ஞாயிறு, ஜனவரி 11, 2009

சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

க்கம்: சௌந்தரி
வாரம் முழுவதும் இயந்திரம்போல் வேலை செய்துவிட்டு ஓர் மாற்றத்திற்காக சனிக்கிழமை இரவு நண்பர்கள் ஒன்றுகூடி உணவருந்தி சந்தோசமாக இருப்போம். நண்பர்கள் ஒன்று கூடினால் கேட்கவும் வேண்டுமா? இலக்கியம், அரசியல், சமூகம் போன்ற துறைகளில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவ்ர்கள் நேரடியாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பலதரப்பட்ட விடயங்களையும் பற்றிய விரிவான உரையாடல் சுவாரசியமாக இடம்பெறும்.

இன்று இந்தக் கட்டுரையை எழுதத்தூண்டிய விடயம் நேற்று நடைபெற்ற உரையாடலில் இடம்பெற்ற சாதி பற்றிய பார்வை.

உரையாடலின் சாரம்சம் என்னவென்றால் ''புலம்பெயர்ந்த பின்பும் உயர்சாதியினர் என்று கூறிக்கொள்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை மனதளவில் அங்கீகரிக்கத் தயாரக இல்லை''.

அதற்கு கூறப்பட்ட காரணங்களில் முக்கியமானது என்னவென்றால் தாழ்சாதியினருக்கென்று தனியான குணம் இருக்கின்றது சமய சந்தர்ப்பங்களில் அத்தகைய குணங்கள் தானாக வெளிப்பட்டுவிடும் என்றும் இதை அனுபவபூர்வமாக சிலர் அனுபவித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. பொதுவான குணங்கள் என்று சொல்லப்பட்டவை
1. திருடுதல், பொய் சொல்லுதல், கெட்டவார்த்தைகளை பாவித்தல்
2. தினம் மதுபோதையில் வீட்டிலும் வெளியிடத்திலும் அடிதடி சண்டை போடுதல்
3. துப்பரவின்மை
4. நாகரீகமின்மை
5. குடும்பத்தில் ஒற்றுமையின்மை
6. குடும்பம் என்ற கட்டுக்கோப்பிற்குள் வாழாமை
7. அடிமைத்தனம் இப்படிப்பல

ஈழத்தில் கரவெட்டி என்ற எனது கிராமத்திற்குப் பக்கத்தில் கன்பொல்லை என்ற ஓர் மாதிரிக் கிராமம் இருக்கிறது. அங்கே கீழ்சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள்தான் வாழ்கின்றனர். அவர்களில் பலரிடம் மேலே கூறப்பட்ட குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவர்களும், அவர்களது பிள்ளைகளில் பலரும் போரின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சிறப்பாக வாழ்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது? ஊரில் அவர்களது வாழ்க்கை முறைக்கு காரணம் சமூகமும், புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தமே. அந்த அழுத்தத்தின் சுமையிலிருந்து விடுபடுவதற்காக அதற்குரிய மாறு வழிகளை தேடிச்சென்று அந்தத் தேடலில் விரக்தியடைந்து அவர்கள் விரும்பாமலே அப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்குள் தம்மை திணித்துவிடுகின்றார்கள்.

உயர்சாதியினர் என்று பெரிதாக பெருமைபேசி வாழ்ந்தவர்கள் பற்றியோ
இறுதிவரை தங்களது பெருமைகளை கட்டிக்காப்பதற்காக தமக்கு கீழே உள்ளவர்கள் விழிப்படையக்கூடாது இறுதிவரை இப்படியே இருந்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர்களைப்பற்றியோ இப்போது கதைப்பது தேவையற்ற விடயம்.

இந்த நுhற்றாண்டில் குறிப்பாக போர்ச் சுழலினால் ஈழத்தில் பாரியளவு விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது சாதீயம் பற்றிய பார்வை. ஆனால் மக்கள் மனதளவில் எவ்வளவு தூரம் மேம்பாடு அடைந்திருக்கின்றார்கள் என்பது இப்போதும் கேள்வியாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்தபின்பும் வேளாளர் அல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்களை குறைந்த சாதி என்ற வர்க்கத்திற்குள் இன்னும் சிலர் வகுப்பது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ற மொழி ரீதியில்தான் ஒருவரை ஒருவர் முதலில் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட நபரினது பிறப்புபற்றிய தகவல்களை மற்றவர்கள் மூலம் தெரிந்துகொள்ள நேரிடும்போது அவர்களுக்கிடையே மலர்ந்த நட்புக்கூட இல்லாமல்போன சந்தர்ப்பங்களும் உண்டு. முக்கியமாக பிள்ளைகளது திருமணம் என்று வரும்போது என்ன சாதி என்று துருவித்துருவி ஆராயமுற்படுகின்றார்கள் பெற்றவர்கள்.

எப்படி பிறப்பினால் ஒருவர் உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதியாக முடியும்.
இந்த நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட சிந்தனை இருப்பது அருவருப்பாக இருக்கின்றது. தாழ்ந்தவர்கள் என்று அவர்களது உழைப்பினால் பாகுபடுத்தப்பட்டவர்களது உழைப்பாலும்
வியர்வையாலும்தான் மற்றயவர்களது வாழ்வும் இந்த பூமியும் வளமாக இருக்கின்றது.
ஊரில் உயர்தவர்கள் என்று கூறப்பட்டவர்கள் பொருளாதார மேம்பாட்டினால்தான் உயர்ந்து நிற்க முடிந்தது. மற்றயவர்கள் தமது பொருளாதார விடுதலைக்காக போராட வேண்டியிருந்தது. ஆனால் புலம் பெயர்ந்த பின்பு பொருளாதாரம், கல்வி மற்றும் பிறவிடயங்களிலும் சமத்துவத்தை அடைந்தபின்பும் மனிதநேயம் மறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

சிங்களவரிடம் தமிழர் கேட்கும் உரிமைகள் நியாயமானவை, தேவையானவை, போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டியவை என்று ஒருமித்துக் குரல்கொடுக்கும் தமிழர்களுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சாதீயப்பார்வை பற்றிய நிலை என்ன?

ஒரு இனம் மற்றய இனத்தை அடக்கி, ஒடுக்கி, விழுங்கி ஏப்பம் விடுகின்றபோது பார்த்துக் கொண்டிருக்கமுடியாமல் பொங்கி எழுந்து எமது இனத்துக்குரிய உரிமைகளை பெறுவதற்காக எத்தனையோ உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்கின்ற எமது தமிழ் சமூகத்திற்கிடையே சரிநிகர் சமமாக வர்க்க பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை என்பது வேதனையானது.

சாதி பற்றிய நினைப்பு எல்லாம் தமிழ் ஈழம் கிடைத்தால் நீங்கிவிடும் என்று எம்மில் பலர் நம்பிக்கொண்டு இருகின்றர்கள். அவர்களிடம் நம்பிக்கை மட்டுமே இருக்கிறது ஓர் அறிவு பூர்வமான அணுகுமுறைகளோ திட்டங்களோ இல்லை என்பதுதான் உண்மை.

இந்தக் கட்டுரைக்கு வலுச் சேர்ப்பதற்கோ இல்லை மாற்று கருத்தை வெளிப்படுத்துவதற்கோ உங்களது வாதங்களை முன்வையுங்கள். உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஓர் தெளிவான சிந்தனையை கொடுக்கும்.

5 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே...

    மிக அழுத்தமாக வைக்கப்பட்ட வாதங்கள். புலம் பெயர்ந்த இந்தியர்களில் இதுவரை நான் இந்த நிலையை காணவில்லை. அவர்கள் பார்க்கும் போது இந்தியன் என்ற நிலைதான் பார்த்துள்ளேனே தவிர, எந்த மதம், மொழி என்று கூட பாகுபாடு பார்ப்பதில்லை.

    கத்தாரில் இருந்த போது கூட பல ஈழத்தமிழர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களிடமும் நான் இந்த வேற்றுமையை உணரவில்லை.

    என்னுடைய அனுபவத்தில், நாட்டை விட்டு வெளியில் உள்ள போது, எல்லோருக்கும் தெரிவது இவர் நம் நாட்டை சேர்ந்தவ்ரா என்பது மட்டும் தான். வேறு ஒன்றும் என் அனுபவத்தில் இல்லை.

    இது என் அனுபவம் மட்டும்தான். இதை பொதுவாக்கவும் இயலாது என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.பொதுவாக மன அழகும், கல்வி அறிவும், குணசீலமுள்ள வாழ்க்கைமுறையும்,பொருளாதார மேம்பாடும் எல்லோராலும் விரும்பப் படுகின்றன.

    மற்றம்படி யாருக்கு யார் பொருத்தம்? யாரை யார் திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரவரைப் பொறுத்தது.

    கல்வியாலும் தொழிலாலும் மேம்பட்டு சிறந்த வாழ்க்கை வாழ்பவர்களை நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மணிமேகலா உங்கள் கருத்து நியாயமானது;
    இந்த சமூக அநீதியால் பெருவாழ்வு பெற்ற சிறு கூட்டங்கள் அதைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதும் வாழ்வை இழந்த கூட்டங்கள் அவற்றை எதிர்த்துப் போராடுவதும் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல. பல ஆண்டுகாலமாக தொடர்ந்துவரும் ஒரு வரலாற்றுத் தொடராகும். என்னை சிந்திக்க வைத்த விடயம் என்னவென்றல் பகுத்தறிவாளர்கள் என்று பெயரளவில் இருக்கும் மனிதர்கள் பற்றியதே! தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராகவன்

    இந்த நாட்டிலும் ஆரம்ப காலங்களில் நீங்கள் கூறுவது போல்தான் இருந்திருக்கும் ஏனென்றல் தமிழர்கள் மிகக் குறைவாகவே இருந்திருப்பார்கள் ஆனால் இப்போது தெரிவு செய்து பழகக் கூடிய அளவு தமிழர்கள் உள்ளனர் அதற்கான வாய்ப்பும் உள்ளது. தெரிவின் போது சிலருக்கு சாதியும் ஒரு qualification ஆக மாறியுள்ளது. ஆனாலும் நீங்கள் கூறியது போல் இதை பொதுவாக்க முடியாது.

    பல மாற்றங்கள் வெளிபடையாக தெரிகின்றன. பொதுவாக தமிழ் ஈழத்தில் மக்களிடையே ஏற்பட்ட உரிமையுணர்வுகள் சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த மாறுபாடுகளிற்கு காரணம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எப்படியோ இந்த சாதி என்ற போர்வைக்கு பூசப்பட்ட சாயம் வெளுத்தால் அதுவே ஒரு நல்ல செய்திதான். அடுத்து வரும் ஆண்டுகளில் சாதி என்ற சொல் இல்லாமலே போய்விடும் என்று நம்புவோமாக!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1/15/2009 6:58 AM

    ithaiyum konjam padiththup parungo....

    http://www.counterpunch.org/sainath01182008.html

    பதிலளிநீக்கு