வியாழன், ஜனவரி 08, 2009

கலாசார மாற்றம்

ஆக்கம்: சௌந்தரி
கலாசாரம் பண்பாடு என்பதுபற்றி எல்லாம் எழுதி குழப்பும் எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் எனது மனதில் இருக்கின்ற கேள்விகளுக்காக இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.
கலாச்சாரம் பண்பாடு என்ற கேள்வி எழுகின்ற போதெல்லாம் பெண்களைப் பற்றிய விடயங்கள்தான் அலசப்படுகின்றன. பெண்களின் நடை உடை பாவனைகளை உள்ளடக்கியதுதான் கலாச்சாரமா? எமது விருப்பங்களுக்கும் அப்பால் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு கலாசாரமும் மாற்றம் அடையாதா?
குறிப்பாக வெளிநாடுகளில் பல்லின மக்களோடு சேர்ந்து வாழ்கின்றபோது அவர்களது கலாசார வழக்கங்களின் தாக்கம் எமக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கமுடியாது போய்விடும். இப்படியான மாற்றங்களை புலம்பெயர் சமுதாயத்தில் வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. உலகமயமாதல் காரணமாக இலங்கை இந்தியா போன்ற பாரம்பரியத்தை இறுக்கமாக கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் நாடுகளிலும் கலாசார மாற்றங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகித்தானே விடுகின்றது.

காலத்தின் கட்டாயம் காரணமாக மக்களிடையே ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் காலம் காலமாக காவிக்கொண்டுவந்த சில எண்ணக் கருக்களை இன்றும் மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் இருப்பது வேதனைதான். முக்கியமாக பெண்கள் விடயத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

எந்த ஓர் கொள்கையும், நடை உடை பாவனையும் அந்தக் காலகட்டத்தில் சரியானதாக இருக்கிறதா அல்லது பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமேதவிர நிலமானிய சமூக அமைப்பில் பழக்கமாக, வழக்கமாக, எழுதாத சட்டமாக வந்தவற்றை எல்லாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வற்புறுத்துவது எந்தவிதத்திலும் சரியாகாது.

சில சந்தர்ப்பங்களில் கால மாற்றத்துடன் சிலர் கடைபிடிக்கின்ற மாற்றங்கள் குழப்பமானதாகவும் முரணானதாகவும்கூட இருக்கலாம். அந்த மாற்றங்கள் தவறானவை என்று அவர்கள் உணரும்போது தங்கள் முடிவுகளை மீள்பார்த்து சரிப்படுத்தும் சுதந்திரத்தையும் அவர்களிடமே விட்டுவிடவேண்டும். முரணான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்படட வலியையும் அனுபவித்து அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான காலத்தையும் கொடுக்கவேண்டும் இது எனது தாழ்மையான கருத்து.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நிறை குறைகள் நிறைந்தவர்கள்தான். இது இருபாலாருக்கும் பொதுவான ஓர் நியதி. ஆனால் பொதுவாக பெண்களின் குறைகள்தான் அதிக விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உட்படுத்தப்படுகின்றது.

பெண்களை ஓர் தனியான இனமாக அதுவும் இரண்டாந்தர இனமாக கருதுவதால்தான் அவர்களது சிந்தனைகளும் எண்ணங்களும் சரிசமமாக மதிக்கப்படுவதில்லை. குறை நிறைகளை கணிப்பிடும்; அளவுகோல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டுமே தவிர பால் வேறுபாடுகளினால் உருவான இயல்புகளை வைத்து அவை கணிக்கப்படக்கூடாது. வித்தியாசமான உடல் அமைப்புகளை கொண்ட ஒரே காரணத்திற்காக வித்தியாசமான அளவுகோல்களை பாவிப்பது எப்படி பொருந்தும்.

குறிப்பாக பெண்களின் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இவை பெண்களுக்கான பிரச்சனைகள் என்று பிரித்துப் பார்க்காமல் பொதுவான ஓர் பிரச்சனையாக, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஓர் பிரச்சனையாக பார்க்கும் நிலை வளரவேண்டும். அதே நேரம் பெண்களுக்கே உரிய சேவைமனப்பான்மை, தியாகம் போன்ற குணங்களோடு தனிமனிதனுகுரிய கௌரவம், மரியாதை என்பனவும் கேள்விக்கு உட்படுத்தப் படாதவாறு பெண்களும் இருக்கவேண்டும்.

எமது சமுக அமைப்பானது ஆண்களை முதன்மைப் படுத்தும் சமுதாயமாக தோற்றம் கொண்டுள்ளது. அங்கே தொக்கி நிற்கும் பெண்களைப்பற்றிய மதிப்பீடுகள் இன்றும் தாழ்வாகத்தான் இருக்கின்றது.

பெண்ணின் உடல் உள ரீதியான மதிப்பீடுகள் அவைபற்றிய முடிவுகள் பெண்களின் வசம் இல்லாமல் ஆண்களின் ஆளுமையினால் தீர்மானிக்கப்படுவதும் இன்றும் முற்றாக மாறவில்லை.

இதுதான் பெண்ணுக்கான எல்லை என்று ஓர் ஆண் கோடு போடும் போது அங்கே ஓர் எதிர்புணர்வையே உருவாக்குகின்றான்; ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அவர்களுக்கான எல்லைகளை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்நோக்கும் ஆபத்துக்கள்பற்றி அறிவுறுத்தலாம் ஆனால் தடைகளைப் போடுவது முறையான தீர்வாகாது.

பெண்களின் வாழ்க்கை என்பது என்ன? அந்த வாழ்க்கைக்குள் அடங்கி நிற்கும் அதிசயங்கள், ஆபத்துகள், அனர்த்தங்கள், ஆளுமைகள் என்பவை எவை? என்பது பற்றிய சிந்தனைகள் பெண்களிடம் இருந்து ஆரம்பமாவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை உணரும் வண்ணம் பெண்களது சிந்தனைகளும் வளரவேண்டும்.

தனக்குத்தானே சுயமாக விதித்துள்ள தடைகளையும் சமூகம் பெண்கள்மீது வலிந்து விதித்துள்ள தடைகளையும் மீறி தங்களது எண்ணங்களை, திறமைகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த பெண்கள் முன்வரவேண்டும். இதற்கு சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் உதவவேண்டும்.

3 கருத்துகள்:

  1. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    ஒரு சிறிய கருத்து - தாங்கள் எழுதும் போது, பாரா பிரித்து எழுதினால் இன்னும் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். எல்லோரும் கண்னியில் படிப்பதால், பாரா பிரித்து, இரண்டு பாராக்களுக்கு இடைவெளிவிட்டு பதிவை போட்டீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.

    // தனக்குத்தானே சுயமாக விதித்துள்ள தடைகளையும் சமூகம் பெண்கள்மீது வலிந்து விதித்துள்ள தடைகளையும் மீறி தங்களது எண்ணங்களை, திறமைகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த பெண்கள் முன்வரவேண்டும். இதற்கு சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் உதவவேண்டும். //

    தடைகளைத்தகர்தெரிய நல்ல மனதிடம் வேண்டும். அது இருந்தால் மலையும் துரும்பாகும்

    பதிலளிநீக்கு
  2. இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள்.

    அதற்கு பதிலாக கமெண்ட் மாடரேஷன் போட்டுவிடுங்க...

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராகவன்
    உங்களது கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படும்.

    மன திடம் உள்ள பெண்கள்கூட தமது முடிவுகள் மூலம் சமூகத்தில் தாம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர் நோக்க முடியாமல் துவண்டு விடுகிறார்களே?
    சமூகம் அவர்களை தனிமை படுத்தி தண்டிப்பது நியாயமா .. . . .

    பதிலளிநீக்கு