சனி, ஜனவரி 31, 2009

நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்......



புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அமரர் முத்துக்குமாருக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி.

புதுவையின் கவிதையில் உள்ள ஆழத்தையும் ஈர்ப்பையும் அவரது எழுத்தின் வலிமையையும் வியந்தவர்கள் பலர்.


எனக்கொரு நாடும் எனக்கொரு மொழியும்
இருந்திடும்போதும் நானொரு அகதி


இப்படியாக தனது ஏக்கங்களை வார்த்தைகளாக்கி மற்றவர்களையும் விழித்தெழச்செய்தவர் புதுவை இரத்தினதுரை. தமிழினத்தை நேசித்து தன் உறவுகளின் அழிவை தடுக்க தன்னையே அழித்த வீரனை நினைத்து சதையும் ரத்தமுமாக காட்சி தரும் மண்ணில் நின்றுகொண்டே புதுவை எழுதிய கண்ணீர் காவியமிது.

முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.

தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது.
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்;சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.

தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.

நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம் .
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்

தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை

10 கருத்துகள்:

  1. சொல்ல வார்த்தை இல்லை
    நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அப்பு பூபதி எப்பிடி அப்பன் சுகம்?? நீர் என்ன தம்பி இல்லையோ??? நான் உம்மை விட வயசிலை மூத்தவன்...நம்பாட்டி நான் அந்த நாளிலை தமிழாராய்ச்சி மாநாடு நடக்கையிக்கை பின் பக்க கதவாலை தப்பி வெளிலை ஓடின ஆள்??

    நல்ல கவிதை ஒன்டைத்தான் போட்டிருக்கிறீர், புதுவை அண்ணை யதார்த்திலை மூழ்கி எழும்பின மாதிரித் தான் கவிதை படைக்கும். அந்தாள் ஒரு எழுத்துப் புலியப்பு. அப்ப பிறகு சந்திப்பம். நேரமிருந்தால் என்ர பக்கமும் சும்மா தலையைக் காட்டிப் போட்டுப் போவன் மோனை.

    பதிலளிநீக்கு
  3. வாருங்கள் திகழ்மிளிர்
    எதிர்பார்ப்புகள் பொய்த்துவிடும்
    அந்த கடைசி மணித்துளியில்
    எல்லாமே நடந்து முடிந்துவிடும்
    ஈழத்தில் மரணம் மிக மலிந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  4. சமகால நிகழ்வுகளை சக்கடத்தாரின் தனித்துவமான பாணியிலே மிகுந்த ஈடுபாட்டுடன் எழுதும் சக்(ங்)கடத்தார் உங்கள் வருகைக்கு நன்றி. இன்னும் பரிசீலிக்க வேண்டிய வார்த்தைகள் உங்கள் கருத்தில் அடுக்கப்படிருகின்றன என்பதயும் அறியத்தருகின்றேன்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா2/02/2009 3:34 PM

    வார்த்தைகளால் சொல்லமுடியாத வலிகளை வரிகளில் சொல்லிவைத்திருக்கும் புதுவை ஐயா... கடைசித் தமிழன் உயிர் வாழுமட்டும் உங்கள் பெயர் உச்சரிப்பர். ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் ஓலங்களை உங்கள் வரிகள் உலகறியச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2/02/2009 10:19 PM

    தொண்டை அடைக்கிறது..
    கோபத்தையும், சோகத்தையும் வார்த்தைகளில் வடித்து வடித்து சோர்ந்து போனோம்..

    தமிழகம் இப்போது இருண்டு போய் உள்ளது..

    நண்பன்,
    இர.ஜெ.பிரேம்குமார்

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்குமார்,

    //கோபத்தையும், சோகத்தையும் வார்த்தைகளில் வடித்து வடித்து சோர்ந்து போனோம்..//

    தமிழர் மீது உண்மையாகவே அன்பு கொண்டு தொடர்ந்து ஆதரவு வழங்கும் கட்சிகளையும் மக்களையும் என்னவென்று சொல்வது. இப்படியான உதவிகள்தான் தமிழீழத்திற்கு விடிவினையும் விமோசனத்தையும் கொண்டுவரும்.
    தியாகி முத்துக்குமரன் மூட்டிய தீ இன்னும் அணையவில்லை அதற்குள் திண்டுக்கல் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்க வேண்டும் என்று வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் மதுரன்;
    //ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் ஓலங்களை உங்கள் வரிகள் உலகறியச் செய்யும்// நன்றாகச் சொன்னீர்கள். சம உரிமை கேட்டதற்கு தமிழனுக்கு கிடைக்கும் சன்மானம் மரணம்தான்.
    "உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
    நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
    அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்'' களத்தில் வாழும் கலைஞனால் மட்டுமே எழுதக் கூடிய வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  9. பூபதி,
    புதுவையின் கவிதைகள் தனிரகம். உள்ளத்து குமுறலை கள்ளமில்லாமல் சொல்லும் ஓர் நிகழ்காலக் கவிஞன். அவர் தம் கவிதையினை எடுத்து வந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாருங்கள் சக்கடத்தார்,
    //உள்ளத்து குமுறலை கள்ளமில்லாமல் சொல்லும் ஓர் நிகழ்காலக் கவிஞன்//
    உண்மைதான், கவிதைக்கு பொய் அழகு என்பதையே பொய்யாக்கிய வரலாற்றுக் கவிஞன். நான் அவருடன் வானொலியில் பேசியிருக்கிறேன் ஆனால் சந்திக்கும் சந்தர்பம் கிட்டவில்லை.

    பதிலளிநீக்கு