செவ்வாய், ஜனவரி 20, 2009

உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

சௌந்தரி
“உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

அப்பிடி ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றது என்று முணுமுணுத்தாலும் போதியளவு வசதிவாய்ப்புகள் இருந்தும் முதியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

“காவோலை விழ குருத்தோலை பார்த்துச் சிரிக்கும்” இன்றைய இளைஞர்கள்தான் நாளைய முதியவர்களாக உருமாறப்போகின்றவர்கள் ஆகவே இதைப்பற்றி அனைவருமே சிந்திக்கலாம்.
எதையும் நியாயப்படுத்தாமல் பிழை, சரி என்பதுபற்றி எல்லாம் வாதம் செய்யாமல் அனுபவத்திற்கும் வயசுக்கும் மதிப்புக் கொடுத்து முதியவர்களை அனுசரித்துப் போவதுதான் நியாயமானது. அவர்களது இளமைக்காலத்து வியர்வைதான் இப்போது எம்மை வாழவைக்கின்றது.

முதியவர்களுக்கு இப்போ என்ன குறை வைத்துவிட்டோம் என்று சொல்வது எனக்கும் கேட்கிறது. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் முதியவர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஊரில் கோயில்குளம், உறவினர்கள், அயலவர்கள் என்று சுற்றித் திரிந்தவர்கள் எதற்கும் மற்றவர்களது தயவை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிள்ளைகள் காலையில் போனால் இரவுதான் வீடு திரும்புவார்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் நான்கு சுவர்களுக்குள் நாட்களைக் கடத்தவேண்டிய கட்டாயம். வேற்றுமொழி, புதியஇடம், புதியகலாசாரம் என்று மும்முனைத் தாக்குதலுக்கும் அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க வெள்ளையின கோடீஸ்வரப் பாடகர் ஒருவரது தந்தையின் சடலம் தேடுவாரற்ற நிலையில் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 89 வயதான முதியவர் மரணித்து ஆறு வாரங்களின் பின்பு சடலம் அழுகி, துர்நாற்றமடித்து அயலவர்களுக்கு தெரிந்தபோதே போலீசார் வீட்டிற்குள் சென்று பொருமி வெடித்த சடலத்தை மீட்டனர். இது கதையல்ல உண்மையில் நடைபெற்ற ஓர் சம்பவம். அந்த முதியவர் இறந்து ஆறு வாரங்கள்வரை பிள்ளைகள் எங்கே போனார்கள்? ஒரு முறையாவது அவர்கள் தொடர்புகொள்ள முயலவில்லையா?

வயதான பெற்றோர்களை வீட்டில் தனியாகவிட்டு போகுமிடங்களில் பணிகளோடு மூழ்கி தம்மைத் தொலைத்து விடுவதால் அடிக்கடி பெற்றோர்களை தொடர்புகொண்டு அவர்களது நலம் அறியவே பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் செய்தி சொல்லவும் நாதியற்று அவர்கள் இறந்துவிட பிள்ளைகள் வந்து கண்ணீர் வடிக்கிறார்கள். வாழும்போது அருகில் இல்லாத பிள்ளைகள் சாவில் வந்து வாசமுள்ள மலர்ச் செண்டு வைத்துப் போகிறார்கள்.

இதுதான் இங்குள்ள பெற்றோர் பிள்ளைகளின் உறவு நிலை. தமிழ்ப் பெற்றோர்களது நிலமையும் இதேபோல் மாறிவருகின்றது என்று பொதுமைப்படுத்தமுடியாது. ஆனால் பணம், பதவியிருந்தால் வாழ்வில் எல்லாமே சாத்தியமாகிவிடும், எதையுமே சாதித்துவிடலாம் என்று எண்ணும் மனிதர்களுக்கு இந்த மரணம் நல்லதோர் படிப்பினையாக அமையும்.

போர்ச்சூழல் காரணமாக இளையவர்களெல்லாம் நாட்டை விட்டு வெளியேறியதால் எமது நாட்டிலும் இளைஞர்களைவிட முதியவர்களே அதிகம். உழைப்பவர்களைவிட ஓய்வூதியம் பெறுவோர் தொகையே அதிகம். பெற்றோர்கள் இறந்தபின்பு கொள்ளிவைப்பதற்குக்கூட பிள்ளைகள் இல்லாமல் பயணித்த கதைகள் எத்தனையோ. இவையெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்றாகிப் போனதால் எல்லோரும் மனதை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஊரில் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வாரத்தில் ஒரு தடவையாவது போன் செய்து அறிய முடியாத அளவுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகளின் நிலை இருக்கிறது. யாரிடம் நேரமிருக்கிறது? அதிகப்படியான பணச்சுமைகளை ஏற்படுத்தி அவற்றை சமாளிப்பதற்கு தொடர் வேலை செய்வதிலும், வேலை செய்த களைப்பில் உறங்குவதிலும்தான் நேரம் போகின்றது. அதைத்தவிர வாழ்வில் மிகுதியாக வேறு எதுவுமேயில்லை என்றே கூறவேண்டும்.

காலங்கள் நகர்கின்றன், நாளை நாமும் தனிமையில் விடப்பட்டு முதியோர் இல்லத்திலும், பராமரிப்பு நிலையங்களிலும்தான் இருக்கப்போகிறோம். முற்பகல் செய்வது பிற்பகலில் விளையப் போகிறது அவ்வளவுதான். நினைத்துப் பார்க்கும்போதே கஸ்டமாக இருக்கின்ற இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? பணத்தைவிட உயரிய பாசமிகு வாழ்வியல் கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர், குடும்ப உறவினர், ஊரவர், அயலவர் மற்றும் அன்புடன் பழகுபவர்கள் இவர்களிடம் நேர்மையான உறவை வளர்க்க வேண்டும்.

நாடுவிட்டு நாடு வந்து பணத்தை மட்டும்தேடி இறுதியில் காணப்போகும் சிறப்பு எதுவுமேயில்லை. மற்றவர்கள்மீது குறை சொல்வதையே முழுநேர வேலையாகக் கொண்டு மனநோயுடன் வாழும் வாழ்வை நிறுத்தி, தவறுகளை சரிசெய்து மனிதனாக வாழ நினைத்தாலே போதும் எல்லாம் சரியாக நடக்கும்.பூமிக்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது எதைக் கொண்டு போகப் போகின்றோம்? செய்யும் செய்கைகளின்மூலம் மனச்சந்தோசத்தை வளர்க்கமுடியாமல், உள்ளுக்குள் புழுங்கி தினம்தினம் செத்துக் கொண்டிருக்கும் அவசர வாழ்வின் முடிவில் எதைக் காணப்போகின்றோம்?

புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றவர்களும், முதியவர்களும்கூட வீடுகளில் அடைந்து கிடக்காமல் முடிந்தளவு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி நல்லதோர் நட்புவட்டத்தை உருவாக்கி எல்லோரும் சேர்ந்து வாழப்பழகலாம். அரசாங்கம் கொடுக்கும் மரியாதைப்பணம், போதியளவு நேரம், சேர்ந்துபழக காணும் இடமெல்லாம் நண்பர்கள் இப்படியாக எல்லாமே உங்களைச்சுற்றி இருக்கும்போது வேறு என்ன வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்காது, சார்ந்து வாழும் வாழ்வைவிடுத்து சுயமாக செயல்படும் தன்மையை வளர்த்துக்கொண்டால் மகிழ்ச்சிதானாக வந்துவிடும்.

காலத்துடன் வயது போவதை தடுக்கமுடியாது ஆனால் முடிந்தமட்டும் மனசை இளமையாக வைத்திருக்கமுடியும். பொதுவாகவே முதுமை வந்தாலே பயமும் வந்து சேர்ந்துவிடும் அதிலிருந்து விடுபட்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி முடிந்தளவுக்கு முதியவர்களும் தங்களை மாற்றப்பழகவேண்டும் இதுதான் யதார்த்தம். இந்த சிந்தனையுடன் இருந்தால் முதுமையை நினைத்து நான் பயப்பிடத் தேவையில்லை.

இதை வாசிப்பவர்கள் உங்களது கருத்துக்களையும் எழுதிச் செல்லுங்கள். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வின்மூலம் தெளிவான சிந்தனையை உருவாக்கலாம்.

8 கருத்துகள்:

  1. // காலத்துடன் வயது போவதை தடுக்கமுடியாது ஆனால் முடிந்தமட்டும் மனசை இளமையாக வைத்திருக்கமுடியும். //

    மனது இளமயாக இருந்தால்.. உடம்பும் நன்றாக இருக்கும்... வயது ஏறுகின்றதே என்று கவலைப்பட்டால் ஒன்றும் செய்ய இயலாது..

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராகவன் உங்கள் கருத்துக்கு!
    மனதையும் உடம்பையும் பாதுகாப்பதும் அழிப்பதும் எங்கள் கையில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நல்ல ஆரோக்கியமான பதிவு.

    பெற்றவர்களை முதுமையில் பார்க்கவேண்டும் என்பதை முழுமனதுடன் ஆமோதிக்கின்றேன். ஆயினும் இது அவர்களுடைய குழந்தை வளர்ப்பிலும் இது தங்கியுள்ளது. வள்ளுவன் கூட

    "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல்"

    "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்"

    மகன் தந்தைக்கு செய்வது உதவி, தந்தை மகனுக்கு செய்வது கடமை என்று சொல்லியிருக்கின்றார்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள்.அவசர வாழ்வில் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது உண்மை தான் பூபதி.
    முதுமை ஓர் இயல்பான இயற்கையான நிகழ்வு.அதனை இட்டு நாம் பயம் கொள்ளத் தேவை இல்லை.அது ஒரு பருவ மாற்றம்.அதிலும் மகிழ்வான வாழ்க்கை இருக்கிறது.பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது அவர்களைப் பாருங்கள்.எல்லாப் பருவங்களிலும் சுகங்கள் உண்டு.அதன் தன்மைகள் தான் மாறு படுகின்றன.முதுமையையும் ஏற்றுக்கொண்டு போகும் போது தான் வாழ்க்கை முழுமை அடைகிறது. இல்லையா பூபதி?

    பதிலளிநீக்கு
  5. //முதுமை ஓர் இயல்பான நிகழ்வு.....பருவ மாற்றம்.அதிலும் மகிழ்வான வாழ்க்கை இருக்கிறது//
    உண்மையான கருத்து; ஆரோக்கிய வசதிகள் பெருகப் பெருக ஆயுள் காலமும் நீடிக்கப் போகிறது. பிரைச்சனைகளும் வளரப் போகின்றன யாரையும் சார்ந்திருக்காமல் வாழும் பழக்கத்தை பழகிக் கொண்டால் எப்போதும் சந்தோசம்தான்

    பதிலளிநீக்கு
  6. நன்றி காரூரன்; யாரும் தாமாக விரும்பி பூமிக்கு வருவதில்லை; நீங்கள் கூறிய கடமை, உதவி என்ற கருத்து நியாயமானது.
    பெற்றோரின் இரத்தத்தை குடித்துவிட்டு அவர்களை விட்டு உதிரும் அட்டைபூச்சிகளும் உள்ள உலகமிது. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை நிறைய பேர் மறந்துபோகிறோம்.

    அன்பு என்பதும் பாசம் என்பதும், இன்று, பொய்யாகிப் போனதோ எனத் தோன்றுகிறது. "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்பதை முதுமையில் தான் அனுபவிகின்றோமோ?

    பதிலளிநீக்கு
  7. இந்த புகைப்படம் சொல்லும் பல விடயங்கள்.

    தங்கள் வரிகளும் அருமை.

    வயது என்பது உடலுக்கு மட்டுமே ...

    பதிலளிநீக்கு
  8. //வயது என்பது உடலுக்கு மட்டுமே//

    நன்றி ஐமால் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
    இரண்டு கால்கள் நான்காக மாறியும் தள்ளாடிய வயோதிபம் துணையாக ஓர் உறவு வந்ததால் இயங்குகிறது.

    பதிலளிநீக்கு