வெள்ளி, செப்டம்பர் 25, 2009

பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்


கரவைக்குரல், குயிலைப்போன்ற உங்களது குரலைத்தான் கேட்டேன். உங்களது கூட்டையோ, முகத்தையோ, முகவரியையோ நீங்கள் அடையாளப்படுத்தவில்லை.


உங்களைப்பற்றி கொஞ்சம் அதிகமாக கூறியிருக்கக் கூடாதா? பெற்றோர்கள், சகோதரர்கள், கரவையில் நீங்கள் எந்த மூலை, அத்துளுக்குளம், சண்டில்குளம் என்று எதைப்பற்றியும் கூறவில்லையே. தண்ணியென்றால் பயமா? கரவையில் பிறந்தவர்களுக்கு அந்தப்பயம் எப்போதும் இருக்காதே?


தங்கம்மா ரீச்சரின் வீட்டிற்கு பக்கம், தங்கம்மா ரீச்சரின் வீடு மறந்துபோய்விட்டது, வயசு போய்க்கொண்டிருக்கின்றது அல்லவா? ஆனாலும் உங்களது வீட்டின் படத்தைப்ப பார்த்ததும் எங்கோ பார்த்ததாக ஞாபகம். மேலும் அறிய ஆவலாக இருக்கின்றேன்.

அவசரமாக அழைத்து விட்டீர்களோ என்ற எண்ணத்தோடு உங்கள் பதிவை சென்று பார்த்தேன். வியந்து போனேன். அதே மாணிக்கவாசகர் வித்தியாலயம்தான் எனது ஆரம்பப்பாடசாலை. ஒரு வித்தியாசம் எனது சித்தப்பா உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருந்திருக்கின்றார் ஆனால் எனக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். சித்தப்பா பாலச்சந்திரன் எனது அன்புத் தந்தை பண்டிதர் பொன் கணேசனின் இரண்டாவது தம்பி.

கோவத்துக்கும் தலைமை ஆசிரியர் பாலச்சந்திரனுக்கும் வெகு தூரம் யதார்த்தமான உண்மை. ஆரம்பக்கல்வியில் இருந்து 5ம் வகுப்புவரை மாணிக்கவாசகரில்தான் நானும் பயின்றேன். குறிப்பிட்டுக் கூறும்படியாக அழகான நினைவுகள் ஏதுமில்லை. அந்த வயசில் கல்வியில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை, முழுநேர விளையாட்டுத்தான், விளையாட்டென்று கூறும்போது சும்மா மண் சோறு கறி மற்றும் தாயம், கள்ளன் பொலீஸ், கிந்தித் தொடுதல், கொக்கான் என்று என்னும் எத்தனையோ விளையாட்டுக்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. 

அந்தக் காலத்து ஆசிரியர்கள் கையில் பிரம்புடன் என்னை நோக்கி வருவதை இன்றும் என்னால் மறக்கமுடியாது. குறிப்பிடும்படியாக எந்த ஆசிரியரும் என்னை கவரவுமில்லை, என்னைப் பாதிக்கவுமில்லை. நீங்கள் கூறியதுபோல் ஆச்சி ரீச்சர் ஞாபகத்தில் நிற்கின்றார். மிகவும் அன்பானவர். மற்றவர்கள் எல்லோரும் வம்பானவர்கள். சித்தப்பா வாய்ப்பாடு கேட்டு தலையில் குட்டுவார், சின்னப்பிள்ளை ரீச்சர் எல்லா இடமும் நுள்ளுவார், நல்லதம்பி மாஸ்டர் பிரம்பால் அடிப்பார், சிவகாமி ரீச்சர் எனது வீட்டிற்கே சென்று சௌந்தரிக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று கோள்மூட்டுவார். அப்பப்பா என்னைச்சுற்றி வில்லன்களும் வில்லிகளும்தான்.


இவர்களால் வீட்டிலும் வன்முறை தொடர்ந்தது. எனக்கு இரண்டு (தடியன்கள்) மாமாக்கள் வீட்டில் ஒருவர் மாறி ஒருவர் பாடம் சொல்லித்தருகின்றோம் என்ற நினைப்பில் என்னைக் காயப்படுத்தினர். முற்றத்து மண்ணெல்லாம் விறாந்தையில் கொட்டி எழுத்துச் சொல்லித் தந்தனர். ரோட்டில் உள்ள கல்லெல்லாம் பொறுக்கிவந்து கணக்குச் சொல்லித் தந்தனர். a, b,c,d சொல்லிக் கொடுக்கின்றேன் என்று தனது ஆங்கிலத்திறமையை நிரூபிக்க விரும்பும் எனது நடுவில் மாமா ஆங்கில எழுத்துக்களை நான் தப்புத்தப்பாக மனப்பாடம் செய்து கூறும்போதெல்லாம் தண்டனையாக  சுவரில் எனது மூக்கை தொட்டவண்ணம் நகராமல் நிற்கச் சொல்லிவிட்டு ஊர் சுத்தப்போய்விடுவார். அவர் திரும்பி வருமட்டும் நான் அப்படியே நிற்கவேண்டும் கொஞ்சம் நகர்ந்தால்கூட அக்கா மாமாவுக்கு மூட்டிக்கொடுத்துவிடுவாள். என்னைவிட மூன்றுவயது கூடியவள் எனது அக்கா ஆனாலும் நான் அக்காவுக்கு பயமோ பயம், இப்போதும் நான் பயப்படும் ஓர் ஜீவன் எனது அக்காதான். என்னைப் பெற்றவர்களோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாமாக்கள் கையில் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டனர்.


ஆனாலும் தடைகளையும் தாண்டும் வெள்ளாடுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் விளையாடுவது, அத்துளுக்குளத்தில் நீந்தப்போவது, வீட்டில் மாமரம் காய்த்துக் குலுங்கும்போதும் வேறுவீடுகளில் நண்பர்களுடன் மாங்காய் திருடித் தின்பது என்று எனது குறும்புகளுக்கும் ஓய்வேயில்லை.


எனது குழந்தைப்பருவ வாழ்க்கை குறும்புத்தனமாக இருந்தாலும் ஆரம்பகால கல்வி வாழ்க்கை அனுபவம் ஒன்றும் அழகானதில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் சிலர் இன்னும் பசுமையாக என் மனசில் நிற்கின்றார்கள்.

6ம் வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை விக்னேஸ்வரா கல்லூரியில் எனது கல்வி தொடர்ந்தது. பலவிதமான பயிற்சிப்பட்டறைகளையும் தாண்டியதாலோ என்னவோ 6 ம் வகுப்பு முதல் எனது கல்வியில் முன்னேற்றம் தோன்றியது. வகுப்பில் எப்போதும் முதலாவது மாணவி, சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம் பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிற்கும் முன்னுரிமை கொடுத்தேன் முதன்மையாகவும் விளங்கினேன். இதெல்லாவற்றிற்கும் காரணம் எனது ஆசிரியர்கள் என்மேல் கொண்ட பாசம், அதற்கு இன்னுமோர் காரணம் எனது தந்தையார் பொன் கணேசன் தான் அப்போது விக்னேஷ்வராக் கல்லூரியின் அதிபர். அதிபரின் செல்லப் புத்திரி என்ற பந்தாவும் தந்தையின் அரவணைப்பும் என்னை ஆரோக்கியமாக வளர்த்துக்கொண்டு சென்றது.


எனக்கு ஆண் சகோதரர்கள் இருக்கவில்லை ஒரே அக்காதான். அதனாலோ என்னவோ ஆண்களோடு பழகுவது பிடிக்கும். ஆனாலும் அன்போடு பழகத் தெரியாது. என்னோடு படித்த ஆண்களுக்கு என்னைப் பிடிக்காது. யாரையும் மதிக்கமாட்டேன், எப்போதும் அவர்களுடன் சண்டைபோடுவேன். சரியான வாயாடி. அவர்கள் பொறுமையிழந்து அப்பாவிடம் சென்று முறையிடுவதும் மீண்டும் சண்டைபோடுவதும் தொடர்கதையானது. எனது தந்தையாருக்கு நான் பெரிய தலைவலியாக இருந்தேன். எனது தந்தை என்மீது கொண்ட அளவுகடந்த அன்பின் காரணமாகவோ என்னவோ பொறுமையுடன் அவர் என்னை சரியான முறையில் நெறிப்படுத்திச் சென்றார்.

என்வரையில் விக்னேஸ்வராக் கல்லூரி வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையானது. சங்கீத ஆசிரியராக இருந்த பாரதா ரீச்சர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். என்னைக் கட்டுபடுத்துவதற்காகவே எப்போதும் கண்டிப்பான ஆசிரியரையே எனது வகுப்பாசிரியராக நியமிப்பார் எனது தந்தையார். அவர்களில் குறிப்பிடும்படியாக கூறவிரும்புவது, நாகம்மா ரீச்சர், இரத்தினம் ரீச்சர், நல்லதம்பி மாஸ்டர் போன்றவர்கள்.
10 ம் வகுப்பில் திறமையாக தேர்ச்சிபெற்று பெரிய பெண்ணாகவும் வந்தபின்பு பெண்கள் பாடசாலையில்தான் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் எனக்கு அனுமதிபெற்றுத்தந்தார் அப்பா. ஒரு சிறிய பாடசாலையில் எதிலுமே முதல் மாணவியாக மிளிர்ந்த என்னால் பெரிய பாடசாலையில் போட்டி போடமுடியவில்லை. ஆசிரியர்களின் பாராமுகமும் புதிய மாணவர்களின் அறிமுகமின்மையும் பெரிய தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் எனக்குள் அளித்தது. மாற்றங்கள் ஏற்படுத்திய இறக்கத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்த காலங்கள் கொஞ்சம் அதிகம்தான்.

ஆனாலும் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எனது தீராத ஆசையின் தூண்டுதல் நான் விரும்பியபடியே எனது கல்வியைத் தொடரக்கூடியதாக அமைந்தது. யாழ்பல்கலைகழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கணிதத்தில் சிறப்புப்பட்டம் பெற்றேன். எனது பல்கலைக்கழக வாழ்க்கை மிகவும் இனிமையானது. அதைப்பற்றி இன்னுமோர் சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். யாழ்பல்கலைக்கழக நட்புவட்டம் என்று யாராவது ஓர் தொடரை ஆரம்பிக்காமலா போய்விடப்போகின்றார்கள்.


 எனது ஊர், எனது மண், எனது மொழி இவை இரத்தத்தில் கலந்தவை. எனது ஊரவன் என்ற உணர்வே கரவைக்குரல் என்ற பதிவைத் தட்டிப்பார்க்கத் தூண்டியது. கரவெட்டி, வடமராட்சி, யாழ்ப்பாணம், ஈழத்துத்தமிழன், இலங்கைத்தமிழன், இந்தியத்தமிழன், உலகத்தமிழன் இது வரிசைகளல்ல வலிகள், புலம்பெயர்வால் ஏற்பட்ட வலிகள்.
வலைப்பதிவின் மூலம் என் வலிகளுக்கு வடிகால் கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள் கூறி இன்னும் சிலரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையில் யாரை அழைப்பது என்று புரியாமல் ஏனோ மனசுக்கு பிடித்திருக்கின்றது என்ற விதத்தில் இவர்களை தெரிவுசெய்கின்றேன்.
கோசலன்
வலசு - வேலணை 
இளைஞன்

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்


ஆற்றலெனும் தாகத்திற்கு பாற்கடலாம்
உணர்ச்சிக்கவி சகோதரன் கௌதம்
தமிழ்த்தாய் பெற்ற இளைய தமிழ்மகன்
இவன் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்
மறுமலர்ச்சி கண்டு தலைகுனிந்தேன்

கௌதம் ....................

தோற்றத்தில் நீ இளையவன்
ஏற்றத்தில், மொழியின் சீற்றத்தில் நீ மூத்தவன்
உன் ஓவியத்தில் எழில் கண்டேன்
உன் கவிதை மொழியில் உயிர் கண்டேன்
உன் பேச்சில் வீசும் அனல் கண்டேன்
உன் நாவில் தவழும் செந்தமிழின் நாதம்
காவும் செய்திகள் எட்டுத் திசையும் எட்டிப்பரவும்
உன் வளர்ச்சி தோப்பாக சிறக்கும்
உன் செயல் வெற்றியை எட்டும்
உன் மொழி இனத்தை வாழ்த்தும்
என்றும் வாழ்க என் சகோதரனே!

சுழலும் உலகத்தில் சுற்றித்திரியும் பெண்ணே
உன் பயணத்தில் நீ கண்டதுதான் என்ன?
மலர்ச்சி கண்டு மகிழ்ந்தாயா?
மறுமலர்ச்சி வேண்டுமென்று அழுதாயா?
பதில் சொல்
எனக்கல்ல என் சகோதரனின் கவிதைக்கு…….


அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஓர் புதிய கவிஞனை வானலைகளில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த இளம் நண்பனை நேரடியாக சந்திக்கவில்லை ஆனால் அவனது கவித்திறமை, பேச்சுத்திறமை, ஓவியத்திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மொழிமீதும் தாய் மண்மீதும் அவன் கொண்டுள்ள பற்றுதல் அந்த முகம்தெரியாத சகோதரனைப்பற்றி அறியத்தூண்டியது.

எனது தேடலில் கௌதம் எழுதிய ஓர் கவிதைத் துளியையும், அவனது ஓவியத்தின் சிறு வண்ணத்தையும் இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். அவனைப்பற்றிய தகவல்களை இனிவரும் பதிவுகளில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


கெளதம் எழுதிய கவிதையும் அவன் வரைந்த ஓவியமும் உங்கள் ரசனைக்கு

முன்நாள் புலியடித்து உலகாண்ட மறத்தி நீ
சொன்னான் உன் பாட்டன் இனம் காத்த நெருப்பு நீ
இன்நாள் வாழ்கின்றாய் குலவீரம் மறந்து நீ!

உன்னால் சுகம் பெற்று இனக்கன்றும் தான் பெற்று
கண்ணாம் கணவனாம், அடிமைபோல் வாழ்வதற்கு
பொன்னாம் பொருளெல்லாம் கேட்கின்ற நிலை எதற்கு!

மண்ணாம் பூமியிலே முளைக்கின்ற மரக்கன்றும்
தன்னால் இயன்றவரை மனிதனை வாழவைக்கும்
பெண்ணாம் பெரும் பிறப்பை மனிதயினம் தாழவைக்கும்!;

விண்ணாம் அதன்மேலே வீசுகின்ற வெண்ணிலாவின்
வண்ணம் கொள்வதுதான் வாழ்நாளின் முறையென்றார்
கண்ணன் மாய்ந்ததனால் பூவையும் அறுத்தெடுத்தார்!

சொன்னார் வேதத்தில் கைம்மையென்னும் தரிசுநிலம்
என்னால் தாங்காதே, பகுத்தறிவு தீயினிலே
அன்னார் நூலதனை எரித்தாலும் தணியாது!

அன்னாய் தமிழணங்கே உன்சாதி வாழ்வதற்கு
எண்ணாக் கொடுமையெல்லாம் ஏற்றிங்கு நோவெதற்கு
கண்ணாம் இருந்தென்ன கருப்பில் வாழ்வெதற்கு!

கண்ணால் பார்ப்பதெல்லாம் சாமியென்ற கல்லாகி
புண்ணாம் வருவதற்கு மிதிக்கின்றாய் பெரும் தீயை
தன்னால் அடிமையுறும் கொடுநிலை ஆகாது!

பெண்ணால் இயலாது வையத்தில் என்றில்லை
சொன்னார் ஒரு நூறு விடுதலை சிந்தனைதான்
முன்னால் தோன்றுதடி முயற்சிதான் இல்லையே!


பெண்ணால் ஆளுகின்ற பெருந்தமிழ் நாடொன்றில்
பொன்னால் முடிசூடி செந்தமிழை அரங்கேற்றும்
நன்நாள் வரும்வரைக்கும் அடிமை நிலை மாறாது!

கண்ணாம் மொழி நமக்கு காப்பதே வேலையென்று
சொன்னான் தமிழ் புலவன் பாரதிதாசன்தான்
பெண்ணால் வாழுமென்றால் பேரின்பம் அளவேது!

எழுதியவர் கௌதம்

வெள்ளி, செப்டம்பர் 11, 2009

24 மணிநேர தமிழ் வானொலி


Australia Tamil Broadcasting Corporation என்ற 24 மணிநேர வானொலி அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

இந்த வானொலியில் பகுதி நேரமாக 75 க்கும் மேற்பட்டவர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமறிந்த கலைகளை தமிழ்மொழியில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அதே வனொலியில் சனிக்கிழமை அவுஸ்திரேலிய நேரம் இரவு 10 மணியிலிருந்து 12.30 மணிவரை நடைபெறும் சிந்தனைச் சிதறல் என்ற நிகழ்ச்சியை கடந்த 8 வருடங்களாக மிக ஆர்வத்தோடு நானும் நடாத்திவருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் ஓர் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துக்கள் பரிமாறப்படும். நேயர்கள் தமது எண்ணக்கருத்துக்களை தொலைபேசியில் அழைப்பெடுத்து கூறுவார்கள். ஒருமித்த கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களுமாக மிகவும் அறிவுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கும். 

உங்களைப்போன்றே முகம் தெரியாத மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான ஓர் உறவை இந்த நிகழ்ச்சிமூலம் கடந்த எட்டு வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் இந்த நிகழ்ச்சியைப்பற்றி விரிவாக எழுதுகின்றேன். 

இணைய வானொலியாகவும் செயல்படுவதால் நீங்களும் இந்த 24 மணிநேரமும் தமிழ் மொழியைப் பேசும் இந்த வானொலியை கேட்டு மகிழலாம். அதற்குரிய இணையத்தள முகவரியை இதனுடன் இணைத்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள்.
www.atbc.net.au/

முடிந்தால் என்னோடு இந்த சனிக்கிழமை இரவு கதையுங்கள். இந்த வாரத்து நிகழ்ச்சிக்கான தலைப்பு தனிமை

வெற்றி பற்றி வித்தியாசமான ஒரு கருத்து உண்டு அதாவது தந்திரமாக செயல்பட்டால்தான் எதிலும் வெற்றி பெற முடியும் என்பது. இதை ஆங்கிலத்தில் cunning என்று சொல்வார்கள். இப்படி தந்திரமாக செயல்பட்டு அடைகின்ற வெற்றி ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தைத் தரும் அதுவே நிரந்தர சந்தோசம் ஆகிவிடாது என்பதுதான் உண்மை.

தந்திரமும், புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று தொடர்பானது போல் தெரிந்தாலும் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. தந்திரமாக செயல்படுபவர்கள் அடுத்தவர்களை நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நட்பென்று யாருமே இருக்கமாட்டார்கள். தான் வெற்றி பெறவேண்டும் தனது எண்ணங்களை எப்பாடுபட்டாவது ஈடேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காய்களை நகர்த்துவதால் மனிதநேயத்தை மறந்தவர்களாகி அவரைச் சார்ந்திருப்பவர்களை இறுதியில் ஏமாற்றிவிடுவார்கள்.

நேர்மையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தனது வெற்றியை நோக்கி செல்வார்கள் அப்போதுதான் வெற்றி உண்மையான சந்தோசத்தை அவர்களுக்கு கொடுக்கும். அப்படிப்பட்டவர்களைத்தான் உலகமும் நம்பும். அவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு காட்டமுடியும், மற்றவர்கள்மீது நம்பிக்கை கொள்ளமுடியும்.

இந்த உலகம் நல்லது என்று நம்புகின்ற ஒருவருக்கு இந்த உலகத்தில் வாழ்கின்ற மக்கள் நல்லவர்கள் என்று நம்புகின்ற ஒருவருக்குத்தான் அவர்கள் சந்திக்கின்ற உலகமும் சந்திக்கின்ற மக்களும் தினம் வாழ்கின்ற வாழ்க்கையும் நல்லதாக அமையும்.

தினம் காலையில் நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் Good Morning  என்று சொல்கிறோமே அதன் அர்த்தம் என்ன? இந்த காலை உனக்கு நல்லதாக மலரட்டும் உனது நாள் இன்று நன்றாக இருக்குமானால் உன்னைப்போன்றே எனது நாளும் நன்றாக இருக்கும் என்கின்ற அர்த்தத்தில்தானே பரஸ்பரம் அங்கே அன்பு பரிமாறிக்கொள்ளப்படுகின்றது. நல்ல மனிதர்களுக்கிடையேயான உறவு என்றும் இனிமையானது அப்படிப்பட்ட அன்பை அனுபவிக்கும் மனசை கொண்டவர்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள்.

ஒருவன் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவான். அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று ஒரு மகானிடம் கேட்டான். அதற்கு அந்த மகான் சொன்னார்  உனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள் கோவம் குறைந்துவிடும் என்று. சிலவாரங்கள் கழித்து மீண்டும் அவன் அந்த மகானிடம் வந்தான். அய்யா இப்போது முன்பைவிட எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அதை யார் மீதாவது காட்டலாம் என்றால் எதிரிகள் எனக்கு யாருமே இல்லையே என்று சொன்னான்.

மகான் வியந்து போனார். என்ன சொல்கிறாய் உனக்கு இப்போது எதிரிகள் யாருமே இல்லையா அப்படி என்றால் அவர்களை எல்லாம் உன் நண்பர்களாக மாற்றி விட்டாயா என்று கேட்டார். அதற்கு அவன் பதில் அளிக்கையில் இல்லை என் எதிரிகள் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டேன் என்றான். இப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது?

அன்பிற்கு விரோதம் பாராட்டத் தெரியாது. மற்றவர்களது பிரச்சனைகளை, சந்தோசத்தை தனதாக நினைக்கத் தோன்றும். குடும்ப உறவில் நட்பில் வேலைத்தளங்களில் என்று எப்போதும் உண்மையோடு துணிவோடு தன்னை வெளிப்படுத்தி அவர்களால் அன்பு செலுத்தமுடியும்.

அன்பில்லாத ஒரு மனிதருக்கு எப்படி சந்தோசம் கிட்டும். மற்றவர்களது உணர்வுகளை மதிக்காது, வார்த்தைகளாலும் வன்முறையாலும் துன்புறுத்தும் அன்பற்ற மனிதர்களை எவரும் விரும்பமாட்டார்கள். எவரும் நாடி வராது யாரும் அணுகமுடியாத தூரத்தில் இருக்கின்றபோது அவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படுமா? நினைப்பது கைகூடுமா? அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கையா?

எதையும் உண்மையாக நேசியுங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி கட்டுப்பாடுகளின்றி ஒன்றை நேசியுங்கள். காதல் அன்பு நேசம் பாசம் உள்ளவர்கள் கண்களுக்கு மற்றவர்கள் குறைகள் தெரிவதுமில்லை நிறைகள் ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அதற்காக குட்டக் குட்ட குனிவதிலும் உடன்பாடில்லை. சந்தோசம் என்பது அவரவர் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. நீங்கள் நேசிப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தடை போடாது தள்ளிநின்று ரசித்துப்பாருங்கள் நேசம் இறுதிவரை தொடரும்.

நாம் நேசிப்பவை எம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் ஒருவரது மனதில் எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கிடையே உள்ள நேசம் தொலைந்துவிடுகின்றது. சந்தேகம், சங்கடம், சஞ்சலம் என்ற சிக்கல்கள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்து அவர்களையும் அழித்து மற்றவர்களையும் வேதனைப்படுத்தும். வாழும் காலம் கொஞ்சம்தான் அன்பு செலுத்துங்கள்.

புதன், செப்டம்பர் 02, 2009

தாய்மடி - சௌந்தரி
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்
சந்தம் சுமந்து வந்த வசந்தமொன்றின்
நெஞ்சம் அழுகின்ற இந்நேரம்;
கொஞ்சம் தலைசாய்ந்து கொள்ள
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்

நிலைமைக்கு மீறிப் பறந்ததுமில்லை
நிலை தடுமாறி நின்றதுமில்லை
நித்தம் அழுது வளர்ந்ததுமில்லை
கனவில் வாழ்ந்து பழக்கமுமில்லை
நானென்ற வேடம் ஏற்றதுமில்லை
நானாக நானிருக்க பயந்ததுமில்லை
நானென்ற உணர்வில் அழித்ததுமில்லை
நான்விட்டு நானிருந்தால் அதில் அர்த்தமில்லை

நிற்காத நினைவுகள் அழுத்துகின்றவேளை
நிழலேது நிஐமேது ஏனிந்தத் தேடல்
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்

உயிரும் உடலும் பிரிந்தபின்பு
உருவம் இருப்பதில் என்ன பயன்
இருவரில் ஒருவராய்
இறுதிவரை முதன்மையாய்
வந்தவர் தொடுப்பதற்கு
வரவைத்தவர் வளர்த்துவிட்டார்
அந்தரத்தில் ஆடுகின்ற இந்நேரம்
யாரிடம் சென்றுகேட்பேன் புதுவேதம்
என் கண்களில் ஏனோ கலக்கம்
என் நெஞ்சினில் ஏதோ வருத்தம்
என் கன்னமிரண்டிலும் கண்ணீர்
இதுவும் கடந்து போகும்
சொல்லிச் சென்ற தந்தையின் தத்துவம்
சுட்ட தங்கமிதை மிளிரச் செய்யும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்


ஒரு பிடி இதயம் இரு பாதியானால்
எது உன்பாதி அதில் ஏது நீதி
கட்டிய கனவு கலைவதுமுண்டு
காத்திருந்து கலைப்பவருமுண்டு
குறைகளில்லா மனிதரேயில்லை
குற்றம் கண்பதால் பலனேதுமில்லை
கற்றுக்கொண்டது வாழ்க்கைப்பாடம்
காலம் சொல்லும் காயத்துக்கு நியாயம்
எத்தனை தடைகள் எப்படி வரினும்
மனிதனாயிருந்து கடவுளாய் சிந்திக்கும்
கருணை கொண்ட மனசொன்று வேண்டும்
உடலென்ற பொறிக்குள் குறையொன்றுமில்லா
உணர்வுகள் பொங்கி மகிழ்வூட்ட வேண்டும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்