகின்றார். இத்தனித்துவமான மரபணுவியல் ஆய்வுகளை பயன்படுத்தியே மானுடவியல், மருத்துவம், விவசாயம் மற்றும் நீதித்தடய மருத்துவம் (forensic medicine) போன்ற அறிவுத்துறைகள் பயன் பெறுகின்றன.

30 வருடங்களுக்கு முன்பு நடந்த தீர்க்கப்படாத சந்தேகங்களை தீர்ப்பதற்கு DNA எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது?
James Watson; Francis Crick ஆகிய இரு ஆய்வாளர்கள் 1953 ல் DNA கட்டமைப்பின் மிகச்சரியான மாதிரியமைப்பை வெளிப்படுத்தியபோது தமது உழைப்பு குற்றவாளிகளைக் தண்டிப்பதற்கு உதவும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

DNA ஆய்வுமுறை பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக கைரேகைப் பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைகளை வைத்தே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மனித மரபணுவியல் ஆய்வுகள் முன்னேற்றம் அடைந்து DNA பரிசோதனைகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு பெரிதும் பயன்படுகின்றது.

கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கிடைக்கும் தடயங்களாகிய நகம், மயிர், சதை, ரத்தம், விந்தணுக்கள் (sperms) போன்றவற்றை ஆராய்ந்து உண்மையான குற்றவாளியை இலகுவாக கண்டுபிடிக்க முடிகின்றது. பல கொலைக் குற்றங்கள் 30 வருடங்களைக் கடந்தும் நிரூபிக்கப்படாமல் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றன. தற்போது DNA ன் உதவியுடன் இந்த வழக்குகளின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் 1968ம் ஆண்டு 14 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்கான குற்றவாளி மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தண்டனை அடைந்துள்ளார் அத்துடன் பல வருடங்களாக தீர்க்கபடாமல் மூடிவைக்கப்பட்ட பாலியல் கொலை வழக்குகளும் மரபணு ஆய்வுகளின் மூலம் மீண்டும் புதிப்பிக்கப்ட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகள் பலர் நீண்ட காலத்தின் பின் DNA ஆய்வின் உதவியால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மரபணுச் சோதனை முடிவுகளை மிகப்பெரிய தடயமாக பொலீஸ்தரப்பு பயன்படுத்துகின்றது. பிரித்தானிய குற்றவியல் புலனாய்வுத்துறையினர் நான்கு மில்லியன் மக்களது (உலகிலேயே அதிகளவு எண்ணிக்கையில்) DNA மாதிரிகளை கணணியில் பதிந்து வைத்திருக்கின்றனர். குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றய தடயங்களை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதைவிட DNA ஆய்வின் அடிப்படையில் குற்றவாளியை தீர்மானிப்பது பொலீஸ்தரப்பிற்கு மும்மடங்கு சுலபமானதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுபவரின் DNA மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளி தீர்மானிக்கப்படுகின்றான். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது கட்டாய மரபணுசோதனை செய்வது நன்மையையே தருகின்றது. முக்கியமாக கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை குற்றங்களில் குற்றத்தை நிரூபிப்பதற்கு இம்முறை மிகவும் அவசியமாகி;றது.

மரபணு சோதனை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நீதிமன்ற ஆணை பெற்ற பின்னர் மரபணுப்பரிசோதனை செய்யப்படுகின்றது. என்ன காரணத்திற்காக அவர்மீது சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதுதவிர வேறுகாரணங்களுக்காக அவரது மரபணுக்கள் ஆராயக்படக்கூடாது.

DNA உடன் மற்றய தடயங்களும் குற்றத்தை நிரூபிப்பதற்கு அவசியமானதாக கருதப்படுகின்றது. ஏனெனில் DNA ஆய்வு என்ன கூறுகின்றது என்பதை உறுதிப்படுத்த மற்றய தடயங்களும் அவசியமாகின்றது. உதாரணமாக இறந்தவரின் உடலில் சந்தேகத்திற்கு இடமாக முடித்துணுக்கைகள் காணப்பட்டால் அந்த முடித்துணுக்கைகள் குற்றம் சுமத்தப்பட்டவருடையதா என்பதை கண்டறிய அவரது DNA பயன்படுத்தப் படலாமே தவிர அவரது தனிப்பட்ட பண்புகளையோ அல்லது அவரது நோய் பற்றிய விபரங்களை அறிவதற்காக ஆய்வுகள் பாவிக்கப்படக்கூடாது என்றும் கூறப்படுகின்றது.

30 வருடங்களாக தீர்க்கப்படாத வழக்குகளின் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள், பெருகிவரும் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய ஆயதமாக இந்த மரபணு சோதனை பயன்படுத்தப்படுகின்றது, ஆனாலும் இதனால் குற்றங்கள் முற்றாக தடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.

மரபணுக்களின் பயன்கள்
குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி வேறு அறிவியல் நிரூபணங்களுக்கும் DNA சோதனைமுறை பயன்படுத்தப்படுகின்றது. 1917 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகமகாயுத்தத்தில் போரிட்டு இறந்த அவுஸ்திரேலிய வீரர் ஒருவரது உடல் 90 ஆண்டுகளிற்குப்பின்பு அவரது மருமகளின் DNA உதவியுடன்; அடையாளம் காணப்பட்டு இராணுவ மரியாதையுடன் 2007 ம் ஆண்டு பெல்ஐயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Steven Spidberg இயக்கிய ஓர் ஆங்கிலப்படத்தில் குற்றம் செய்ய நினைப்பவருடைய மூளையில் அக்குற்றத்திற்கான எண்ணக்கரு தோற்றம் கொள்வதை கணணியில் சேமிக்கப்பட்டிருக்கும் அவருடைய மூளைக்கலன்களின் (Brain Cells) வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்களை வைத்து பொலீஸ் கண்டறிகிறது.

குற்றம் செய்தபின்பு குற்றவாளியைத் தண்டிக்கும் தற்போதையமுறை முன்னேற்றமடைந்து குற்றத்திற்கான எண்ணம் உருக் கொள்ளும்போதே குற்றவாளி தண்டிக்கப்படும்முறை நடைமுறைக்கு வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தற்போது உங்கள் உடல் ரீதியான பௌதீக இயக்கத்தை (physical movement) கட்டுப்படுத்தி, விசாரணைக்கு உள்ளாக்கும் சட்டம் (பொலீஸ்) உங்களுடைய சிந்தனையைக் கேள்விக்குள்ளாக்கும் பொலீஸாக (thought police) விரைவில் மாறிவிடும். DNA தொடர்பான ஆய்வுகளின் முன்னேற்றம் இந்நிலையை உருவாக்கிவிடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

DNA சோதனையின் பயன்பாடு அரசியலிலும் இல்லாமல் இல்லை. மானுடவியல் அறிஞரான திரு சுப்பிரமணியம் விசாகன் (
svisakan@yahoo.co.uk) தனது ஆய்வுகளில் DNA மாதிரிகளைப்
பயன்படுத்தி சிங்களவர் ஆரிய வம்சவழித் தோன்றல்கள் என்ற வரலாற்று மோசடியை அம்பலமாக்கியுள்ளார். இலங்கைத்தீவில் வாழும் சிங்களவர்களும், தமிழர்களும் ஒரே இனமரபுகூறில் இருந்து வந்தவர்கள் என்று தனது ஆய்வுமூலம் நிரூபித்துள்ளார். ஆவரது ஆய்வின் முடிவுகளடங்கிய புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது.

மரபணு ஆய்வு முறையைப் பயன்படுத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த விஞ்ஞானிகளின் பிறப்பு இறப்பு என்பனபற்றிச்கூட ஆராயும் தன்மை வந்துவிட்டது அத்துடன் மருத்துவத் துறையில் புதிய நோய் தடுப்பு மருந்துகளும், சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்ட்டுள்ளன. DNA ஐ தொடர்புபடுத்தி நீரிழிவு, புற்றுநோய், இரத்தக்; கொதிப்பு போன்ற நோய்களை குணப்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தாவரங்களில் மரபணு மாற்றம் செய்து புதிய வகையான உணவுகள் சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டது. நோய் எதிர்ப்பு, அதிக நாட்கள் உணவுவகை கெடாமல் இருப்பதற்கான உத்திகள்; புதியநிறச் சேர்க்கைகள் போன்றவையும் DNA ஆய்வு முறைகளால் ஏற்பட்ட பலன்களாகும்.

குழந்தையின் பிறப்பிலேயே அந்தக் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கக்கூடிய நோய்கள் பற்றிய அறிவுறுத்தல்களை அக்குழந்தையின் DNA அமைப்பின்மூலம் கூறமுடியும். மரபணு மாற்றத்தைப் பயன்படுத்தி பழவகைகள், காய்கறிகள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றில் விருப்பியவாறு மாற்றங்களை ஏற்படுத்துவது போல் மனித இனமும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு தமது சந்ததியினரை உருவாக்க நினைத்தால் வர்க்கரீதியில், சமூகரீதியில் பெரியதோர் ஏற்றத்தாழ்வை எதிர்நோக்கநேரிடலாம்.

கருவிலிருக்கும்போதே குழந்தையின் DNA அமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெற்றோர் தாம் விரும்பும், எவ்விதக் குறைபாடும் இல்லாத பரிபூரணக் குழந்தையை (perfect child) பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எதிர்காலத்தில் இம்முறையில் பிறக்கும் ஒரு குழந்தை இரண்டு வயதில் தேவாரம் பாடினால்கூட வியப்பில்லை.

மனிதஇனத்தின் குண இயல்புகள் மற்றும் உளவியல் நிலைகளில் DNA பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மிகப்பெரிய தடயமாக பாவிக்கப்படும் DNA பற்றிய ஆய்வுகளின் முன்னேற்றத்தால் ஒரு காலத்தில் மனிதஇனத்திற்கு மரணமே இல்லை என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செவ்வாய், ஜனவரி 06, 2009

'ஜெய்ப்பூர் கால்களின்' பிரம்மா: 'டாக்டர்' சேதி!

ஆக்கம்: - சௌந்தரி
செயற்கைக் கால் என்றவுடன் நினைவுக்கு வருவது இந்தியாவில் ராஐஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம். செயற்கைக் கால்களை முதல் முதலாக உருவகப்படுத்தி கால்களை இழந்து நடமாட முடியாமல் இருந்தவர்களுக்கு அவற்றை முறையாகப் பொருத்தி மீண்டும் அவர்களை நடமாட வைத்ததில் முன்னணியில் நின்றவர்
Dr Pramod Karan Sethi அவர்கள்.
டாக்டர் சேத்தி என்று அழைக்கப்பட்ட Dr P K Sethi ஐனவரி 05 ம் திகதி 2008 அன்று
தனது 80 ஆவது வயதில் காலமானார். இறந்தபின்பும் சாதனைகளால் நினைவில் நிற்பவர்கள் வரிசையில் டாக்டர் சேத்தியும் ஒருவர்.
டாக்டர் சேத்தியின் வாழ்நாள் பங்களிப்பு உலகில் பலரது வாழ்கைக்கு ஊன்றுகோலாக இருந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையில் கண்ணிவெடி விதைகளினால் கால்களை இழந்த எமது உறவுகள் எழுந்து நடமாட முக்கிய காரணகர்த்தாவாக இவர் இருந்துள்ளார்.
ஆரம்பகாலத்தில் இவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக் கால்கள் மக்களது அன்றாட பாவனைக்கு சற்றுச் சிரமமாக இருந்தாலும் பின்பு 1970 ம் ஆண்டுகளில் மிகவும் இலகுவாக பாவனைக்கு ஏற்றவாறு நிவர்த்தி செய்யப்பட்டு உலகமட்டத்தில் பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன. செயற்கைக் கால்களைப் பொருத்தியவர்கள் கடினமான வேலைகளைக்கூட மற்றவர்களது உதவியின்றி தனியாகவே செய்யக்கூடியதாக இருந்தது. உதாரணமாக மரம் ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், போட்டிகளில் கலந்துகொள்ளுதல் போன்ற கடின வேலைகளைக் கூட அவர்களால் சிரமமின்றி செய்யமுடிந்தது.
ஒரு காலை இழந்த சினிமா நாட்டிய நடிகை மயூரி ஜெய்ப்பூரில் பொருத்தப்பட்ட செயற்கைக் காலுடன் திரைப்படத்தில் நடனம் ஆடியதையும் மறந்திருக்கமுடியாது.
ஜெய்ப்பூர் செயற்கைக்கால்கள் உள்நாட்டு வளங்களைக் கொண்டு உருவாக்கப்டுவதால் குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு முறை பொருத்திய கால்களுடன் குறைந்தது 5 வருடங்களுக்கு பிரச்சனைகள் ஏதுமின்றி இயங்கக்கூடியதாகவும் இருந்தமை டாக்டர் சேத்தியின் செயற்கைக் கால்களின் தனித்தன்மை ஆகும். அதுமட்டுமல்ல போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த அடித்தள மக்களுக்கு இலவசமாக செயற்கைக் கால்கள் பொருத்தப்படட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மட்டுமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலநாடுகளிலும் செயற்கைக்கால்கள் இன்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஈராக், கென்யா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் செயற்கைக் கால்களின் பாவனை அதிக அளவில் இருக்கின்றது.
டாக்டர் சேத்தி 1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் வரணாசியில் பிறந்தார். இவரது தந்தை பௌதீகத் துறை பேராசிரியர். இந்தியாவில் டாக்டர் படிப்பை முடித்து லண்டன் மாநகரத்தில் ஆராச்சி படிப்பை தொடர்ந்தார். பின்பு Sawai Man Singh Hospital இல் தலைமைப் பேராசிரியராக பணிபுரிந்தார் (Head and Professor of Orthopaedic Department). பத்மசிறீ விருது, விஞ்ஞான சாதனையாளருக்கான கின்னஸ் விருது, சிறந்த சமூகத் தலைமைத்துவத்துக்கான றேமன் மக்சேசே விருது போன்ற பலவிருதுகளையும் பெற்ற சாதனையாளர் டாக்டர் சேத்தி அவர்கள்.
தற்கால போர்ச்சூழலில் குறிப்பாக இலங்கையில் செயற்கைக் கால்களின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துவரும் வேளையில் கால்களை இழந்த பலரது வாழக்கைக்கும் மீண்டும் உயிர்கொடுத்த டாக்டர் சேத்தியை நினைவுகூருவது தேவையானதொன்றாகும்.
சில வெற்றிடங்களை நிரப்புவது சுலபம் ஆனால் ஒரு சாதனையாளன் விட்டுச்சென்ற வெற்றிடம் நிரந்தரமாகவே இருக்கும். டாக்டர் சேத்தி காலத்தின் ஓர் அடையாளம் அவரது முயற்சியும் வெற்றியும் உலகம் முழுவதும் வாழும் எத்தனையோ உயிர்களின் வாழ்க்கையில் சாட்சியாக நடமாடுகின்றது என்பது முற்றிலும் உண்மை.

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்!

ஆக்கம் சௌந்தரி
ஆங்கிலேய விஞ்ஞானியான சார்ல்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுகளுடன் உருமாற்றங்கள் ஏற்படுகின்றது என்ற உயிரியல் கோட்பாட்டை வகுத்து இயற்கை மற்றும் உலகத்தின் படைப்புப் பற்றிய சிந்தனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவர் இங்கிலாந்தில் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் திகதி பிறந்தார். இற்றைக்கு 199 ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமவளர்ச்சி பற்றிய கொள்கையை நிலைநிறுத்திக் கூறி கடவுளால்தான் உலகமும் உலகத்தில் உள்ள உயிரணுக்களும் படைக்கப்பட்டது என்ற திடமான நம்பிக்கையில் மாற்றத்தை கொண்டுவந்தார்.

இயற்கை விஞ்ஞானியான டார்வின் பீகிள் என்ற அரசுக்கப்பலில் 1831 ம் ஆண்டு தனது 22வது வயதில் உலகத்தைச் சுற்றி இயற்கை வளங்களைப்பற்றிய ஆராய்சிப் பயணத்தில் ஈடுபட்டபோது ஏராளமான புதைபொருள் பகுதிகளையும், புதிய தாவர விலங்கினங்களையும் கண்டறிந்து ஆராய்ந்தார். தொடர்ந்த 5 வருட ஆராய்சிப் பயணத்தில் கண்டறிந்த குறிப்புகளுடன் லண்டன் திரும்பியவர் அவைபற்றி பல நூல்களை எழுதியிருந்தார்.

1859 ம் ஆண்டு டார்வின் எழுதிய இனங்களின் தோற்றம் (Origin of Species) என்னும் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆராய்சிகளின் அடிப்படையிலும் அல்பிரட் ரசல் வாலஸ் என்ற இங்கிலாந்து இயற்கை விஞ்ஞானியின் ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையிலும் உருவானதுதான் இந்த அறிவியல் நூல். இந்த நூலைப்போன்று வேறு எந்த நூலும் உலக மக்களிடம் பெரிய அளவில் சர்ச்சையையும் விமர்சனத்தையும் பெற்றதில்லை. இந்த நூலில் டார்வின் எழுதியவைதான் பின்பு டார்வின் கொள்கை என்று பெயர் பெற்று இன்றும் நிலைத்து நிற்கிறது.

பரிணாம வளர்ச்சிபற்றிய டார்வினின் குறிப்பு!
உலகத்தில் உயிர்வாழும் அனைத்துமே எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது; தொடர்ச்சியான காலமாற்றத்துடனும் சூழல் மாற்றத்துடனும் தன்னை தக்கவைத்து வாழக்கூடிய குணஇயல்புகளை உடையவை மட்டும் தொடர்ந்து வாழ்கின்றன; வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதவை எல்லாம் அழிந்து விடுகின்றன என்ற கூர்ப்பின் அல்லது பரிணாமத்தின் அடிப்படைத் தத்துவத்தை தனது ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தினார்.

இயற்கையின் மாற்றத்திற்கும் மனிதனின் இயல்புகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு; மனிதஇனமும் உலகில் உள்ள மற்றய உயிரினங்களில் ஒன்றுதான் என்ற உண்மை என்பன பற்றியும் மக்களிடையே சிந்தனையைப் பரப்பின அவரது நூல்கள்.

உயிரியில் மானிடவியல் பற்றிய மக்களது கருத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்தது டார்வினின் கொள்கை. கடவுள்தான் உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிரினங்களையும் படைத்தார் என்ற நம்பிக்கையை ஆட்டம்காண வைத்தது. வாலில்லாக் குரங்கு போன்ற விலங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்று காரசாரமான வாக்கு வாதங்களை உருவாக்கியது. மதகுருமார்கள் டார்வினின் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மக்களிடையே சமயப்பற்று அற்றுப்போகும் என்ற அச்சத்தினால் டார்வின் கொள்கையை முற்றாக எதிர்த்தார்கள்.
மதங்களில் காணப்பட்ட மூட நம்பிக்கைகளை அடியோடு மாற்றாவிட்டாலும் குறைத்துக்கொள்ள உதவியது இவரது கொள்கை. இன்றும் சில மதக்கொள்கைகள் காலத்துக்கு பொருந்தாமல் இருக்கின்றன. ஆனாலும் இக்கொள்கைகளை கடைப்பிடிக்கும் மனிதக்கூட்டம் விகிதாசார அடிப்படையில் குறைவாக இருப்பது மனித இனத்தின் தொடர்ச்சியான சிந்தனையின் ஏற்றத்தை காட்டுகிறது.

மனிதன் தனது மரபு உரிமைகளை காப்பாற்றும் செய்கையும் டாவினின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவைதான். மனித இனத்துக்கான இயல்புகளை காப்பது மனிதஇனத்தின் தொடர்ச்சியான இருப்புக்கு முக்கியமானதாகும்.

இயற்கையோடு சார்ந்து வாழ்வதை எமது எண்ணங்களில் விதைத்த மனித இனத்தின் உருமலர்ச்சிபற்றிய டார்வினின் கொள்கையை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்கள் பின்பு ஏற்றுக் கொண்டார்கள். டார்வினின் கொள்கையானது அழிப்புக் கோட்பாடு அல்ல உயிர்வாழ்வதற்கான உயிரியல் கோட்பாடு. அவரது கோட்பாடுகள் பற்றி இன்றும் சர்ச்கைகள் தோன்றியவண்ணம் இருப்பினும் அவரது கொள்கைதான் மனிதனது நிலைகுறித்து மனிதனது சிந்தனையை மாற்றியமைத்தது என்பது வெளிப்படை உண்மை.
சித்திரை மாதம் 19 ஆம் திகதி 1882 ம் ஆண்டு தனது 73வது வயதில் டார்வின் இறந்தார். மனிதத்தையும் இயற்கையையும் இணைத்து தனது ஆய்வுகளின் அடிப்படையில் கோட்பாட்டை உருவாக்கி உலகத்தையே சிந்திக்க வைத்த விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வினது 200 வது பிறந்தநாளை பெப்ரவரி 12ம் திகதி 2009 ம் ஆண்டு இந்த உலகமே கொண்டாடும்.

திங்கள், ஜனவரி 05, 2009

காத்திருப்பு

யன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்
இருண்ட இரவு என் மனசைப் போல;
ஊர் உறங்கியும் கண்கள் உறங்கவில்லை
மூடிய கண்களுக்குள் கனவுகளின் தொடர்ச்சி
னவுகள் தந்த வெளிச்சத்தில் காலத்தை ஓட்ட முடியவில்லை
நினைவுகள் சுட்ட காயத்தை கண்ணீரால் கழுவியும் ஆறவில்லை
ஏன் இந்த நாட்கள் எல்லாம்
என் தேசத்தின் விடியலைப் போல் நீள்கிறது
நம்பிக்கையீனம் நாற்புறமும் போராடி வெல்கிறது
தனிமையின் வெறுமை நிஜத்தையும் கேள்வியாக மாற்றியது
ஒரு கணம் அழுகிறது மனசு
மறு நிமிடம் அடை காக்கும் தாயாகச் சுரக்கிறது
ஏனிந்த போராட்டம்?
கசியும் என் இதயத்துக்கு கட்டுப்போட
கரைகின்ற காலத்தால் முடியுமா?
இருண்ட இரவில் தோன்றும் வெள்ளிபோல்
எனக்குள்ளும் விடியல் தோன்றுமா?
விடியலுக்கு காத்திருப்பு அவசியம்தான்
எதுவரை என்பதுதான் புரியவில்லை?
சௌந்தரி

வியாழன், ஜனவரி 01, 2009

நல் வார்த்தை

உங்களது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் யாரையும் அல்லது எதனையும் சார்ந்து இல்லாதபோதுதான் நீங்கள் சுதந்திரமானவர். இல்லாவிடில் நீங்கள் சிறையில் இருந்தால் என்ன; தெருவில் திரிந்தால் என்ன; உங்களுக்குள் நீங்களே சிறைவாசியாகத்தான் இருப்பீர்கள்!