செவ்வாய், செப்டம்பர் 22, 2009

வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்


















ஆற்றலெனும் தாகத்திற்கு பாற்கடலாம்
உணர்ச்சிக்கவி சகோதரன் கௌதம்
தமிழ்த்தாய் பெற்ற இளைய தமிழ்மகன்
இவன் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்
மறுமலர்ச்சி கண்டு தலைகுனிந்தேன்

கௌதம் ....................

தோற்றத்தில் நீ இளையவன்
ஏற்றத்தில், மொழியின் சீற்றத்தில் நீ மூத்தவன்
உன் ஓவியத்தில் எழில் கண்டேன்
உன் கவிதை மொழியில் உயிர் கண்டேன்
உன் பேச்சில் வீசும் அனல் கண்டேன்
உன் நாவில் தவழும் செந்தமிழின் நாதம்
காவும் செய்திகள் எட்டுத் திசையும் எட்டிப்பரவும்
உன் வளர்ச்சி தோப்பாக சிறக்கும்
உன் செயல் வெற்றியை எட்டும்
உன் மொழி இனத்தை வாழ்த்தும்
என்றும் வாழ்க என் சகோதரனே!

சுழலும் உலகத்தில் சுற்றித்திரியும் பெண்ணே
உன் பயணத்தில் நீ கண்டதுதான் என்ன?
மலர்ச்சி கண்டு மகிழ்ந்தாயா?
மறுமலர்ச்சி வேண்டுமென்று அழுதாயா?
பதில் சொல்
எனக்கல்ல என் சகோதரனின் கவிதைக்கு…….


அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஓர் புதிய கவிஞனை வானலைகளில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த இளம் நண்பனை நேரடியாக சந்திக்கவில்லை ஆனால் அவனது கவித்திறமை, பேச்சுத்திறமை, ஓவியத்திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மொழிமீதும் தாய் மண்மீதும் அவன் கொண்டுள்ள பற்றுதல் அந்த முகம்தெரியாத சகோதரனைப்பற்றி அறியத்தூண்டியது.

எனது தேடலில் கௌதம் எழுதிய ஓர் கவிதைத் துளியையும், அவனது ஓவியத்தின் சிறு வண்ணத்தையும் இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். அவனைப்பற்றிய தகவல்களை இனிவரும் பதிவுகளில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


கெளதம் எழுதிய கவிதையும் அவன் வரைந்த ஓவியமும் உங்கள் ரசனைக்கு

முன்நாள் புலியடித்து உலகாண்ட மறத்தி நீ
சொன்னான் உன் பாட்டன் இனம் காத்த நெருப்பு நீ
இன்நாள் வாழ்கின்றாய் குலவீரம் மறந்து நீ!

உன்னால் சுகம் பெற்று இனக்கன்றும் தான் பெற்று
கண்ணாம் கணவனாம், அடிமைபோல் வாழ்வதற்கு
பொன்னாம் பொருளெல்லாம் கேட்கின்ற நிலை எதற்கு!

மண்ணாம் பூமியிலே முளைக்கின்ற மரக்கன்றும்
தன்னால் இயன்றவரை மனிதனை வாழவைக்கும்
பெண்ணாம் பெரும் பிறப்பை மனிதயினம் தாழவைக்கும்!;

விண்ணாம் அதன்மேலே வீசுகின்ற வெண்ணிலாவின்
வண்ணம் கொள்வதுதான் வாழ்நாளின் முறையென்றார்
கண்ணன் மாய்ந்ததனால் பூவையும் அறுத்தெடுத்தார்!

சொன்னார் வேதத்தில் கைம்மையென்னும் தரிசுநிலம்
என்னால் தாங்காதே, பகுத்தறிவு தீயினிலே
அன்னார் நூலதனை எரித்தாலும் தணியாது!

அன்னாய் தமிழணங்கே உன்சாதி வாழ்வதற்கு
எண்ணாக் கொடுமையெல்லாம் ஏற்றிங்கு நோவெதற்கு
கண்ணாம் இருந்தென்ன கருப்பில் வாழ்வெதற்கு!

கண்ணால் பார்ப்பதெல்லாம் சாமியென்ற கல்லாகி
புண்ணாம் வருவதற்கு மிதிக்கின்றாய் பெரும் தீயை
தன்னால் அடிமையுறும் கொடுநிலை ஆகாது!

பெண்ணால் இயலாது வையத்தில் என்றில்லை
சொன்னார் ஒரு நூறு விடுதலை சிந்தனைதான்
முன்னால் தோன்றுதடி முயற்சிதான் இல்லையே!


பெண்ணால் ஆளுகின்ற பெருந்தமிழ் நாடொன்றில்
பொன்னால் முடிசூடி செந்தமிழை அரங்கேற்றும்
நன்நாள் வரும்வரைக்கும் அடிமை நிலை மாறாது!

கண்ணாம் மொழி நமக்கு காப்பதே வேலையென்று
சொன்னான் தமிழ் புலவன் பாரதிதாசன்தான்
பெண்ணால் வாழுமென்றால் பேரின்பம் அளவேது!

எழுதியவர் கௌதம்

3 கருத்துகள்:

  1. வணக்கம் சௌந்தரி
    உங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன்
    உங்களை ஒரு இனிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஒரு அழைப்பை இட்டிருக்கிறேன்,
    என்னோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
    அதன் இணைப்பு http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html
    வாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லையே ஊரவள் என்றவுடன் முதலுரிமை கொடுத்துவிட்டீர்கள். பிரதேசவாதம்தானே? நன்றிகள் பல கரவைக்குரல். மறக்க நினைக்காத இனிய ஞாபகங்களை மீண்டும் நினைக்கத் தூண்டிய உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ///பரவாயில்லையே ஊரவள் என்றவுடன் முதலுரிமை கொடுத்துவிட்டீர்கள். பிரதேசவாதம்தானே///

    பிரதேசவாதத்துக்கு இங்கு இடமில்லை
    உங்களைப்பற்றி அறிய ஆவல் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு