புதன், ஜனவரி 20, 2010

அகிம்சை வெற்றிகரமான ஓர் போராட்ட வடிவமா?

நீண்ட இடைவெளியின் பின்பு மீண்டும் எழுதுகின்றேன். நினைத்த நேரத்தில் வருவதும் போவதற்கும் சுலபமான தளமாக இது அமைந்துவிட்டது. எழுதவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பலதோணியில் காலை வைப்பதால் போதியளவு நேரம் கிடைக்காமல் போய்விடுகின்றது. அஹிம்சை பற்றி பலரோடும் பேசிய அனுபவத்தை வைத்து இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.




அஹிம்சைவழி என்றால் ஹிம்சை செய்யாத அல்லது ஹிம்சையை அகற்றுகின்ற ஒரு பாதை என்று கூறலாம். அஹிம்சைவாதிகள் மற்றவர்களின் மனதையோ உடலையோ காயப்படுத்தாது தங்களைத் தாங்களே ஹிம்சைப்படுத்துவர். அஹிம்சை என்பது கோழைத்தனம் அல்ல, அஹிம்சை வழியில் செயல்பாடுகளை முன்னெடுப்பவருக்கு அதிக வீரம், சகிப்புத்தன்மை, மன உறுதி போன்றவை அமையவேண்டும். எல்லா மதங்களினதும் அடிப்படையான போதனை அஹிம்சைதான். காந்தி, புத்தர், யேசு இவர்கள் அகிம்சையைப்பற்றி பேசும்போது முக்கியமாக பேசப்படுவார்கள்.




அஹிம்சைவழி செயல்பாடுகள் அரசியல் போராட்டங்களில் மட்டுமல்ல, குடும்ப உறவுகளில், சமூகத்துடனான உறவுகளில், நண்பர்களுடனான உறவுகளில் என்று எப்பேற்பட்ட உறவுகளிலும் ஏற்படும் சிக்கல்களை முரண்பாடுகளை சீர்ப்படுத்தும்.



அஹிம்சை பயன்படுத்தப்படும்போது சுயஹிம்சையாக மாறுகிறது. அது எதிராளியின் ஆன்மாவை மிக வன்மையாகக் காயப்படுத்தும், ஹிம்சைப்படுத்தும். அதை எதிராளி தாங்கிக் கொள்ள முடியாத நிலைவரும்போது அவன் அஹிம்சைப் போராளியிடம் தோற்று விடுகின்றான். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது எதிராளிக்கு ஆன்மா இருக்க வேண்டும், மெல்லுணர்வும் மனிதமும் இருக்கவேண்டும். இதை ஆளுபவன் ஆளப்படுபவன் என்ற கோணத்தில் கருதினால் இவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவன் ஆளப்படுபவனே. ஆளப்படுபவன் தொடர்ச்சியாக பாதிக்கப்படும்போது வன்முறை வெடிக்கின்றது. வன்முறை இன்றி அஹிம்சைவழியில் செயலபடவேண்டும் என்றால் ஆளுபவன் அஹிம்சையை ஏற்றுக்கொள்ளும் உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். இங்கே எதிராளி என்பவன் ஒரு தனிமனிதனாகவோ, இனமாகவோ, மதக் குழுவாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருக்கலாம்.




ஆளப்படுபவர்கள் அல்லது அதிகாரம் செய்பவர்களை வெல்ல வேண்டுமாயின் அவர்களது மேன்மையை குறைப்பதற்குரிய வழிவகைகளை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு தொகையும் அளவும் முக்கியமானது. இன மத ரீதியில் இதை எதிர்கொள்வது மிகவும் கடினம். ஏனென்றால் சமூகத்தில் பல தளங்கள் பல இயக்கங்கள் என்று பிளவுபட்டு இருக்கும்போது சீரான இயக்கத்தையோ தனித்துவமான செயல்பாட்டையோ நடைமுறைப்படுத்துவது கடினமானது. இதனால்தான் பெரும்பான்மைச் சமூகங்களால் சிறுபான்மைச் சமூகங்கள் அழிக்கப்படுகின்றன.




அஹிம்சை ஒரு போராட்ட வடிவமாக மாறும்போது வன்முறை போராட்ட வடிவத்தை விட ஒப்பீட்டளவில் இழப்புக்கள் குறைவாகும். ஏற்படுகின்ற இழப்புக்களும் எதிராளியின் ஹிம்சையின் காரணமாகவே பெருமளவில் ஏற்படும். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தமது விடுதலைப் போரட்டத்தில் அஹிம்சை வடிவங்களையே பெருமளவில் பயன்படுத்தி வெற்றியீட்டின.




வெறுமனே அஹிம்சை வழி மட்டுமே சமூக, அரசியல், தேச விடுதலைப் போராட்டங்களில் வெற்றியைப் பெற்றுத் தராது. அகிம்சையுடன் அறிவையும் திறமையையும் தந்திரத்தையும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக எதிரியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவனது அரசியல், இராணுவ, பொருளாதார பலத்தையும், அவற்றின் நெறிகளையும், அவனது வரலாற்றையும் தெளிவாக ஆராய வேண்டும். அவற்றில் அவன் நெருக்கடிக்குள்ளாகும் சமயங்களில் எமது போராட்டங்களைத் தீவிரப்படுத்தினால் அஹிம்சை வழிப்போராட்டம் வெற்றி பெறும்.





இந்திய தேசிய விடுதலைப் போராட்டம், மேலைநாட்டவர் இந்தியாவை ஆக்கிரமிக்கும்போதே ஆரம்பித்து விட்டது. மன்னர்களும், குறுநில மன்னர்களும் வன்முறை மூலம் ஆக்கிரமிப்பை எதிர்த்தார்கள். அவர்களது சிறிய இராணுவங்கள் மேலைநாட்டவர்களின் பெரிய இராணுவத்திடம் தோல்வியடைந்தன. அப்போது சிலர் சரணடைந்தார்கள். சிலர் துரோகிகளாக மாறி தாய்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். வீரர்கள் மட்டும் இறுதிவரை போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள். அவர்கள் வரலாற்றில் என்றும் வாழ்வார்கள்.




சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் ஆக்கிரமிப்பாளர்களின் தேசங்கள் நெருக்கடிக்குள்ளாயின. அத்துடன் அந்நாட்டு மக்களது மனிதாபிமானப் பண்;புகள் வளர்ச்ச்சியடைந்து அவர்களது இயல்புகளும் மாற்றமடைந்தன. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய தேசிய விடுதலை இயக்கம் தனது போராட்ட உத்தியை வன்முறையிலிருந்து அஹிம்சைக்கு மாற்றியது. மக்களை ஓரணியில் திரட்டுவதற்குத் தோதான தலைமைத்துவப் பண்புகள் நிரம்பிய ஒரு மனிதர் தோன்றினார். மிகக் குறைந்த இழப்புக்களுடன் ஒரு பெரிய நாடு அந்நிய சக்திகளிடமிருந்து விடுதலை பெற்றது.




ஆனால் விடுதலை என்பது பல்வேறு தளங்களிலும் பல்வேறு படிமுறைகளிலும் பெறப்படவேண்டியது. இந்திய விடுதலைப் போராட்டம் அந்நியர்கள் வெளியேறியதும் தேக்கமடைந்தது. அது மட்டுமல்லாமல் ஒடுக்கப்படும் தேசமாக இருந்த இந்தியா நேரெதிர் திசையில் பயணித்து ஒடுக்கும் தேசமாக மாறியது. விளைவுகளை நாமும் அண்மையில் அனுபவித்தோம்.




சில சந்தர்ப்பங்களில் வன்முறையும் அஹிம்சையும் கலந்த போராட்டம் சமாந்தரமாக நிகழ்த்தப்படவேண்டும். குறிக்கோள் ஒன்றாக இருந்து சிலர் அஹிம்சைவழி சிலர் ஹிம்சைவழி என்ற சரியான ஒருங்கிணைப்பான தலைமையின்கீழ் போராட்டம் நடைபெற்றால் வெற்றி கிட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்


பெண்களிடம் அஹிம்சை முறை இயல்பாக அமைந்திருக்கின்றது அதனால்தான் அவர்கள் பொதுவாக அன்பானவர்களாகவும் வன்முறையை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றார்களா என்ற சிந்தனைக்கு இல்லை அப்படி இயல்பாக ஒன்றும் ஏற்படவில்லை பெண்களுக்கு அவை காலம் காலமாக போதிக்கபட்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வந்தவை.

பெண்களிடம் உள்ள உற்பத்தித்திறன் காரணமாக அதாவது கருத்தரிக்கும் ஆற்றல் காரணமாக ஒரு சமூகத்தின் இருப்பை தக்கவைக்க வன்முறையும் மரணமும் மிகுந்த போராட்டச் சூழலிலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட்டார்கள், சமூகத்தின் சொத்தாக கருதப்பட்டார்கள் என்றும் பதில் அமைந்தது.




கருணை உள்ளவர்கள் தம்மை மற்றவர்களுக்காக அதிகம் அர்ப்பணிக்கின்றார்கள். துணிந்து துன்பங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். கருணையற்ற தன்னலவாதிகள் வாழ்க்கையுடன் போராடமாட்டார்கள். அவர்களுக்காகவும் அஹிம்சைவாதிகளே போராடுகின்றார்கள், தங்களை வருத்தி தனிமைப்படுத்தி சுயஹிம்சை செய்கிறார்கள். அஹிம்சை ஒரு கட்டத்தில் சுயஹிம்சை கிம்சையாக மாறிவிடுகின்றது.




அஹிம்சை முறைப் போரட்டவடிவங்களில் முக்கியமானதொன்றாக உண்ணாநோன்பு இருத்தலைக் கூறலாம். தனது கருத்தை, கொள்கையை, கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு தனது உயிரைக்கூட விடுவேன் என்று உணவருந்தாமல் இருப்பது எதிராளியை அல்லது மற்றவரை வற்புறுத்துவது அல்லது வெருட்டுவது போன்றதாகும் என்ற கருத்துக்கு பதிலாக ஒருவரது கொள்கையின் மீதான் பற்றுதலை நிரூபிப்பதற்காக அவர் மற்றவர்களது உயிரைக் கேட்கவோ எடுக்வோ இல்லையே தனது உயிரைத்தானே தருகின்றேன் என்று கூறுகின்றார் என்று சொல்லப்பட்டது. அஹிம்சைப் போரட்டத்தின் மூலம் எதிராளியின் ஆன்மா ஹிம்சைப்பட்டு புத்துயிர்பெற்று கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் என்றால் யாருக்கும் உடல் வலிக்காமல் மாற்றமொன்றை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




நடைமுறை அரசியலோடு ஒத்துப்போகாத அஹிம்சைவழிப் போராட்டத்தை மேற்கொண்ட காந்தி கொல்லப்பட்டாரே என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆனால் அஹிம்சைவழியில் போராடிய காந்தி ஒருவரைத்தான் கொல்ல முடிந்தது. ஹிம்சை வழியில் போராடுபவர்களைக் கொல்ல வெளிக்கிட்டால் எங்கே போய் முடியும் என்ற பதிலும் கிடைத்தது. எங்களைச் சார்ந்தவர்களுக்காக கருணையுடன் விட்டுக் கொடுத்து எங்களை சிறுக சிறுக கொல்லும்போது எங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள் அல்லவா?




அஹிம்சை என்ற சொல்லிற்கு ஒரே வார்த்தையில் அர்த்தம் கூறிவிடமுடியாது. உடலாலும் மனசாலும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதுவும் காப்பதுவும் அஹிம்சை தான். உறவுகளுக்குள்ளும் அஹிம்சை கவனிக்கப்பட வேண்டியதொன்று. உறவுகள்தானே என்று பல விடயங்களில் அசட்டையாக இருப்பது இயல்பாகிவிட்டது.




ஒருவரை வார்த்தைகளினால் உணர்ச்சிகளினால் துன்புறுத்துவதுகூட வன்முறையானதுதான். ஒருவர் தவறான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து திட்டும்போது அவரைவிட மோசமாக போட்டிக்குத் திட்டாமல் அவர் அப்படியான வார்த்தைகளை பிரயோகிப்பது சரியானதல்ல என்பதை அவருக்கு உணரச்செய்தல் வேண்டும். அவர் உடனடியாக திருந்தாமல் போகலாம் ஆனால் காலப்போக்கில் அவர் தனது தவறை உணரக்கூடும். இதுவே பிரச்சனைக்குரிய அணுகுமுறை.




அதேபோல் நான் ஓர் சாதரண மனிதன் தவறுகள் செய்து திருந்துபவன்தானே மனிதன் என்று கூறிக்கொண்டே தொடர்ந்து தவறுகள் புரிவதும் தெரிந்து கொண்டே பிழைகளைச் செய்துவிட்டு பின்பு அதை நியாயப்படுத்துவதும் முடிவில் அனைத்துமே கைவிட்டுப்போய்விடுமோ என்ற பயத்தில் தொடர் பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்பதுவும் எந்த விதத்திலும் சரியானதல்ல.



இன்று உலகம் முழுவதும் பல்வேறு இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கின்ற சூழல் உருவாகிவருகின்றது. கலாசாரக் கலப்பு அதிகரித்து வரும்போது சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டு மோதல்களும் அதிகரிக்கின்றன. வன்முறையின் தீவிரமும் அதிகரிக்கின்றது. இதனால் இன்று உலகம் முழுவதும் அமைதியை நாடி மக்கள் மீண்டும் அஹிம்சைக் கொள்கைகளை சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டிய முக்கியத்தை உணரத் தொடங்கிவிட்டார்கள்.




அஹிம்சை என்பது பொறுத்துக் கொண்டு போவதோ கையாலாகாத்தனமோ அல்ல எதிராளியின் வன்முறையை விவேகமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்களும் எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கக்கூடிய வலிமை உள்ளவர்களும் அஹிம்சையின் பாதையில் துணிந்து செல்லமுடியும். குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பது கோழைத்தனம். ஆனால் எதிராளியின் பலம் பலவீனம் ஆகியவற்றை சரியான முறையில் புரிந்துகொண்டு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்து வன்முறை தவிர்த்து எதிர்ப்பதுதான் அஹிம்சைமுறை. இங்கே எதிராளியின் உடலோ பௌதீக உருவோ பாதிக்கப்படாது பாதுகாக்கப்பட்டு அவர்களது ஆன்மா காயப்படுகின்றது.




அதுமட்டுமல்ல தனியொருவனாக இல்லாது தன்னைச் சார்ந்தவர்களைக்கூட எதிராளியின் வன்முறையை எப்படி அகிம்சை முறையில் எதிர்கொள்ளவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது. அதற்கு மிகுந்த சமூக அக்கறையும் பொறுமையும் நற்பண்புகளும் இயல்பாக அமையவேண்டும். கர்வமும் தந்நலமும் இருப்பவர்களிடம் அகிம்சை என்பது இருக்க முடியாது.




பலரோடு பேசியபோது அஹிம்சை முறை தற்போதைய வாழ்க்கை முறைக்கு சாத்தியப்பட்டுவராது. முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என்று வாதிட்டார்கள். ஒருதடவை இல்லை இரண்டு தடவை பொறுத்துக் கொண்டிருக்கலாம் அதன்பின்னும் சித்திரவதை ஓயவில்லையென்றால் போர்தான், வன்முறைதான் சாத்தியமானது என்றார்கள். அப்படிப் பேசுவது தவறு அறிவாற்றல் கொண்டவர்கள் வீரத்தைக்கூட விவேகமாக வெளிக்காட்டவேண்டும் என்று கூறியபோது பறந்து வரும் கழுகிடமிருந்து குஞ்சுகளை காப்பதற்கு கோழி அகிம்சை முறையில் போராடாது என்று கோபப்பட்டார்கள். உங்களுக்குரியதை மற்றவர்கள் தட்டிப்பறிக்கும்போது பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேறு ஏதோ பெயர் என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். எந்த வலியையும் வேதனையையும் அனுபவிக்காமல் உணராமல் அஹிம்சைமுறை நல்லது என்று வாய் வலிக்காமல் பேசிவிட்டுப்போகலாம் ஆனால் தளத்தில் நின்று வேதனையை அனுபவித்தவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்காதீர்கள் என்றும் கூறினார்கள்.




அஹிம்சை பற்றிய அடிப்படை விளக்கத்தை எழுதியிருக்கின்றேன். உங்களது பார்வையில் அஹிம்சைபற்றிய வாத பிரதிவாதங்களை நீங்களும் முன்வைக்கலாம்.




சிந்தனையைத் தூண்டும் விதமாக தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர் மற்றும் எழுத்தாளர் S ரஞ்சகுமார் அவர்களுக்கு எனது நன்றிகள்

4 கருத்துகள்:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  2. ரேணுகா ஜோன்11/13/2011 8:15 PM

    இந்தக் கட்டுரையும் என்னைக் கவர்ந்தது. பொறுத்தார் பூமி ஆள்வார். நானும் பொறுமை கொண்டவள். ஆனாலும் எமக்கு திரும்ப அன்பு கிடைக்காத போது எம்மை துன்புறித்தி தங்களுடைய சுகநலன்களை மாத்திரம் யொசிப்பவர்களோடு அன்பு வழியினால் என்ன பலன். அவர்களோடு பேசாமலே விடுது தான் சரி. ஆனாலும் அவர்களை தண்டிக்க எனது மனம் விரும்புதில்லை

    பதிலளிநீக்கு
  3. நானும் உங்களைப் போல்தான். யாரையும் தண்டிக்க நினைப்பதில்லை. தண்டிக்க முடியும் என்றால் ஒருபோதும் அவர்களிட்கிடையே அன்பு பாசம் நேசம் எதுவுமே இருந்ததில்லை என்பதே உண்மை. கொடுப்பதும் பெறுவதும்தானே வாழ்க்கை. அழகான பூமியில் ஆயிரம் பேர் உள்ளார்கள் அன்பை கொடுப்பதட்கும் பெற்றுக் கொள்வதற்கும். எதற்காக கிடைக்காத அன்புக்காக ஏங்க வேண்டும். யார் மீதும் அன்பு செலுத்தலாம் ஆனால் யாரையும் காதலிக்க முடியாது. ஒருதலைக் காதலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உயிரைப் புழியும் காதலை அனுபவித்துப் பாருங்கள் உலகத்தில் உள்ள அனைத்துமே அழகாகத் தெரியும். ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் எழுதும் கருத்துக்கள் என்னை மகிழ்விக்கின்றது. நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11/30/2011 7:36 PM

    அஹிம்சை, காந்தியின் வன்முறையின்மை,
    அவருக்கு 3000 வருடங்களுக்கு முன்பே
    சமயச் சடங்காளர்களின் எழுத்துக்களில் உள்ளது.
    அதன் நேரடி அர்த்தம் “காயப்படுத்தாமல் இருப்பது.”.
    காயப்படுத்துவது “ஹிம்ஸ்” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து அந்தச் சொல் வந்தது.
    அஹிம்சை என்பது வன்முறையைத் தவிர்ப்பது அல்ல.
    வன்முறை எந்த ஒரு நிகழ்விலும் இருப்பது.
    அனைவரையும் ஈடுபடுத்துவது.
    அஹிம்சை என்பது ஒரு குறிப்பிட்ட வகையில் -அதாவது காயப்படுத்தாமல்-
    வன்முறையைச் செயல்படுத்துவது.
    காயப்படுத்துவது என்பது கொல்வதை விடக் கடுமையானது.
    வன்முறையை அகற்ற முடியாது.
    ஏனெனில் அது வாழ்வின் நாடித்துடிப்பின் ஒரு பகுதி.
    ஆனால் காயப்படுத்துவது....
    ஒரு காயம் ஆயிரக்கணக்கான வெவ்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படக் கூடியது.
    காயம் என்று உணர முடியாத சந்தர்ப்பங்கள் கூட இருக்கலாம்.
    அஹிம்சை என்னும் சொல் மனுநீதியிலும் பௌதாயனரின் தர்மசூத்திரத்திலும்
    சாக்தோக்தய உபநிஷதத்திலும் காணப்படுகிறது.
    (அதாவது உண்மை என்னும் சொல்லுக்கு அருகில்)
    உயிருள்ள எதையும் காயப்படுத்தக்கூடாது என்பதுதான் உணமை சார்ந்த கடப்பாடு.
    அதாவது அஹிம்சை சத்தியத்துக்கு முன்னால் வந்தது.

    பதிலளிநீக்கு