செவ்வாய், ஜனவரி 06, 2009

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்!

ஆக்கம் சௌந்தரி
ஆங்கிலேய விஞ்ஞானியான சார்ல்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுகளுடன் உருமாற்றங்கள் ஏற்படுகின்றது என்ற உயிரியல் கோட்பாட்டை வகுத்து இயற்கை மற்றும் உலகத்தின் படைப்புப் பற்றிய சிந்தனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவர் இங்கிலாந்தில் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் திகதி பிறந்தார். இற்றைக்கு 199 ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமவளர்ச்சி பற்றிய கொள்கையை நிலைநிறுத்திக் கூறி கடவுளால்தான் உலகமும் உலகத்தில் உள்ள உயிரணுக்களும் படைக்கப்பட்டது என்ற திடமான நம்பிக்கையில் மாற்றத்தை கொண்டுவந்தார்.

இயற்கை விஞ்ஞானியான டார்வின் பீகிள் என்ற அரசுக்கப்பலில் 1831 ம் ஆண்டு தனது 22வது வயதில் உலகத்தைச் சுற்றி இயற்கை வளங்களைப்பற்றிய ஆராய்சிப் பயணத்தில் ஈடுபட்டபோது ஏராளமான புதைபொருள் பகுதிகளையும், புதிய தாவர விலங்கினங்களையும் கண்டறிந்து ஆராய்ந்தார். தொடர்ந்த 5 வருட ஆராய்சிப் பயணத்தில் கண்டறிந்த குறிப்புகளுடன் லண்டன் திரும்பியவர் அவைபற்றி பல நூல்களை எழுதியிருந்தார்.

1859 ம் ஆண்டு டார்வின் எழுதிய இனங்களின் தோற்றம் (Origin of Species) என்னும் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆராய்சிகளின் அடிப்படையிலும் அல்பிரட் ரசல் வாலஸ் என்ற இங்கிலாந்து இயற்கை விஞ்ஞானியின் ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையிலும் உருவானதுதான் இந்த அறிவியல் நூல். இந்த நூலைப்போன்று வேறு எந்த நூலும் உலக மக்களிடம் பெரிய அளவில் சர்ச்சையையும் விமர்சனத்தையும் பெற்றதில்லை. இந்த நூலில் டார்வின் எழுதியவைதான் பின்பு டார்வின் கொள்கை என்று பெயர் பெற்று இன்றும் நிலைத்து நிற்கிறது.

பரிணாம வளர்ச்சிபற்றிய டார்வினின் குறிப்பு!
உலகத்தில் உயிர்வாழும் அனைத்துமே எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது; தொடர்ச்சியான காலமாற்றத்துடனும் சூழல் மாற்றத்துடனும் தன்னை தக்கவைத்து வாழக்கூடிய குணஇயல்புகளை உடையவை மட்டும் தொடர்ந்து வாழ்கின்றன; வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாதவை எல்லாம் அழிந்து விடுகின்றன என்ற கூர்ப்பின் அல்லது பரிணாமத்தின் அடிப்படைத் தத்துவத்தை தனது ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தினார்.

இயற்கையின் மாற்றத்திற்கும் மனிதனின் இயல்புகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு; மனிதஇனமும் உலகில் உள்ள மற்றய உயிரினங்களில் ஒன்றுதான் என்ற உண்மை என்பன பற்றியும் மக்களிடையே சிந்தனையைப் பரப்பின அவரது நூல்கள்.

உயிரியில் மானிடவியல் பற்றிய மக்களது கருத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்தது டார்வினின் கொள்கை. கடவுள்தான் உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிரினங்களையும் படைத்தார் என்ற நம்பிக்கையை ஆட்டம்காண வைத்தது. வாலில்லாக் குரங்கு போன்ற விலங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்று காரசாரமான வாக்கு வாதங்களை உருவாக்கியது. மதகுருமார்கள் டார்வினின் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மக்களிடையே சமயப்பற்று அற்றுப்போகும் என்ற அச்சத்தினால் டார்வின் கொள்கையை முற்றாக எதிர்த்தார்கள்.
மதங்களில் காணப்பட்ட மூட நம்பிக்கைகளை அடியோடு மாற்றாவிட்டாலும் குறைத்துக்கொள்ள உதவியது இவரது கொள்கை. இன்றும் சில மதக்கொள்கைகள் காலத்துக்கு பொருந்தாமல் இருக்கின்றன. ஆனாலும் இக்கொள்கைகளை கடைப்பிடிக்கும் மனிதக்கூட்டம் விகிதாசார அடிப்படையில் குறைவாக இருப்பது மனித இனத்தின் தொடர்ச்சியான சிந்தனையின் ஏற்றத்தை காட்டுகிறது.

மனிதன் தனது மரபு உரிமைகளை காப்பாற்றும் செய்கையும் டாவினின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவைதான். மனித இனத்துக்கான இயல்புகளை காப்பது மனிதஇனத்தின் தொடர்ச்சியான இருப்புக்கு முக்கியமானதாகும்.

இயற்கையோடு சார்ந்து வாழ்வதை எமது எண்ணங்களில் விதைத்த மனித இனத்தின் உருமலர்ச்சிபற்றிய டார்வினின் கொள்கையை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்கள் பின்பு ஏற்றுக் கொண்டார்கள். டார்வினின் கொள்கையானது அழிப்புக் கோட்பாடு அல்ல உயிர்வாழ்வதற்கான உயிரியல் கோட்பாடு. அவரது கோட்பாடுகள் பற்றி இன்றும் சர்ச்கைகள் தோன்றியவண்ணம் இருப்பினும் அவரது கொள்கைதான் மனிதனது நிலைகுறித்து மனிதனது சிந்தனையை மாற்றியமைத்தது என்பது வெளிப்படை உண்மை.
சித்திரை மாதம் 19 ஆம் திகதி 1882 ம் ஆண்டு தனது 73வது வயதில் டார்வின் இறந்தார். மனிதத்தையும் இயற்கையையும் இணைத்து தனது ஆய்வுகளின் அடிப்படையில் கோட்பாட்டை உருவாக்கி உலகத்தையே சிந்திக்க வைத்த விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வினது 200 வது பிறந்தநாளை பெப்ரவரி 12ம் திகதி 2009 ம் ஆண்டு இந்த உலகமே கொண்டாடும்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா1/11/2009 9:20 PM

    டார்வின் கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம்தான். அதை மறுப்பவர்கள் மூட நம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கும் அடிமுட்டாள் இனமான ஆபிரகாமிய வம்சமும், வழித்தோன்றல்களும் தான். ஜாதீயம் பேசி மனிதனை அடிமையாக வைக்க நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பாலாஜி

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாலாஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தொடர்ந்தும் எழுதுங்கள்.

    மனித சமுதாயத்தில் இன்று காணப்படும் நிறைகளும் குறைகளும் வரலாற்றிலும் காணப்படுகின்றது என்றாலும் அந்த குறைகளின் வேர்களை கண்டறிந்து வேரறுப்பதிலும் நிறைகளை கண்டறிந்து நீருற்றி வளர்ப்பதிலும் இன்றைய சமூகநலன்விரும்பிகள் கவனம் செலுத்தவேண்டும்.

    சாதியினால் மக்களிடையே எழுந்துள்ள பிரிவுகள் மோதல்கள் என்பவை கொடுமையானவை. இந்த சாதீய வேறுபாடுகளை அழிப்பதறகு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் அது அந்த சமூகத்தையே அழித்துவிடும்.

    ஒருவரது பிறப்பிடங்களையும் அவர்கள் செய்யும் தொழில்களை கொண்டும் குறிக்கப்பட்ட இந்த சாதி என்ற சொல் நாளடைவில் மக்களின் சமூக அந்தஸ்த்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அதன் அடிப்படையில் அடக்க ஒடுக்க முறைகளையும் தோற்றி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுத்தன.

    இந்த சாதீயத்தால் ஏற்படுகின்ற அவலங்களை நாம் நிறையவே பார்த்தும் படித்தும் கேள்விப்பட்டும் இருக்கின்றோம். (இந்திய திரைப் பாடங்களில் நிறையவே பார்த்திருக்கிறேன்)

    இதில் முக்கியமாகக் கருதப்படுவது தீண்டாமை. தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள் கோயில்களில் புகுந்து சாமி கும்பிட முடியாது. பொதுக்கிணறுகளில் சுயமாக தண்ணீர் எடுத்து குடிக்கமுடியாது. உயர்சாதி என்று சொல்லப்படும் மக்களின் வீட்டுக்குள் செல்லமுடியாது இப்படி எத்தனையோ பேதங்கள்.

    இந்த சாதீய காற்று எமது ஈழப்போராட்டத்தால் இன்று குறைந்து கொண்டு வருகின்றது. எழுச்சியும் மாற்றங்களும் நிகழ்வது பரவலாக காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல தாழ்ந்த சாதி என்று கூறப்பட்ட மக்களிடையே பாரியளவு மாற்றங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றது. உடை உணவுப்பழக்கங்கள் மாறியிருக்கின்றன. வீடுகள் மாற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கும் ஏனைய சாதியினருக்கும் இடையே இருந்த இடைவெளி பெருமளவு குறைந்துவிட்டது. ஏன் அவர்களின் குரல்கூட சற்று உயர்திருகின்றது.

    பதிலளிநீக்கு