வெள்ளி, டிசம்பர் 26, 2008

கவிதைகள்!



மௌனம்!





நானும் நீயும் இணைந்து நடந்தோம்
நடந்த பாதையில் கதைத்துக் களைத்தோம்
நீண்ட இடைவெளி,இனிமையான சந்திப்பு

வன்கோவும் பிக்காசோவும் உன் மனவெளியில்
வாலியும் கண்ணதாசனும் என் விழியோரத்தில்

நானும் நீயும் படித்த புத்தகங்கள்
பதித்த தத்துவங்கள்
முரண்பட்டு நிற்கின்றன
முரண்பட்ட கருத்துக்கள்
மோதுகின்ற கணத்தில்
மூச்செறிந்துவிட்டு,
ஏனோ மௌனித்து விடுகின்றோம்
ஏன் இந்த மௌனம்
சொல்ல நினைப்பதை
சொல்ல விரும்பாத மௌனம்
ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோமா - இல்லை
உடலும் மனமும்
தேடும் அடைக்கலம்
அழிந்துவிடும் என்ற வருத்தமா!


நானும் நீயும் நாமாக . . . . .







நீ நினைக்கும் பொழுதெல்லாம்

தென்றலாக வீசமறந்தால்;
என்னை புயலென்று சொல்லிவிடாதே!
நீ தூங்கும் நேரமெல்லாம்
உன் கனவோடு வருவதனால்;
என்னை நிஐம் என்று நம்பிவிடாதே!
நீ போகும் பாதையெல்லாம்
உன் நிழல்போல் தொடராவிடில்
எனக்கு முடம் என்று பெயர் சூட்டாதே!
நீ விரும்பும் கணமெல்லாம்
உன்னை படரமறுத்துவிட்டால்
என்னை மரமென்று கொச்சைப்படுத்தாதே!
நீ கேட்கும் போதெல்லாம்
நான் வெளிச்சம் தரமறுத்தால்
என்னை இருட்டென்று மாட்டிவிடாதே!
நீ குட்டும் போதெல்லாம்
நான் குனிந்து கொள்வதனால்
என்னை அடிமையென்று அவமதிக்காதே!
நீ பேசும் போதெல்லாம்
நான் மௌனித்திருப்பதனால்
என்னை ஊமையென்று எண்ணிவிடாதே!
நான் நானாகவும் நீ நீயாகவும்
நானும் நீயும் நாமாகவும் இருக்கும்போதே
நாளைய பொழுது நலமாக விடியும்.

ஆக்கம்
சௌந்தரி

2 கருத்துகள்:

  1. ரேணுகா ஜோன்11/24/2011 8:40 PM

    இந்தக் கவிதை நன்கு சொல்லப்படுகிறது. இரண்டு உள்ளங்கள் விலகுவதும் பிறகு சேருவதும்தானே வாழ்க்கை. விலகலுக்கும் சேருதலுக்கும் இடையே வரும் வேதனைதான் இந்தக் கவிதை. அப்போது ஏன் விலகினோம் என்று இப்போது நினைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரேணுகா உங்கள் கருத்துக்கு
    உண்மையில் இந்தக் கவிதையை ஓர் ஏமாற்றத்தில் எழுதியிருந்தேன்
    சிலர் வெளிப் பார்வைக்கு மனசுக்கு பிடித்தமானவர்கள் போல் தோன்றுவார்கள்
    ஆனால் சில சந்தர்பங்களுக்கு பின்பு முகமூடி அணிந்த மனிதர்கள் என்பதை உணர்த்திவிடுவார்கள்
    புரிந்தபின் விலகலுக்கான போராட்டமாகத்தான் இந்தக் கவிதையை எழுதினேன்
    எனக்கும் பிடித்த கவிதை ஒன்று.

    பதிலளிநீக்கு