சனி, ஜனவரி 29, 2011

கவிதை பேசும் நேரம்

அவுஸ்திரேலியாவில் 24 மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ் வானொலி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். எனக்கும் இந்த வானொலிக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கின்றது. கடந்த 9 வருடங்களாக சிறுகச் சிறுக எமக்கிடையேயுள்ள பிணைப்பு வலுப்பெற்று இன்று இறுக்கமான பிணைப்பாகிவிட்டது. வானொலியும், வானொலியைச் சார்ந்த நண்பர்களும், அன்பான நேயர்களும்தான் புலம்பெயர்ந்த வாழ்வில் என் உறவுகள் என்றே கூறலாம்.


'ATBC' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழர்களுக்கான பிரத்தியேக வானொலியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இரு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றேன்.

இணையத்தளத்தில் எமது வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழலாம். என்னோடும் சக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுடனும் நீங்களும் அழைப்பெடுத்து பேசலாம். அதற்கான இணையத்தளம் http://www.atbc.net.au/ மற்றும் தொலைபேசி இலக்கம் 02 9688 3188.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவிதை பேசும் நேரம் என்ற நிகழ்ச்சியில் நாம் வாசித்து ரசித்த கவிதைகளையும் உணர்ந்து எழுதிய கவிதைகளையும் வானலைகளில் பகிர்ந்து கொள்வோம். அந்த வகையில் இன்று மழை என்ற தலைப்பில் கவிதைகளை பரிமாறிக்கொண்டோம்.

சிட்னியில் கடந்த சில நாட்களாக கொதிக்கும் வெய்யில் அதே நேரம் அவுஸ்திரேலியாவின் இன்னுமோர் பகுதியாகிய பிறிஸ்பேர்ணில் வெள்ளத்தினால் பெரும் இழப்பு. வெயிலில் தகிக்கும் போது மழை என்ற சொல்லே குளிரவைக்கும் அல்லவா? இதோ மழை பற்றிய எனது கவிதையொன்றுஒன்றின் மறைவில்
மற்றொன்றின் உற்பத்தி
சுடுகின்ற வெய்யில்
பொழிகின்ற மழை
ஒன்று மாறியொன்று

ஒன்றையொன்று துரத்தும்
மழையோடு நீராடி
மணலோடு விளையாட
சிறுவயதில் ஆசை
பெண்ணாக பிறந்ததனால்
மழையோடும் பேதம்
நடுமுற்றத்தில்
குதித்துக் கூச்சலிட்டு
விளையாடும் தருணம்
அம்மாவின் கூச்சலில்
என் உற்சாகம் கரையும்
பொதுவான மழைக்கு
ஆண் என்ன? பெண் என்ன?
ஆனாலும் என்ன
அம்மாவின் எதிர்ப்பில்
என்னோடு மழையும்
சோவென்று அழுதது

இன்றும் மழை
கட்டுப்பாடுகள் ஏதுமில்லை
விரும்பியபடி நனையலாம்
விதம்விதமாய் கைகுலுக்கலாம்
என் கனவுகளை நிறைவேற்ற
காற்றோடு போராடி
காத்திருக்கின்றது கனமழை

வேலைக்குப் போகும் நேரம் மழை
நனைந்தால் போவதெப்படி
வேலை முடியும் நேரமும் மழை
நனைந்தால் வீடு சேருவதெப்படி
வீட்டில் இருக்கும் போதும் மழை
வெளியில் நின்று நனைந்தால்
வெகுளிப்பெண் என்ற வீண்பழி
மழையில் நனைவதென்பது
அத்தனை சுலபமானதல்ல
தாழ்வாரத்தில் ஒதுங்கி
தலைகுனியும் எனைப்பார்த்து
அழுகின்றது பேய் மழை

வரிவரியாக வந்துவிழும்
வண்ணத்துளிகளை
ரசிப்பதோடு நிற்கின்றது
மழையோடு தொடர்ந்த
என் மானசீகக் காதல்
மழையும் நானும் - இன்று
கடந்தகால உறவுகள்
ஆனாலும் தருணம் பார்த்து
கண்களைமூடி
கதகதப்பில் உணர்கின்றேன்
கொட்டும் மழையில்
நான் நனைந்த காலங்களை
ஆக்கம் சௌந்தரி

கவிதை எழுதுவது எனது ஆர்வங்களில் ஒன்று. எனக்குள் ஏற்படும் சோகம் மகிழ்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்துவதற்காக நான் பாவிக்கின்ற ஆயுதம் கவிதை. எனது அனுபவங்கள் எனது விருப்பங்கள் எனது சிந்தனைகள் இவற்றை எனக்குத் தெரிந்த வடிவில் விரும்பியபோதெல்லாம் எழுதுவேன். எனது கவிதையை வானலைகளில் கேட்டவுடன் எனது உறவுகளும் தமது கவிதைகளுடன் அழைப்பெடுத்தனர். அவர்களது திடீர் ஆக்கங்களையும் இத்துடன் இணைக்கின்றேன் வாசித்துப்பாருங்கள்.

எனது குரலைக் கேட்டவுடன் உற்சாகம் அடைபவர்களில் செல்வி முக்கியமானவர். ஆரம்பத்தில் வானலைகளில் கதைப்பதற்கே கூச்சப்படுவார். இப்போதெல்லாம் கவிதை வரிகளைக் கோர்க்கத் தொடங்கிவிட்டார். மழை பற்றிய அவரது கவிதையொன்று


மழை…..
வெய்யிலைவிட உன்னை
எனக்கு மிகவும் பிடிக்கும்
நீ அதிகமாக பொழிந்து
அழிவை ஏற்படுத்துகையில்
உன்னைத் திட்டுவார்கள்
அதே மக்கள்
தண்ணீர் தண்ணீரென்று
பாலைவனம் கொண்ட
வறண்ட இடங்களில்
உன்னைத் தேடுவார்கள்
பல பூசைகள் வைத்து…..

ஆக்கம் செல்வி

ஓயாமல் பெய்யும் மழை ஏற்படுத்தும் அழிவுகளால் பாதிப்படைந்து மழையை திட்டுகிறார்கள் ஆனால் மழை வராதபோது வறட்சியின் தாக்கத்தால் வாடி வதங்கி எத்தனை சடங்குகள், யாகங்கள், காணிக்கைகள் என்று வேண்டி நிற்கின்றார்கள்.

மழை பெய்தால்

நிலம் நனையும்
நிலம் நனைந்தால்
பயிர் துளிர்க்கும்
பயிர் துளிர்த்தால்

பசி நீங்கும்
பசி நீங்கினால்
பூமி மகிழும்
மழையின் மகள்தான்
மகிழ்ச்சியோ….
ஆக்கம் மேர்ளின்

மழைப் பெண்ணின் மகள்தான் மகிழ்ச்சியோ, கோபமும் இன்னுமோர் பெண் போலும்.மழைக் கவிதை கொண்டு வந்த
கவிதை மலைகளே
மழையைத் திட்டாதீர்கள்
இயற்கை தன் வேலையை
சரியாகத்தான் செய்கிறாள்
மனிதன்தான்
பிழையான இடத்தில்
வீடுகளும் சாலைகளும்
வீம்போடு கட்டுகிறான்
வானம் இழுத்த நீரை
வைத்திருக்க முடியுமா
கொட்டித் தீர்க்கத்தானே வேண்டும்

இயற்கை தன் தொழிலை
மில்லியன்ஸ் பில்லியன்ஸ்
ஆண்டுகளாக செய்கிறாள்
மனிதா நீ
200 வருடங்கள்தான்
வீடுகள் அமைக்கிறாய்
சாலைகள் அமைக்கிறாய்
மனிதர்களை சாடுங்கள்
மழையை சாடாதீர்கள்
அவள் கண்ணீரை
கொட்டித் தீர்க்க விடுங்கள்

மனிதா
இயற்கையுடன் முண்டாதே
தடைகளை போடாதே
அவளை சுதந்திரமாக ஓடவிடு
கடலைச் சேரவிடு
இது மழைக்கு மட்டுமல்ல
இயற்கையனைத்துக்கும் பொதுவானது

ஆக்கம் சிறீதரன்

இயற்கையை சீற்றம் கொள்ள வைப்பது மனிதர்களே. இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்கு மனிதர்கள் முயற்சிக்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நச்சு வாயுக்களின் உற்பத்தி, அணுஆலைகளின் ஆக்கிரமிப்பு இவையெல்லாம் இயற்கையின் சீரை குலைக்கின்றன.

அதுமட்டுமல்ல அணைக்கட்டுக்கள் அதிக வெள்ளத்தால் உடையக்கூடும் என்று தெரிந்தும் அதற்கு அண்மித்த பகுதியில் மாட மாளிகைகளை கட்டுபவர்களையும் காடுகள் எரியும் என்று தெரிந்தும் அந்தப்பகுதியில் வலிந்து சென்று குடியிருப்பவர்களையும் என்னவென்று சொல்வது என்று தனது வருத்தத்தை தெரியப்படுத்தினார் சிறீதரன்.


காரிருள் தோன்ற
கீற்றான மின்னொளியில்
உன்வழி கண்டு
கண்டிடும் வழியில்
கேட்டிடும் முழக்கத்தில்
முத்துக்களாய் மூடிடுவாய்
மாநிலம் மகிழ….

ஆக்கமும் நீ
அழிவும் நீ
இனம்புரியா அமைதியும் நீ
நின் வரவின்பின்னால்
புரிந்தன இவை எமக்கு

உன்னிடம் ஓர் கேள்வியொன்று
இருளில் ஒழிந்து இறங்கும் போது
ஒளி போன்ற வெண்மையாய் பொழிவதேனோ?

மனிதா
இருளில் ஒழிந்த உள்ளத்தில்
மின்னல் தோன்றவிடு
சிந்தனை மழை சீராகும்
சீராகும் சிந்தையில்
சிந்திடு சிரிப்பெனும் மழையை
சிரிப்பெனும் மழையில்
உறவுகள் வாழும்
உறவுகள் வாழ
உலகு வாழும்
நட்பெனும் மழையில்

முடிவில்
உண்டு வாழு நீ
மழையெனும் என்னால்
மானிலத்தில்
உண்டு வாழ்வு
நல்மன மழையென
பொழியவிடும்
மனிதனாம் உன்னால்
ஆக்கம் மெர்சி

மழை எல்லோருக்குமாகத்தான் பொழிகின்றது. மழை பெய்வது குறித்து சிலர் கவலைப்பட்டும் சிலர் கவலையற்றும் இன்னும் சிலர் நனைந்து மகிழ்ந்தும் இன்னும் சிலர் கவனமாக நனையாமல் குடைக்குள் ஒளிந்தும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

மழை எந்தப் பெரிய போராட்டத்தோடு வந்தாலும் வெண்மையாகத்தான் வருகின்றது. அது என்றுமே நிறம் மாறுவதில்லை. மனிதன் மட்டும்தான் அடிக்கடி நிறம் மாறி குணம் மாறி தடுமாறுகின்றான். இயற்கையின் ஆக்கமான மழை மானிட வாழ்க்கைற்கு பல படிப்பினைகளைக் கூறுகின்றது அவற்றின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் மாநிலத்தில் உண்டு வாழ்வு என்று கூறியிருந்தார்.


மேகமே
ஏனின்று சோகமாய் நீ அழுகின்றாய்
தெருவெங்கும் பூவாய் நீ விழுகின்றாய்

இருபத்தியொன்பதாம் (29) நாளிகையின்று

கருவுற்றிருந்த நீயின்று
கருமேகம் சூழ
சூழுரைத்து
பகை வேரறுக்க

இடிமின்னலாய் உறுமி
நீ உருகுகின்றாயா…..

இது தமிழ்மானம் சுமந்த மழைக் காலம்

தெருவெங்கும் கருகுகின்ற வேளை
விடிவுவரும் நேரமென
இடிமின்னல்
வானைக் கிழிக்கிறதே
பகை ஓடி ஒழிக்கிறதே
ஏனென்று நான் அறியலாமா?

இன்று முத்துக்குமரன்
தீயில் எரிந்தநாளென்று
கண்ணீர் தூவுகின்றாயா…..

ஆக்கம் கௌத்தம்

இன்று தைமாதம் 29 ம் திகதி தமிழர்களின் நலன் வேண்டி தன்னையே எரித்துக்கொண்ட முத்துக்குமாரின் நினைவுநாள். கணணீர் மழையை தூவிவிட்டு சென்றார் கௌதம்.


மழையைப் பாடும் மனிதா
மனதில் நினைத்துப் பார்
மழை எங்கிருந்து வருகிறது
மண்ணுக்காய் போராடும் மனிதா
மழை இல்லையென்றால்
மண்ணில் வாழத்தான் முடியுமா
மழை வேண்டுமென்றால்
மண் வேண்டுமென்றால்
மழையைத் தந்து
வளமூட்டும் மண்ணில்
வாழ நமக்கு
கடல் வேண்டுமல்லவா
அதற்கும் போராடு……

ஆக்கம் சோனா

மழையின் ஆரம்பம் என்ன என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறி மழையின் உற்பத்திக்கு கைகொடுக்கும் கடலின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி கடலுக்காகவும் போராடுவோம் என்று கவிதையில் கூறினார் சோனா.

இப்படியாக பல உறவுகள் தங்களது சிந்தனைகளில் துளிர்க்கும் எண்ணங்களை வார்த்தைகளில் கொண்டு வந்து வானலைகளில் தவழவிட்டார்கள்.


கரு மேகத்தை கண்டவுடன் எனக்குள் சோகம் தொற்றிக்கொள்ளும். மழைத் துளிகளோடு என் கண்ணீர்த்துளிகளும் வழிந்தோடும். ஆனால் சோவென்று பொழியும் மழையைக் கண்டவுடன் உற்சாகம் பொங்கும். அதுவும் வெப்பகாலத்தில் மழை வந்தால் பெரிய வரவேற்புத்தான். வேண்டிய நேரத்தில் வேண்டாமலே வந்த சுகமல்லவா. குறிப்பாக இரவு நேரத்தில் இன்பக் களிப்பில் கட்டியணைத்த வண்ணம் கொட்டும் மழையில் கிட்டும் குதூகலம் சொற்களுக்குள் அடக்கலாமா?

அளவோடு வந்தால் அழகாக பூக்கும் பூக்கள் போல் எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கும். ஆக்ரோசமாக வருகின்ற மழையால் எத்தனை அழிவு. வாழுகின்ற இடத்திலும் வாழ்ந்து வந்த இடத்திலும் கடும் மழையின் பாதிப்பை கண்கூடாக பார்க்கின்றோம்.

மழையால் பாதிப்படைந்த இடங்களில் தெருவெல்லாம் வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. தண்ணீர் படையெடுப்பினால் அழிந்த உயிர்களின் வரவு செலவுகள் கணக்கெடுக்கப்படுகின்றன. படிப்பதற்கு செல்லும் பாடசாலைகளில் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தாகத்தை தீர்ப்பதற்கு நீருக்காக ஏங்கிய மக்கள் தண்ணீரைக் கண்டாலே பயத்தோடு தள்ளி நிற்கின்றார்கள். இயற்கையின் சீற்றத்தை என்னவென்று சொல்வது?


மழைமேகம் கறுத்து
மழைத் தூறலொன்று
மெதுவாக முத்தமிட
முத்தத்தின் தித்திப்பில்
மணம்வீசி வரவேற்றது மண்
பூமியெங்கும் துளித்துளியாய் மழை….

மழைப்பெண்ணே
நீ கண்ணீர் விடுவது எதற்காக
உன் காதலனும்
உன்னை விட்டுச் சென்றானோ?
மழை மொழி புரிந்தால்
காரணத்தை எனக்கும் சொல்வாயோ?
ஆனாலும் என்ன
உன் கலங்கிய மனதின்
இலவசக் கசிவு
பூமியின் தாகத்தை
இதமாக தணிக்கிறதே!

மேகத்தை துளைத்து
படபடவென பொழிகிறாய்
கனத்த மனசோடு அழுதாலும்
உன் சுகமான குளிர் பட்டு
உலகெங்கும் பரவசம்
கும்மென்ற இருட்டில்
சில்லென்ற காற்றோடு
சிணுங்கியபடி நீ வந்தால்
மகிழ்ச்சிக்கு எல்லையேது

மழைப் பெண்ணே
உன் குறும்புக்கும் அளவில்லை
உன் நடிப்புக்கும் குறைவில்லை
உன் வரவுக்கு தவமிருந்து
திட்டித் தீர்த்து சண்டையிட்டு
விட்டு ஒதுங்கும் நேரம்
சமாதானப் புறாவாகி
சமரசம் செய்வதற்கு
அதிசயமாய் நீ வருவாய்
அன்று நீ நாயகிதான்
வந்தவழி செல்லாது
தொடர்ந்து நீ சிணுங்கினால்
என்றும் நீ வில்லிதான்
அறிவிப்புக் கொடுக்காமலே
நினைத்தநேரம் வருகிறாய்
வறட்சியில் வாடும் போது
வராமலே போகிறாய்
நீ நல்லவளா கெட்டவளா
பிழைப்பும் கொடுக்கிறாய்
பிழைப்பையும் கெடுக்கிறாய்
யாரின் துண்டுதலில்
இப்படி நீ செய்கிறாய்

மாரி மழை கண்டால்
வாண்டுகளின் அட்டகாசம்
வண்ணக் குடைகளுக்கு மவுசு
தவளைகளின் கச்சேரி
உன் பார்வை பட்டு
பயிர்கள் பளபளக்கும்
உன் பாதம்பட்டு
பாதைகள் பழுதாகும்

மழைப் பெண்ணே
உன் மண்ணை மறக்காமல்
ஒருமுறையாவது வருவதனால்
உன்னிடம் ஈரம் இருக்கிறது
வறண்ட நிலத்தை வளமாக்குவதால்
உன்னிடம் நல்ல மனசும் இருக்கிறது
அடிக்கடி பூமியை முத்தமிடுவதால்
உனக்குள் காதலும் இருக்கிறது
உனக்கு கண்கள் மட்டும் இல்லையோ
சிலவேளைகளில்
அளவோடு நிறுத்தாமல்
அழுது கொண்டேயிருக்கிறாய்
உன் அழுகையில்
நானும் அல்லவா நனைகிறேன்
தொல்லை தரும் பெண்ணே
உன்னோடு பேசவேண்டும்
உன் தொலைபேசி இலக்கம்தான் என்ன?

ஆக்கம் சௌந்தரி

இது எனது சிந்தனையில் உருவான மழைக் கவிதை.

கவிதைகள் தரமானவை என்று கூறமுடியாது போனாலும் எங்கள் மனங்களை பிணைக்கின்ற உயிர்ப்பு இந்த வார்த்தைகளுக்குள் இருக்கின்றது. வாராவாரம் ஒரு மணி நேரம் முகம் தெரயாத பல உறவுகளை குரல் வழியாக சந்தித்து சிந்தனைகளை பகிர்ந்து அன்பு பாராட்டுவதற்கு கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பது பெரிய விடயமல்லவா?

அடுத்த வாரம் கலை என்ற பொருளில் கவிதைகள் கூறுவோம். நீங்களும் உங்களது சிந்தனை ஊற்றுக்களை கவிதை மொழியில் எழுதி இணைத்துவிடுங்கள். அவற்றை எனது உறவுகளுடன் மகிழ்வோடு பரிமாறிக்கொள்வேன். எங்களது கதம்ப மாலையில் நீங்களும் ஓர் அழகிய மலராக இணைந்து கொள்ளுங்கள்.

சௌந்தரி

4 கருத்துகள்:

 1. மழைக்குள் இத்தனை விஷயம் இருக்கிறதா?:)

  மிக நல்ல முயற்சி. தொடருங்கள்.படங்களும் பார்வைகளும் பகிர்வுகளும் நன்றாக இருக்கின்றன.

  இன்று தான் இப்படி எல்லாம் இருப்பதை அறிய முடிந்தது.மார்ச் மாதம் ஏன் ஒன்றையும் காணோம்?திரட்டிகளோடு இணைப்புக் கொடுத்தால் பலரும் வந்து பார்க்க வசதியாக இருக்குமே! மனமில்லையோ?

  பதிலளிநீக்கு
 2. நிஜ மழையைவிட உங்களைப் போன்றவர்களது பாச மழையில் நனைவது நிறையப் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 3. ரேணுகா ஜோன்11/12/2011 11:24 முற்பகல்

  நீங்கள வானொலி நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்று இந்த ஆக்கம் மூலம் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள். நான் தூர நாடு ஒன்றில் இருக்கிறேன். அதனால் உங்கள் நிகழ்ச்சிகள் எபபடி என்று கேட்டு ரசிக்க முடியாது. உங்களது கவிதைகள் எழுத்துக்கள் வாசிக்க இலகுவாக இருக்கின்றன. தொடர்நது எழுதுங்கள். என் போன்று வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்களுக்கு பொழுது களிக்க பெரிய உதவி செய்கின்றன. எனக்கு மழை மிகவும் பிடிக்கும். சிறிலங்காவில் இருக்கும் போது மழையில் நனைவேன்.

  பதிலளிநீக்கு
 4. எந்த நாட்டில் இருந்தால் என்ன இப்போதுதானே வீட்டில் இருந்து கொண்டே உலகத்தை சுற்றி வரலாம்
  atbc என்று google இல் அடித்துப் பாருங்கள் எனது நிகழ்ச்சியை கேட்பீர்கள். சனிக்கிழமை காலை 10 மணிக்கும்
  இரவு 10 மணிக்கும் எனது நிகழ்ச்சிகள். 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நான் எதையும் எழுதவில்லை
  உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்றேன் அதனால் தான் என்னையும் உங்களில் ஒருத்தியாக பார்கின்றீர்கள்
  எனக்கும் மழையில் நனைவது பிடிக்கும். இப்போதும் அந்த ஆசை இருக்கின்றது மனமும் இருக்கின்றது ஆனால் ஏனோ நனைவதில்லை
  ஏன் வீட்டில் இருக்கவேண்டும்? புரியவில்லை. நன்றி மீண்டும் வருக

  பதிலளிநீக்கு