புதன், ஜனவரி 14, 2009

அனாதைப் பொங்கல்

சௌந்தரி
அன்று
உழவர்வாழ் கிராமத்தில்
தாயன்பின் அணைப்பில்
கோழிகூவ துயில் எழும்பி
அழகான வயல்வெளியில்
அமுதமாக தேங்கிநிற்கும்
அத்துளுக் குளத்தினிலே
கவலையின்றி நீச்சலடித்து
புத்தாடை உடுத்தி புதுரிபன் கட்டி
வானவெடி வாத்தியத்தில்
கதிரவனைத் துயில் எழுப்பி

முன்முற்றம் அம்மா பெருக்க
மாக்கோலம் அக்கா போட
ஆடிப்பாடி அறுகம்புல் பிடுங்கி
அப்பாவிடம் நான் கொடுக்க
கள்ளச்சிரிப்போடு மேனியெங்கும் நீறிட்டு
மஞ்சள்மா பிள்ளையாரை மனசார வணங்கி
புதுமண்ணடுப்பில் புதுப்பானை வைத்து
கதிரவன் திசைபார்த்து புத்தரிசிபோட்டு
பாலோடு சக்கரையும் பாகும் பருப்புமிட்டு
பால் பொங்கும் மகிழ்ச்சியிலே
பொங்கலோ பொங்கலென்று கூடிக்குரல் கொடுத்து
வாழையிலை கழுவி வானவர்க்கு முதல் படைத்து
சுற்றங்கள் சூழநின்று வாழைப்பழத்தோடு
வாயெல்லாம் சிரிப்பாக பொங்கலுண்ட காலமது

இன்று
அந்நிய தேசத்தில்
பொங்கல் என்றே தெரியாமல்
நண்பர்கள் வாழ்த்துச் சொல்ல
தமிழ்க்கடைக்கு ஓடிச்சென்று
கையில் கிடைத்ததை வாங்கி
இயந்திரகதியில் பொறுமையிழந்து
பொங்கினேன் பொங்கலொன்று

இங்கே
புதுப்பானையில்லை புதுஅடுப்புமில்லை
புதுஅரிசியில்லை அட புதுஉடுப்புமில்லை
கிடைத்த பாத்திரத்தில் சக்கரையும் பாலுமிட்டு
தேவைக்கு அதிகமாக தேவையற்றதெல்லாம் போட்டு
கிண்டிக் கிழறி ஆத்திரத்தில் பொங்கிய
வேடிக்கைப் பொங்கலிதை
வெள்ளித்தட்டில் படைத்து தனியாக உண்ணுகிறேன்
கூடிக்குலாவிக் கதைபேச உறவுகள் அருகிலில்லை
பாடிப்பழகி பகிர்ந்துண்ண பக்கத்தில் சொந்தமில்லை

தைப்பொங்கல் தமிழருக்கோர்
தனிப்பொங்கல்
எனக்கிதுவோ அர்த்தமில்லா அனாதைப்பொங்கல்

6 கருத்துகள்:

 1. "இன்று
  அந்நிய தேசத்திலே
  பொங்கல் என்றே தெரியாமல்
  நண்பர்கள் வாழ்த்துச் சொல்ல"
  உங்கள் உள்ளார்ந்த ஏக்கம் கவிதையில் அழகாக வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

  பிணைப்பால் ஏற்படும் உறவுகளைவிட பிறப்பால் ஏற்படும் உறவுகள் நிலைத்து நிற்கும் என்பதும் ஒரு வாதம்.
  அது எப்படி இருந்தாலும் கருவறை முதல் கல்லறை வரை எமது வாழ்க்கை உறவுகளுடன் தான் இணைகின்றது. உறவுகள் இல்லாது வாழும் வாழ்வு முழுமையான வாழ்வாக என்றும் அமைந்துவிடாது. சில நினைவுகள் அழியாதவை எத்தனை கோடி பணம் கொடுத்தும் மீளப் பெறமுடியாதவை.

  பதிலளிநீக்கு
 3. நானும் அத்துளுவிலை குளிச்சவன் தான், இப்ப குளிக்க இயலாது, அது நன்னீர் திட்டம் என்று நீர்ப்பாவனை அதிகரித்திருக்கின்றது. விடியும் வரை " மாங்கிளியும் மரம் கூடு திரும்ப தடையில்லை, நாங்க மட்டும் ......,
  என்று இன்னொருவன் தேசத்திலை... " காத்திருப்போம்

  பதிலளிநீக்கு
 4. அத்துளுக் குளத்தில் குளிக்க முடியாது என்பது புதிய தகவல். நன்றிகள் பல காரூரன்=(கரவை ஊரான்)

  "மாங்கிளியும் மரம் கூடு திரும்ப தடையில்லை, நாங்க மட்டும் ........,என்று இன்னொருவன் தேசத்திலை... "

  யதார்த்தமான வரிகள்

  பதிலளிநீக்கு
 5. மிக அற்புதமான கவிதை.

  அனுபவித்து விவரித்திருக்கும் அந்த நாளைய பொங்கல் நீங்கள் பெற்ற அளவற்ற ஆனந்தத்தையும், மனம் வெதும்பி வடித்திருக்கும் இந்நாளின் பொங்கல் உங்கள் வேதனையையும் உணர்த்துகிறது. விடுங்கள், காலச் சுழற்சியில் இவை யாவும் தவிர்க்கவே முடியாதவை ஆகி விட்டன.

  பதிலளிநீக்கு
 6. நன்றி சகோதரி!

  //காலச் சுழற்சியில் இவை யாவும் தவிர்க்கவே முடியாதவை//

  ஆறுதலான வார்த்தைகள். மனத மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை போலும். அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

  பதிலளிநீக்கு