திங்கள், மார்ச் 09, 2009

ஈர்ப்பு



இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்ற உணர்வினால் ஈர்க்கப்படும்போது ஏற்படுகின்ற ஓர் இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

எதிர்பார்ப்புகளின்றி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறைகாட்டி, கண்கள் கசியும் வேளையில் அன்புடன் ஆறுதலாக ஓர் வார்த்தை சொன்னாலே போதும் அங்கே காதல் நிறைந்திருக்கும்.

அன்பின் ஆக்கிரமிப்பை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும் அந்த உறவினால் கிட்டும் இன்பம் வார்த்தைகளுக்குள் அடங்காது.

தொடரும் ஈர்ப்பு என்னும் கவிதை என்மனதில் தோன்றிய ஓர் அன்பின் வெளிப்பாடு. ஒரு வருடத்திற்கு முன்பு ஊடறு என்ற பெண்களுக்கான இணையத்தளத்தில் இந்தக் கவிதை பதியப்பட்டது. http://udaru.blogdrive.com/archive/569.html

இதயவாசலுக்குள் வரமாக நுழைந்த ஓர் உறவின் உண்மையான உருவகம்தான் ஈர்ப்பு என்ற இந்தக் கவிதை.

தனிநிகரான உன் உலகத்தில்
துணிவாக தடம் பதித்தேன்
அந்நியமான என் கண்களுக்கு
ஆச்சரியமான பல தோற்றங்கள்
ஈர்த்துக் கொண்டேன் - நீ
விரும்பியும் விரும்பாமலும்
சேர்த்துவைத்த பெரும் ஊதியத்தை

உன் நிகரற்ற மண்டலத்தில்
ஆர்வமிக்க மாணவி நான்
சீர்ப்படாத தொடர் வரலாற்றில்
வியப்பான நாகரீகப்படிவம் நீ
உன் சிந்தனையின் ஆழத்தை
உற்றுநோக்கி பதிவுசெய்தேன்
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேன்
முன்பே உனதாக்கிக் கொள்ளென்று

உன் மனமாற்றப் படிநிலையின்
நிழல்வெளியில் எனக்குள் பலமாற்றம்
நகைப்பொலியில் முகமலர்வேன்
ஊற்றெடுக்கும் நீர்த்துளியில்
உடையாமல் போட்டியிட்டு
உள்ளத்தால் முதிர்வடைந்தேன்
என் தொலைத்தோற்ற மனக்காட்டி
உள்முகம் நோக்கி சொன்னது
உன்விலை என்னவென்று

நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்
முடிவெச்ச வடிவமானேன்
உன் கரையற்ற நீர்வரைவில்
காற்றோடு கரையேறும் படகானேன்
நீ இடைவிடாது செதுக்கிய
பாறைவெடிப்பு இடைவெளியில்
ஊடுருவி தேடிக்கண்டேன்
பசும்புல்தரை கொண்ட
சுரங்க வழிப்பாதையொன்றை
அளவுகோல் வைத்து
அளக்கமுடியாத எல்லைபோலும்
அமைதியாக செல்கின்றேன்
அமிழ்வுக்குப் பின்னாலும்
மிதந்துவரும் மிதவையாகி

சௌந்தரி (அவுஸ்ரேலியா)
jan 2008

ஞாயிறு, மார்ச் 01, 2009

குடும்பம் என்கிற ஸ்தாபனம்

வார இறுதி இன்று ஏதாவது எழுதினால்தான் உண்டு பின்பு நேரம் கிடைப்பதென்பது மிகவும் கடினம். எதை எழுதலாம் என்று யோசித்தபோது நான் விரும்பித் திரும்பவும் பார்த்த திரைப்படம் ‘புறவோக்ட் - Provoked' ஞாபகத்திற்கு வந்தது. அதைப் பற்றியே எழுதலாம் என்று யோசித்தேன்.

ஒரு பக்கசார்பாக இந்தக் கட்டுரை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமெடுத்து எழுதியுள்ளேன். விதிகளும் விதிவிலக்குகளும் எதிலும் இருப்பதால் எந்த ஓர் செயலையும் பொதுமைப்படுத்தி நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தாரளாமாக இட்டுச்செல்லலாம். கருத்துக்களுடன் மோதுவது ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும்.

1989 ம் ஆண்டு லண்டனில் குடும்பவன்முறையின் உச்சத்தை எட்டிய பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஒன்று உண்டு.

பஞ்சாபிப் பெண்ணான கிரண் என்பவரை லண்டனில் வசிக்கும் தீபக்கிற்கு பெற்றோர்கள் பேசி மணம் முடித்தனர். லண்டனில் தொடங்கிய கிரணின் மணவாழ்க்கை அவளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளது கணவன் தீபக் ஓர் மனநோயாளியைப்போல் செயல்பட்டான். தினம் கிரணை துன்புறுத்தினான். வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது, யாருடனும் கதைக்கக்கூடாது, சந்தேகத்தின்பேரில் அடி உதை, குடித்துவிட்டு வந்து இரவில் கொடுமை, பெண்களின் சகவாசம் இப்படியாக எண்ணற்ற சித்திரவதைகளுக்கு உட்பட்டாள் கிரண்.

கல்லானாலும் கணவன் என்பதற்கமைய இயல்பாகவே மென்மையான குணம் கொண்ட கிரண் எல்லாவற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் இரவு பொறுமையின் எல்லையைக் கடந்தநிலைக்கு தள்ளப்பட்டாள். அதனால் குடித்துவிட்டு வந்து படுத்திருந்த தனது கணவன்மீது பெற்றோலை ஊற்றி அவனை எரித்துக் கொன்றாள்.

கொலைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிரணின் வழக்கை ஆசிய பெண்கள் உரிமைக்காக போராடும் அமைப்பு ஒன்று முன்னெடுத்து நடாத்தியது. தற்பாதுகாப்புக்காகவே கிரண் அந்த முடிவை எடுத்தாள் என்று தீர்ப்புக்கூறி 1992 ல் கிரணை லண்டன் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்றும் எல்லோராலும் பேசப்படுகின்றது.
இந்த உண்மைக்கதையை தழுவி ஐஸ்வர்யாராய் நடித்த ‘புறவோக்ட’ என்ற ஆங்கிலப்படம் திரைக்கும் வந்தது.

இதுபோன்ற வன்முறைகள் எந்தவோர் பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். இந்த நிலையை தினம்தினம் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இது போன்ற சுழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு வாழ்வை தொலைக்காமல் தற்பாதுகாத்துக் கொள்ளும் மாற்றுவழிகளை அறிந்து வைத்திருத்தல் நன்மையைத்தரும்.

பிரச்சனைகளை நண்பர்களோடு பகிர்தல், பெற்றோர்களிடம் முறையிடுதல், மனநல சிகிச்சைகளின் உதவியை நாடுதல், எல்லையை மீறும் தருணத்தில் காவல் நிலைய உதவியை நாடுதல், எதுவுமே சரிவரவில்லையென்றால் விவாகரத்து இப்படியாக பலவழிகளில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்புண்டு.

பாவம் கிரணுக்கு இவை எதுவுமே கைகொடுக்கவில்லை. எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்த கிரண் முடிவை தன்கையில் எடுத்துக்கொண்டாள். ‘என் கணவரின் வன்முறையைத் தடுப்பதற்கு எனக்கு வேறுவழி தெரியவில்லை, அவரை கொல்ல வேண்டும் என்று நான் நினைத்ததில்லை’ என்று கிரணின் சுயகதையை வெளியிட்ட Provoked – The Story of Kiranjit Ahluwalia என்ற புத்தகத்தில் அவர் சொல்லியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையானபின் கிரண் லண்டன் தபால் சேவை திணைக்களத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிந்தவாறு சமூகசேவை மற்றும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனங்களிலும் பகுதிநேரமாக பணிபுரிகின்றார். எனது நண்பரும் கிரணும் ஒரே வேலைத்தளத்தில் ஒன்றாக பணிபுரிகின்றார்கள் என்றவுடன் கிரணின் கையெழுத்திட்ட மேற்கூறிய புத்தகம் ஒன்றை கிரணிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். அவரைப்பற்றிய மேலதிக செய்திகளையும் நண்பர் மூலம் அறியமுடிந்தது. 52 வயதைக் கடந்த கிரண் இப்போது தனது வாழ்வை நிறைவாகவும் உண்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நல்ல செய்தி சந்தோசமாகவிருந்தது.

2002 ம் ஆண்டு குடும்ப வன்முறைக்கு எதிராக போராடும் பெண்களுக்கென்று வழங்கப்படும் ஓர் உயரிய விருது லண்டன் அரசினால் கிரணுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரணைப்போன்று பல பெண்கள் இப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். வீட்டுப்பிரச்சனையை வீடுதாண்டி வெளியே கொண்டுபோவது குடும்ப கௌரவத்தை பாதிக்கும் என்ற மன இயல்பில் வீட்டுக்குள்ளேயே வெந்து போகின்றார்கள். சிலர் தைரியத்தோடு வெளியேவந்தால் அவர்கள்மீது சமூகம் காட்டும் எதிர்வினை அதைவிட கொடுமையானது. குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்து சமூக வன்முறைக்குள் பெண் சிக்கிக்கொள்ளும் நிலைப்பாடுதான் அதிகம்.

பெண்களை உடல் மனரீதியாக துன்புறுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டுதல், பாலியல் வன்முறை, பொருளாதார ரீதியில் கொடுமைப்படுத்தல் இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள். சட்டமும் தண்டனையும் சிலரை பயம் என்ற பிடிக்குள் கட்டிப்போட்டாலும் காலம் காலமாக வேரூன்றிய ஆணாதிக்க மனோபாவத்தை இந்த சட்டங்களும் தண்டனைகளும் முற்றாக அழித்துவிடமுடியாது. தண்டனையையும் சட்டங்களையும் மீறி பெண்கள் குடும்பவன்முறைக்கு ஆளாகின்றனர். தண்டனையும் சட்டங்களும் இருப்பதனால் வன்முறைகள் முற்றுப்பெற்றுவிடும் என்பது உண்மையல்ல.

பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு நாடு மதம் இனம் மொழி என்ற எல்லைகள் கிடையாது. உலகளாவிய அளவில் குடும்ப வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பல பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். அவர்களது உணர்வுகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்த அவர்களுக்காக எந்தவோர் கதவும் திறந்திருக்கவில்லை.

எவ்வளவுதான் நேசித்தாலும் புரிந்து வைத்திருந்தாலும் ஆணாதிக்க எண்ணங்கள் அதிகாரங்கள் என்பவை சந்தர்ப்பங்களில் வெளிவந்துவிடுகின்றன. அப்போது அவர்களது மனவோட்டம் எந்த திசையை நோக்கி எப்படிச் செல்லும் என்பதை கணித்துவிடமுடியாது. அன்பினால் எதையும் சாதித்துவிடமுடியும் என்பதைக்கூட பொய்ப்பித்துவிடும் சிலரது செயல்கள்.

காதல், திருமணம், குடும்பம் என்ற வட்டத்திற்குள் அன்பும் கருணையும் புரிதலும்தான் முக்கியமானவை என்று கூற்று நன்றாக இருந்தாலும் யதார்த்தத்தில் ஆழமான இந்த மனித உறவுகள் சந்திக்கின்ற நெருக்கடிகளும் சங்கடங்களும் ஏராளம்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வேறோர் பரிணாமத்தை சுட்டிக்காட்டுகிறது. வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சிறிய வெளிகூட அங்கு இருப்பதில்லை. மற்றய உறவினர்களும் வன்முறையை பொறுத்துக்கொண்டு வாழும்படிதான் அறிவுரை கூறுவார்கள். இதனால் வேறுவழி தெரியாமல் அவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருகின்றார்கள். தமது முடிவை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழிமுறைகளும் அவற்றை மனஉறுதியோடு நிறைவேற்றும் விதமும் மனதை உறையச் செய்யும் விதமாகவே இருக்கின்றன.

பெண்களைப் பாதுகாக்க முடியாத ஒரு சமூகத்தின் அழிவு வெளிப்படையானது. மணவாழ்க்கையின் மூலம் உருவான குடும்பம் என்கிற ஸ்தாபனம் யாருமே குறுக்கிடமுடியாத எல்லைகளற்ற ஆண்களின் அதிகாரபீடமாக மாறிவிடும் ஒரு சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் பின்பு சமாதானமடைவதும் சாதாரணவிடயமாக மாறிவிட்டது.