வெள்ளி, ஜனவரி 16, 2009

அழகு

சௌந்தரி
தோற்றம் என்றால் என்ன? புறத்தோற்றமா? அல்லது அகத்தோற்றமா? இரண்டு தோற்றமும் அவசியம்தான். ஆனால் பார்த்தவுடன் ஏற்படும் கவர்ச்சி புறத்தோற்றத்தில் தான் இருக்கின்றது. அத்தோற்றப் பொலிவிற்கு மரியாதையும் முக்கியத்துவம் கிடைக்கின்றது. அதிலும் முக்கியமாக நிறத்தோற்றம் முதலிடத்தைப் பெறுகின்றது.

















சில சேவைகளுக்கு முகமும் உடலும் அழகாக இருக்க வேண்டியது அவசியம் உதாரணமாக மருத்துவமனை தாதிமார்கள், விமான சேவையில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள், அலுவலகங்களில் வரவேற்பாளராக இருப்பவர்கள் இவர்களுக்கு அழகான தோற்றம் அவசியமாகின்றது. அதுபோல் சினிமாத்துறை, விளம்பரத்துறை போன்றவற்றிலும் அழகான தோற்றம் உள்ளவர்களால்தான் ஜெயிக்கமுடிகின்றது.

வீதியில் ஓடும் கார் முதல் காலில் அணியும் பாதணிவரை அழகிய பொருட்கள்தான் மக்களை கவருகின்றன அப்படியிருக்கும் போது வெளித்தோற்றத்தில் உண்டாகும் கவர்ச்சியை பிழை என்று சொல்லமுடியாது. அதே வேளை மனத்தோற்றத்தின் அழகை கண்டுகொள்ளாமல் விடுவதும் சரியாகாது. ஒரு செயலை செய்து முடிக்க புறத்தோற்றம் அழகாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல உழைப்பாளியாகவும் அறிவாளியாகவும் சிந்தனை வாதியாகவும் இருக்கவேண்டும். தோற்றப்பொலிவு உள்ளவர்கள் இலகுவாக சில துறைகளின் நுழைவாசலை அடைய முடிந்தாலும் அவர்களிடம் உள்ள நேர்மையான அணுகு முறையும் அறிவு சார்ந்த திறமையும் இல்லை என்றால் அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது.




நாகரீகம் பிறந்தகாலம் தொட்டே மனிதன் அழகுக்கு அடிமையாகி அதற்காக தனது கொள்கைகளை, மனதை, வாழ்க்கை முறைகளைக்கூட மாற்றியிருக்கிறான்.
அழகு பல வடிவங்களைக் கொண்டது.
இயற்கையழகு, தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, செயல்பாடுகளின் அழகு, ஆன்மீக அழகு இப்படி பல.

உடல் அமைப்பினால் உருவாகும் அழகானது பலவிதமான எண்ணங்களை உருவாக்கிறது. காமம், கலை, பக்தி போன்ற உணர்வுகளை உருவாக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது.

ஒரு படப் பிடிப்பாளனோ ஓவியனோ ஒரு பெண்ணை முன்னே நிறுத்தி படம் எடுக்கும் போது அவன் மனதில் கலை உணர்ச்சியைத் தவிர காமத்துக்கு இடமில்லை. கோயில் ஓவியங்களை பலர் பல விதமாக இரசிப்பார்கள். அதில் காமம், பக்தி, தத்துவம், கலை என்று பலதும் உள்ளடங்கியுள்ளது.

வெளித் தோறத்திற்கான அழகானது மெழுகுவர்த்திபோல் எரியத் தொடங்கியவுடன் உருமாறி தன் அழகை இழந்துவிடும். முக்கியமாக மனித உடலின் அழகு மனச்சஞ்சலம், கடும் உழைப்பு, கால மாற்றம் என்பனவற்றால் பாதிக்கப்படுகின்றது. ஆனால் உடல் அழகைவிட மனத்தில் தோன்றும் அழகான எண்ணங்கள் நிலைத்து நிற்கும். பரிசுத்தமான மனசோடு நல்ல நோக்கங்களை சிந்திக்கும்போதே நல்ல சக்தியானது மனதை ஆட்கொள்கிறது. அதுவே முகத்தில் ஒரு தனி அழகையும் பிரகாசத்தையும் தரும்.

8 கருத்துகள்:

  1. குறிப்பாக பெண்கள் அழகை வைத்து சாதிக்கின்றார்கள் என்பது உண்மை தான். அழகாய் இருப்பவர்கள் வாழ்க்கைத் தெரிவு அதிகம் என்று எண்ணுவதாலோ என்னவோ இறுதியில் தெரிவுகளில் தோற்றவர்கள் தான் அதிகம். நான் பகுதி நேர வானொலி பேட்டிகள் செய்வதுண்டு. பெண்களை பற்றி ஒரு பேட்டி இங்கு கீழ் கொடுக்கப் பட்ட இணைப்பில் ஒரு ஒலித் தொகுப்பு இருக்கின்றது. கேட்டு உங்கள் கருத்தை தாருங்கள்.
    http://akathy.blogspot.com/2008/12/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  2. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அழகை வைத்து பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு ஆண் அழகான பெண்ணை தெரிவு செய்வதும் பிழை என்று சொல்லமுடியாது ஏனென்றால் வெளிதோற்றத்தின் கவர்ச்சி பற்றி இலக்கியம், மதம், சினிமா, புத்தகம் என்று எம்மை சுற்றி உள்ள எல்லாமே சொல்லிச் சொல்லி அழகு என்பது தோற்றத்தில் என்பது எமது மனதுகளில் பதிந்துவிட்டது. பேட்டியை கேட்ட பின்பு அதைப்பற்றி எனது கருத்தை தெரிவிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகு பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.உங்கள் படங்கள் நிறையப் பேசுகின்றன.அங்கு அழகு அமானுஷமாக வெளிப்படுகிறது.அழகு என்பது பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.இதைப் பார்த்ததும் ஆழியாழ் ஆண்களைப் பற்றி எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.

    !

    நட்டாழக் கடலின் அமைதி
    நிரபராதிகளைக் காப்பாற்றும் சட்டங்கள்
    உண்மையைப் பதிவு செய்யும் புகைப்படங்கள்
    முறுவல் பூத்தபடி நடமாடும் இளவரசி
    குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாதிரிகள்
    சுயநலமற்ற தாய்மை
    ஆண்கள்
    ஆகா...
    எத்தனை அழகானது இந்த உலகம்!!

    பதிலளிநீக்கு
  4. நேர்மையுள்ள, சுயநலமற்ற மனிதர்களின் உறவும் நேசமும்கூட மிகவும் அழகானது.
    அங்கே புறத்தோற்றதுக்கு முக்கியத்துவம் இல்லை ஆனால் அப்படிபட்ட அழகை உணர்ந்துகொள்ளுமளவுக்கு பல மனிதர்கள் இன்னும் வளரவில்லை. உங்களது கருத்துக்கும் கவிதைக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1/22/2009 7:28 AM

    நூற்றுக்கு நூறு வீதம் நேர்மையான, சுயநலம் அற்ற மனிதர்களை நீங்கள் எங்கேனும் கண்டிருக்கிறீர்களா? சமய சந்த்தர்ப்பங்களைப் பொறுத்து மனிதர்களின் நேர்மை, சுயநலம் என்பவற்றின் அளவு மாறுபடுமே தவிர வாழ்க்கை முழுவதும் நேர்மையான, சுயநலம் அற்ற தான்மையுள்ளமாந்தர்கள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதரும் தமது வசதிக்கேற்றவாறு நேர்மையாகவும், சுயநலமில்லாதவாறும் நடந்து கொள்கிறார்கள். அல்லது தமது சுயநலத்தை தாம் அணியும் அங்கிகளால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். நீங்களே உங்கள் நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள், உங்கள் கணவருக்கோ அல்லது காதலருக்கோ நீங்கள் எத்தனை பொய் சொல்லியிருப்பிர்கள்? அது சுயநலமில்லையா அம்மணி?

    பதிலளிநீக்கு
  6. 'இந்த உலகம் நல்லது என்று நம்புங்கள். இந்த உலக மக்கள் நல்லவர்கள் என்று நம்புங்கள். நீங்கள் சந்திக்கின்ற உலகம் நிச்சயம் நல்லதாக இருக்கும்".
    மற்றவர்கள் நேர்மையாக இருக்கிறார்களா? பொய் சொல்கிறார்களா? என்று துப்புத் துலக்குவதை விடுத்து உங்களை முன்னேற்றப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1/23/2009 7:26 AM

    மற்றவர்கள் உங்களுக்குப் பிடிக்காத கருத்தைச் சொன்னால் உடனடியாக இயேசு நாதரின் அவதாரமாக மாறி முன்னேறப் பாருங்கள் என்று அரிதான புத்திமதி சொல்வது தமிழ் பேசுவோரின் பெரும் பண்புதான். நான் கேட்ட கேள்விக்கு நேர்மையாகப் பதில்சொல்ல முடியாமல் துப்பறிகிறேன் , என்று பூசி மெழுகப் பார்க்கிரிர்கள். பொழுது பொக்கிற்காக வலைத்தளம் எழுதும் மேட்டுக்குடி அம்மணிகளில் நீங்களும் ஒருவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள். .

    பதிலளிநீக்கு
  8. உலகத்தில் தவறு செய்யாதவர்கள்; குறையில்லாதவர்கள்; என்று யாருமேயில்லை. நான் செய்வதெல்லாம் நேர்மை சொல்வதெல்லாம் உண்மை என்று சிறுபிள்ளைத்தனமாக நான் நம்புவதில்லை.

    எனக்கு மேட்டுக்குடி அம்மணிகளைப்பற்றி எதுவும் தெரியாது ஆனால் தீப்பந்தத்தை பூமியை நோக்கி கவிழ்த்தாலும் தீயின் சுவாலை வானத்தை நோக்கித்தான் எரியும் என்பது தெளிவாகத் தெரியும்.

    சில விடயங்களை ஜீரணிக்க வேண்டும் சில விடயங்களை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதற்கிணங்கி திடமாக நான் செயல்படுவேன். நன்றிகள் பல

    பதிலளிநீக்கு