திங்கள், ஜனவரி 12, 2009

''ஊருக்குத்தான் உபதேசம்''

சௌந்தரி
முகம் தெரியாத நண்பர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சுலபமாகவும் பிரச்சனைகள் அற்றதாகவும் இருப்பது என்னவோ உண்மைதான்.
நேரடியான உரையாடல்களின் போது எமது விருப்பு வெறுப்புகளை முடிந்தவரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட விடயம்.
ஒரு தொழிலைச் செய்தாலும் அல்லது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அல்லது வேறு எந்தப்பணியாற்றினாலும் பலருடனும் இணைந்து செயற்பட வேண்டியிருப்பதால் விருப்பு வெறுப்பக்களைக்காட்டி விரோதிகளை உருவாக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றே என் உள் மனம் சொல்கிறது. இது ஒன்றும் கடினமில்லை கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொண்டால் பழகிக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு யாரைப்பற்றி என்ன நினைக்கிறேனோ அதை மற்றவர் அறிந்து கொள்ள முடியாதவாறு முகத்தை வைத்துக்கொண்டால் அவர்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி அவர்கள் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இது மனிதர்களைச் சமாளிப்பதற்கு மிகவும் வெற்றிகரமான உபாயமாகும்.

எமது உணர்ச்சிகள் எமக்கு மட்டுமே சொந்தம் அவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது அவற்றை ஆளுகின்ற சக்தி எமக்கு ஏற்பட்டுவிடுகின்றது. வெளிப்படுத்தும்போது அந்த உணர்ச்சிகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் எம்மை அடக்கியாளத் தொடங்கிவிடுகிறார்கள். எமது உணர்ச்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாதவரை எம்மை யாராலும் கணிக்கவும் முடியாது குறை கூறவும் முடியாது.

ஒருவரது கருத்தும் செயலும் பிழை என்று தெரிந்து கொண்டும் மௌனமாக இருப்பதென்பது என்னவோ மிகவும் கடினமான ஓர் விடயமாகத்தான் இருக்கும். ஆனால் சிலருக்கு எதை சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நிற்பார்கள் அவர்களின் முன் மௌனமாக இருப்பதுதான் நன்மையை தரும். அபோதுதான் எமது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், என்ன சொல்லப்போகிறோம் என்று ஆவலுடன் எதிர்பார்த்தபடி மரியாதையுடன் இருப்பார்கள். இதனால் நண்பர்களை உருவாக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமலும், வீணான பிரச்சனைகள், குழப்பங்கள் ஏறபடுத்தாமலும் தவிர்த்துக் கொள்ளலாம்.

''ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே'' என்பது போல்தான் நான் சொல்வதெல்லாம்; என் மனசும் தனக்கு தெரிந்ததை சொல்லித்தான் பார்க்கிறது ஆனால் வாய் யார் சொல்லையும் கேட்பதில்லை. உங்களுக்கு எப்படி மனசுக்கும் வாயுக்கும் இடையில் link சரியாக வேலை செய்கிறதா?

4 கருத்துகள்:

  1. //உங்களுக்கு எப்படி மனசுக்கும் வாயுக்கும் இடையில் link சரியாக வேலை செய்கிறதா?//

    கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்... இருக்ங்க யோசிச்சி சொல்றேன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி அனந்தன் உங்கள் கருத்துக்கு

    //கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்... இருக்ங்க யோசிச்சி சொல்றேன்//

    நல்லவேளை மேலிடத்தில் தொடர்பு கொண்டபின் சொல்கின்றேன் என்று சொல்லவில்லை .....
    யோசியுங்கள் ஆற அமர இருந்து யோசித்துவிட்டு பதிலை தாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. // நேரடியான உரையாடல்களின் போது எமது விருப்பு வெறுப்புகளை முடிந்தவரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமாகும் என்பது எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்ட விடயம். //

    உண்மை. உண்மையைத்தவிர வேறு இல்லை. மௌனத்தைத்தவிர வேறு நல்ல வழி கிடையாது. ஆனால் நீங்கள் சொன்னது மாதிரி, link பல சமயங்களில் சரியாக வேலை செய்வது கிடையாது.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு,

    சில வேளைகளில் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டாலும் மனம் வேதனைப்படும். இரண்டு மனம் வேண்டுமோ? ஆனால் மௌனத்தை போல் பாதுகாப்பான மொழி வேறு ஒன்றுமே இல்லை.

    பதிலளிநீக்கு