திங்கள், மார்ச் 09, 2009

ஈர்ப்புஇரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்ற உணர்வினால் ஈர்க்கப்படும்போது ஏற்படுகின்ற ஓர் இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

எதிர்பார்ப்புகளின்றி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைகாட்டி, கண்கள் கசியும் வேளையில் அன்புடன் ஆறுதலாக ஓர் வார்த்தை சொன்னாலே போதும் அங்கே காதல் நிறைந்திருக்கும்.

அன்பின் ஆக்கிரமிப்பை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும் அந்த உறவினால் கிட்டும் இன்பம் வார்த்தைகளுக்குள் அடங்காது.

தொடரும் ஈர்ப்பு என்னும் கவிதை என்மனதில் தோன்றிய ஓர் அன்பின் வெளிப்பாடு. ஒரு வருடத்திற்கு முன்பு ஊடறு என்ற பெண்களுக்கான இணையத்தளத்தில் இந்தக் கவிதை பதியப்பட்டது. http://udaru.blogdrive.com/archive/569.html

இதயவாசலுக்குள் வரமாக நுழைந்த ஓர் உறவின் உண்மையான உருவகம்தான் ஈர்ப்பு என்ற இந்தக் கவிதை.

தனிநிகரான உன் உலகத்தில்
துணிவாக தடம் பதித்தேன்
அந்நியமான என் கண்களுக்கு
ஆச்சரியமான பல தோற்றங்கள்
ஈர்த்துக் கொண்டேன் - நீ
விரும்பியும் விரும்பாமலும்
சேர்த்துவைத்த பெரும் ஊதியத்தை

உன் நிகரற்ற மண்டலத்தில்
ஆர்வமிக்க மாணவி நான்
சீர்ப்படாத தொடர் வரலாற்றில்
வியப்பான நாகரீகப்படிவம் நீ
உன் சிந்தனையின் ஆழத்தை
உற்றுநோக்கி பதிவுசெய்தேன்
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேன்
முன்பே உனதாக்கிக் கொள்ளென்று

உன் மனமாற்றப் படிநிலையின்
நிழல்வெளியில் எனக்குள் பலமாற்றம்
நகைப்பொலியில் முகமலர்வேன்
ஊற்றெடுக்கும் நீர்த்துளியில்
உடையாமல் போட்டியிட்டு
உள்ளத்தால் முதிர்வடைந்தேன்
என் தொலைத்தோற்ற மனக்காட்டி
உள்முகம் நோக்கி சொன்னது
உன்விலை என்னவென்று

நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்
முடிவெச்ச வடிவமானேன்
உன் கரையற்ற நீர்வரைவில்
காற்றோடு கரையேறும் படகானேன்
நீ இடைவிடாது செதுக்கிய
பாறைவெடிப்பு இடைவெளியில்
ஊடுருவி தேடிக்கண்டேன்
பசும்புல்தரை கொண்ட
சுரங்க வழிப்பாதையொன்றை
அளவுகோல் வைத்து
அளக்கமுடியாத எல்லைபோலும்
அமைதியாக செல்கின்றேன்
அமிழ்வுக்குப் பின்னாலும்
மிதந்துவரும் மிதவையாகி

சௌந்தரி (அவுஸ்ரேலியா)
jan 2008

10 கருத்துகள்:

 1. \\எதிர்பார்ப்புகளின்றி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைகாட்டி, கண்கள் கசியும் வேளையில் அன்புடன் ஆறுதலாக ஓர் வார்த்தை சொன்னாலே போதும் அங்கே காதல் நிறைந்திருக்கும்.\\

  நிதர்சணம்.

  பதிலளிநீக்கு
 2. \\ அன்பு, காதல், நட்பு, பாசம், பற்று போன்ற உறவுகள் கிடைப்பதற்கும், கொடுப்பதற்கும் கொடுப்பனவு வேண்டும்\\

  அருமை.

  பதிலளிநீக்கு
 3. \\நகைப்பொலியில் முகமலர்வேன்\\


  அழகாயிருக்கு

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை

  \\நீர்வரை\\ நல்ல சொல்லாடல் ...

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா3/09/2009 1:43 பிற்பகல்

  பூரணத்துவம் நிறைந்த ஓர் காதல் உணர்வை அழகான முறையில் கச்சிதமாகப் பொருந்தும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் நீங்கள் வெற்றி யடைந்துள்ளதாகவே படுகிறது. மயக்கமான காதல் நிலையிலும், உண்மையான சுயவிமர்சனத்தை தேடிப்பிடித்து முன்வைத்துள்ள நிலை பாராட்டத் தக்கது. நீங்கள் வெளிப்படுத்திய உணர்வை கவிதை தவிர்ந்த ஏனைய வடிவங்களின் மூலம் இவ்வாறு கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. நிங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் தமிழ் கவிதையுலகில் மிக அபூர்வமாகவே கண்டெடுக்க முடியுமான ஒரு கருப்பொருள். மேலும் இவ்வாறான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. :)

  தொடர்ந்து பல கவிதைகளை எதிர் பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா3/10/2009 12:41 பிற்பகல்

  மிகவும் சிறந்த ஒரு கவிதை. அழகாக எழுதியுளீர்கள் சகோதரி.
  நீங்கள் உங்கள் மனதால் உணர்ந்த அந்த
  காதலின் உணர்வை புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த காதலை பெற்றவர் மிகவும் கொடுத்து வைத்தவர். என்றென்றும் உங்களின் இந்த தூய்மையான காதல் நில்லைத்து நிற்க எனது வாழ்த்துக்கள் சகோதரி. மேலும் உங்களின் அருமையான ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அபிமானி.

  மதுரா மகாதேவ்

  பதிலளிநீக்கு
 8. நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்
  முடிவெச்ச வடிவமானேன்
  உன் கரையற்ற நீர்வரைவில்
  காற்றோடு கரையேறும் படகானேன்
  நீ இடைவிடாது செதுக்கிய
  பாறைவெடிப்பு இடைவெளியில்
  ஊடுருவி தேடிக்கண்டேன்
  பசும்புல்தரை கொண்ட
  சுரங்க வழிப்பாதையொன்றை
  அளவுகோல் வைத்து
  அளக்கமுடியாத எல்லைபோலும்
  அமைதியாக செல்கின்றேன்
  அமிழ்வுக்குப் பின்னாலும்
  மிதந்துவரும் மிதவையாகி//

  பெண் அடக்க நினைத்தாலும் கட்டுக்களை உடைத் தெறிந்து வரும் ஒரு எல்லைகளற்ற ஜீவன் என்பதை இங்கு சுட்டியுளீர்கள்?? சில எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களையும் தந்து போகும் என்பது நிஜம்.

  பதிலளிநீக்கு
 9. கவிதை யதார்த்தம், கலந்த பெண்களின் நடைமுறை வாழ்வைச் சுட்டும் ஒரு கலவை?
  தொடர்ந்தும் முற்போக்கு ரீதியான இலக்கியங்களைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

  பதிலளிநீக்கு