வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர்பதிவில் என்னையும் இணைத்துக்கொண்ட நண்பன் ராகவனுக்கு முதலில் நன்றி. எதை எப்படிப் பதியலாம் என்ற சிந்தனைக்குள் நுழைந்தபோது இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருடன் சிலநிமிடங்கள் பேசியவை நினைவில் வந்தன. அந்த சில நிமிடங்கள் இப்படி பயனுள்ளதாக மாறியதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருகின்றது. அவற்றுடன் எனது எண்ணங்களில் உதித்தவற்றையும் இணைத்து ஓர் சிறு பதிவாக இடுகின்றேன்.
மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து.
''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற கணியன் பூங்குன்றனின் பாட்டை முதலில் எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்தப்பாட்டிற்கு பொருள் “எல்லாம் நம் ஊரே யாவரும் நம் உறவினரே” என்பது. இதில் கேளிர் என்பது உறவினர் என்ற பொருளையே குறிக்கிறது. ஆனால் பொதுவாக எல்லோரும் கேளிர் என்பதை கேளீர் என்று நீட்டி எல்லோரும் கேளுங்கள் என்ற பொருள்பட கூறிக்கொள்கிறார்கள். கேளீர் என்று சொல்வதால் சொல்லவந்ததன் கருத்தே மாறிவிடுகின்றது. இதில் இன்னுமோர் விடயம் என்னவென்றல் கணவனை ‘கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதுண்டாம். கேளிர் என்ற சொல்லில் இருந்துதான் கேள்வன் வந்திருக்கலாம்.
''குட்டு வெளிப்பட்டுவிட்டது'' பார்த்தீர்களா? இங்கு குட்டு என்ற சொல் ரகசியம் என்ற பொருளைத் தருகிறது. ஒவ்வாருவர் வாழ்க்கையிலும் ஏதாவது குட்டு இருக்கத்தான் செய்யும. அதனால்தான் மோதல் வரும்போது குட்டை உடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நல்ல காலம் குட்டு என்ற சொல் பயன்பாட்டில் குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் குட்டம் என்றால் பள்ளம் அல்லது ஆழம் என்ற பொருளைக் குறிக்கும். ''குளம்குட்டை'' என்ற சொற்தொடரில் குட்டை என்பது சிறு பள்ளத்தை குறிக்கின்றது. சின்னவயசில் அப்பா தலையுச்சியில் குட்டியது ஞாபகம் இருக்கின்றதா? தலையில் பள்ளம் வருவதுபோல் கைமுட்டியால் அழுத்திக் குட்டுவதால் குட்டுதல் என்று வந்திருக்கும். குட்டம் என்ற சொல்லும் மருகிவிட்டது.
முகத்தல் என்பது தண்ணீரை வாளியில் நிரப்பி எடுத்தல். முகவை என்பது நீர் இறைக்கும் வாளியைக் குறிக்கும். முகத்தல் என்பதுதான் பின்பு பேச்சுவாக்கில் மோந்து கொண்டு வா என்று மாறிவிட்டது. முகத்தல் முகவை போன்ற சொற்களும் பாவனையில் இருந்து மறைந்து கொண்டு போகின்றன.
''துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை''
இதன் பொருள் உண்பவருக்கு உண்பதற்குரியனவாகிய உணவுகளை உள்வாங்கி அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவாவது மழையேயாகும். இது நீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
இந்தக் குறளில் வரும் துப்பு என்ற சொல் உணவு என்ற பொருளை குறிக்கிறது. இதில் துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. ஆனால் யாரும் நான் துப்பு உண்ணப் போகின்றேன் என்று கூறுவதில்லை.
ஆனால் ''துப்புக் கெட்டவன்'' என்று திட்டுகிறோம். அவ்வாறு ஒருவரைத் திட்டும்போது ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியற்றவன் என்றே பொருள். அதை உணர்ந்துதான் திட்டுகின்றோமா என்பது கேள்விக்குறிதான்?
அதேவேளை துப்பு என்ற சொல் பலபொருள் கொண்டதாகவும் உள்ளது. ''துப்புத் துலக்குதல்'' அல்லது ''துப்பறிதல்'' என்பதில் வருகின்ற துப்பு ஒரு செயல் நடந்துவிட்டால் அது பற்றிய விபரங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்ற பொருள்பட வருகின்றது. அதேபோல் துப்புதல் என்ற சொல்லில் வரும் துப்பு வேறோர் பொருளை கொண்டுள்ளது. எச்சிலை கண்ட இடத்தில் துப்புவது அல்லது ஒரு பொருளைக் கடித்து துப்புவது. இந்தத் துப்பு இப்போதும் பாவனையில் உள்ளது.
சரி உங்களுக்கு வயது என்ன? இவ்வாறு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 20 வயதாகிறது அல்லது 30 ஆண்டுகள் ஆகின்றன அல்லது அந்தப் பெரியவருக்கு 60 அகவையாகின்றது என்றுதானே?
ஆக வயதுக்கு இன்னுமொரு பொருள் அகவை. அகவை என்பது பொதுவாக குறைந்த அளவுதான் பாவனையில் உள்ளது. ஆனால் ஈழத்தில் ஓரளவு பாவிக்கப் படுகின்றது. அதே போல் வயசு, வயது இரண்டும் ஒன்றுதானோ?
"வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை" என்றோர் பாடலும்; "நினைத்தேன் வந்தாய் நூறு வயசு" என்றோர் பாடலும் இருக்கின்றது அல்லவா? இதிலிருந்து வயது வயசு இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருவோமே.
"கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" இதில் கறுப்பு என்பது நிறத்தைக் குறிக்கும். அப்போ கருப்பு என்பது என்ன? கருமை, கரிய, கார்குழலி என்ற சொல்லில் வரும் கார் என்பன நிறத்தைத்தானே குறிக்கின்றன. கருப்பண்ணைசாமி என்ற சாமி கையில் அரிவாளுடன் நிற்கும் காட்சி கடும்கோபத்தைத்தான் குறிக்கிறது. ஆகவே கருப்பு என்பதற்கு கோவம் என்ற பொருளும் வருகின்றது. கறுப்பு என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது ஆனால் கருப்பு என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு.
சரி "மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்" என்ற திரைப்படப்பாடலில் வரும் மெல்ல என்ற சொல்லுக்கும் "மெள்ள வா" என்ற தொடரில் வரும் மெள்ள என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம். மெல்ல நட என்றால் மென்மையான நடையைக் குறிப்பது போலவும் அல்லது மெல்லப்பேசு என்பது மென்மையாகப் பேசு என்பதையும் குறிக்கின்றது. ஆக மெல்ல என்பது மென்மை என்ற பொருளை உணர்த்துகிறது ஆனால் மெள்ள வா என்றால் ஆறுதலாக வா என்று தானே பொருள் படுகிறது. எல்லாமே குழப்பமாக இருகின்றது. மெல்ல மெள்ள இரண்டும் ஒன்றுதானோ?
சும்மா வாசித்து விட்டு போகாதீர்கள். தரவுகளைவிட குழப்பங்கள்தான் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்துக்கள் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிக முக்கியமானதும் அவசியமானதும்கூட.
இன்னுமோர்விடயம் என்னவென்றால் சில ஆங்கிலச்சொற்கள் எங்கள் மனதில் தமிழ் சொற்களாக பதித்துவிட்டது. உதாரணத்துக்கு கோர்ட் - நீதிமன்றம்; பொலிஸ் - காவல்துறை பாங்க் - வங்கி; போட்டோ – நிழல்படம் இப்படி இன்னும்பல பாவனையில் இருந்து நீங்கிவிட்டன.
சரி இதற்குமேலும் குழப்பாமல் வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பதிவுத் தொடரை தொடர்வதற்கு புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டாமா?
சக்(ங்)கடத்தார்: http://sakkadaththar.blogspot.com/
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மகன். பலதும் பத்தும் எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர். தொடர்ச்சியாக தாய்நிலத்தின் சோகங்களை எழுதிக்கொண்டிருப்பதால் ஓர் மாற்றத்திற்கு இத்தொடரையும் தொடரும்படி கேட்போம்
நட்புடன் ஐமால்: http://adiraijamal.blogspot.com/
கணனிபற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஐமாலை இந்தத் தொடருக்காக கொஞ்சநேரம் செலவிடும்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே
ரசிகா: http://rasigarasigan.blogspot.com/
இவர் என்பதிவுக்கு புதுவரவு அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவது ஓர் கடமையாகின்றது.
இவர்கள் இன்னும் பல நண்பர்களை அறிமுகப் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இத் தொடர் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைவு செய்கின்றேன்.
\\கணனிபற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஐமாலை இந்தத் தொடருக்காக கொஞ்சநேரம் செலவிடும்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே\\
பதிலளிநீக்குஅண்ணா அவசியம் இந்த வாரம் போட்டுற்றேன்
நீங்க 5ஆவது ஆள் என்னை போய் ---
திருக்குறள் அலசலா ...
பதிலளிநீக்கு\\இவர்கள் இன்னும் பல நண்பர்களை அறிமுகப் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இத் தொடர் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைவு செய்கின்றேன். \\
பதிலளிநீக்குஅவசியம செய்திடுவோம் ...
அருமையான பதிவு நண்பரே
பதிலளிநீக்குபல நல்ல கருத்துகளை வெளிக் கொணர்ந்துள்ளது உங்களின் இடுகையை
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து.//
பதிலளிநீக்குநல்ல கருத்து!!!!
இதில் இன்னுமோர் விடயம் என்னவென்றல் கணவனை ‘கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதுண்டாம். கேளிர் என்ற சொல்லில் இருந்துதான் கேள்வன் வந்திருக்கலாம்.//
பதிலளிநீக்குபொண்டாட்டி சொல்றதை அப்படியே கேட்பவன்!!!
இஃகி இஃகீ
என்ன நண்பரே! பெரிய ஒரு சுமையை என் சிந்தனைக்கு கொடுத்து விட்டீர்கள். முடிந்த அளவு முயற்சி செய்கின்றேன் ஒரே அளவுகோலை பயன்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்.
பதிலளிநீக்குஉங்களது பதிவு நன்றாக இருகின்றது. வாசித்துவிட்டு சும்மா போகாதீர்கள் என்று சொல்லியும் ஒன்றையும் சொல்லத் தெரியாமல் சொல்லாமலே போகின்றேன்.
இந்த பதிவைப் படித்து விட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
பதிலளிநீக்குஒரு நல்ல நண்பரைத்தான் அழைத்துள்ளேன் என்ற மகிழ்ச்சி. அருமையான அலசல், தேவையான அலசலும் கூட.
// மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து. //
சைனாவில் இருந்த போது என் கூட பணி புரிந்த அன்பர் பத்மநாபன் எப்போதும் சொல்லுவது இதுதான். நீங்க சொன்னது மிக சரியான கருத்து..
நன்றி ஜமால்! உங்களால் முடியும், கணனி மட்டுமல்ல இந்த தொடர் பதிவிலும் உங்கள் கை வண்ணம் மிளிரும். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி திகள் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்காகவே முடிந்தளவு முயற்சி எடுத்து பதிவுகளை போட எண்ணுகின்றேன். பாராட்டு என்பது டொனிக் மாதிரி; சக்தியையும் ஊக்கத்தையும் அள்ளிக் கொடுக்கும். தொடர்ந்தும் வாருங்கள்
பதிலளிநீக்குவணக்கம் தேவன்மயம்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மனைவிக்கு நல்ல கேள்வன் ஆக இருப்பீர்கள் போல் தெரிகிறது. வீட்டில் கேள்வனாக இருந்து கொண்டு வெளியில் கள்வனாக மாறிவிடாதீர்கள். மீண்டும் வாருங்கள்
வாருங்கள் ரசிகா!
பதிலளிநீக்குஎதுவுமே செயல்படுவதனால் தான் நடைபெறுகின்றது. முதல் அடி வைத்துவிடுங்கள் வேகம் தானாக அதிகரிக்கும். ஆவலுடன் உங்களது பதிவை எதிர்பார்கின்றோம். நன்றிகள் பல.
இன்னும் எத்தனை நாடுகளில் பணி புரிந்திருக்கின்றீர்கள் ராகவன்.
பதிலளிநீக்குஉங்களது கருத்துக்கும் அறிமுகத்துக்கும் நன்றிகள்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்கு/BOOPATHY சொன்னது…
பதிலளிநீக்குவணக்கம் தேவன்மயம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மனைவிக்கு நல்ல கேள்வன் ஆக இருப்பீர்கள் போல் தெரிகிறது. வீட்டில் கேள்வனாக இருந்து கொண்டு வெளியில் கள்வனாக மாறிவிடாதீர்கள். மீண்டும் வாருங்கள்
/
:))))))))))))))))))
நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குசின்னவயதில் எண்ணல் அளவை, எடுத்தல் அளவை,முகத்தல் அளவை.... என்று கணக்குப் பாடத்தில் அளவைகளின் வகைகள் பற்றிப் படித்த ஞாபகம். அதில் வரும் "முகத்தல் அளவை" என்பது குறிக்கும் கருத்து என்ன என்பது பற்றித் தெரிய வில்லை.அவ்வாறு தெரியவரும் பட்சத்தில் "முகத்தல்" என்பதற்கு இன்னொரு அர்த்தமும் கிடைக்கும்.அவைகளும் வழக்கொழிந்து போய்விட்டன போலும்.யாராவது தெரிந்தவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.
"மெல்ல" என்பதற்கு மென்மையாகப் பேசுதல் என்பதை விட "சத்தத்தைக் குறைத்துப் பேசுதல்" என்பது கூடப் பொருத்தமாக இருக்கலாம்." மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது;சொல்லித்தாருங்கள் யாரும் பார்க்கக் கூடாது" என்ற பாடலில் வரும் "மெல்ல" என்பது "ரகசியமாக" என்ற பொருளிலும் வந்திருக்கிறது.மெல்ல என்பதுவே மருவி மெள்ள என்று வந்திருக்கலாம்.
எது எவ்வாறென்றாலும் நீங்கள் சொன்னது போல் மொழி ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே!
பிள்ளை பூபதி என்ன இந்த வேலை?? நல்ல முயற்சி மோனை.. ஊரிலை உள்ள இல்லாத பொல்லாத, ஒளிஞ்சு போற சொற்களை எல்லாம் நல்ல உதாரணத்தோடை போட்டுத் தாக்கியிருக்கிறீர். நீரும் என்னை மாதிரிப் பழைய பாட்டெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறீர்.
பதிலளிநீக்குஅப்ப என்ர வயசு ஆள் தான் நீரும்?? அப்பத்தைக் காலப் பாட்டுகள் எந்தளவு கருத்தாழம் மிக்கவை என்பதைப் பார்த்தீரே?
நீங்களாவது இப்படிச் சேகரிப்பதால் எங்கடை வருங்காலச் சந்ததிக்கு கொஞ்சமெண்டாலும் பிரயோசனம் இருக்கும் இந்த வழக்கொழிந்த சொற்களாலை?
சும்மா இருக்கிற கிழவனையும் விடுறேல்லை என்று தான் இருக்கிறீங்கள்??
என்னையும் அழைத்தமைக்குப் மிக்கப் பெரிய உபகாரம் பிள்ளை.. நானும் முடிஞ்சால் எழுதுறன் மோனை?
நல்ல முயற்சி...நானும் இது சம்பந்தமாகக் குரல் பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..ஆனால் எப்போது என்று தெரியாது?
பதிலளிநீக்குநீங்கள் இன்னும் கொஞ்சம் துப்புத் துலக்கி எமது ஊரில் நாங்கள் பாவிக்கும் சொற்களையும் புகுத்தியிருக்கலாம்..
நமது தமிழர்களின் தாய் நிலத்திலிருந்தும் பல சொற்கள் வழக்கொழிந்து போகின்றன... அவற்றில் ஒரு சிலவற்றைத் தவற விட்டுள்ளீர்கள்?? நல்ல முயற்சி....தொடருங்கள்...
என்ன இரு கிழமைக்கு ஒரு பதிவு என்று ஏதாவது சபதமோ??
அடுத்த பதிவு எப்போது வரும்??
வாருங்கள் மனிமேகலா! கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அளவைகளுக்கான தமிழ் சொற்கள் எல்லாமே மறந்து போய்விட்டன. அவற்றை யாராவது தேடி எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு"மெல்லத் தமிழ் இனி சாகும்" என்ற தொடரில் வரும் மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக என்ற அர்த்தத்தில் தானே வரும். இதைப் பற்றியும் உங்களது கருத்தை கூறுங்கள்.
//மெல்ல மெள்ள இரண்டும் ஒன்றுதானோ?//
பதிலளிநீக்குஇரண்டும் ஒரு பொருள் தர வல்லதே! ஆனாலும், உருபை(ambiguity)த் தடுத்திடும் பொருட்டு, சில இடங்களில் "மெள்ள" எனும் சொல்லைப் பாவித்தல் நலம். வேகாத பருப்பு மெல்ல மெல்ல வாய் வலிக்கும். இந்த இடத்தில், "மென்மை" என்று பொருள் கொள்ள முடியாது. "ஊற வைத்த அவல் மெல்லக் கரையும்" என்றால், வாயால் மெல்லும் போது எளிதில் கரையும் என்று பொருள் படும். அதுவே "ஊற வைத்த அவல் மெள்ளக் கரையும்" எனும் போது, தண்ணீரில் அது மெதுவாகக் கரையும் என்றாகிவிடும்.
//BOOPATHY சொன்னது…
பதிலளிநீக்குவாருங்கள் மனிமேகலா! கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அளவைகளுக்கான தமிழ் சொற்கள் எல்லாமே மறந்து போய்விட்டன. அவற்றை யாராவது தேடி எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
//
http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_22.html
சக்கடத்தார் உங்களது பதிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன். எத்தனையோ சொற்கள் பாவனையில் இருந்து விடுபட்டுவிட்டன ஆனால் எனது அறிவுக்குள் அவை சிக்கவில்லை. உங்களைப் போன்றவர்கள் அவற்றை பதியும்போது அறிந்து கொள்ளமுடியும்.
பதிலளிநீக்குபழைய பாடல்கள் புதியவர்களுக்கும் பிடிக்கும் சக்கடத்தார். உங்களுக்கு பிடிகின்றதே அதிலிருந்து புரியவில்லையா?
//நீங்கள் இன்னும் கொஞ்சம் துப்புத் துலக்கி எமது ஊரில் நாங்கள் பாவிக்கும் சொற்களையும் புகுத்தியிருக்கலாம்.. //
பதிலளிநீக்குஎனது முயற்சி போதாது கமல். எனது நண்பர் ஒருவர் சொன்னார் "உங்களது பதிவில் குறிப்பிடும் படியாக எதுவுமே இருக்கவில்லை" என்று. அவர் சொன்னவுடன் மீண்டும் எனது பதிவை வாசித்தேன் அவரது கூற்று சரியென்றே தோன்றியது.
என்னிடம் அறியும் ஆவல் நிறையவே இருகின்றது. நண்பர்கள் பதியும்போது அறிவின் தேடலும் அரம்பமாகட்டும்.
வேலை; படிப்பு; வலை; பொதுவேலை; வீடு இதற்கெல்லாம் நேரம் போதாது கமல்.
ஆனாலும் ஆர்வம் இருப்பதால் முயற்சி எப்போதும் இருக்கும்.
கோவி கண்ணன் உங்கள் வரவுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநிறையவே எழுதுகின்றீர்கள். விதிகள் காலத்தால் மாறும் என்ற கருத்து எப்படி உங்களுக்குள் உதித்தது. விதியை மாற்ற முடியாது என்றுதானே சொல்லப்படுகின்றது. மாறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் விரும்புவதெல்லாம் சரி என்று இல்லைதானே. உங்கள் பதில் என்ன இதற்கு கோவி கண்ணன்.
"பழமை பேசி" அருமையான தெரிவு. மெல்ல மெள்ள என்ற சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். //ஊற வைத்த அவல் மெல்லக் கரையும்// "மெல்லத் தமிழ் இனி சாகும்" இரண்டும் ஒரே விதத்தில் அமைந்ததாக கொள்ளலாமா?
பதிலளிநீக்குஉங்களது பதிவுகளை பார்த்தேன். பல விடயங்களையும் அலசியிருகின்றீர்கள் மிகவும் அருமை. வாசித்துவிட்டு எனது கருத்தையும் சொல்கின்றேன்.
"மெல்லத் தமிழ் இனி சாகும்" இரண்டும் ஒரே விதத்தில் அமைந்ததாக கொள்ளலாமா?
பதிலளிநீக்குகொள்ளலாம்!
இத்தொடர், எமது பக்கத்தில் இருந்து Sriram அவர்களால் துவங்கப்பட்டது என்பதனையும், அதற்கு உறுதுணையாய் இருந்து சிறப்புறச் செய்த, பங்களித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
நன்றிகள் பல 'பழமை பேசி'.
பதிலளிநீக்குஆரோக்யமான ஓர் தொடர் பதிவை ஆரம்பித்து வைத்த உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள். அதேபோல் என்னை போன்றவர்களை அறிமுகப் படுத்திய நண்பர் ராகவனுக்கும் நன்றிகள்.
வலைப் பதிவின் மூலம் ஓர் தேடலுக்கான வழியை உருவாக்கலாம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்த இப்படியான புதிய பதிவு முறைகளை தொடக்கி வைக்கும் உங்களது ஆர்வம் மெச்சத்தக்கது. தொடர்ந்தும் வாருங்கள்
மிகவும் மகிழ்ச்சி பழமை பேசி.நன்றிகளும் கூடவே.நீங்களும் பூபதியும் சொல்வது போல் "மெல்ல" என்பது "மெல்லுதல்" ஆகிய தொழிலைக் குறிக்கவும் "கொஞ்சமாக" என்ற அர்த்தத்திலுமாக இரு வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
பதிலளிநீக்குஅருமையான வார்த்தையாடல்கள்.
தமிழின் அழகு தான் என்னே!
நன்றிகள், இதனோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும்.
அழைப்பிதழ் தயாராகி விட்டது. நீங்கள் எல்லோரும் என் வீட்டுக்கும் ஒரு முறை வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குநண்பர்களே எனது followers list திடீரென மாயமாக மறைந்து விட்டது. Google Bloggers அதை சரிபடுத்துவதட்கான முயற்சிகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். உங்களுக்கும் இப்படியான அனுபவம் வந்திருந்தால் திரும்பவும் அவர்களை இணைத்துக் கொள்வது எப்படி என்பதை அறியத் தாருங்கள்.
பதிலளிநீக்குமனிமேகலா வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடரில் ஒரு அருமையான பதிவை இட்டிருகின்றார். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
நன்றாக எழுதி உள்ளீர்கள். நிறைய சொற்களை நினைவில் கொண்டு வந்து விட்டது
பதிலளிநீக்கு