வியாழன், ஜனவரி 08, 2009

மரபணு ஆய்வும் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான குற்ற விசாரணையும்


ஆக்கம் சௌந்தரி
பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள இரண்டு நீதிமன்றங்கள் ஒரே நாளில் இரு கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தன. ஒரு குற்றவாளி தனது மீதி வாழ்க்கை முழுவதையும் சிறையிலேயே கழிக்கவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் விடுதலை செய்யப்படலாகாது என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்புக் கூறியது. இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளினது குற்றத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இருக்கவில்லை. கொலைகளை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனாலும் நீதிபதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் எனக்கண்டு ஆயுள்தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்கள்.

குற்றத்தை நிரூபிப்பதற்காக பொலீஸ் தரப்பினால் ஒரேயொரு ஆதாரம் மட்டுமே நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் இருந்து கண்டெடுக்கபட்ட மரபணு மாதிரிகள் தான் (DNA Samples) கொலைச் சந்தேக நபர்களை குற்றவாளிகளாக்கின.

கொலையாளிகளில் ஒருவர் 49 வயதானவர். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுடன் அயலவர்களுடனும் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ளாதவர். வீட்டு வாசலில் தனது காரை அநாவசியமாக அடிக்கடி கழுவிக்கொண்டிருக்கும் சுத்தப்பைத்தியம் என்றுதான் அயலவர்கள் அவரை எடை போட்டிருந்தனர். ஒருமுறை வேலையிடத்தில் வெறும் 40 பவுண்களைத் திருடிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டபோது பொலீசார் அவருடைய DNA மாதிரியை தமது தேசிய பதிவேட்டில் சேமித்து வைத்துக் கொண்டனர்.

விபச்சாரத்தை தொழிலாகக் கொண்ட 5 இளம் பெண்களை 2 வாரகாலத்திற்குள் கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டபோது அத்தகையதொரு கடுமையான குற்றத்தை அவர் செய்திருப்பார் என்று அவருக்குத் தெரிந்தவர் எவரும் நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஏற்கனவே பொலீஸ் பதிவேட்டில் இருந்த DNA மாதிரியும் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலில் காணப்பட்ட DNA மாதிரியும் ஒத்திருந்ததால் அவர்தான் குற்றவாளி என்பதை சுலபமாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது.

DNA என்றால் என்ன?
மனித உடல் தொடர்ச்சியா உயிர் கலங்களால் (cell) ஆனது. ஒவ்வொரு உயிர் கலத்தினது உட்கருவில் (Nucleus) உள்ள குரோமோசோம்களில் மரபணுக்கள் அமைந்துள்ளன. DNA (Deoxyribose Nucleic Acid) மற்றும் RNA (Ribose Nucleic Acid) ஆகியவற்றால் ஆனவையே மரபணுக்கள் ஆகும். DNA என்ற அமைப்பில் மனிதனின் தனித்தன்மையான உடல் ரகசியங்களுக்கு காரணகர்த்தாவான ஜீன் (Gene) இருக்கிறது. மனிதனின் உடல்வாகு, குணம், நோய், ஆயுள் பற்றிய விபரங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளது. மரபணுக்கள்தான் மரபுப் பண்புகளுக்கும்; பெற்றோர்களின் குணநலன்கள் பிள்ளைகளிடம் அமைவதற்கும் காரணமாக இருப்பவை. ஒவ்வொரு மரபணுவும் ஒரு பண்பிற்கான இயல்புகளை கூறுகின்றது.

உங்களுடைய இரண்டுவயது மகன், உங்கள் தந்தையைப்போல் ஒரு கையைமட்டும் பின்னால் கட்டிக்கொண்டு நடப்பதற்கும், உங்கள் பாட்டனாருக்கு இருந்த நீரிழிவு நோய் உங்களையும் தாக்கிக் கொள்வதற்கும் கே யே யேசுதாஸின் குரலில் நீங்கள் ரசித்திருக்கக்கூடிய நளினத்தை விஐய் யேசுதாஸின் குரலைக் கேட்கும் போது உணர்ந்து கொள்வதற்கும் இந்த ஜீன் தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்கள், விலங்குகள் மட்டுமன்றி தாவரங்களிலும் இத்தகைய பரம்பரைக்குரிய இயல்புகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட இந்த ஜீன் தான் காரணம்.

மனித இனத்தின் மரபணு அமைப்பில் பெரும்பகுதி எல்லோருக்கும் பொதுவானவை. நீங்கள் சீனராகவோ, ஆபிரிக்கராகவோ அல்லது அமேசன் நதியோரத்து பழங்குடியினராகவோ இருந்தாலும்கூட மனிதருக்குரிய பல பண்புகள் பொதுவாகவே உள்ளன. ஓரு மொழியை பேசுவதற்கான ஆற்றல் இதற்கு ஓர் உதாரணமாகும்.

மரபணுவின் ஓர் சிறிய பகுதியிலேயே முக்கிய வேறுபாடுகள் அடங்கியுள்ளது. ஆளுக்கு ஆள் வேறுபடும் கூறுகளை கொண்டுள்ள இந்த சிறுபகுதியை வைத்தே தனி ஒருவர் அடையாளம் காணப்படுகின்றார். இத்தனித்துவமான மரபணுவியல் ஆய்வுகளை பயன்படுத்தியே மானுடவியல், மருத்துவம், விவசாயம் மற்றும் நீதித்தடய மருத்துவம் (forensic medicine) போன்ற அறிவுத்துறைகள் பயன் பெறுகின்றன.

30 வருடங்களுக்கு முன்பு நடந்த தீர்க்கப்படாத சந்தேகங்களை தீர்ப்பதற்கு DNA எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது?
James Watson; Francis Crick ஆகிய இரு ஆய்வாளர்கள் 1953 ல் DNA கட்டமைப்பின் மிகச்சரியான மாதிரியமைப்பை வெளிப்படுத்தியபோது தமது உழைப்பு குற்றவாளிகளைக் தண்டிப்பதற்கு உதவும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

DNA ஆய்வுமுறை பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக கைரேகைப் பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனைகளை வைத்தே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மனித மரபணுவியல் ஆய்வுகள் முன்னேற்றம் அடைந்து DNA பரிசோதனைகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு பெரிதும் பயன்படுகின்றது.

கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கிடைக்கும் தடயங்களாகிய நகம், மயிர், சதை, ரத்தம், விந்தணுக்கள் (sperms) போன்றவற்றை ஆராய்ந்து உண்மையான குற்றவாளியை இலகுவாக கண்டுபிடிக்க முடிகின்றது. பல கொலைக் குற்றங்கள் 30 வருடங்களைக் கடந்தும் நிரூபிக்கப்படாமல் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றன. தற்போது DNA ன் உதவியுடன் இந்த வழக்குகளின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் 1968ம் ஆண்டு 14 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்கான குற்றவாளி மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தண்டனை அடைந்துள்ளார் அத்துடன் பல வருடங்களாக தீர்க்கபடாமல் மூடிவைக்கப்பட்ட பாலியல் கொலை வழக்குகளும் மரபணு ஆய்வுகளின் மூலம் மீண்டும் புதிப்பிக்கப்ட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகள் பலர் நீண்ட காலத்தின் பின் DNA ஆய்வின் உதவியால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மரபணுச் சோதனை முடிவுகளை மிகப்பெரிய தடயமாக பொலீஸ்தரப்பு பயன்படுத்துகின்றது. பிரித்தானிய குற்றவியல் புலனாய்வுத்துறையினர் நான்கு மில்லியன் மக்களது (உலகிலேயே அதிகளவு எண்ணிக்கையில்) DNA மாதிரிகளை கணணியில் பதிந்து வைத்திருக்கின்றனர். குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றய தடயங்களை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதைவிட DNA ஆய்வின் அடிப்படையில் குற்றவாளியை தீர்மானிப்பது பொலீஸ்தரப்பிற்கு மும்மடங்கு சுலபமானதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுபவரின் DNA மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளி தீர்மானிக்கப்படுகின்றான். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது கட்டாய மரபணுசோதனை செய்வது நன்மையையே தருகின்றது. முக்கியமாக கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை குற்றங்களில் குற்றத்தை நிரூபிப்பதற்கு இம்முறை மிகவும் அவசியமாகி;றது.

மரபணு சோதனை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நீதிமன்ற ஆணை பெற்ற பின்னர் மரபணுப்பரிசோதனை செய்யப்படுகின்றது. என்ன காரணத்திற்காக அவர்மீது சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதுதவிர வேறுகாரணங்களுக்காக அவரது மரபணுக்கள் ஆராயக்படக்கூடாது.

DNA உடன் மற்றய தடயங்களும் குற்றத்தை நிரூபிப்பதற்கு அவசியமானதாக கருதப்படுகின்றது. ஏனெனில் DNA ஆய்வு என்ன கூறுகின்றது என்பதை உறுதிப்படுத்த மற்றய தடயங்களும் அவசியமாகின்றது. உதாரணமாக இறந்தவரின் உடலில் சந்தேகத்திற்கு இடமாக முடித்துணுக்கைகள் காணப்பட்டால் அந்த முடித்துணுக்கைகள் குற்றம் சுமத்தப்பட்டவருடையதா என்பதை கண்டறிய அவரது DNA பயன்படுத்தப் படலாமே தவிர அவரது தனிப்பட்ட பண்புகளையோ அல்லது அவரது நோய் பற்றிய விபரங்களை அறிவதற்காக ஆய்வுகள் பாவிக்கப்படக்கூடாது என்றும் கூறப்படுகின்றது.

30 வருடங்களாக தீர்க்கப்படாத வழக்குகளின் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள், பெருகிவரும் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய ஆயதமாக இந்த மரபணு சோதனை பயன்படுத்தப்படுகின்றது, ஆனாலும் இதனால் குற்றங்கள் முற்றாக தடுக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.

மரபணுக்களின் பயன்கள்
குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி வேறு அறிவியல் நிரூபணங்களுக்கும் DNA சோதனைமுறை பயன்படுத்தப்படுகின்றது. 1917 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகமகாயுத்தத்தில் போரிட்டு இறந்த அவுஸ்திரேலிய வீரர் ஒருவரது உடல் 90 ஆண்டுகளிற்குப்பின்பு அவரது மருமகளின் DNA உதவியுடன்; அடையாளம் காணப்பட்டு இராணுவ மரியாதையுடன் 2007 ம் ஆண்டு பெல்ஐயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Steven Spidberg இயக்கிய ஓர் ஆங்கிலப்படத்தில் குற்றம் செய்ய நினைப்பவருடைய மூளையில் அக்குற்றத்திற்கான எண்ணக்கரு தோற்றம் கொள்வதை கணணியில் சேமிக்கப்பட்டிருக்கும் அவருடைய மூளைக்கலன்களின் (Brain Cells) வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்களை வைத்து பொலீஸ் கண்டறிகிறது.

குற்றம் செய்தபின்பு குற்றவாளியைத் தண்டிக்கும் தற்போதையமுறை முன்னேற்றமடைந்து குற்றத்திற்கான எண்ணம் உருக் கொள்ளும்போதே குற்றவாளி தண்டிக்கப்படும்முறை நடைமுறைக்கு வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தற்போது உங்கள் உடல் ரீதியான பௌதீக இயக்கத்தை (physical movement) கட்டுப்படுத்தி, விசாரணைக்கு உள்ளாக்கும் சட்டம் (பொலீஸ்) உங்களுடைய சிந்தனையைக் கேள்விக்குள்ளாக்கும் பொலீஸாக (thought police) விரைவில் மாறிவிடும். DNA தொடர்பான ஆய்வுகளின் முன்னேற்றம் இந்நிலையை உருவாக்கிவிடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

DNA சோதனையின் பயன்பாடு அரசியலிலும் இல்லாமல் இல்லை. மானுடவியல் அறிஞரான திரு சுப்பிரமணியம் விசாகன் (
svisakan@yahoo.co.uk) தனது ஆய்வுகளில் DNA மாதிரிகளைப்
பயன்படுத்தி சிங்களவர் ஆரிய வம்சவழித் தோன்றல்கள் என்ற வரலாற்று மோசடியை அம்பலமாக்கியுள்ளார். இலங்கைத்தீவில் வாழும் சிங்களவர்களும், தமிழர்களும் ஒரே இனமரபுகூறில் இருந்து வந்தவர்கள் என்று தனது ஆய்வுமூலம் நிரூபித்துள்ளார். ஆவரது ஆய்வின் முடிவுகளடங்கிய புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது.

மரபணு ஆய்வு முறையைப் பயன்படுத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த விஞ்ஞானிகளின் பிறப்பு இறப்பு என்பனபற்றிச்கூட ஆராயும் தன்மை வந்துவிட்டது அத்துடன் மருத்துவத் துறையில் புதிய நோய் தடுப்பு மருந்துகளும், சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்ட்டுள்ளன. DNA ஐ தொடர்புபடுத்தி நீரிழிவு, புற்றுநோய், இரத்தக்; கொதிப்பு போன்ற நோய்களை குணப்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தாவரங்களில் மரபணு மாற்றம் செய்து புதிய வகையான உணவுகள் சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டது. நோய் எதிர்ப்பு, அதிக நாட்கள் உணவுவகை கெடாமல் இருப்பதற்கான உத்திகள்; புதியநிறச் சேர்க்கைகள் போன்றவையும் DNA ஆய்வு முறைகளால் ஏற்பட்ட பலன்களாகும்.

குழந்தையின் பிறப்பிலேயே அந்தக் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கக்கூடிய நோய்கள் பற்றிய அறிவுறுத்தல்களை அக்குழந்தையின் DNA அமைப்பின்மூலம் கூறமுடியும். மரபணு மாற்றத்தைப் பயன்படுத்தி பழவகைகள், காய்கறிகள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றில் விருப்பியவாறு மாற்றங்களை ஏற்படுத்துவது போல் மனித இனமும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு தமது சந்ததியினரை உருவாக்க நினைத்தால் வர்க்கரீதியில், சமூகரீதியில் பெரியதோர் ஏற்றத்தாழ்வை எதிர்நோக்கநேரிடலாம்.

கருவிலிருக்கும்போதே குழந்தையின் DNA அமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெற்றோர் தாம் விரும்பும், எவ்விதக் குறைபாடும் இல்லாத பரிபூரணக் குழந்தையை (perfect child) பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எதிர்காலத்தில் இம்முறையில் பிறக்கும் ஒரு குழந்தை இரண்டு வயதில் தேவாரம் பாடினால்கூட வியப்பில்லை.

மனிதஇனத்தின் குண இயல்புகள் மற்றும் உளவியல் நிலைகளில் DNA பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மிகப்பெரிய தடயமாக பாவிக்கப்படும் DNA பற்றிய ஆய்வுகளின் முன்னேற்றத்தால் ஒரு காலத்தில் மனிதஇனத்திற்கு மரணமே இல்லை என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

1 கருத்து:

  1. பெயரில்லா1/10/2009 4:25 பிற்பகல்

    நான்றாக எழுதியுளீர்கள்; உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு